தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 10 நிமிட வாசிப்பு

சைபர் வில்லன்கள்: திருமண வலைதள மோசடிகள்

ஹரிஹரசுதன் தங்கவேலு
04 Jun 2022, 5:00 am
3

ண்பர் ஒருவர் தனது பெண்ணுக்கு வரன் பார்ப்பதற்காக ஆன்லைன் மேட்ரிமோனியல் தளங்களில் கட்டணம் செலுத்தி சந்தாதாரராக சம்பந்தம் தேடிக்கொண்டிருந்தார். அதில் மாதக் கட்டணம் செலுத்துவது மட்டும்தான் அவர் பொறுப்பு. கணக்கை நிர்வகிப்பதை அவரது பெண்ணே செய்துவந்தார்.

ஒருநாள் அவரது மகளுக்கு ஒரு ப்ரொஃபைலில் இருந்து விண்ணப்பம் வந்தது. தான் தமிழ்க் குடும்பம் எனவும் கனடாவில் ஒரு வங்கியில் வேலை செய்துவருவதாகவும் சொல்லி, “உங்களது ஃப்ரொஃபைல் பிடித்திருக்கிறது, ஜாதகம் பகிர முடியுமா!” என்று எதிர்முனை கேட்டது. பெண்ணும் பகிர்ந்திருக்கிறார். சில நாட்களில் பையன் தரப்பிலிருந்து ஒரு குரல் வந்தது. “நான் அவனுடைய அம்மா பேசுறேன்; உன்னை ரொம்பப் புடிச்சிருக்கு. ஜாதகமும் அற்புதமா பொருந்திப் போகிறது. உங்கப்பா அம்மாகிட்ட அடுத்தது பேசலாமா?” என ஆங்கிலத்தில் கேட்க, இவர் தனது வீட்டில் சொல்ல, இரு வீட்டாரும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். 

இதற்குள் பெண்ணுக்கும் பையனுக்கும் இணையத்தில் ஆரம்பித்த உரையாடல், பிறகு இதயத்தில் நுழைந்து, புகைப்படங்கள், ஸ்மைலிகள், வீடியோ அழைப்புகள் எனக் காதலாக வளர்ந்திருக்கிறது. “கனடாவில் விடுமுறை பெறுவது கடினம். ஆதலால் வரும் விடுமுறையில் நாம் திருமணம் செய்துகொள்ளலாம்” என்று பையன் சொல்ல, “சரிங்க மாப்பிள்ளை, அப்படியே பண்ணிடலாம்!” எனத் தடபுடலாக திருமணத்திற்கான பணிகளை ஆரம்பிக்கிறார்கள் பெண் வீட்டார். 

உற்றார் உறவினரிடம் சொல்லியாயிற்று. மண்டபத்துக்கு முன்பணம் கொடுத்தாயிற்று. வீடு புதுப்பிக்கப்படுகிறது. நகைகள், உடைகள் வாங்கப்படுகின்றன. இதற்குள், நான் உங்கள் மகளுக்கு வாங்கிய வைர நெக்லஸ் மாமா, அத்தைக்கு ஒரு கனடா பட்டுப் புடவை, உங்களுக்கு ஒரு தங்க வாட்ச் என மாப்பிள்ளைப் பையன் புகைப்படங்களை வாட்ஸப்பில் அனுப்ப, தங்களுக்குக் கிடைக்கப்போகும் தங்க மகனை எண்ணி நெகிழ்ந்து மகிழ்ந்துபோகிறது குடும்பம்.

