கட்டுரை, அரசியல், சட்டம், வரலாறு, புத்தகங்கள் 5 நிமிட வாசிப்பு

தகவல் என்னும் ஆயுதம்

கோபால்கிருஷ்ண காந்தி
11 Aug 2024, 5:00 am
0

கவல் அறியும் உரிமைச் சட்டம் இந்திய ஜனநாயகத்தின் மிக முக்கியமான முன்னெடுப்புகளில் ஒன்று. குடிமைச் சமூகத்திற்கு அதிகரமளிக்கும் மகத்தான செயல்பாடுகளில் ஒன்று. இந்தச் சட்டமும் அது தரும் உரிமையும் தானாக வந்துவிடவில்லை. அர்ப்பணிப்புடன் கூடிய பல்லாண்டுக்காலப் போராட்டத்தின் விளைவாகவே இது சாத்தியமானது. அமைதி வழியில் மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தின் வலிமையையும் இந்த இயக்கம் உணர்த்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்தின் கதையை விரிவாகவும் ஆதாரப்பூர்வமாகவும் பதிவுசெய்யும் நூலுக்கு முகப்புரை எழுதியிருக்கும் கோபாலகிருஷ்ண காந்தி, இந்த நூலின் முக்கியத்துவத்தைச் சுருக்கமாக விளக்குகிறார். அந்த முகப்புரையை இங்கே தருகிறோம். – ஆசிரியர்.

றிந்துகொள்வது புரிந்துகொள்வதற்கே. புரிந்துகொள்வது அமைதியாக இருப்பதற்கு அல்லது - போராட்ட ஆயத்த நிலைக்கு. 

அறியாமை என்பது இருளில் இருப்பது போன்றது; இருளில் இருப்பது தேக்கநிலை. மனித மனம் இதற்காகப் படைக்கப்படவில்லை. அறிவு என்பது எரிபொருள். புத்திசாலித்தனம் ஆற்றல். அறிவு, புத்திசாலித்தனம் என்ற இந்த இரண்டும் எரிபொருளும் ஆற்றலுமாகக் காலத்துடன் ஓடுகின்றன; ஒவ்வொரு நிலைமையிலும் ஒவ்வொரு மாற்றத்திலும், அவற்றைச் சுற்றியிருக்கும் சவால் ஒவ்வொன்றையும் எதிர்கொண்டு ஓடுகின்றன. இந்தத் திறமை அல்லது திறனில்தான் ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கும், முன்னேற்றத்திற்கும், மகிழ்ச்சிக்கும் தேவையான இயல்பான ஆற்றல் இருக்கிறது. 

தனிமனிதன் அறியாமையிலிருப்பது, தனது புத்திசாலித்தனத்தைப் புதைப்பது போலாகும். தனிமனிதருக்குள் இருக்கும் மனித ஆற்றலைச் சிதைக்க அனுமதிப்பது ஆகும். அதைக் காட்டிலும் மோசமானது, அந்தத் தனிமனிதனைச் சார்ந்திருக்கும் மற்றவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துவது. ஒரு தனிமனிதனின் அறியாமையால் ஏற்படும் விளைவே இவ்வளவு கொடியதென்றால், மக்கள் திரளே, மனிதச் சமூகமே அறியாமையிலிருந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? குடிமக்கள், தம் சுயத்தைப் பற்றி அறியாமல் இருளிலிருப்பது என்பது ஒட்டுமொத்த மக்களின் விதியையும் அடிமைத்தனத்திற்கு - அறியாமை எனும் அடிமைத்தனத்திற்கு - விட்டுக்கொடுப்பது போலாகும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

