இன்னொரு குரல் 2 நிமிட வாசிப்பு
பார்வையற்றோருக்கு ஏற்ப வடிவமைப்பில் சில மாற்றங்கள் தேவை
தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.
காந்தியா மீண்டும் வருவார்?
@ முடிவுக்கு வருமா இந்திய-சீன எல்லைப் பிரச்சினை?
நிதானமாகப் படித்து முடித்ததில் ஒன்று மட்டும் தெளிவாகப் புரிகிறது. இந்தியாவை ஆளும் அரசுகள் தனது பின்னடைவுகளைப் பெருமித முழக்க முலாம் பூசி முன்வைத்தபடியே இருக்கின்றன. கள எதார்த்தமோ மெல்ல எல்லை தாண்டி ஊர்ந்துகொண்டு இருக்கிறது. ‘அருஞ்சொல்’லாய் ஒலிக்கும் சில குரல்களுக்கு இன்றைய இள ரத்தங்கள் செவிசாய்ப்பது காலத்தின் கட்டாயம்.
'அருஞ்சொல்' இணைய வடிவமைப்பில் இன்னும் போதாமைகள் இருக்கவே செய்கின்றன. இன்றைய நெருக்கடி உலகில் ஒருவர் நாள் தவறாமல் எந்த ஒரு ஊடகத்தையும் பின்தொடர்வது சாத்தியமில்லை. எனவே, அவ்வப்போதைய விடுபடல்கள் இயல்பானவை. இந்தச் சிக்கலுக்கு முகம் கொடுக்கும் வகையில் 'அருஞ்சொல்' ஒரு தொடர்ச்சியைக் கைக்கொள்வது முக்கியம் எனத் தோன்றுகிறது. உதாரணம் எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் இணையதளம். அதுபோலவே, கட்டுரையின் வகைமைகளை முகப்பிலேயே தருவது என்பது, இணையத்தை செல்பேசியின் வாயிலாகவும் அணுகும் சில தரப்பினருக்கு மிகப் பெரிய இடைஞ்சலாகவும், நேர விரயமாகவும் ஆகிவிடுகிறது. சான்றாக, ‘அருஞ்சொல்’லை மடிக்கணினியைக் கொண்டு அல்லாமல் செல்பேசியின் வழியே மட்டும் சென்றடையும் வாய்ப்புள்ள ஒரு பார்வையற்றவர், கட்டுரையின் முதன்மைத் தலைப்பை வந்தடைவதற்குள் ஏராளமான ஸ்வைப்புகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. ஏனெனில், கணினிகள்போல எளிய சுருக்க வழிமுறைகள் (shortcut methods) செல்பேசிகளில் இருப்பதில்லை. ஆகவே, கட்டுரையின் முதன்மைத் தலைப்பு மற்றும் அதற்குத் தொடர்புடைய புகைப்படம், கட்டுரையாளர் பெயர் மற்றும் ஒரிரு சுருக்க வரிகள் முகப்பில் இடம்பெற்றாலே போதுமானது என்று நினைக்கிறேன். வகைமைகள் (categories), துணை வகைமைகள் (sub-categories) மற்றும் குறிச்சொற்கள் (tags) ஆகியவை முகப்பிலேயே விரவிக் காணக் கிடைப்பது ஒருவித சோர்வை உண்டுபண்ணுகிறது. ஆயினும், தனது வாழ்வை அறிவுத்தளத்தில் கூர்படுத்தி, போட்டித் தேர்வுகளில் வெல்லத் துடிக்கும் தமிழகத்தின் அத்தனை பார்வையற்ற இளைஞர்களுக்கும் ‘அருஞ்சொல்’ ஒரு தவிர்க்க இயலாத ஊடகம் எனப் பரிந்துரைக்கிறேன். உடற்பயிற்சியைப் போன்று தங்கள் அதிகாலையின் சில மணித்துளிகளை அருஞ்சொல்லில் சென்று செலவிடுங்கள். இலாபம் சில நாட்களில் வங்கிப்பணியாகவோ, அரசுப்பணியாகவோ உங்கள் வாசற்கதவைத் தட்டும்.
- ப.சரவண மணிகண்டன், பட்டதாரி ஆசிரியர், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பூவிருந்தவல்லி.
@ பாஜக தொண்டரின் வீட்டுக்கு ஏன் போனேன்?
யோகேந்திர யாதவின் கட்டுரையைத் தமிழில் படித்தேன். திகைத்துப்போனேன். திணறடிப்பட்டேன். எல்லோருக்கும் உயிர் ஒக்கும் என்ற அறநீதியை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். கட்டுரை மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். ஊடகங்கள் மூடி மறைத்துத் தவிர்த்துவிட்டபோதும், வெளிச்சமிட்ட அருஞ்சொல்லுக்கு நன்றி. உலக நாகரிகம் கைக்குக் கை, பல்லுக்குப் பல் என்ற மோசஸின் சிந்தனையிலிருந்து, இயேசுவின், "இன்னொரு கன்னத்தைக் காட்டு" என்ற நாகரிகத்துக்கு மேம்பட வேண்டிய காலம் இது. "அறிவினான் ஆவது உண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை". "கருத்தின்னா செய்தவர்கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றோர் கோன்" - போன்றவை வள்ளுவர் கற்பித்த நாகரிகம். தலைவர் ராகேசு திகைத்திற்கு இவற்றைக் கற்பித்தோர் யாருமில்லை போலும். நாடு முழுமைக்கும் அன்பின் பெருமையை நாகரிகத்தைக் கற்பிக்க காந்தியா மீண்டும் வருவார்?
- சே.நா. விசயராகவன், காரைக்குடி
@ சாவிகள்
'அருஞ்சொல்' ஞாயிறு இலக்கியத்தில், பிரிட்டிஷ் எழுத்தாளர் டிம் பார்க்ஸ் எழுதிய குறுங்கதையை சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார் இல.சுபத்ரா. தமிழ்நாட்டு களமும், கதைப் பொருளும் அல்லாத கதையை மொழிப்பெயர்ப்பதும், வாசகர் வாசிப்பைத் துண்டிக்காமல் தொடரச் செய்வதும் சவாலான பணி. அருமை சகோதரி... தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!
- பானு
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Raja 3 years ago
ஒரு வேண்டுகோள். ஒருவருக்கு வாட்ஸாப்பில் அனுப்பும் போது லிங்கில் பொதுவாக பதிவின் படமும் சேர்த்து வரும். படிப்பவருக்கும் என்னவென்று பார்க்க ஒரு ஆர்வத்தை கொடுக்கும். சில பதிவுகளில் அது போல் வருகிறது. மற்றபடி அப்படி வருவதில்லை. எடுத்துக்காட்டாக "இன்னொரு குரல்' - இந்த லிங்கை ஒருவருக்கு வாட்ஸாப்பில் அனுப்பினால் அதன் படத்துடன் வருகிறது. மற்ற பதிவுகளில் அது போன்று வருவதில்லை. இதை சரி செய்தால் அனுப்புகையில் ஒரு நிறைவு கிடைக்கும். பார்ப்பவருக்கும் படத்துடன் கூடிய பதிவு ஆர்வத்தை அளிக்கும். நன்றி.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.