கட்டுரை 9 நிமிட வாசிப்பு

விவசாயிகளின் தலைவர் படேல்

ராமச்சந்திர குஹா
12 Oct 2021, 5:00 am
0

ந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடு துறைமுக நகரமான கராச்சியில் 1931இல் நடைபெற்றது. வல்லபபாய் படேல் இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

முன்னதாக, தன் உரையில் படேல் இவ்வாறு குறிப்பிட்டார்: “மிகச் சாதாரணமான ஒரு விவசாயியை, எந்த இந்தியரும் விரும்பும் மிகப் பெரிய பதவியை வகிக்குமாறு அழைத்திருக்கிறீர்கள். என்னை முதல் சேவகனாக நீங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் நான் செய்த சிறிய வேலைக்காக அல்ல; குஜராத் மாநில மக்கள் செய்த அற்புதமான தியாகங்களுக்காக என்பதை அறிவேன். உங்களுடைய பெருந்தன்மை காரணமாக குஜராத்தை மட்டும் தேர்ந்தெடுத்து, இந்த கௌரவத்தை வழங்கியிருக்கிறீர்கள். உண்மை என்னவென்றால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுமே இப்படிப்பட்ட தியாகங்களைச் செய்திருக்கின்றன.  நவீன காலத்தில் இப்படியொரு தேசிய விழிப்புணர்வை நாம் இதுவரை கண்டதே இல்லை!” 

கிராமத்திலிருந்து வந்த தலைவர்

1931க்கும் முன்னதாகவே காங்கிரஸ் உருவாகி நாற்பதாண்டுகள் ஆகியிருந்தன. இருப்பினும் அதுவரையில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த எவரையும் கட்சித் தலைவராக காங்கிரஸ் தேர்ந்தெடுத்ததே இல்லை - இந்தியா தன்னுடைய கிராமங்களில்தான் வாழ்கிறது என்று காந்தி கூறியிருந்தும், கிராமத்திலிருந்து யாரும் தலைவரானது இல்லை. காங்கிரஸுக்கு அதுவரை தலைவர்களாக இருந்தவர்கள் அனைவரும் நகரத்தில் வளர்ந்தவர்கள், நகரத்தில் தோய்ந்தவர்கள்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் படேல்தான் கிராமப்புறப் பின்னணியிலிருந்து காங்கிரஸில் பெரிய பதவிக்கு வந்த தலைவர். மிகப் பெரிய போராட்டத்துக்கு விவசாயிகளைத் திரட்டியவர் என்ற வகையில்தான் அவர் தேசிய அரங்கில் அறிமுகமாகிறார். 

படேலின் வரலாற்றுப் பாரம்பரியம் பற்றிய சமீபத்திய விவாதங்கள் அனைத்தும் இந்திய சமஸ்தானங்களை இந்தியாவுடன் அவர் இணைத்தது குறித்தும், நாடு இரண்டாகப் பிளவுபட்டு, நாட்டுக்குச் சுதந்திரமும் கிடைத்த பிறகு தேசிய ஒருமைப்பாட்டை அவர் கட்டிக்காத்த விதம் குறித்தும்தான் இருந்தன. அவருடைய இந்த அரிய சேவைகள் மிகவும் வலுவானவை என்பதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், தொடக்கக் காலத்தில் அவர் விவசாயிகளைத் திரட்டி தேசிய இயக்கத்தில் பங்குகொள்ளச் செய்ததும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பர்தோலியில் சத்யாகிரகம்

இந்திய விவசாயிகள் கிட்டத்தட்ட ஓராண்டாக மோடி அரசின் மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கும் இந்நாட்களில், விவசாயிகளின் தலைவராக (சர்தார்) படேலின் பங்களிப்பு இந்தக் காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

படேல் தலைமை தாங்கி, தொடங்கி, நடத்திய பர்தோலி சத்யாகிரகம் (1928), சுயமரியாதையைக் காப்பாற்றிக்கொள்வதில் விவசாயிகளுக்குள்ள வலிமையையும் உறுதியையும் பறைசாற்றியது. அன்றைய பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களின் அடக்குமுறை விவசாயக் கொள்கைகளுக்கு எதிராகக் கிராமப்புற விவசாயிகள் ஒன்று திரண்டனர். அவர்களுடைய இயக்கம் தொடர்பாக ஏராளமான தகவல்கள் அன்றைய பம்பாய் மாகாண ஆவணங்களில் பொதிந்து கிடக்கின்றன. அவை இப்போது மகாராஷ்டிர மாநில ஆவணக் காப்பகத்தில் மும்பையில் கிடைக்கின்றன.

