கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 5 நிமிட வாசிப்பு

ஆன்லைன் ரம்மி உலகத்தின் பின்முகம்

ஹரிஹரசுதன் தங்கவேலு
18 Jun 2022, 5:00 am
1

வானி, வயது 29, கணிதப் பட்டதாரி.

சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை. காதல் திருமணம், கண்களுக்கு அழகாக இரு குழந்தைகள், பவா பவா எனப் பாசமாக அழைக்கும் நட்பு வட்டம் என நித்தம் மகிழ்ந்திருந்தவர் வாழ்வில் பேரிடியாக வந்திறங்கியது ஆன்லைன் ரம்மி. மெட்ரோ ரயிலில் பணிக்குச் செல்லும் நேரத்தில் சும்மா விளையாடலாம் என உள்ளே நுழைந்தவர், விளையாட்டிற்கு அடிமையாகிவிட, முதலில் ரூ.3 லட்சம் இழந்திருக்கிறார். பிறகு விட்டதைப் பிடிப்போம் என தனது 20 பவுன் நகைகளை விற்று ரூ.7 லட்சத்தை இழந்திருக்கிறார். மொத்த கணக்கு ரூ.10 லட்சம்.

தோல்வி தந்த கடும் மன உளைச்சல் கடைசியில் அவருடைய உயிரையே விலை கேட்டது. தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் பவானி. இவ்வளவும் வெறும் மூன்று மாத காலகட்டத்துக்குள் நடந்துவிட்டன. தங்கள் பவாவைப் பரத நாட்டியக் கலைஞராக, விளையாட்டு வீராங்கனையாகப் பார்த்து மகிழ்ந்த குடும்பத்தாருக்கு அவரது தற்கொலைக்கு இணையாக அதற்கான காரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

தற்கொலைகள் ஏன்? 

கடந்த பத்து மாதங்களில் மட்டும் 20க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் தலா பத்து லட்சம் ரூபாயிலிருந்து ஒரு கோடி ரூபாய் வரை இழந்திருக்கிறார்கள். கார் ஓட்டுநரில் இருந்து ஐடி துறையில் உயரிய பொறுப்பில் இருப்போர் என வாழ்வாதாரத்திலும் இவர்கள் வேறுபடுகிறார்கள். இது எப்படி சாத்தியம்?

சாமானியர்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பை ஒரு மொபைல் விளையாட்டில் இழக்குமளவு ஒரு செயலியால் மூளையெங்கும் போதையை நிறைத்து ஆக்கிரமிக்க முடியுமா?

ஆம், ‘மெஷின் லேர்னிங்’ (Machine Learning) எனப்படும் இயந்திரக் கற்றலால் முடியும். 

தொழில்நுட்ப விளையாட்டுகள் உருவாக்கத்தின் முதல் கட்டத்தில் உளவியல் நிபுணர்களின் பங்கும் அடங்கும். விளையாட்டின் நிறம், செயல் வடிவம், எப்படி போட்டிகளை வைத்தால் மணிக்கணக்கில் தொடர்ந்து விளையாடுவார்கள் என மனித உணர்வுகளைப் பகுத்து ஆராய்ந்தே இவ்வகை விளையாட்டுகள் உருவாக்கப்படுகின்றன. 

ஆன்லைன் ரம்மியைப் பொறுத்தவரை  ‘ஆர்என்ஜி’ (ரேண்டம் நம்பர் ஜெனெரேட்டர் - RNG Random Number Generator) எனும் அல்காரிதம்தான் அதன் உயிர்; மெஷின் லேர்னிங் எனப்படும் இயந்திரக் கற்றல்தான் அதன் மூளை. 

ஆர்என்ஜியின் வேலை பொதுவாக எண்களை உருவாக்கி அனுப்புவதுதான் என்றாலும், நீங்கள் தோல்வி அடைந்ததும் எவ்வளவு துரிதமாக மற்றுமொரு ஆட்டத்தை ஆரம்பிக்கிறீர்கள், பண இருப்பு கரைந்ததும் எவ்வளவு வேகமாக மீண்டும் ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்பதையெல்லாம் வைத்து நீங்கள் அடிமையாகிவிட்டீர்களா, இல்லையா என்பதையும் இயந்திரக் கற்றல் கண்டுகொள்ளும். 

