தலையங்கம், அரசியல், நிர்வாகம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு
சஞ்சய் மிஸ்ரா: வெட்கமற்ற நீட்டிப்பு
அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பணியை நீடிப்பதற்காக பாஜக எடுத்திருக்கும் விசேஷ நடவடிக்கையை மோடி அரசின் வெட்கமற்ற முன்னெடுப்பு என்றே சொல்ல வேண்டும்.
மோடி அரசின் முழுக் கையாளாகவே அமலாக்கத் துறையை மாற்றிவிட்டார் என்ற கடும் விமர்சனத்துக்குள்ளானவர் சஞ்சய் குமார் மிஸ்ரா. முன்னதாக மிஸ்ராவுக்கு அளிக்கப்பட்ட பணி நீட்டிப்பைச் சட்ட விரோதம் என்று சொல்லி தீர்ப்பளித்ததோடு, இந்த மாத இறுதிக்குள் புதிய இயக்குநரை நியமிக்கவும் உத்தரவிட்டிருந்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பின்னரும், 'தேச நலன்' எனும் பெயரில் சிறப்பு நேர்வாக அவசரக் கால மனுவை தாக்கல் செய்து, நீதிமன்றத்திடம் மேலும் ஒன்றரை மாத நீட்டிப்பு வாங்கியிருக்கிறது பாஜக அரசு.
இந்திய வருவாய் பணிகள் (ஐஆா்எஸ்), 1984 அணி அதிகாரியான மிஸ்ரா 2018இல் அமலாக்கத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். உள்ளபடி அவரது பதவிக் காலம் 2020இல் நிறைவடைந்தது. அப்போது அவருக்கு மேலும் ஓராண்டுக்குப் பதவிக் காலத்தை அரசு நீட்டித்தது. 2021இல் அவரது பதவிக் காலம் நிறைவடைந்தபோதும், மேலும் ஓராண்டுக்கு அவரை அரசு நீட்டித்தது. இதனூடாகவே அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநா்களின் பதவிக் கால வரையறையை இரண்டு ஆண்டுகள் என்பதிலிருந்து மூன்று ஆண்டுகள் என்பதாக நீட்டித்து ஓர் அவசரச் சட்டத்தை 2022இல் கொண்டுவந்தது அரசு. அதாவது, இதன் மூலம் அமலாக்கத் துறை, சிபிஐ இயக்குநா்கள் அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை பதவியில் நீடிக்க வழிவகுக்கப்பட்டது.
இத்தகு பின்னணியில்தான் 2022இல் மிஸ்ராவுக்கு மூன்றாவது முறையாக அளிக்கப்பட்ட பதவி நீட்டிப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், இந்தப் பதவி நீட்டிப்பு செல்லாது என்று சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது உச்ச நீதிமன்றம்.
அதிகம் பொதுவெளியில் முகம் காட்டதவரான மிஸ்ரா அமலாக்கத் துறை வரலாற்றிலேயே அதிகமான அதிகாரத்தைச் செயல்படுத்தியவர் என்று சொல்லலாம். பிற்காலத்தில், எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுவதுபோல், 'அமலாக்கத்துறையின் வரலாற்றிலேயே அதிகபட்ச அதிகார துஷ்பிரயோகமத்தைச் செயல்படுத்தியவர்' என்றும் மிஸ்ரா சுட்டப்படலாம்.
ஒன்றிய அரசைக் கையில் வைத்துள்ள கட்சி தன் அரசியல் எதிரிகளைப் பதம் பார்க்க அமலாக்கத் துறையைப் பயன்படுத்துவதற்கு நீண்ட வரலாறு இந்தியாவில் இருக்கிறது. ஆயினும், மோடி அரசில் - குறிப்பாக மிஸ்ராவின் ஐந்தாண்டு பதவிக் காலத்தில் - இந்தப் போக்கு உச்சம் தொட்டது. இந்த ஐந்தாண்டுகளில் 4,000+ வழக்குகளைத் தொடர்ந்த அமலாக்கத் துறை 3000+ சோதனைகளை நடத்தியது.
அரசியலர்கள் இந்த வேட்டையில் முக்கியமான இடம் பிடித்தனர். முன்னாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆஆக அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி என்று எதிர்க்கட்சிகளில் நீளமான வரிசையைக் கொண்டிருக்கும் அமலாக்கத் துறையின் வழக்குப் பட்டியலில் பாஜகவினர் பெயர்கள் மிக அரிது.