அறியாமைக்கு எதிரான போராட்டம்

நமது விடுதலைக்கான போராட்டம், ஒரு பன்முகப் போராட்டத்திலிருந்து உருவானது; முதன்மையாக அறியாமைக்கு எதிராகவும் பிரிட்டிஷ் ஆட்சி என்ற அடிமைத்தனத்திற்கு எதிராகவும் நடந்த போராட்டத்திலிருந்து எழுந்தது. தாதாபாய் நவ்ரோஜியின் ‘பாவர்டி அண்ட் அன்-பிரிட்டிஷ் ரூல்’ (Poverty and Un-British Rule), காந்தியின் ‘ஹிந்த் ஸ்வராஜ்’ (Hind Swaraj), காந்தி வெளியிட்ட இதழ்களான ‘ஹரிஜன்’ (Harijan), ‘யங் இந்தியா’ (Young India) போன்றவை, திலகரின் ‘கேசரி’ (மராத்தி), கோகலேயின் ‘மராத்தா’ (ஆங்கிலம்), அரவிந்தரின் ‘வந்தே மாதரம்’ (வங்காளம்), மௌலானா ஆஸாத்தின் ‘அல் ஹிலால்’ (Al Hilal) (உருது), சுப்பிரமணிய பாரதியின் ‘விஜயா’, ‘பாலபாரதி’ (இரண்டும் தமிழ்), கணேஷ் சங்கர் வித்தியார்த்தியின் ‘பிரதாப்’ (Pratap) (ஹிந்தி) போன்ற மேலும் பல நூல்களும், இதழ்களும் அரசியல், சமூக அடிமைத்தளையில் ஆட்பட்டிருந்த இந்தியாவின் அறியாமை எனும் திரையை விலக்கின. இவ்வாறு நம் தலைவர்கள் நமக்கு ஆசிரியர்களாக இருந்து, அறியாமையிலிருந்து புத்திசாலித்தனத்தையும், சகிப்புத்தன்மையிலிருந்து செயல்பாட்டையும், அக்கறையின்மையிலிருந்து ஆற்றலையும் வெளிப்படுத்தக் கற்றுத்தந்தார்கள். இறுதியில், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையைப் பெறவும் வழி கோலினார்கள். 

அடிமைத்தனம் என்கிற பள்ளத்திலிருந்து இந்திய விடுதலைக்கான அரசியல் நம்மை வெளியில் கொண்டுவந்தது. ஒரே இரவில் நமது பல்வேறு தீமைகள், நம் பலவீனங்கள், சோர்வுகள், அநீதிகள், மாசுபோல் நம்மைப் பீடித்திருந்த பல்வேறு மேலாதிக்கங்களுக்கு முன், நேருக்கு நேராக நம்மை நிறுத்தியது. 

அருணா ராய்

அனைவரிலும் இரு மனிதர்கள், இவற்றை நன்கு உணர்ந்திருந்தனர். அவர்கள் மகாத்மா காந்தியும் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும். 

1947, ஆகஸ்ட் 15க்குப் பின், தனக்குக் கிடைத்திருந்த சில மாதங்களிலும் காந்தி சோர்வின்றி, உறக்கமின்றிப் பாடுபட்டார். கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு மனித உரிமைகள் கிடைப்பதை உறுதிப்படுத்த முயன்றார்; மாகாண அரசுகளையும், புதிய மத்திய அரசாங்கத்தையும் பொறுப்புடன் இயங்கவைக்க முயன்றார். இடப்பெயர்வுக்கு ஆளானவர்களுக்குத் தங்குமிடமும் குறைந்தபட்ச உணவுப் பொருட்களும் ஆடைகளும் வழங்கும்படி நிர்வாகங்களை வற்புறுத்தினார். வீடுகளைத் துறந்த அல்லது துரத்தப்பட்ட ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் தில்லியின் தெருக்களில் மழையிலும் குளிரிலும் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிப்பதைக் காந்தி கண்ணுற்றார். தேவையானவர்களுக்குப் போர்வைகள் கொடுக்கும்படி நிர்வாகத்தை அறிவுறுத்தினார். மழைக்கோட்டுகள் கொடுப்பது சிரமமாக இருக்கிறது என்றால் மக்களுக்குப் பழைய செய்தித் தாள்களை வழங்கும்படி கூறினார். அதனால், குழந்தைகளும் பெண்களும் வெறும் மண் தரையில், நனைந்த தரையில் படுக்காமல், செய்தித்தாள்களை விரித்துப் படுக்க முடியும் என்றார். நிர்வாகத்தை இடித்துரைத்து அவர் செய்த காரியங்கள் அனைத்தும் ‘சாதாரணக் குடிமகன்’ என்ற நிலையில்தான். 