ஆவணப் பதிவுகள்

பர்தோலியில் சத்யாகிரகத்துக்கு ஆதரவாக விவசாயிகளிடம் படேல் குஜராத்தி மொழியில் பேசிய பேச்சுகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையிலும்கூட, ஆணியறையும் உணர்வைத்தான்  படிக்கும்போது ஏற்படுத்துகின்றன. துணிச்சலையும் தியாகத்தையும் காட்டுமாறு விவசாயிகளை அவர் கேட்டுக்கொள்கிறார். “இந்தப் போராட்டத்தில் ஐயாயிரம் பேர் ஆடுகளைப் போல அஞ்சி நடுங்கிக்கொண்டிருப்பதைவிட, ஐந்து பேர் உயிரையும் கொடுக்க சித்தமாக இருங்கள்” என்று உணர்ச்சி பொங்கப் பேசுகிறார். பர்தோலி வட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாயத் தலைவர்களுடன் ஆலோசனை கலக்கிறார் படேல் என்று போலீஸ் அறிக்கை அச்சம் தெரிவிக்கிறது. 

அரசிடம் உள்ள இப்படியான ஆவணங்களைத் தவிர, காலனி ஆட்சிக் காலத்தில் பம்பாயிலிருந்து வெளிவந்த ‘பாம்பே கிரானிக்கல்’ செய்தித்தாளின் நுண் புகைப்படச் சுருள்களும் கிடைக்கின்றன. அவையும் ஏராளமான தகவல்களைக் கொண்டுள்ளன. 

துரதிருஷ்டவசமாக அந்த நாளிதழ் இப்போது பிரசுரமாவதில்லை. ‘கிசான் சபா’ என்று அழைக்கப்படும் விவசாயிகள் கூட்டத்தில் என்ன நடந்தது என்று 1928 ஏப்ரல் இறுதி வாரத்தில் ஒரு செய்தியை அந்தச் செய்தித்தாள் பின்வருமாறு பிரசுரித்திருக்கிறது: ‘வரத் என்ற கிராமத்தில் நேற்றிரவு விவசாயிகள் சபைக் கூட்டம் நடந்தது. மக்கள் உற்சாகமும் பக்தியும் போட்டிபோட அவர் மீது மலர்களைப் பொழிந்தார்கள். கதராடை அணிந்த பெண்கள் கையால் நூற்கப்பட்ட நூலிழைத் துண்டுகளையும், மலர்கள், தேங்காய், குங்குமம், அரிசி ஆகியவற்றையும் அவருக்கு அளித்து பாரம்பரிய முறைப்படி அவரை விழுந்து வணங்கினர்… வீடுகளில் நடக்கும் மங்கள நிகழ்வுகளின்போது பாடும் பாடல்களை அந்த நேரத்துக்கு உரிய வகையில் சில மாற்றங்களைச் செய்து பெண்கள் பாடினர். சத்தியத்துக்காக நடக்கும் இந்தப் போராட்டத்தில் தங்கள் பக்கம் துணை நிற்குமாறு தெய்வத்தை வேண்டி மனமுருகினார்கள். சுமார் 2,500 பேர் கூடியிருந்த அக்கூட்டத்தில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடி ஒரே குரலில் பாடியது அங்கே தெய்வீக மணம் கமழச் செய்தது’ என்று ‘பாம்பே கிரானிக்கல்’ விவரித்துள்ளது.

சத்யாகிரகிகளுக்கும், பம்பாய் மாகாண அரசுக்கும் இடையே பர்தோலி சத்யாகிரக போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதை ஆகஸ்ட் மாத ‘பம்பாய் கிரானிக்கல்’ செய்தியாகத் தந்துள்ளது. ‘பூசலுக்குக் காரணமாக இருக்கும் அனைத்து அம்சங்கள் குறித்தும் நீதித்துறை அதிகாரி, வருவாய்த் துறை அதிகாரியுடன் இணைந்து விசாரணை நடத்துவார், நீதித்துறை அதிகாரியின் கருத்தே ஏற்கப்படும் என்ற நிபந்தனையுடன் உடன்பாடு ஏற்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து சத்யாகிரகிகளும் விடுவிக்கப்பட்டனர், பதவி நீக்கப்பட்ட கிராமத் தலைவர்கள் அனைவரும் மீண்டும் அவரவர் பணியிலேயே நியமிக்கப்பட்டனர்.’