அமலாக்கத் துறை தொடர்ந்த இத்தகு வழக்குகளில், அது குற்றத்தை நிரூபிக்கும் சதவீதம் மிகக் குறைவாக இருப்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். எனில், வழக்குகள், சோதனைகள், விசாரணைகள், வங்கிக் கணக்குகள் முடக்கம் என்று நடைமுறைளையே தண்டனையாக்கி அதன் மூலம் சம்பந்தப்பட்டோர் செயல்பாடுகளை முடக்குவதையும் ஆட்சியாளர்களுக்கு எதிரான அச்சுறுத்தலைப் பரப்புவதுமே இங்கு மூல நோக்கமாக இருக்கிறது.
அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாது, மோடி அரசை விமர்சிக்கும் / எதிர்க்கும் எவர் மீதும் அலுவலர்கள் பாயும் மோசமான நிலைக்குத் துறையைக் கொண்டுவந்துவிட்டார் மிஸ்ரா என்று துறைக்குள்ளும் பொதுவெளியிலும் பெரும் பேச்சு இன்று உருவாகி இருக்கிறது. அமலாக்கத் துறையின் மதிப்பை முன்னெப்போதும் இல்லாத அளவுக்குக் குலைத்துவிட்டார் மிஸ்ரா என்றே சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் அமலாக்கத் துறைக்கான அதிகாரத்தை மட்டுப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை நோக்கியும் தேசத்தை அவர் இழுத்துச் சென்றிருக்கிறார். இத்தகைய ஒருவருக்குத்தான் 'பன்னாட்டு உறவுடன் பிணைந்த நிதி நடவடிக்கை பணிக் குழு (எஃப்ஏடிஎஃப்) இந்த ஆண்டில் மேற்கொண்டு வரும் மதிப்பாய்வு பணிகள் எந்தவித பாதிப்புகளின்றி நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்காக எனும் காரணத்தைச் சொல்லி , 'தேச நலன்' என்ற பெயரில் நீட்டிப்பு வாங்கியிருக்கிறது மோடி அரசு.
நீட்டிப்பை வழங்கியபோதும், காட்டமான கேள்விகளை எழுப்ப உச்ச நீதிமன்றம் தவறவில்லை. "அமலாக்கத் துறையில் எஸ்.கே.மிஸ்ராவைத் தவிர மற்ற அனைத்து அதிகாரிகளும் தகுதியற்றவர்களா? எஸ்.கே. மிஸ்ரா என்ற ஒரு நபர் இல்லை என்றால், ஒட்டுமொத்த அமலாக்கத் துறையும் செயலிழந்துவிடுமா?" என்ற நீதிபதி பி.ஆர்.காவாயின் கேள்விகள் மாண்புள்ள எந்த ஆட்சியாளருக்கும் தலைகுனிவு தரக் கூடியவை. இந்த அரசு எந்தக் கூச்சமும் அற்றது; வெட்கம் கெட்டது. அலுவலர்களையும் அப்படி ஆக்குகிறது.
அடுத்த ஒன்றரை மாதத்தில் வேறு ஒருவர் அமலாக்கத் துறை இயக்குநர் பதவியில் அமரலாம்; அடுத்து இந்த பாஜக ஆட்சியும் முடிவுக்கு வரலாம். ஆனால், மோடி அரசு மிஸ்ரா போன்றவர்களைக் கொண்டு அரசின் ஒவ்வொரு துறையிலும் மேற்கொண்டுள்ள சீர்குலைவுகளும், அங்கு உருவாகியுள்ள மாண்பற்ற கலாச்சாரமும் சீரமைக்கப்பட எவ்வளவு காலம் ஆகும் என்ற கேள்விதான் நம் முன்னுள்ள பெரும் அச்சுறுத்தல். புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் கைகளில் உள்ள விசாரணை அமைப்புகளின் வடிவத்தையும் அவற்றின் அதிகாரங்களையும் கூட்டாட்சிப் பார்வையில் மறுநிர்மாணிக்கும் தேவையை மிகத் தீவிரமாக மிஸ்ரா விவகாரம் சுட்டுகிறது!
4
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.