தலையங்கம், அரசியல், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

சமூகநீதியுடன் நிறையட்டும் பெண்களுக்கான பிரதிநிதித்துவம்

ஆசிரியர்
21 Sep 2023, 5:00 am
1

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் முதல் அமர்வாக சிறப்புக் கூட்டத்தை நடத்தி,  நாடாளுமன்றதிலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியிருப்பதை நரேந்திர மோடி அரசின் முக்கியமான முன்னெடுப்பு என்றே சொல்ல வேண்டும். இந்திய அரசியலில் பாலின சமத்துவத்துக்கான அடுத்த கட்ட முன்னகர்வு இது. சமத்துவத்தின் தாய் என்று சொல்லப்படும்  பாலினச் சமத்துவத்தில் நிலவும் மோசமான பின்னடைவுக்கு, இந்தியா மெல்ல முகம் கொடுக்கிறது. 

இந்திய அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி 1931இல் பிரிட்டன் அரசுக்கு சரோஜினி நாயுடு, பேகம் ஷா நானா இருவரும் எழுதிய கடிதத்திலிருந்து இந்தப் போராட்டத்துக்கான பயணக் கதையை நாம் எழுதலாம். இந்தியா குடியரசாக மலர்ந்தபோது எல்லோருக்கும் வாக்குரிமை அளிக்கும் அளவுக்கு தன் ஜனநாயகத்தைச் சிந்திக்க முடிந்தது.

இந்திய ஆட்சியாளர்களில் சகலருக்குமான பிரதிநிதித்துவத்தை உருவாக்குவதில் ஒரு பாய்ச்சலைச் சிந்தித்தவர் ராஜீவ் காந்தி.  அவருடைய கனவான பஞ்சாயத் ராஜ் சட்டங்களைப் பின்னாளில் நரசிம்ம ராவ் நிறைவேற்றியபோது உள்ளாட்சி அமைப்புகளில் பெண்கள் 33% இடஒதுக்கீடைப் பெறுவதற்கான வாய்ப்பு உருவானது. 

அடுத்து, 1996இல் தேவகௌடா ஆட்சிக் காலத்தில் நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் பெண்களுக்கான  இடஒதுகீட்டை உருவாக்கும் முயற்சி நடந்தது. தொடர்ந்து, வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் 1998இல், 2003இல் என்று பல சமயங்களில் இது சம்பந்தமான முயற்சிகள் நடந்தன. அடுத்து மன்மோகன் சிங் ஆட்சியில் 2008இல் 33% இடஒதுக்கீட்டை அளிக்கும் மசோதா மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றியும் பெற்றது.  ஆயினும், மக்களவையில் முட்டுக்கட்டை விழுந்தது. 

இந்த முயற்சிகள் ஒவ்வொரு முறை தள்ளிப்போகவும் முக்கியமான ஒரு காரணம் இருந்தது. அது, பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் சமூகரீதியான உள் ஒதுக்கீட்டின் நிலை என்ன என்பதே ஆகும். நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான லாலு பிரசாத் யாதவ் உள்பட பலர் தொடர்ந்து இந்த விஷயத்தை வலியுறுத்திவந்தார்கள்.

சாதிய நரம்பால் கட்டப்பட்ட இந்தியச் சமூகத்தைப் பொருத்தமட்டில் சமத்துவத்துக்கான பாதையைச் சமூகநீதி அடிப்படையிலேயே சிந்திக்க முடியும். பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டில் தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கான உள் ஒதுக்கீடு அவசியம் என்ற பார்வையில் ஒருவர் எந்தத் தவறையும் காண முடியாது. ஏனென்றால், நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையைக் கொண்ட - சுமார் 60% - பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தோர் ஆண் - பெண் இரு பாலரையும் சேர்த்து,  நாடாளுமன்றத்தில் இதுவரை அடைந்திருக்கும் அதிகபட்ச பிரதிநிதித்துவம் 26%. இதுவும் 2004இல் நிகழ்ந்தது. கடந்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மீண்டும் சரியலானது. நம்முடைய நாடாளுமன்றம் ஆணாதிக்கத்தை மட்டும் பிரதிபலிக்கவில்லை; அது முற்பட்ட சாதியினரின் கூடாரமாகவே இன்னும் தொடர்கிறது. 

நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்று உலகிலேயே ஆப்பிரிக்காவின் ருவாண்டாவில்தான் அதிகம்; அங்கே பெண்களின் பிரதிநிதித்துவம் இன்று 60%க்கும் அதிகம். நம்மைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் குறைவு. 543 இடங்களைக் கொண்ட நடப்பு மக்களவையில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை 78. அதாவது, 14%.  கடந்த 70 ஆண்டுகளில் இதுதான் அதிகம். 

பெண்களின் மொத்த எண்ணிக்கையே இப்படி என்றால், சமூகங்கள் அடிப்படையிலான பிரதிநிதித்துவம் இன்னும் மோசம். ஓர் உதாரணத்துக்கு முஸ்லிம்கள். 1951 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் முஸ்லிம்கள் 10%. இன்றைக்கு அது 15%ஆக உயர்ந்திருக்கிறது. ஆனால், ஆட்சி நிர்வாகத்திலோ முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் தொடர்ந்து சரிவையே சந்தித்திருக்கிறது.

மக்களவையில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மொத்தமாகவே 5%க்குள் இன்று முடக்கப்பட்டிருக்கிறது. அதிலும் முஸ்லிம் பெண்களின் நிலை மோசத்திலும் மோசம். நடப்பு மக்களவையில் முஸ்லிம் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 4. அதாவது, வெறும் 0.7% பிரதிநிதித்துவம்.

