தலையங்கம் 4 நிமிட வாசிப்பு
முஸ்லிம் சமூகத்தை தலிபான்கள் பின்னோக்கி இழுக்கலாகாது
ஆஃப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிப் புதிய அரசை அமைத்திருக்கும் தலிபான்கள் அந்த நாட்டைத் தாண்டியும் முஸ்லிம் சமூகத்துக்குப் பின்னடைவை உண்டாக்கும் சமிக்ஞையையே வெளிப்படுத்தியிருக்கின்றனர். அடிப்படையியமும் பயங்கரவியமும் இணைந்த சக்தி தலிபான்கள். ஒரு நாட்டின் ஆட்சி அதிகாரத்தைக் கைபற்றிவிட்டதாலேயே அவர்கள் மீதான பார்வையையும் மதிப்பீட்டையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், முந்தைய வரலாற்றின் அடிப்படையிலேயே அந்த அமைப்பை அணுக வேண்டியது இல்லை என்றும் பேச ஆரம்பித்தவர்கள் உண்டு. அது எவ்வளவு அபத்தமானது என்பதை ஆஃப்கனில் நடந்துவரும் காட்சி மாற்றங்களும் தலிபான்களின் அமைச்சரவைத் தேர்வும் உரக்கச் சொல்கின்றன.
அமெரிக்கப் படைகள் வெளியேறிய வேகத்தில் கூடவே ஆஃப்கன் மக்களில் ஒரு பகுதியினர் கூட்டம் கூட்டமாக வெளியேறத் தலைப்பட்டனர்; விமான நிலையங்கள் ததும்பின; விமானங்களைத் தொற்றிக்கொண்டேனும் நாட்டைவிட்டு வெளியேறிவிடலாமா என்று முயன்று மேலிருந்து கீழே விழுந்து சிலர் உயிரிழந்தனர்; இந்த நூற்றாண்டின் அவலமான காட்சிகளில் ஒன்று அது. இப்படி வெளிநாடுகளுக்குத் தப்ப முற்பட்டவர்களில் கணிசமானவர்கள் நன்கு படித்தவர்கள்; மருத்துவம் - பொறியியல் - ஆராய்ச்சித் துறையினர். அறிவுத் துறையினரின் இத்தகு மனநிலையும் வெளியேற்றமும் ஆஃப்கன் சமூகத்தின் எதிர்காலத்தை நாசமாக்கக்கூடியவை என்பதை தலிபான்களும்கூட அறிந்திருப்பதுபோலவே தெரிந்தது; அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் இதை வெளிப்படுத்துபவையாக இருந்தன. அப்படியென்றால், அவர்கள் ஆழமான ஒரு சுய ஆய்வுக்குத் தங்களை உட்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். தலிபான்கள் மீது எத்தகைய பார்வையையும் அச்சத்தையும் ஆஃப்கன் அறிவுச் சமூகம் கொண்டிருக்கிறது என்பதற்கு அப்பட்டமான ஒரு சான்று அது.
முன்னதாக, தலிபான்கள் ஆட்சியில் இருந்த காலகட்டத்துக்கும் இப்போதைய காலகட்டத்துக்கும் இடையில் வெறும் 20 ஆண்டுகள்தான் இடைவெளி என்றாலும், வழமையான ஒரு தலைமுறை இடைவெளி என்று 2001-2021 காலகட்டத்தைச் சொல்லிவிட முடியாது. 9/11 இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகின் புவியரசியல் சூழல் பெரும் மாற்றத்தைக் கண்டிருக்கிறது. பெரும் பண்பாட்டு மாற்றம் சமூகவலைதளங்களின் வருகைக்குப் பிறகு நடந்திருக்கிறது. இயல்பாக இப்படி ஒரு மாறுபட்ட காலகட்டத்தை எதிர்கொள்ளும் எந்த ஒரு சமூக இயக்கமும் வேறு ஓர் உருமாற்றத்தை அடைய வேண்டும். ஆஃப்கன் சமூகத்தைப் பொறுத்த அளவில் இதற்கான தேவைகள் அதிகம்.
மன்னர் முஹம்மது ஜாஹிர் ஷாவின் ஆட்சிக்குப் பிறகு, 1973 தொடங்கிக் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாகப் போர்களும் பூசல்களும் ஆட்சிக் கவிழ்ப்புகளுமாக நிம்மதியற்ற அரசியல் சூழலிலேயே ஆஃப்கன் இருக்கிறது. சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் என்றாலும், சுன்னி-சூஃபி பிரிவினரும் அங்கே உண்டு. பல்வேறு இனங்களும் மொழிகளும் பண்பாடுகளும் உண்டு. தலிபான்கள் பெரும்பான்மைச் சமூகமான பஷ்தூன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆஃப்கன் தேசியம், இஸ்லாமிய தேசியம் என்றெல்லாம் குறிப்பிடுவதைவிட ‘பஷ்தூன் தேசியம்’ என்றே தலிபான்களின் அரசியலைக் குறிப்பிட வேண்டும்; மத அடிப்படைவியம், இன அடிப்படைவியம் இரண்டும் கலந்த கூட்டுக்கலவை இது.