மாப்பிளை இந்தியா வரும் நாளும் வந்தது. விமானம் ஏறிவிட்டோம் என்று கனடாவில் இருந்து வந்த கடைசி அழைப்பிற்குப் பிறகு ஓர் அழைப்பும் இல்லை. டெல்லியில் இணைப்பு விமானம், இந்நேரம் போன் வந்திருக்க வேண்டுமே, என்ன ஆச்சோ என்று பதைபதைப்புடன் பெண் வீட்டார் காத்திருக்க, ஓர் அழைப்பு வருகிறது. “வணக்கம்! நாங்கள் டெல்லி விமான நிலையம் சுங்கச் சோதனைப் பிரிவில் இருந்து பேசுகிறோம். வைர நெக்லஸ், அனுமதிக்கப்பபட்ட தொகைக்கு அதிகமாய் கனடிய டாலர்கள் கொண்டுவந்தது எனச் சில பிரிவுகளில் உங்கள் மாப்பிள்ளையைக் கைதுசெய்திருக்கிறோம். இந்தியாவில் அவர் உங்களை மட்டும் தெரியும் என்கிறார்; அதனால்தான் உங்களுக்கு அழைத்தோம்” என்ற தகவலைக் கேட்டு அதிர்ந்துபோகிறது குடும்பம்.

அப்போது, என்ன செய்வது; எது செய்வது எனத் தெரியாமல் ஒவ்வொருவரும் பதறி நிற்கிறார்கள். சென்னையாய் இருந்தால்கூட நேரில் சென்று பார்த்து பேசலாம். இது டெல்லி விமான நிலையம் என அப்பா நினைக்க, இதை அபசகுனமாகக் கருதி திருமணத்தை நிறுத்திவிட்டால் மகளின் கதி என்ன ஆகும் என்கிற அச்சம் அம்மாவிற்கு மனமெங்கும் பரவுகிறது. மாப்பிள்ளையை விடுவிக்கச் சொல்லி சுங்க அதிகாரியிடம் போனிலேயே கெஞ்ச தொடங்குகிறார்கள். 

“சார்! பொண்ணு மேரேஜுக்கு வந்திருக்கார் சார்! ஏதாவது பார்த்து பண்ணுங்க சார், ப்ளீஸ்!” என லஞ்ச பேரத்தை மறைமுகமாக ஆரம்பிக்கிறார்கள். 

அதற்குள் தங்க மகன் மாப்பிள்ளை சுங்க அதிகாரியின் போனைப் பிடிங்கி, “இதெல்லாம் வேண்டாம் அங்கிள், சட்டபூர்வமாக இதை எதிர்கொள்வோம்” என நேர்மை பேச, “அதெல்லாம் வேண்டாம் மாப்பிள்ளை! நாங்க பாத்துகிறோம்” என வங்கியை நோக்கி விரைகிறார் அப்பா. தன் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்த தன் வாழ்நாள் சேமிப்பை எடுக்கிறார். சுங்க அதிகாரி சொன்ன வங்கி எண்ணிற்கு லட்சங்களில் பணத்தைச் செலுத்துகிறார். மாப்பிள்ளையை விட்டுவிடுங்கள் எனக் கெஞ்சுகிறார். 

“பணம் வந்து சேர்ந்துவிட்டது, அவர் பத்திரமாக சென்னை வருவார்” என சுங்க அதிகாரிகள் அழைப்பைத் துண்டிக்கிறார்கள். அவ்வளவுதான்! கடைசி அழைப்பிற்குப் பிறகு மாப்பிளை, அவரது அம்மா என எந்த எண்ணும் உபயோகத்தில் இல்லை. யாரும் வரவும் இல்லை. 

தாங்கள் குடும்பம் மொத்தமாக ஏமாந்துவிட்டோம் எனப் புரிவதற்கே பெண் வீட்டாருக்கு ஒரு வாரக் காலம் தேவைப்பட்டிருக்கிறது. அப்படி ஒரு நூதன உளவியல் மோசடி இது. 

இது எப்படி நிகழ்கிறது? 

திருமண வலைதளங்களும் ஒருவித சமூக வலைதளமே! போலி ஆவணங்களைக் கொண்டு யார் வேண்டுமானாலும் கணக்கைத் துவங்கலாம். அயல்தேசத்திலிருந்து அழைப்பது போன்ற ஏமாற்று வேலையை, இன்றைய காலத்தில் ஆரம்பப்பள்ளி மாணவர்கள்கூட செய்துவிடுகிறார்கள். இணையத்தில் ஐபி காலிங், அழைப்பு அட்டைகள் எனப் பல நூதனங்கள் இருக்கின்.

