தலையங்கம், அரசியல் 3 நிமிட வாசிப்பு

பிரியங்காவின் முன்னெடுப்பு வரலாற்று மைல்கல்லாக நிலைக்கும்

ஆசிரியர்
27 Oct 2021, 5:00 am
2

உத்தர பிரதேச அரசியலை வேறு திசை நோக்கித் திருப்பும் முன்னெடுப்பு என்று பிரியங்காவின் முன்னெடுப்பைத் தாராளமாகச் சொல்லலாம். உத்தர பிரதேச அரசியல் பின்னணியையும், இந்தியாவின் அரசியலில் அது செலுத்திவரும் செல்வாக்கையும் வரலாற்றுரீதியாக உணர்ந்தவர்களுக்கே இது உண்டாக்க வல்ல முழு வீச்சையும் விளங்கிக்கொள்ள முடியும். “சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களில் 40% இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்” என்ற பிரியங்காவின் அறிவிப்பானது,  எப்படி உத்தர பிரதேச எல்லையைத் தாண்டியும் எல்லா மாநிலங்களிலும் வேட்பாளர்கள் அறிவிப்பின்போது, காங்கிரஸைத் துரத்துமோ அப்படி காங்கிரஸைத் தாண்டியும் எல்லாக் கட்சிகளையும் துரத்தும். 

உத்தர பிரதேசத்தைப் பொருத்த அளவில், பாஜகவுக்கு இது காங்கிரஸ் விடுத்திருக்கும் நேரடியான சவால். கிட்டத்தட்ட 6.61 கோடி பெண் வாக்காளர்களையும், 7.79 கோடி ஆண் வாக்காளர்களையும் கொண்ட மாநிலம் உத்தர பிரதேசம். வாக்காளர்கள் என்ற அளவில் பெண்களின் பங்கு 46% என்றாலும், தேர்தலில் வாக்களிப்பவர்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம். பாஜக இதை நன்றாகவே புரிந்துகொண்டிருக்கிறது. எளிய மக்களுக்குக் கட்டணமில்லாமல் கேஸ் அடுப்பு வழங்கும் திட்டமான ‘உஜ்வாலா திட்டம்’, ‘கழிப்பறைக் கட்டுமானம்’ இவையெல்லாம் அதன் வெளிப்பாடுகள். ஒரு சமையலறையில் கேஸ் அடுப்பு உண்டாக்கும் மாற்றமானது இந்தியச் சூழலில் மிக முக்கியமானது என்றாலும், ‘பெண் என்றால் சமையலறை’ என்ற வரையறையைத் தாண்டியது இல்லை அது.

இந்த இடத்தையே பிரியங்கா குறிவைக்கிறார். “பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் இருக்க முடியாது” என்று கேஸ் இணைப்பைச் சுட்டிக்காட்டி பேசிய பாஜக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, “கேஸ் சிலிண்டர் அல்லது இரண்டாயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து பெண்களைத் திருப்திப்படுத்தலாம் என்று கட்சிகள் நினைக்கின்றன. ஆனால், ஒரு பெண்ணின் போராட்டம் நீண்டது மற்றும் மிகவும் ஆழமானது” என்று பதில் தந்தார் பிரியங்கா. அப்படியென்றால், உண்மையான அதிகாரமளிப்பு எது என்பதற்கான பதிலாகவே இந்த 40% ஒதுக்கீடு அறிவிப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உத்தர பிரதேசத்தில் உள்ளாட்சிப் பதவிகளில், குறிப்பாக கிராமப்புறங்களில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் பெண்கள் வென்றுள்ளனர். ஆகையால், இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்ட கையோடு மாநிலம் தழுவிய ‘பிரதிக்ஞா யாத்திரை’யை ஆரம்பித்திருக்கும் பிரியங்கா, தார்மிகப் பலத்துடன் பெண்களை நோக்கி பாலினச் சமத்துவத்துக்கான கேள்வியைத் தூக்கி வீச முடியும்; ஏனைய கட்சிகளையும் காங்கிரஸின் பாதை நோக்கி இழுக்க முடியும். ஒரு பெண்ணைத் தலைவராகக் கொண்டிருக்கும் பகுஜன் சமாஜ், இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிவரும்; அதற்கு சமாஜ்வாதி எதிர்வினையாற்ற வேண்டிவரும்; மூன்றுக்கும் சேர்த்து பாஜக எதிர்வினையாற்ற வேண்டிவரும். உத்தர பிரதேசத்தில் நிகழும் எந்த மாற்றமும் இந்தி பிராந்தியம் முழுக்க எதிரொலிக்கும். இந்தியாவின் போக்கை அது தீர்மானிக்கும்.

பெண்களுக்கு உரிய சம இடங்களை ஒதுக்கிடும் போக்கு ஏற்கெனவே மாநிலங்களில் ஆரம்பித்துவிட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் பெண்களுக்கு வங்கத்தில் 41% இடங்களை திரிணமூல் காங்கிரஸும், ஒடிஸாவில் 33% இடங்களை பிஜு ஜனதா தளமும் ஒதுக்கியதை முன்னுதாரணமாகக் குறிப்பிடலாம். தேசியக் கட்சிகள் இந்தப் பொறுப்புணர்வுக்கு முகம் கொடுக்கும்போது அரசியலில் ஒரு போக்காக இது உருவெடுக்கும்.