அம்பேத்கரின் வரைவு

குடிமக்கள் என்ற முறையில், நமக்கான உரிமைகளையும் சலுகைகளையும் உறுதிப்படுத்தும் அடிப்படை உரிமைகளை அரசியல் சாசனத்தில் தொலைநோக்குப் பார்வையுடன் பாபாசாகேப் விரிவாக வரைவுசெய்திருந்தார். பொதுநிதியைப் பயன்படுத்தும்போது முறையான கணக்கிற்கும் தணிக்கைக்கும் அதில் பல விதிகள் சேர்க்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் பார்வைக்கும், அவர்களின் அனுபவத்திற்கும் புதிதாக வென்றெடுக்கப்பட்ட நமது விடுதலையைத் திறந்துவைக்கும் வகையில் அவை வடிவமைக்கப்பட்டன. நம்மை, நம்மிடமிருந்து அவை காப்பாற்ற வேண்டும். நமது நுரையீரல்கள், புதிய சுதந்திரக் காற்றைப் புதியதாகச் சுவாசிக்க உதவ வேண்டும். அரசியலமைப்பு இந்த உரிமைகளை அறுதியானவையாக, கட்டுப்படுத்த முடியாதவையாக உருவாக்கவில்லை. அவற்றைப் பொதிந்து வைத்திருந்தது. 

1948, நவம்பர் 4இல் டாக்டர் அம்பேத்கர் அரசியல் நிர்ணய சபை உரையில் பேசும்போது இவற்றை ‘அரசியலமைப்பின் அறநெறிகள்’ என்று குறிப்பிட்டார். இது ஒரு புதிய, புதுமையான கருத்தாக்கம். அரசு அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது; எனினும், அந்த அதிகாரங்கள் அரசியலமைப்பிலிருந்தும் சட்டங்களிலிருந்தும் பெறப்பட்டவை என்றார் அவர். அதனால் அவர்களது பொதுவெளிச் செயல்பாடுகளைக் கண்டிக்க மக்களால் முடியும். இவ்வாறாக ‘அறநெறி’க்கு ஒரு அரசியல் பரிமாணத்தை அவர் அளித்தார். 

அரசியல் உரிமைகளை, சுதந்திர இந்தியா தனித்த ஆற்றலுடன் நடைமுறைப்படுத்தும் சாத்தியம் குறித்து அம்பேத்கரின் மனதில் தெளிவான கருத்து இருந்தது. ஆனால், குடிமகனுக்குரிய சமுதாய, பொருளாதார உரிமைகளைக் கோருவதில் சாதாரண மனிதர்கள் பின்தங்கியிருப்பார்கள் என்று கருதினார். அவர்களுக்கான தார்மீகப் பங்கு இது. இந்த உரிமையைக் கேட்பதில் நமது அனுபவம், அரசியல் செல்வாக்கோ, பொருளாதார வலுவோ இல்லாத சாதாரணக் குடிமக்களின் அனுபவம். மங்கலான, மாயை போன்ற கானல் நீர் அது. ‘ஒரு குடிமகன், ஒரு வாக்கு’ என்பது விலைமதிப்பற்ற சொத்து; எனினும், அடிப்படை உரிமைகளையும் சட்டப்பூர்வமான உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கு மாற்றாக அதைக் கொள்ள முடியாது. ஒரு குடியரசின் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சலுகை அது. வாக்கு என்பது வாக்குதான்; வாழ்க்கை என்பது வாழ்க்கையே. வெளியேறிக்கொண்டிருந்த பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் இடிபாடுகளிலிருந்து கடந்த காலத்து மேலாதிக்கங்களும் கூட்டமைப்புகளும் சாதியும் சமூகம் சார்ந்த வழிபாட்டு மரபுகளும் வெளிவந்தன; சுதந்திர இந்தியாவின் அரசியல் மேனியிலிருந்த விரிசல்களிலும் இணைப்புகளிலும் அவை நழுவிப் புகுந்துகொண்டன. அவை அங்கு எப்படி உயிர் பிழைக்கின்றன! மிதவாதக் கட்டுமானத்தின் மீது ஒட்டுண்ணிபோல் படிந்த அவை, அதைப் பலவீனமாக்கின; அத்துடன் அதை அழித்தும்விட்டன. 