மகாதேவ தேசாய் பதிவுகள்

மகாதேவ தேசாய், பர்தோலி சத்தியாகிரகம் குறித்து புத்தகம் எழுதி 1929-ல் பிரசுரித்திருக்கிறார். அதில் விவசாயிகள், சமூகத்தில் எப்படி இருவேறு நிலைகளில் இருக்கின்றனர் என்பதை சர்தார் படேல் மிகவும் தெளிவாகச் சுட்டிக்காட்டிப் பேசியதை விவரிக்கிறார். “சமூக, பொருளாதார நிலையில் விவசாயிக்குத்தான் முதலிடம். விவசாயிகள் இல்லாவிட்டால் சமூகமே இல்லை. ஆனால், அன்றாட வாழ்வில் விவசாயிகளை எவரும் மதிக்காமல் கடை நிலையில் வைத்து அழுத்துகின்றனர். விவசாயிகள் மட்டுமே உற்பத்தியாளர்கள், மற்றவர்கள் எல்லாம் உண்டு கொழுக்கும் அட்டைப் பூச்சிகள்” என்கிறார் படேல்.

பர்தோலி சத்யாகிரகம் வென்றதற்குக் காரணம் சர்தார் படேல்; அவர்தான் விவசாயிகளுக்கு இரண்டு அடிப்படை பாடங்களைக் கற்றுக்கொடுத்தார், அவை அச்சமின்மை, ஒற்றுமை என்கிறார் மகாதேவ தேசாய்.

நூறாண்டு இடைவெளி

சர்தார் படேல் தலைமையில் நடந்த பர்தோலி சத்தியாகிரகத்துக்கும் இப்போது மோடி அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கும் கிட்டத்தட்ட நூறாண்டுகள் இடைவெளி. இருப்பினும் இரண்டுக்கும் உள்ள சில ஒற்றுமைகள் கண்ணில் படாமல் போகவில்லை. இந்தப் போராட்டத்தைத் தொடர்வதில் அன்றைய காலம்போல இன்றைக்கும் பெண்களுக்கு உள்ள மன உறுதி; குளிர், கோடை, பருவமழை, பெருந்தொற்று என்று எவ்வளவோ சோதனைகள் வந்தபோதும் போராட்டத்தைக் கைவிடாத விவசாயிகளின் தீரம் என்று இரண்டு அம்சங்கள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.

போராட்டத்தைத் தடுக்கவும், வலுவிழக்க வைக்கவும், இயக்கத்தைப் பிளக்கவும், இயக்கத் தலைவர்கள் குறித்து அவதூறுகளைப் பரப்பவும் அன்றைய காலனி அரசு கையாண்ட அனைத்து உத்திகளும் இன்றும் கையாளப்படுகின்றன.

1920களில் பிரிட்டிஷ் அரசுக்கு உடந்தையாக இருந்தவர்கள் வருவாய்த் துறையிலிருந்த பிராமண அதிகாரிகள், குஜராத்துக்கு வெளியிலிருந்து கூட்டி வரப்பட்ட கூலிப்படையினர். 2020களில், காவல் துறையும், கோடி மீடியாக்களும் (மோடி ஆதரவு ஊடகங்கள்) அந்த வேலையைச் செய்கின்றன. விவசாயிகளை ஒடுக்கும் வேலையைக் காவல் துறை செய்கிறது, மோடி ஆதரவு ஊடகங்கள் செய்திகளைத் திரித்து வெளியிடுவதுடன் விவசாயத் தலைவர்கள் மீது அவதூறு பரப்புகின்றன. விவசாயிகளைக் கொடூரமாக ஒடுக்குவதற்கு, தண்ணீர் பீரங்கிகள், சாலைகளில் நடுவில் கூரான இரும்புக் கம்பிகள் பயன்படுத்தப்படுகின்றன. இணையவழி தகவல் தொடர்பைத் துண்டிப்பது, வெறுப்பு நிறைந்த பிரச்சாரங்கள் ஆகியவற்றில் காலனியாதிக்க அரசையும் மிஞ்சிவிட்டது மோடி - அமித் ஷா கூட்டணி.

சத்தியத்துக்கே வெற்றி

படேலின் வாழ்க்கை வரலாற்றைத் தொடக்கக் காலத்தில் எழுதிய நரஹரி பாரீக், விவசாயிகளிடம் படேல் கூறியதாக தகவல் ஒன்றைப் பதிவு செய்திருக்கிறார்: “சத்தியம்தான் இறுதியில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உங்களுடைய அனைத்தையும் தியாகம் செய்யத் தயாராகி போராட்டத்தில் இறங்கியிருக்கிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள். அதிகாரிகளுடன் இப்போது கூட்டு சேர்ந்தவர்கள் பிறகு அவர்களுடைய செயல்களுக்காக வருத்தப்படுவார்கள். சத்தியத்தின் பலமும், சாத்வீகமான இந்தப் போராட்டமும், நியாயம் எதுவென்பதை இறுதியில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை அரசுக்கு ஏற்படுத்திவிடும். அரசின் அணுகுமுறை மாறினால்தான் அனைவரும் திருப்திப்படும்படியான சுமுகத் தீர்வு ஏற்படும். இப்போது விரோதமும் கசப்புணர்வும் பொங்க நம்மை ஒடுக்கும் அரசு அப்போது நம் மீது அனுதாபமும் புரிதலும் கொண்டு பார்க்கும்” என்று பேசியிருக்கிறார்.