உலகின் பல்வேறு நாடுகளாலும் பயங்கரவிய அமைப்பாகப் பார்க்கப்படுபவர்கள் தலிபான்கள். சர்வதேச அங்கீகாரத்தின் பொருட்டாகவாவது இந்த முறை குறைந்தபட்ச மேலோட்ட மாற்றங்களை வெளிப்படுத்துவார்கள் என்றும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ‘எல்லோரையும் உள்ளடக்கிய - கொஞ்சம் ஜனநாயகபூர்வ அரசமைப்பு மற்றும் அமைச்சரவை’ ஒன்றை அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்த்தவர்கள் உண்டு. ஆஃப்கனை நிர்வகிக்க வேண்டும் என்றால், உள்ளூர்ச் சமூகங்கள் இடையே இணக்கச் சூழல் வேண்டும்; அடுத்து, நிதியாதாரத்துக்கு உலக நாடுகளுடனான பரிவர்த்தனை வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் இந்த இரு தசாப்தங்களுக்குள் ஆஃப்கன் மக்கள்தொகை 2.1 கோடியிலிருந்து 3.5 கோடியாகக் கிட்டத்தட்ட 70% அதிகரித்திருக்கிறது; மொத்த மக்கள்தொகையில் 65% பேர் 20 வயதுக்கு உட்பட்டவர்கள்; அதாவது, தலிபான்களின் முந்தைய ஆட்சியை அறிந்திராதவர்கள்; எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், தலிபான்களை ஒப்பிட சுதந்திரமான ஆட்சிச் சூழலில் வளர்ந்தவர்கள். இவர்களைக் கடும் அதிருப்தியில் தள்ளிவிடக் கூடாது. இந்த மூன்று நிர்ப்பந்தங்களும் தலிபான்களுக்கு இருக்கின்றன.
தலிபான்கள் எதையுமே பொருட்படுத்தவில்லை. புதிதாக அறிவிக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையும், புதிய அரசின் இலக்குகளும் தலிபான்கள் கொஞ்சமும் மாறவில்லை என்பதையே காட்டியிருக்கின்றன. தலிபான்களின் 33 அமைச்சர்களில் ஒரு பெண்ணுக்குக்கூட இடம் இல்லை; 30 பேர் பஷ்தூன்கள்; மிச்ச மூவரும் இரண்டு இனங்களைச் சேர்ந்தவர்கள்; குறைந்தது பத்து முக்கியமான இனக்குழுக்களுக்கு ஒரு பிரதிநிதித்துவம்கூட இல்லை; ஷியா பிரிவினருக்கும் அதே கதிதான். அமைச்சரவையின் சரிபாதிக்கும் மேற்பட்டவர்கள் ஐ.நா. சபையின் பயங்கரவியப் பட்டியலில் இருப்பவர்கள். சமூக மாற்றத்திலும் இதே பண்பே வெளிப்படுகிறது. பெண்கள் மீதான ஒடுக்குமுறை வலுப்பெற்றிருப்பதை ஆஃப்கனிலிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன.
காலத்தைப் பின்னோக்கி இழுக்கும் மூர்க்கத்தனம்தான் இது. ஆஃப்கனை நிம்மதியான சூழல் நோக்கி இது நகர்த்தாது; மாறாக ஒடுக்குமுறையையும் புறக்கணிப்பையும் எதிர்கொள்ளும் சமூகங்கள் திரண்டு எழவும், புதிய சமூகப் பிளவுகள் - மோதல்கள் வெடிக்கவுமே வழிவகுக்கும். மேலும் துரதிர்ஷ்டம் என்னவென்றால், ஆஃப்கனுடன் தலிபான்கள் உண்டாக்கும் பாதிப்புகள் நிற்காது. இஸ்லாம் பெயரால் அவர்கள் அமைத்திருக்கும் ஆட்சி ஏதோ ஒரு விதத்தில் இஸ்லாமுடன் இணைத்தே பார்க்கப்படும். விளைவாக, ஆஃப்கனுக்கு வெளியிலும் முஸ்லிம் சமூகத்துக்கு இது கூடுதல் அழுத்தத்தையும் பின்னடைவையுமே உருவாக்கும். உலக முஸ்லிம் சமூகம் இதை அனுமதிக்கலாகாது. தலிபான்களுக்கான அழுத்தத்தை உருவாக்கும் வகையில், சர்வதேச முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் நாடுகளும் இது தொடர்பில் வெளிப்படையாகப் பேச வேண்டும். முஸ்லிம் சமூகத்தை தலிபான்கள் பின்னோக்கி இழுக்கலாகாது.
(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.