நாட்டின் 543 மக்களவைத் தொகுதிகளில் 40%க்கும் அதிகமாக முஸ்லிம்கள் வாழும் தொகுதிகளின் எண்ணிக்கை மட்டுமே 100க்கும் மேல் இருக்கின்றன. ஆனால், நாட்டின் 29 மாநிலங்களில் 23இல் ஒரு முஸ்லிம் பெண் உறுப்பினர்கூட கிடையாது. இப்படிப்பட்ட சூழலில், "நீங்கள் இந்த இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களைப் பற்றி சிந்திக்கவே இல்லை" என்று மஜ்லீஸ் கட்சியின் ஒவைசி கூறியிருப்பதிலோ, அவருடைய கட்சி இந்த இடஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக வாக்களித்ததிலோ என்ன தவறு இருக்க முடியும்?

எதிர்க்கட்சிகள் இதைச் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளன. அரசு இயந்திரத்தின் மூளையாகச் செயல்படும் ஒன்றிய அரசின் 90 செயலர்களில் 3 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் எனும் உண்மையைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "எனில், ஒவ்வொரு இடத்திலும் சமமின்மையும் பாகுபாடும் சரியாக இனம் கண்டு போக்கப்பட வேண்டும்" என்று சரியாகவே குறிப்பிட்டார். பெண்களுக்கான 33% இடஒதுக்கீட்டில் தலித்துகள் மற்றும் பழங்குடியின பெண்களுக்கான உள் ஒதுக்கீட்டை பாஜக அரசு கொண்டுவருகிறது. அதுபோலவே பிற்படுத்தப்பட்டோருக்கும் 33% ஒதுக்கீடு கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இது மிக அத்தியாவசியமான நடவடிக்கை. 

பெண்களுக்கான இடஒதுக்கீட்டுச் சட்டம் கொண்டிருக்கும் இன்னொரு பிரச்சினை, இது உடனடியாக அமலுக்கு வராது. 2020இல் நடந்திருக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு பாஜக அரசால் நடத்தப்படாத சூழலில், அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்குப் பின் வரும் தேர்தலிலேயே இது அமலாக்கப்படும் என்று அரசு அறிவித்திருக்கிறது. ஆக, 2026இல் தொகுதி மறுவரையறை நடத்தப்படும் என்ற யூகத்துக்கு இது வலு சேர்த்திருக்கிறது. 

அப்படியென்றால், 1976க்குப் பிறகு இந்த ஐம்பதாண்டுகளில் உயர்ந்திருக்கும் மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றாகிறது. அப்படி நடந்தால், நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே 42% ஆகவுள்ள இந்தி மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்கும், ஏற்கெனவே 24% ஆகவுள்ள தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மேலும் குறையும். இந்த அபாயத்தைப் புரிந்துகொண்டு சுட்டிக்காட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். 

இப்படி பல ஆபத்துகள் ஒன்றன் ஒன்றாக 'பெண்கள் இடஒதுக்கீடு' எனும் பெருஆட்டத்தின் கீழ் அடுக்கப்பட்டுள்ளன; இவற்றையெல்லாம் போகிறப்போக்கில் கரைந்துவிடவோ கடந்துவிடவோ முடியாது.

ஆகையால், வரலாற்றுச் சிறப்பு மிக்க பெண்களுக்கான இடஒதுக்கீட்டை நாடு  நிறைவேற்றும் சூழலில், அதை ஒட்டி எதிர்க்கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் குறைகள் கையோடு கவனத்தில் கொள்ளப்பட்டு இந்தச் சட்டம் மேம்படுத்தப்பட வேண்டும். அனைத்துத் தரப்பினருக்குமான பிரதிநிதித்துவத்தைச் சமூகநீதியின் அடிப்படையில் தரும் ஏற்பாடாக இது அமைய வேண்டும்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

விஜய் பாண்டியன்    10 months ago

ஐயா,சமஸ் அவர்களுக்கு நன்றி.நான் உங்கள் அனைத்து காணொளிகள் மூலமாக தான் "தொகுதி மறுவரையறை" பற்றி தெரிந்துகொண்டேன்.அது இன்று பேசுபொருளாக ஆகியுள்ளது.மக்கள் விழிப்புணர்வு பெறட்டும்........(மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் மாநிலங்கள் வஞ்சிக்கப்படாமல் நடக்கவேண்டும்)

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

கட்சிப் பிளவுநாம் கட்டற்ற நுகர்வு பற்றிப் பேசுவதில்லைசட்டப்பூர்வ உரிமைசித்தராமய்யா அருஞ்சொல்உள்கட்டமைப்புநல்வாழ்வு வாரியப் பதிவுமறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் சகோதசபாநாயகர் அப்பாவுஇந்திய தண்டனைச் சட்டம்நாலாவது கட்டம்பரம்பரைக் கோளாறுஆல்கஹால்தீண்டவியலாமைவிவசாயிகள் கோரிக்கைமாரி செல்வராஜ்ஒன்றிய நிறுவனங்கள்காந்தி ஆசிரமம்: ஓர் அறைகூவல்எண்ணெய்ச் சுரப்பிகள்சோழசூடாமணி கலைஞர்பிரெஞ்சு விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்அரசு கட்டிடங்களின் தரம்சுயராஜ்யம்ஸ்டாலினிஸ்ட்டுகள்பொதுச் சார்பியல் கோட்பாடுராஜேந்திர சிங்நடராஜன் ரங்கராஜன் கட்டுரைசைபர் குற்றவாளிகள்மேடைக் கலைவாணர்மன்மோகன் சிங் அரசு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!