இன்றைய இந்திய விவசாயத் தலைவர்கள் அதே உணர்வுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசுபோல அல்ல இந்த அரசு, அனுதாபமும் புரிதலும் கொண்டு எந்தக் காலத்திலும் இது நடந்துகொள்ளாது என்பதையே இவர்களுடனான நம்முடைய கடந்த கால அனுபவங்கள் சொல்கின்றன.

இந்தக் கட்டுரையை எப்படித் தொடங்கினேனோ அப்படியே - காங்கிரஸ் தலைவராக 1931இல் படேல் ஆற்றிய உரையிலிருந்து சிலவற்றைச் சொல்லி - முடிக்க விரும்புகிறேன். “பெருந்திரளான மக்கள் ஒன்று திரண்டு தங்களுடைய கோரிக்கைகளுக்காகப் போராடும்போது வன்முறை நடக்காது என்பது வெறும் லட்சியக் கனவுதான் என்ற எண்ணங்கள் தவறானவை என்பதற்கு ஒரே சாட்சியாக நம்முடைய போராட்டங்கள் தொடர்கின்றன. வன்முறையின் சுமையால், வலி தாங்காமல் முனகிக்கொண்டிருக்கும் மனித குலத்துக்கு, சத்தியாகிரக போராட்டங்கள் மூலம் எதையும் சாதிக்கலாம் என்று எண்ணிலடங்காத சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது நம்முடைய பர்தோலி சத்தியாகிரகம். நம்முடைய மோசமான விமர்சகர்களின் கூற்றுகூட பொய்தான் என்பதை, வன்முறையை அறவே ஒதுக்கிய நம்முடைய விவசாயிகள் நிரூபித்துவிட்டார்கள்!”

1931இல் படேல் பேசிய இந்த வார்த்தைகள் 2021இல் தற்கால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு உணர்ச்சிபூர்வமாக படிப்பதற்கேற்ப அமைந்திருக்கிறது. மக்களுடைய உணர்ச்சிகளை மதிக்கவே மதிக்காத, அதைப் பற்றி சிறிதும் கவலையே படாதவர்களுக்கு கண்ணியமான, உறுதியான எதிர்ப்பை விவசாயிகள் மீண்டும் தெரிவித்திருக்கிறார்கள்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ராமச்சந்திர குஹா

இந்தியாவின் முக்கியமான வரலாற்றியலாளர்களில் ஒருவர் ராமச்சந்திர குஹா. சமகால காந்தி ஆய்வாளர்களில் முன்னோடி. ஆங்கிலத்தில் ஏராளமான நூல்களை எழுதியுள்ள குஹாவின் எழுத்துகள் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, ‘தென்னாப்பிரிக்காவில் காந்தி’, ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ உள்ளிட்ட நூல்கள் இவற்றில் முக்கியமானவை. ‘டெலிகிராஃப்’ உள்ளிட்ட ஏராளமான ஆங்கிலப் பத்திரிகைகளுக்காக தொடர்ந்து குஹா எழுதிவரும் பத்திகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தமிழில் ‘அருஞ்சொல்’ இதழில் வெளியாகின்றன.








கர்நாடக அரசியல்அருந்ததியர்ப.சிதம்பரம் கட்டுரைகிங் மேக்கர் காமராஜர்சமூக வலைதளம்மதவாதம்குழந்தைகார்ட்டோம் தீர்மானம்மாநிலங்கள் நகராட்சிகளாகின்றன!சமஸ் கட்டுரைமாஸ்சாதிக் கொடுமைகளைத் தடுக்க அமெரிக்கா நடவடிக்கைதமிழக அரசு ஊழியர்கள்கொடூர அச்சுறுத்தல்ஹார்மோன்ருவாண்டாவிரிசுருள் சிரை நோய்அசோகர் கல்வெட்டுகள்காவிரி நதிஆண்களை அலையவிடலாமா?குறைகிறது விளிம்புநிலை விவசாயிகளின் வருமானம்ஜாமியா பல்கலைக்கழகம்பொருளாதர நெருக்கடிபசுமைத் தோட்டம்பி.எஸ்.கிருஷ்ணன்இயந்திரமயம்என்னால் செய்யப்பட்டதுஎன்ன செய்கிறார்கள் ஆசிரியர்கள்?பனியாக்கள்குரும்பி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!