தலையங்கம், அரசியல், கூட்டாட்சி 2 நிமிட வாசிப்பு
பொய்ச் செய்திகளின் பெயரால் விமர்சனங்களை முடக்கலாகாது
சமூகப் பிளவுக்கும் வெறுப்பரசியலுக்கும் ‘பொய்ச் செய்திகள்’ பெரும் எரிபொருளாக இருக்கின்றன; பொய்ச் செய்திகளை உருவாக்குபவர்களையும், பரப்புபவர்களையும் எதிர்கொள்வது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஓர் உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கிறது.
அரசுகள் நிச்சயம் இதற்கு ஒரு வழிமுறையைக் கண்டறிந்துதான் ஆக வேண்டும். ஆனால், ‘எது பொய்ச் செய்தி, எது உண்மைச் செய்தி?; எவையெல்லாம் நடவடிக்கைக்குரிய செய்திகள்?’ என்றெல்லாம் தீர்மானிக்கும் ஓர் அமைப்பை அரசே உருவாக்குவது மிக ஆபத்தான போக்குக்கே வழிவகுக்கும்.
இன்றைக்குத் திட்டமிட்டு உருவாக்கப்படும் பல பொய்ச் செய்திகளுக்கு, அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ஐடி விங்’ அமைப்புகளே நேரடியாகவும் மறைமுகமாகவும் தொட்டிலாகச் செயல்படுகின்றன என்பது ஊர் அறிந்த உண்மை. பல கட்சிகளிலும் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் நிழல் ராணுவப் பிரிவுகள் போன்றே செயல்படுகின்றன. எந்த அரசை இயக்குவதும் ஓர் அரசியல் கட்சி என்பதை நாம் மறந்துவிட முடியாது.
சமூகத்தில் பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இப்படி ஓர் அமைப்பை உருவாக்குவதாக அரசுகள் காட்டிக்கொண்டாலும், அது இவர்களுடைய பிரதான நோக்கம் இல்லை என்பது வெளிப்படை. ஏனென்றால், மத்தியிலும் பல மாநிலங்களிலும் பொய்ச் செய்திகள் உருவாக்கத்தில் ஆளுங்கட்சிகள் முக்கியமான பங்கை வகிக்கின்றன.
இந்தியாவில் ஆளும் அரசுகள் கூடுமானவரை விமர்சனங்களை முறிக்க எல்லா வகையான முயற்சிகளிலும் ஈடுபடுகின்றன. பொதுவான ஊடகங்களுக்கு இணையாக போட்டி ஊடகங்களையும், சமூக வலைதளங்களையும் அரசியல் கட்சிகள் நடத்துவதோடு, தங்கள் மீதான விமர்சனங்களை முன்வைப்போர் மீது ட்ரோல்கள் வழி வசைத் தாக்குதல்களையும் நடத்துகின்றன. இத்தகு சூழலில், இப்படி உருவாக்கப்படும் புதிய அமைப்பால் அரசை விமர்சிக்கும் பொதுவான ஊடகங்கள், ஊடகர்களும் மோசமாகப் பாதிக்கப்படுபவர்கள் என்ற அச்சத்தை நாம் நிராகரிக்க முடியாது.
மோடி அரசு 2023 ஆரம்பத்தில் இப்படி ஓர் அமைப்பை உருவாக்குவதற்கான முன்னெடுப்பை எடுத்தது. அரசு சார்ந்த உண்மை சரிபார்ப்புக் குழுவை அமைக்க வழிவகுக்கும் வகையில் தகவல் தொழில்நுட்ப விதிகள் திருத்தப்பட்டன. ஒன்றிய அரசைத் தொடர்ந்து கர்நாடக அரசும், தமிழ்நாடு அரசும் இப்போது அதே வழியில் நடக்கின்றன. கருத்துச் சுதந்திரத்தை முடக்கி, ஜனநாயகத்தை ஒடுக்கும் பாஜகவை அரசியல் தளத்தில் எதிர்க்கும் காங்கிரஸும், திமுகவும் அதே பாஜக வழியில் இந்த விஷயத்தில் செல்வது தார்மிகமற்ற செயல்பாடு. இது கடுமையான கண்டனத்துக்குரியது.
விமர்சனங்களை எதிர்கொள்ளும் இடத்தில் இருக்கும் அரசே இப்படியான அமைப்புகளை உருவாக்குவதற்குப் பதில், மாற்று ஏற்பாடுகளை அரசு சிந்திக்கலாம். பொய்ச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஃபேஸ்புக், ட்விட்டர், யூட்யூப் போன்ற இணைய நிறுவனங்களுடன் கலந்தாலோசிக்கலாம்; இந்த விவகாரத்தில் அவர்களைக் கூடுதல் பொறுப்பேற்கச் செய்து பரவலைத் தடுக்கலாம்; அதே போன்று தொழில்முறை பத்திரிகையாளர்களால் நடத்தப்படும் ‘உண்மையை அம்பலப்படுத்தும் சுயாதீனக் குழு’க்களை ஊக்குவிப்பது எனும் முடிவை அரசு எடுக்கலாம். பொய்ச் செய்திகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு இப்போது உருவாக்கியுள்ள புதிய அமைப்பின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஐயன் கார்த்திகேயனே இதற்கு முன்பு ‘யு டர்ன்’ என்ற பெயரில் அப்படி ஒரு நிறுவனத்தை நடத்திவந்தவர்தான். மாறாக, அரசே இப்படி ஓர் அமைப்பை நடத்துவது ஜனநாயகக் குரல்களை மேலும் நெறிக்கவே வழிவகுக்கும். இது ஆபத்தானது!
3
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.