நான் இங்கு வேலை செய்கிறேன்! இந்த நாட்டில் இருக்கிறேன்! இவ்வளவு சம்பளம் என அடித்துவிடலாம். சோதனை எல்லாம் இல்லை. 

ஒரு நிமிடம் பொறுங்கள் சார்! அப்படி எல்லாம் ஆவணத்தைச் சோதிக்காமல் இந்த வலைத்தளங்கள் யாரையும் அனுமதிப்பதில்லை. இதற்காகவே ஒரு தனிக் கட்டணம் வசூலித்து, ஆவணங்களை சோதித்து, ‘வெரிஃபைடு’ (Verified) எனும் சோதனை முத்திரையானது கணக்கில் வராதா என்றுதானே கேட்கிறீர்கள்?

ஒன்றைப் புரிந்துகொள்ளுங்கள், இவர்கள் பயன்படுத்தும் ஆவண சோதனைத் தொழில்நுட்பம், ஆவணம் உண்மையானதா எனப் பார்க்குமே தவிர, ஆவணத்தில் இருக்கும் விபரம் உண்மையானதா என விசாரிக்காது. அதை நாம்தான் செய்ய வேண்டும்.

நம்மில் எத்தனை பேர் இணையத்தில் ஒருவர் குறிப்பிடும் தகவல்கள் உண்மைதானா எனக் கேள்வி எழுப்பியிருக்கிறோம். வம்பு சண்டை, வாட்ஸப் வதந்தி என்றால்கூட சரி, பெண்ணின் மண வாழ்க்கைக்கும் சோதிக்காமல், கேள்வி எழுப்பாமல் நம்புவேன் என்றால் எப்படி?

போலி பிடிஃஎப் ஆவணங்களை உருவாக்குவது இன்றைய தொழில்நுட்பத்தில் மிக எளிது. ஐ.ஆர்.சி.டி.சி. தளத்தில் ரயில் டிக்கெட்டைப் பதிவுசெய்ய ஆகும் காலத்தைவிட மிகச் சில விநாடிகளில் அதேபோல போலி டிக்கெட்டை உருவாக்கிவிட முடியும். உண்மையைவிட போலிதான் இன்னும் நம்பகமானதாகத் தெரியும். நமது போனில் இருக்கும் செயலிகளைக் கொண்டே விமான டிக்கெட், நகை, செல்போன், இன்ன பிற பொருட்கள் வாங்கிய ரசீது, பணி நியமனக் கடிதம், ஜாதகம் என நிமிடங்களில் போலிகளை உருவாக்க முடியும். 

இது போன்ற ஆவணங்களைக் கொண்டு கணக்கைத் துவங்கும் மோசடி கும்பல், முதலில் இலக்கைத் தீர்மானிக்கிறது. பெண்கள்தான் கணக்குகளை நிர்வகிப்பார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, மிகப் பணிவாக ஆனால், சரளமான ஆங்கிலத்தில் அவர்களிடம் உரையாடலைத் துவங்கி, அவர்கள் மூலம் அவர்களது பெற்றோரின் நம்பிக்கையைப் பெற்று மோசடியை நிகழ்த்துகிறார்கள்.

இவர்கள் வெளிநாடுகளில் எல்லாம் இருப்பதில்லை. வட மாநிலங்களில் ஓர் அறையில் இருந்துகொண்டே வாடிகனில் இருப்பதுபோல கதை காட்டுவார்கள். இவர்களது அம்மா, சுங்க அதிகாரிபோல நடித்தவன் எல்லாமே இவர்கள் குழுதான். இம்மோசடிக்கான முதலீடு என்பது இரண்டு மடிக்கணினிகள், சில சிம்கார்டுகள், போலி ஆவணங்கள், சரளமான ஆங்கிலம், இவ்வளவுதான். போலி ஆவணங்களைக் கொண்டே வங்கி கணக்குகளையும் துவங்கியிருப்பார்கள். பணம் அனுப்பிய பிறகு தேடிப் பிடிப்பதும் கடினம்.

இந்த மோசடிகளை எப்படி தவிர்ப்பது?