இந்த நூல் பேசுவது என்ன?

நலன் பயக்கும் எண்ணற்ற சட்டங்களின் வழியாக இந்தியாவை நிர்வகிக்கும் அரசாங்கங்கள், கொண்டிருக்கும் இலட்சியங்களில் ஆக்கம் மிகுந்தவையாக, மிதவாதிகளாகத் தம்மைக் காட்டிக்கொள்கின்றன. அவை அப்படித்தான் இருக்க வேண்டும். அவை அவை அப்படித்தான் இருக்கின்றன. என்றாலும் தம் செயல்பாடுகளில் வக்கிரமான இறுக்கம் காட்டுகின்றன. 

முற்போக்கான கருத்துக் கொண்டவையாகக் காட்டிக்கொண்டாலும் யதார்த்தத்தில், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பிற்போக்கானவை. நமது நிர்வாகங்கள் பெருந்தன்மை மிக்கவைதான். எனினும், மேல்மட்டத்திலும், மத்தியிலும் அல்லது ‘கீழ்’மட்டத்திலிருக்கும் பல நிர்வாகிகள் தனித் திறமையொன்றை உருவாக்கிக்கொண்டுள்ளனர். சட்டப்படியான உரிமைகளை அவர்கள் சிதைக்கிறார்கள்; ஏமாற்றி எடுத்துக்கொள்கிறார்கள்; சிறப்புரிமைகளைப் பறித்துக்கொள்கிறார்கள்; அதன் மூலம் திட்டங்கள் அனைத்தையும் பரிகசிக்கிறார்கள்; சுயராஜ்யத்தைப் பகடி செய்கிறார்கள். அதிகாரத்தின் உயர்நிலையில் இருப்போர் மக்களைச் சுரண்டவும் ஏமாற்றவும் வெளிப்படையாகக் கொள்ளையடிக்கவும் நம் மக்களின் அறியாமையும் படிப்பறிவின்மையும் உதவி செய்கின்றன. சுதந்திரத்திற்குப் பின் இயற்றப்பட்ட சட்டங்களும் திட்டங்களும் நன்கு படித்த நேர்மையான மனிதர்களால் படிப்பறிவற்ற அப்பாவிகளுக்காக உருவாக்கப்பட்டவை என்று சொல்கிறார்கள். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்தும் வேலை கூர்மையான இடைத்தரகர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விளைவு, அதிர்ச்சியும் ஏமாற்றமும் விரக்தியும். 