ஐஸ்லாந்தின் சமீபத்திய தேர்தல் முடிவுகளை ஒட்டி அந்நாட்டின் பிரதமர் காத்ரீன் ஜகோப்ஸ்டோட்டியர் கூறிய வார்த்தைகள்தான் இங்கே நினைக்கத்தக்கவை. “உங்களுக்குத் தெளிவான அரசியல் கொள்கை இல்லாதவரை நீங்கள் பாலினச் சமத்துவத்தை அடைய முடியாது” என்று அவர் கூறினார்.

ஐரோப்பாவிலேயே அதிகபட்சமாக 47.6% இடங்களை ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தில் பெண்கள் சமீபத்திய தேர்தலில் வென்றுள்ளனர். “சரி பாதி இடங்களில் பெண்கள் அமருவதற்குப் பின் நெடிய பயணமும், சமூகத்தின் ஒட்டுமொத்த முயற்சிகளும் இருக்கின்றன” என்பதை காத்ரீன் ஜகோப்ஸ்டோட்டியர் குறிப்பிடத் தவறவில்லை. உலகிலேயே பாலினச் சமத்துவத்தில் முன்வரிசையில் ஐஸ்லாந்து இருக்கிறது.

இந்தியா போன்ற தாறுமாறான ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிய நாடுகளில், சமூகத்தின் மனத்தேர்ச்சிக்கு ஏற்ப அரசியல் கட்சிகளும் பயணப்படலாம் என்று காத்திருக்க முடியாது. இங்கே அரசியல் தலைமைகளின் புரட்சிகர முன்னெடுப்புகள்தான் சமூகச் சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும். இன்று உலகிலேயே நாடாளுமன்றத்தில் 61% பெண்கள் பிரதிநிதித்துவத்துடன் செயலாற்றும் ருவாண்டா, இந்த விஷயத்தில் நமக்கு முன்னோடியாக இருக்க முடியும். இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 14%. பாலினச் சமத்துவத்தில் அது கடைசி வரிசையில் நிற்கிறது. 

அனைவருக்குமான வாக்குரிமையை உறுதிப்படுத்தி ஆரம்பிக்கப்பட்ட அரசமைப்புச் சட்டம் உள்பட, இந்திய அரசியல் களத்தில் எவ்வளவோ முற்போக்கான முன்னெடுப்புகளுக்கு காங்கிரஸ் காரணமாக இருந்திருக்கிறது. அந்த வரிசையில் பிரியங்காவின் முன்னெடுப்பும் இடம்பெற்றால் அது வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமையும். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.


2





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

P.Saravanan   3 years ago

As Mr. Samas predicts, Priyanka Gandhi's latest move will certainly bring good results for Congress Party. She has also promised certain other sops to women voters that will also help to secure more votes. Congress needs a charismatic leadership at the national level too which is badly missing at present. Priyanka is not only charismatic but also bold and forthright in facing her adversaries. I see many similarities in Priyanka to her grandmother Indira Gandhi. I would even venture to call her Indira Gandhi-2. Time will prove that Arunchol's prediction will turn to be a reality.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vivek   3 years ago

என்ன தான் வசீகரம் இருந்தாலும் , காங்கிரஸ் நான்காவது இடத்திற்கு தான் போட்டி போட முடியும் . அங்கே அரசியல் அப்படி

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அதிசாகச நாவலுக்கானது கருணாநிதியின் வாழ்க்கைஆவின்: பாதுகாக்கப்பட வேண்டிய பால் கூட்டுறவு நிறுவனஅருஞ்சொல் எல்.ஐ.சி.சோஷலிஸ்ட் தலைவர்பொது பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ)தமிழுக்கான வெள்ளை அறைதாய்மையைத் தள்ளிப்போடும் இத்தாலிய மகளிர்!குடலைக் காப்போம்!பக்கிரி பிள்ளைஅப்பாவின் சைக்கிள்அறிவாளிகள் எண்ணிக்கை பெருகவே தாய்மொழிக் கல்விஉழவர் சந்தைகள்நேரடி வரி1967-2014 தேர்தல் முடிவுகள்: ‘இந்தியா’ கூட்டணிக்குவிஜய் ரூபானிடேவிட் ஷுல்மன் கட்டுரைஅண்ணாமலையின் அதிரடி... காங்கிரசுக்குக் கை வராதது ஏஅறிவுசார் செயல்பாடுசமஸ் பிரசாந்த் கிஷோர்பள்ளிக்கல்விசமஸ் பெரியார்நடராஜன் ரங்கராஜன் கட்டுரைமவுண்ட் பேட்டன்ட்ரான்ஸ்டான்மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்சூலக நீர்க்கட்டிவிஷச் சாராயம்என்எஸ்ஏபி திட்டம்விதைஏவூர்தி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!