இந்தக் கற்றலுக்கான காலமாகத்தான் பயிற்சி ஆட்டம், அறிமுக போனஸ், விசுவாச போனஸ் எனப் பணமே வாங்காமல் தொடக்கத்தில் சில ஆட்டங்கள் உங்களுக்கு தரப்படுகின்றன. இந்த இலவச ஆட்டங்களை நீங்கள் ஆடும் விதத்தைக் கொண்டு, ‘ஆப்பொனென்ட் புரொபைலிங்’ (Opponent profiling) என உங்களைப் பற்றி ஒரு தனி விபரத்தை இயந்திரக் கற்றல் உருவாக்கும்.

எந்தச் சூழ்நிலையில் ஒருவர் இந்த கார்டை விடுப்பார் அல்லது எடுப்பார்? ஒருவரது ஆட்டத் திறன் என்ன? தோல்வி அடைந்தாலும் தொடர்ந்து விளையாடும் தாங்கு திறன் என்ன? ரீசார்ஜ் செய்யும் தொகையின் மதிப்பு என்ன? இப்படி ஆட்டக்காரரின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து, ஆட்டக்காரரின் உளவியலை உள்வாங்கிய இயந்திரக் கற்றல் இந்த விபரங்களை உருவாக்கும். நீங்கள் யார்? இதுதான் உங்கள் திறன், இந்த முடிவுதான் நீங்கள் எடுப்பீர்கள் என்ற இயந்திரக் கற்றலின் புரிதலில் தவறே இருக்காது.

அல்காரிதத்தின் அட்டகாசம் 

இந்தப் போட்டியாளர் விவரம் தயாரான நொடியில் உண்மையான ஆட்டத்தை ‘ஆரம்பிக்கலாங்களா?’ என இயந்திரக் கற்றல் எழுந்து அமரும். மிக மிகக் கடினமான கார்டுகளை (எண்களை) அதன் பிறகு வழங்கும். மிகத் திறமையான ஆட்டக்காரர்களுடன் இணைத்துவிட்டு தோற்க வைக்கும். மூன்று அல்லது நான்கு தோல்விகளுக்கு இடையே ஒரு சொற்ப வெற்றியையும் கொடுக்கும்.

காரணம், இது நியாயமாகத்தான் செயல்படுகிறது, என்னுடைய கெட்ட நேரம் என்று உங்களை நம்ப வைக்கும் உத்திதான் இது.  ஆனால், உண்மையில் நீங்கள் எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் வருவீர்கள் என்பதை அது நன்கு அறியும். ஒருவேளை நீங்கள் அன்இன்ஸ்டால் செய்து தப்பித்தாலும், சரியாக மூன்று நாட்கள் கழித்து, ‘போனஸ் பணத்தை க்ரெடிட் செய்திருக்கிறேன் வா!’ என வலை விரிக்கும். அதன் நோக்கம் உங்களைத் தோற்கடிப்பது கிடையாது. நீங்கள் விளையாட வேண்டும். உங்களது வேலை, வாழ்வு, குழந்தைகள், லட்சியம் என அனைத்தையும் விடுத்து 24 மணிநேரமும் நீங்கள் விளையாடிக்கொண்டே இருக்க வேண்டும். அது நிகழ்ந்துவிட்டாலே வெற்றி அவர்களுக்குத்தான். 

சரி!

இயந்திரக் கற்றல் கொண்டு நிகழ்த்தப்படும் சூது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறதே, இதைத் தடைசெய்வதில் என்ன சிக்கல்?

மாநில அரசுகள் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்தாலும், ‘இது அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு அல்ல, திறமைக்கான விளையாட்டு!’ எனும் வரையறைக்குள் கொண்டுவந்து தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம். மேலும் கடந்த இரண்டு வருடங்களில் ஆன்லைன் ரம்மியின் வியாபாரச் சந்தை ஆயிரம் கோடிகளை எட்டியிருக்கிறது.