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

அத்தகு சூழலில், சட்டப்படியான உரிமைகளை நியாயமான முறையில் கோருவதற்காக எழுந்த புதிய போராட்டம் குறித்து இந்நூல் பேசுகிறது. புத்துயிர் பெற்ற உணர்வுகளுடன், புழுதி படிந்த தெருக்களில் நடந்த வீரியம் மிக்க போராட்டங்களையும் அயர்வற்ற பேரணிகளையும் இந்நூல் விவரிக்கிறது. சொல்லவேண்டியதைச் சொல்கிறது, செய்ய வேண்டியதைச் செய்கிறது. சுருங்கிப்போய்விட்ட அரசியலுக்கு, மூச்சுத் திணறும் குடியரசுவாதத்திற்கு, சத்துக் குறைபாட்டால் திணறும் ஜனநாயகத்திற்கு, இன்னும் குறிப்பாக, அதன் ‘அரசியலமைப்பு அறநெறி’க்கு எவ்வாறு உயிரூட்டப்பட்டது என்ற வரலாற்றை நமக்குச் சொல்கிறது. தனித்துவமான உத்வேகத்துடன் அருணா ராயும், அவரது சகாக்கள் நிகில் தேய், சங்கர் சிங்கும் அவரது மனைவி அன்ஷியும், உறுதியான சிந்தையுடன் வளர்ந்துகொண்டிருந்த அந்தக் குழுவிலிருந்த ஏனையோரும் ராஜஸ்தானின் பாறை நிலப்பரப்பில், கிராமம் ஒன்றில் 1990ஆம் ஆண்டில் மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனை எப்படி, ஏன் தொடங்கினர் என்பதுதான் இந்நூல் பேசும் கதையின் தொடக்கம். 

இதன் ஆசிரியர் யார்?

அந்தக் கிராமத்து மனிதர்களின் அறியாமையைப் போக்கவும், சட்டங்கள், சட்டப்பூர்வமான உரிமைகள் குறித்து அவர்களுக்கு இருக்கும் புரிதலைக் கூர்மைப்படுத்தவும், எடுத்த முடிவுகளில் வலிமையுடன் இருக்கவும், பகல் நேரத் தூக்கத்தில் அரைகுறை மயக்கத்தில் ஆழ்ந்திருக்கும் அதிகாரிகளை எழுப்புவதற்கான துணிவை அந்த மக்களுக்கு அளிக்கவும் நடத்தப்பட்ட தொடர்ச்சியான, அயராத பிரச்சாரங்கள், உறுதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், முடிவுறாத பேச்சுவார்த்தைகள், கடினமான முடிவுகள், துன்பங்கள், இடர்களுக்கு ஆட்படுதல் என்று வாசிப்பவரை அசாதாரண ஆபத்துகளினூடாக இந்த நூல் அழைத்துச்செல்கிறது. ‘தாக்குதல்களுக்கு’ ஆளான அந்த அதிகாரவர்க்கத்தின் மத்தியிலிருந்த ஒருசில புத்திக்கூர்மையுள்ள அதிகாரிகளிடமிருந்தும் அறிவாளிகள், எழுத்தாளர்கள், ஏனைய அரசு சாரா அமைப்புகளிடமிருந்தும், விவேகம் நிறைந்த இந்தியர்களிடமிருந்தும் கிடைத்த எதிர்பாராத ஆதரவின் கதையையும் இந்நூல் கூறுகிறது. 

தேவ்துங்ரி கிராமத்தில் அருணாவின் வெளிப்படையான எளிமையான வாழ்க்கையும், தீவிரமான, ஆனால் அந்த இடத்திற்குத் தேவையான சிக்கனத்துடன் அவரும் அவரது குழுவினரும் வாழ்ந்ததும் பணியாற்றியதும் கிராமத்தினரிடம் மட்டுமின்றி அதைச் சுற்றியிருந்தோரின் சிந்தனையிலும் வாழ்க்கை முறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. அத்துடன் காந்தியின் பீனிக்ஸ், கோச்ரப், சபர்மதி, சேவாகிராம் வாழ்க்கை முறைகளைத் திரும்பவும் நினைவுகூரும்படியாக, அவர்களது குறிக்கோளை உலகறியச் செய்தன. யாருக்கும் தெரியாத மிகச் ‘சாதாரணமான’ அந்த மக்களின் அனுபவங்கள் நிஜமானவை. இந்த நூலில் விவரிக்கப்படும் அந்த அனுபவங்கள் காவிய நாயகர்களின் கதைகள்போலக் காட்சியளிக்கின்றன. 