திருமணத் தளங்கள் நிச்சயமாக ஒரு தொழில்நுட்ப வரம். அதற்காக அதை மட்டுமே முழுமையாக நம்புதல் கூடாது.

திருமணத் தளங்களில் இருக்கும் அனைத்தையும் சந்தேகிக்க வேண்டும். தவறே இல்லை. கேள்விகளை எழுப்புங்கள். தகவல்களை முழுமையாக உறுதி செய்துகொள்ளுங்கள். இணையத்தை மட்டும் முழுதாக நம்பாதீர்கள். சம்பந்தப்பட்ட நபர் அங்குதான் பணி செய்கிறாரா என நண்பர்கள் மூலம் உறுதி செய்துகொள்ளுங்கள். ஏன் வீடியோ அழைப்புகளில் அறைக்குள் இருந்தே பேசுகிறீர்கள் எனக் கேள்வி எழுப்புங்கள். 

மேற்சொன்ன விபரம் இம்மோசடியின் ஒரு வழிதான். இன்னும் பல வழிகளில் இதே மோசடி நிகழ்கிறது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

  • நான் திருமணத்திற்குப் பிறகு இந்தியாவில் செட்டில் ஆக விரும்புகிறேன். எனது வெளிநாட்டுப் பணத்தை உன் கணக்கிற்கு மாற்ற சில நடைமுறைகள் உள்ளன. அதற்கு இந்தியப் பணமாக சில லட்சங்கள் தேவை. திருப்பித் தந்துவிடுகிறேன்.

  • எனது நிறுவனத்தில் என்னை நீக்கிவிட்டார்கள். உனக்கும் சேர்த்து க்ரீன் கார்டு உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இப்போதைக்கு சமாளிக்க சில லட்சங்கள் தேவை. திருப்பித் தந்துவிடுகிறேன்.

  • எனது அம்மா சாலை விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறார். எனது வங்கிக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்குப் பணம் தேவை. நண்பர் கணக்கிற்கு சில லட்சங்கள் அனுப்பவும். திருப்பித் தந்துவிடுகிறேன்.

காரணங்கள் இன்னும் வேறுபடலாம். ஆனால், பணம் என்று கேட்டால் உஷாராகிவிடுங்கள். அந்த நேரப் பதைபதைப்பு உங்களை யோசிக்கவிடாமல் செய்யக்கூடும். பெண்ணின் வாழ்வு ஆயிற்றே, கேட்டதைக் கொடுத்துவிடுவோம் என்கிற மன அழுத்தம் உங்களை வங்கியை நோக்கி ஓடச் செய்யும், உங்கள் வாழ்நாள் சேமிப்பை நொடியில் நீங்கள் இழக்கக்கூடும். அதுபோன்ற நேரங்களில் இக்கட்டுரை உங்கள் நினைவில் வரட்டும். இதில் குறிப்பிட்டுள்ளதைப் போல இருந்துவிட்டால் என்ன செய்வது என சந்தேகியுங்கள். பணம் இழந்தால்கூட மீண்டும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆனால், ஒருவன் நம் குடும்பம் மொத்தத்தையும் ஏமாற்றிவிட்டான் என்கிற மன நடுக்கமும் வேதனையும் காலத்திற்கும் இருக்கும். 

ஆகவே, இணைய வரன்களை சும்மா சந்தேகியுங்கள் நண்பர்களே. அது போதும்!

(பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


3

1





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ramesh Ramalingam   2 years ago

மிக அருமையான கட்டுரை. திருமண வலைத் தளங்கள் குறித்து நான் படிக்கும் முதல் கட்டுரை இதுவே. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. கேள்வி கேட்பதை குறைக்கும் போது நாம் ஏமாறத்துவங்குகிறோம். சொல்வது மிக எளிதாக இருந்தாலும் இதைச் செய்வது மிகக் கடினம். நம் அந்தரங்கத்திலும், பொருளாதாரத்திலும் எவர் நுழைந்தாலும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Banu   2 years ago