தற்கொலைகள் பெட்டிச் செய்திகளாக வரும் தினசரிகளின் முதல் பக்கம் முழுமையையும் அசுரத்தனமாய் ஆக்கிரமித்திருக்கிறது ஆன்லைன் ரம்மி. இணையம், தொலைக்காட்சி, பத்திரிகைகள் எனத் திரும்பிய பக்கமெல்லாம், ‘நான் இன்று லட்சங்கள் வென்றேன்! நீங்களும் விளையாடி வெல்லுங்கள்!’ எனச் சாமானியர்களைக் கொண்டு உருவாக்கப்படும் உளவியல் விளம்பரங்கள் கண்களைக்  கவர்கின்றன. ஆனால், ஒரு கிளிக்கில் பணக்காரன் ஆகிவிடலாம் என்று நுழையும் எவரையும், அவர்களது இறுதிக் கையிருப்பை இழக்கும்வரை இயந்திரக் கற்றல் வெளியே அனுப்பதில்லை. காரணம், அது விளையாடுவது நமது திறமையுடன் அல்ல, உணர்வுகளுடன்.

இதற்கென்ன தீர்வு?

தொழில்நுட்பத்தைத் தடை செய்வதென்பது சாத்தியமற்ற ஒன்று. அப்படியே செய்தாலும் வேறு பெயர், வேறு முகம் என மாறுவேடத்தில் மீண்டும் வந்துவிடும். ஆகவே விதிகளைக் கொண்டு அதன் கைகளை நொறுக்க வேண்டும். 

  • ஒரு பயனர் ஒரு நாளில் இவ்வளவு நேரம்தான் விளையாட முடியும்; ஒரு பயனர் ஒரு மாதத்திற்கு இவ்வளவு பணம்தான் பெட் கட்ட முடியும்; 18 வயதுக்கு மேற்பட்டோர்தான் விளையாடுகிறாரா என்பதை முகப்பு காமிரா மூலம் உறுதிசெய்த பின்பே ஒவ்வொரு ஆட்டமும் தொடங்க வேண்டும்... இப்படியெல்லாம் விதிகள் கொண்டுவரப்பட வேண்டும்.
  • ஆன்லைன் சூதுக்கென தனி ஜிஎஸ்டி வரையறை இதுவரை இல்லை. சூதில் வெல்லும் பணம், நிறுவனங்கள் பெரும் லாபம் ஆகியவைக்கு உச்சபட்ச வரி விதிப்பு கொண்டுவரப்பட வேண்டும்.
  • ஒரு பயனர் ரூ.2 லட்சத்தை ஆன்லைன் ரம்மிக்குள் கொண்டுவருகிறார் என்றால், ரூ.1 லட்சத்தை மட்டும் தொகையாக கணக்கு காட்டும் நிறுவனங்கள், இதர 1 லட்சம் ரூபாயை போனஸ் பாயிண்டுகளாக பயனருக்குத் தருகிறார்கள். வரி ஏய்ப்பு செய்வதற்கான உத்தியே இது. இதுபோன்ற முறைகேடுகள் விசாரிக்கப்பட வேண்டும்.
  • இதன் ஆர்என்ஜி அல்காரிதங்கள் முறையாகத்தான் செயல்படுகிறதா, இல்லை ‘ட்வீக்’ (Tweak) எனப்படும் திருகல் வேலை நிகழ்ந்துள்ளதா என வருடாந்திர ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
  • மிக அதிக நேரம் விளையாடுவோர் குறித்த இயந்திரக் கற்றல்களை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  
  • இதில் அடிமையாகி வாழ்விழந்தோருக்கான மறுவாழ்வு மையங்களை இந்நிறுவனங்களே உருவாக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். 

மேற்குறிப்பிட்ட அனைத்து விதிகளையும் விளையாட்டை உருவாக்கும் நிறுவனங்களுக்கு விதிக்க வேண்டும். இதை மீறும் நிறுவனங்களைத் தடை செய்யலாம்.

சுயக் கட்டுப்பாடு அவசியம்

ஆன்லைன் ரம்மி போதையிலிருந்து மீள வேண்டும் என நினைப்பவர்களுக்கு, முறையான மனநல சிகிச்சையின்றி இந்த மயக்கத்திலிருந்து தப்புவது கடினம். மனதின் ஓரத்தில் இதன் மீதான ஆசை இருந்துகொண்டே இருக்கும். சில விஷயங்களை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். 