சட்டப்பூர்வமாக அவர்களுக்குக் கிடைக்க வேண்டியவை குறித்த அடிப்படையான தகவலை அறிந்துகொள்வதற்குச் சாதாரணக் குடிமக்களுக்கு இருக்கும் உரிமையை அவர்களுக்கு அளிப்பதற்கும் அதைப் பாதுகாப்பதற்கும் ஒரு சட்டம் வேண்டும்; ம.கி.ச.சங்கதனின் பிரச்சார இயக்கம் இதற்கானதே. அத்துடன், பொதுமக்களின் நலனுக்கானது; மேலும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும். விறுவிறுப்பான அதன் பிரச்சாரம், வேறு இயக்கங்களையும் தூண்டிவிட்டது. 2005இல் ஆர்டிஐ சட்டம் என்ற உச்சத்தை அடைந்தது. இவை தொடர்பான, நம்மிடமிருந்து நழுவிவிட்ட பல்வேறு காலகட்டங்களின் விவரிப்புகள் இப்போது இவ்வாறாக நம் கையில் கிடைத்துள்ளன. ஆனால், இந்த நூல் நிகழ்வுகளின் காலவரிசைப் பதிவு என்பதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது. அவர்களது நோக்கம் உண்மையானது, நியாயமானது என்று அறிந்திருக்கும் மனிதர்களிடமிருந்து வெளிப்படும் மனோபலத்தை, உறுதிப்பாட்டை, தீர்மானத்தை வெளிப்படுத்தும் சாசனம் இது. தனிமனிதர்கள் என்ற அளவில் அவர்கள் வைக்கும் வெறும் ‘உரிமை கோரல்’ பற்றியது மட்டும் அல்ல இது; மாறாக, சமூக நீதி அடிப்படையில் சட்டப்படியான ஒன்றைக் கோருவதிலிருக்கும் உண்மைத்தன்மையை, சொல்லப்போனால் அதன் அவசியம் குறித்தது. உண்மையைத் தேடுவதன், உண்மையைச் சொல்வதன், உண்மையாக வாழ்வதன் அறிக்கை இது. இதன் ஆசிரியர் தனிமனிதரல்லர். ஒரு நிறுவனம் அல்ல. உண்மையான சொற்களே இதன் ஆசிரியர். 

ஆர்டிஐ சட்டம் அதன் வாக்குறுதிகளுக்கு உண்மையாக இருக்கிறது; அதன் உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருக்கிறது. கிராமத்தின் பொதுவிநியோகக் கடையிலிருந்து, தில்லி குடியரசுத் தலைவரின் மாளிகைவரையில் செய்ய வேண்டியதைச் செய்தது. வேறு சட்டங்களைப் போல் இதை நாசப்படுத்தவும் தவறாகப் பயன்படுத்த நினைப்பவர்களும் உண்டு. மீட்சிக்குரியதான ஒரு சட்டம் அதன் வெற்றியால்தான் மதிப்பிடப்படும். தன் தோல்விகளுக்காக எழும் கேள்விகளுக்கும் அது தயாராக இருக்க வேண்டும். பொறுப்புணர்வைக் கொண்டுவர முயலும் ஒரு சட்டம், கேள்வி கேட்கப்படும்போது நழுவக் கூடாது. மற்ற சட்டங்களைப் போல் இந்தச் சட்டமும் இந்திய நாடாளுமன்றத்தின் விவேகத்தில் பிறந்ததுதான். விசித்திரமாக, பிறந்த இடத்திலேயே, அதன் தொட்டிலிலேயே, மதிப்பு மிக்க நாடாளுமன்றத்திலேயே, இந்தச் சட்டத்தைத் தீவிரமாக எதிர்ப்பவர்களையும் பெற்றிருக்கிறது. அவர்களிடம் அதற்கான காரணங்கள் உள்ளன. இந்தச் சட்டத்தின் விதிகளைச் சத்தம் போடாமல் விலகிச் செல்லும் வித்தைகளை, அரசியல் வர்க்கத்தின், அதிகார வர்க்கத்தின் ஒரு பகுதியினர் கற்றிருக்கின்றனர். அவர்களது அந்தத் திறன், இந்தச் சட்டத்தின் தாக்கத்தைப் பலவீனப்படுத்துகிறது. 

மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது: இந்தச் சட்டம் சார்ந்து பணிபுரியும் மனித ஆற்றல், அதாவது, தகவல் ஆணையங்களில் பணிபுரிபவர்கள். நம் மக்களின் பன்முகத்தன்மையை முழுமையாக அவர்கள் பிரதிபலிக்கின்றனர். தகவல் ஆணையங்களிலும் அவற்றின் செயலகங்களிலும் சுறுசுறுப்பானவர் பலரும் சில சோம்பேறிகளும் அர்ப்பணிப்பு மிக்கவர்களும் சந்தேகத்திற்குரிய சிலரும் பணிபுரிகிறார்கள். அச்சம் கொண்டவர்கள் சிலரும் சமரசத்திற்கு ஆளானவர்கள் சிலரும் அவர்களில் இருக்கிறார்கள். ‘சமரச’த்திற்கு விளக்கம் ஏதும் தேவையில்லை. ஆனால், இவை அனைத்தும், இந்தச் சட்டம் உருவாகக் காரணமாக இருந்த அசல் முன்னோடிகளை உற்சாகமிழக்கச் செய்யாது. அனுபவத்தின் அடிப்படையில் அதன் செயல்பாட்டைச் சோதிக்கத் தயாராக இருப்பவர்கள் அவர்கள்; அத்துடன், முதலாவது முதன்மைத் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லாவின் வடிவில் ஒரு வரப்பிரசாதமும் உள்ளது. ஆர்டிஐ ஸ்தாபனத்தின் பெருமிதம் அவர். கொள்கை அடிப்படையிலான, விவேகமான உத்தரவுகளின் மூலம் சிறந்த தரநிலையை அவர் நிறுவியுள்ளார்; முக்கியமாக மிகக் கவனத்துடன் அது பின்பற்றப்பட்டது. 

வரலாற்றுப் பக்கங்கள்…

இந்த ஆர்டிஐ வரலாற்றிற்குப் பின்னால், பெரும் அச்சம் தரும் தகவல் ஒன்று உள்ளது: ஆர்டிஐ செயற்பாட்டாளர்கள், பிரச்சாரகர்கள் ஆகியோரின் உயிருக்கான ஆபத்து. ஏறத்தாழ அறுபது பேர் தம் உயிரை இழந்துள்ளனர். ஒரு நல்ல அரசாங்கம், பொறுப்புணர்வுமிக்க அரசு, அரசியலமைப்பின் அறநெறி நோக்கங்கள் போன்றவைக்காக உயிரைத் தந்த தியாகிகள் அவர்கள். நாம் அவர்களைக் கௌரவிக்கிறோம். ஆனால், நம் நாட்டில் அத்தகைய துணிவுமிக்கவர்கள் கொலையைத்தான் சந்திக்க வேண்டுமா? அவர்கள் கொலை செய்யப்பட்டது தேசிய அவமானம், சோகம். தேசத்தின் எல்லையைப் பாதுகாக்கும் வீரர்களின் இழப்பிற்குத் துக்கம் அனுஷ்டிப்பதுபோல், நமது அரசியலமைப்பின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க உயிர் துறந்த, துணிவுமிக்க இவர்களைப் போன்ற வீரர்களின் இழப்பிற்கும் துக்கம் அனுஷ்டிப்போம். இதில் சோகம் என்னவென்றால் எல்லை தாண்டி வரும் துப்பாக்கிக் குண்டால் ஒருவர் கொல்லப்படுகிறார்; மற்றொருவரோ நமது தேசத்தைச் சேர்ந்த ஒருவரால். 