திருமண வலைதளங்கள் குறித்து நான் படிக்கும் முதல் கட்டுரை. மிக்க மகிழ்ச்சி. நல்ல முன்னெடுப்பு. நானும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரசித்திபெற்ற நிறுவனத்தின் சந்தாதாரர் என்ற முறையில் பதிவிடுகிறேன். 1. இவர்கள் வரன்களை உள்ளீடு செய்கிறார்களோ இல்லையோ தினந்தோறும் சந்தாத் தொகை செலுத்தாதோருக்கு offer தருவார்கள். அந்த offer ஐ நம்பி அவசர அவசரமாக உறுப்பினர் ஆவோரும் சந்தாத் தொகையை செலுத்துவோரும் ஏராளம். 2. இந்நிறுவனங்களின் customer care ஊழியர்கள் திறமை மெச்சக்கூடியது. தினமும் அவர்கள் சொல்ல வந்த கருத்தைக் கூறுவதில் குறியாக இருப்பார்களேத் தவிர நமது குறைகளை தீர்க்க வழி கூறுவதில்லை. என்ன செய்ய அவர்கள் design அப்படி. 3. Regular, prime, gold, diamond, platinum என்று profile களுக்கு நாம் கட்டும் சந்தாக்களுக்கு ஏற்ற பெயருண்டு. Gold இல் நல்ல வரன் வரவில்லை என்றுக் கூறினால் நீங்கள் எதிர்பார்க்கும் வரன்கள் diamond profile களில் இருக்கும் நீங்களும் மாறுங்கள் என்று சதுரங்க வேட்டை பட பாணியில் ஆசை தூண்டப்படும். 4. நான் platinum member எனக்கு எதிர்பார்த்த வரன் வரவில்லை என்று கூறினால் manager service எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கானத் தொகையை செலுத்துங்கள் என்பர். 5. Status கொஞ்சம் நல்லா இருக்கற வரன் வேண்டும் என்றும் கூறினால் நீங்கள் Elite scheme க்கு மாறுங்கள் என்பர். உங்க நிறுவனத்தை விட பிற சாதிவாரியான நிறுவனங்களில் நல்ல வரன்கள் உள்ளன என்று நாம் கூறினால் அந்த நிறுவனமும் நமது சகோதரி நிறுவனம் தான் கூடுதலாக இந்தத் தொகையைக் கட்டினால் அங்குள்ள வரன்களும் உங்களுக்கு view ஆகும் என்பார்கள். 6. நீங்கள் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் offer உடன் பதில் கிடைக்கும். ஆனால் விரும்பும் வரன் கிடைப்பது அரிது. 7. ஆனால் அந்நிறுவன customer care ஊழியர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும். நீண்ட பொறுமை. அன்பான உரையாடல். தெளிவான content delivery.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

நம் நாட்டில் உள்ள மாப்பிள்ளையும் (indian) இப்படி ஏமாற்றினால் எப்படி கண்டு பிடிக்க முடியும் என்றும் சொல்லுங்கள்...

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

குப்பையிலிருந்து தொடங்குவோம்இந்தியப் பொதுத் தேர்தல்சத்திரியர்மாமன்னன்: நாற்காலிக் குறியீடுவிஜய் அசோகன் கட்டுரைவளரும் நாடுபொருளாதார வளர்ச்சி: உண்மையும் கனவும்வருமான வரம்புஐஎஸ்ஐஉயிர் காக்கும் ரத்த தானம்சாதிய ஒடுக்குமுறை மாபெரும் பொறுப்புதகவல் தொழில்நுட்பத் துறைஆசாதிதுணை முதல்வர்குஜராத் பின்தங்குகிறதுகாவிரி டெல்டாஐடிபிஐஇருண்டதெல்லாம் பேய்பெரியார் இயக்கம்பசவராஜ் ராஜ்குருமயிர்Gandhi’s Assassinதினமணிதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்முகம் பார்க்கும் கண்ணாடிசெமி கன்டக்டர் தட்டுப்பாடுஅனைவருக்குமான ஓய்வூதிய திட்டம்உள்ளாட்சிகள் கையில் பள்ளிகள்பேரிசிடினிப்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!