விளையாடும்போது 30 நொடிகளுக்குள் கார்டை எடுப்பதா, வைப்பதா, குழு சேர்த்து அடுக்குவதா என்கிற முடிவுகளை நீங்கள் எடுத்தே ஆக வேண்டும். இல்லை தோல்வி நிச்சயம். நொடிகள் கரையும் டிக் டிக் சத்தம் கேட்க கேட்க, பதற்றத்தில் உங்களைச் சுற்றியிருக்கும் உலகமே மறந்துவிடும். 

அப்போது உங்கள் மேலதிகாரி அழைக்கிறார். இல்லை உங்கள் குழந்தை பசிக்கிறது எனக் கேட்கிறது. எதோ அவசர உதவிக்காக பெற்றோர்கள் அழைக்கிறார்கள். உங்கள் மனம் ஆட்டத்தில் மட்டும்தான் கவனித்திருக்கும். 30 நொடி, 30 நொடி என நொடிகளில் கரைந்து உங்கள் வாழ்க்கை நொடிந்து போய்விடும். 

ஆகவே, போதை மருந்துக்கு இணையாக இந்த வகையான விளையாட்டுகளை மனதளவில் தடை செய்துகொள்ளுங்கள். இது உங்களைத் தேடிவரும் தொழில்நுட்ப போதை, எந்த நிறுவனமும் நீங்கள் பணம் வென்று உங்கள் வாழ்வு சிறக்க வேண்டும் என்பதற்காக துவங்குவதில்லை. உங்களது பொன்னான நேரமும், மயக்கமும்தான் அவர்களுக்கான ஆயிரம் கோடி லாபத்தைச் சாத்தியமாக்குகிறது. உழைப்பை நம்புங்கள், உடனிருக்கும் குடும்பத்தாருடன் மகிழ்ந்திடுங்கள். உயிர் பறிக்கும் விளையாட்டுகளை அறவே தவிர்ப்பீர்!

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஹரிஹரசுதன் தங்கவேலு

ஹரிஹரசுதன் தங்கவேலு. சர்வதேச மின்னணு வர்த்தக சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஹேக்கிங் நிபுணர். தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் மோசடிகளைக் கண்டறியும் வல்லுநராகத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றிவருகிறார். 'இஸ்ரோவின் கதை' இவருடைய நூல். தொடர்புக்கு: hariinto@gmail.com


5

1



1


பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Mohanraj. G   2 years ago

மிகவும் பயனுள்ள தகவல். என்னை பொறுத்தமட்டில் பணம் செலுத்தி விளையாடக்கூடிய அனைத்து வகையான ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். பப்ஜி,பிரி பயர் போன்ற விளையாட்டுகளில் பள்ளி மாணவர்கள் தங்கள் பெற்றோர் பணத்தை இழக்கின்றனர். இவ்வகை பணம் செலுத்தி விளையாடும் அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும்...

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

நாவலர் நெடுஞ்செழியன்இந்தித் திணிப்புசமஸ் அருஞ்சொல் சென்னை புத்தகக்காட்சி7 கற்பிதங்கள்ராமர் கோயில்கைம்பெண்கள்சிக்கிம் அரசுபெரியாரும் காந்தி கிணறும்தோட்டிகளை இந்த தேசம் எப்படிப் பார்க்கிறது?மேலாதிக்கம்நிபுணர்கள் கருத்துஅவரவர் அரசியல்ஐஏஎஸ் பணிவிதிகளில் திருத்தம்மாறிவிட்ட உடல் மொழிபழங்குடிசிவராஜ் சௌகான்வேலைத்தரம்தென்னகம்கற்பித்தல்சிபி கிருஷ்ணன்திலிப் சக்கரவர்த்திஅ.குமரேசன்கருணாநிதிபிற்போக்குத்தனம்வர்க்கரீதியில் வாக்களிப்புபோக்குவரத்துக் கொள்கைஐக்கிய முற்போக்கு கூட்டணிட்ராட்ஸ்கி மருதுபாரதிய ஜனதா கட்சிஃபின்னிஷ் மொழி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!