சிரமங்கள் பல இருந்தாலும், ஆர்டிஐ சட்டத்தின் விரிவடையும் தாக்கம் மேலும் பெருகும், ஆழமாக வேரூன்றும், பரவும் என்று நம்புகிறேன். அறியாமை, தெளிவின்மை ஆகியவை காரணமாக அதை எதிர்ப்பவர்களும் நாசம் விளைவிக்க நினைப்பவர்களும் குறுகிய காலத்திற்குச் சில யுத்தங்களில் வெற்றிபெறலாம். நீண்ட காலத்திற்கு அது இயலாது. அருணா ராய்க்கும் அவரது முன்னோடிக் குழுவினருக்கும், ஆர்டிஐ சட்டத்தை ஊக்குவிக்கும் எஸ்.பி.குப்தா போன்றோருக்கும் நன்றி. எதைப் பெற்றிருக்க வேண்டும், அறிவெனும் எரிபொருளையும் புத்திசாலித்தனமெனும் ஆற்றலையும் எப்படிக் கையாளுவது என்று எப்போதையும்விடவும் இந்திய மக்கள் இப்போது தெளிவாக அறிந்துகொண்டிருப்பார்கள். 

நூல்: தகவல் அறியும் உரிமை - ஓர் எழுச்சியின் கதை
ஆசிரியர்: அருணா ராய் (மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனுடன் இணைந்து) 
தமிழில்: அக்களூர் இரவி
பதிப்பகம்: காலச்சுவடு 
விலை: ரூ.720
நூலை வாங்க:
காலச்சுவடு இணையதள இணைப்பு: https://books.kalachuvadu.com/catalogue/thakavalariyumurimai_1246/
அச்சுநூலின் இணைய இணைப்பு: https://www.amazon.in/dp/B0CL9ZTYMF?
மின்நூலின் இணைய இணைப்பு: https://www.amazon.in/Thakaval-Urimai-ezhuchiyin-ebook/dp/B0CLHXV5T9/

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கோபால்கிருஷ்ண காந்தி

கோபால்கிருஷ்ண காந்தி, முன்னாள் ஆளுநர். வெளியுறவுத் துறையிலும் இந்திய ஆட்சிப் பணியிலும் அலுவலராகப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். ' காந்தி இஸ் கான். ஹு வில் கைட் அஸ் நவ்?' உள்ளிட்ட பல்வேறு நூல்களின் ஆசிரியர். காந்தி, ராஜாஜியின் பேரன்.

தமிழில்: அக்களூர் இரவி

1






ஸ்ரீ ரங்கநாதர்சாவர்க்கர்வீரப்பன்இந்தி அரசியல்இளமரங்கள்புத்தக வெளியீட்டு விழாமாமன்னன்: உதயநிதிகள் நிஜத்தில் பேச வேண்டும்ஆதிக்கம்பணமதிப்பிழப்பு: மூன்று பரிமாணங்கள்அகில இந்தியப் படங்கள்நயன்தாரா சேகல் அருஞ்சொல்ஐசக் சேடினர் பேட்டிஏற்பாடுசெய்யப்பட்ட குற்றங்கள் தடுப்புச் சட்டம்சங்கீத கலாநிதி டி.எம்.கிருஷ்ணாசுவடுகள்பத்மாநாதபுரம்இதயம் செயல் இழப்பது ஏன்?காஷ்மீர் கலவரம்களச் செயல்பாட்டாளர்ஏன் எதற்கு எப்படி?பாலசுப்ரமணியம் முத்துசாமி கட்டுரைகாலவெளிதேவர்தான்சானியாவின் வணிக அமைப்புநவதாராளமயக் கொள்கைதமிழ்ச் சமூகம்சல்மான் ருஷ்டிநான் செய்தேன்நாராயண மூர்த்திகார்ட்டோம் தீர்மானம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!