கட்டுரை, தொடர், தொழில்நுட்பம், சைபர் வில்லன்கள் 7 நிமிட வாசிப்பு
ஒரு குறுஞ்செய்தி.. முடிந்தது கதை
மென்பொருள் பொறியாளராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார் நண்பர். சைபர் மோசடிகள் குறித்து மிகக் கவனமாக இருப்பவர். ஓடிபி, தேவையில்லாத அழைப்புகளை ஏற்பது, இணைப்புகளைச் சொடுக்குவது என எதுவும் செய்யமாட்டார். இதன் உச்சகட்டமாக ரயில் நிலையம், வணிக வளாகங்களில் இருக்கும் பொது இணையச் சேவையைகூடப் பயன்படுத்த மாட்டார். அத்தனை பாதுகாப்பாக தொழில்நுட்பத்தைக் கையாள்பவர்.
அது 3ஜி சேவையில் இருந்து 4ஜிக்கு ஊர் மாறிக்கொண்டிருந்த நேரம். அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், ‘இலவசமாகவே 3ஜியில் இருந்து 4ஜிக்கு மாறிக்கொள்ளலாம், இன்றே அருகில் உள்ள சேவை மையம் விரைவீர்’ எனத் தத்தம் வாடிக்கையாளர்களுக்குச் செய்திகளை நாளிதழ்களில் முதல் பக்க விளம்பரங்கள் மூலம் தெரியப்படுத்திக்கொண்டிருந்ததார்கள். நண்பருக்கு ஓர் அழைப்பு வந்தது. 'ஏர்டெல்' வாடிக்கையாளர் மையத்திலிருந்து சேவை அதிகாரி பேசுவதாகத் தெரிவிக்க, நமது முன்ஜாக்கிரதை முத்தண்ணா நண்பரோ மிகக் கவனமாக உரையாடத் துவங்கினார்.
“வணக்கம் நாங்கள் ஏர்டெல் சேவை மையத்திலிருந்து பேசுகிறோம். உங்களது 3ஜி சிம்கார்டை 4ஜியாக மாற்றிவிட்டார்களா?”
"இன்னும் இல்லை! அது இருக்கட்டும்! வாடிக்கையாளர் மையம் என்கிறீர்கள்.. ஆனால், தனிப்பட்ட எண்ணிலிருந்து அழைத்திருக்கிறீர்கள். உங்களை நான் எப்படி நம்புவது?"
“மன்னிக்கவும் சார்! நீங்கள் ‘டிஎன்டி’ (DND) எனப்படும் தொந்தரவு செய்யாதீர் சேவையை உங்கள் எண்ணில் செயல்படுத்தி இருக்கிறீர்கள், ஆகவேதான் சேவை எண்ணில் இருந்து அழைக்காமல் வேறு எண்ணிலிருந்து அழைத்திருக்கிறோம். ஆனால், இதுவும் நிறுவனத்துடையதே!”
நண்பருக்கு இன்னும் நம்பிக்கை இல்லை! வேண்டா வெறுப்பாக, "சரி சொல்லுங்கள்! இப்பொழுது என்ன வேண்டும்?" என்கிறார்.
“சார்! நாடெங்கிலும் 3ஜி சேவையிலிருந்து 4ஜிக்கு மாற்றம் நிகழ்ந்துவருவது நீங்கள் அறிந்ததே! இதற்காக நீங்கள் அருகில் உள்ள சேவை மையம் செல்ல வேண்டியது இல்லை. உங்களது தற்போதைய சிம்மையே 4ஜியாக மாற்றிக்கொள்ளலாம். இதற்கு உங்கள் அனுமதி வேண்டும்."
“அதெப்படி சாத்தியம்! 4ஜி என்பது புதிய சேவை, எனது சிம்மோ பழையது, இதில் எப்படி புதிய சேவை கிடைக்கும்?”
“சார், நாம் உயர்த்தப்போவது 3ஜி சேவையின் வேகத்தையே அன்றி, சிம் கார்டின் தரத்தை அல்ல! மேலும் இது கட்டாயமில்லை! ஒரு வாய்ப்பு மட்டுமே, நீங்கள் நேரடியாக சேவை மையம் சென்று பல மணிநேரம் காத்திருந்துகூட இதை செய்துகொள்ளலாம். நன்றி வணக்கம்!”
அவர் அழைப்பைத் துண்டிக்க முனைந்தார்.
நண்பரோ அவரைத் தடுத்து, "சரி இப்போது உனக்கு என்ன வேண்டும்" எனக் கேட்கிறார்.
"உங்களது சிம்மில் குறிப்பிட்டுள்ள 20 இலக்க எண்ணை, சிம் (SIM) என டைப் செய்து ஓர் இடைவெளிவிட்டு அந்த எண்களைக் குறிப்பிட்டு எங்களது வாடிக்கையாளர் சேவை மைய எண் 121க்கு அனுப்பினால் சில நிமிடங்களில் 4ஜி சேவை உங்களுக்கு கிடைத்துவிடும்."
“ஆனால், எனது சிம் மொபைலினுள் உள்ளது! மேலும் நீ நிறுவனத்தில்தான் பணிபுரிகிறாய் அல்லவா! அப்போ எனது சிம் எண் உனக்குத் தெரிந்திருக்க வேண்டுமே, அதை அனுப்பு” என நண்பர் இன்னும் கிடுக்கிப்பிடி போட்டார்.
“உங்களது சிம் எண் எனக்குத் தெரியும் சார்! இருந்தும் வாடிக்கையாளரிடம் கேட்பதுதான் முறை” என சேவை மையத் தரப்ப்பில் விளக்கப்பட்டது.
“அதெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ அனுப்பு. மேலும் 121க்குத் தவிர வேறு எதற்கும் மெசேஜை அனுப்ப மாட்டேன். சரியா!”
“121 எங்கள் சேவை மையம் சார்! அதற்கு மட்டுமே அனுப்புங்கள்!”
இப்படிச் சொலிவிட்டு 20 இலக்க சிம் எண்ணை அவர் நண்பருக்கு அனுப்பிவைக்கிறார்.
அவர் சொன்னபடி சிம் (SIM) என டைப் செய்து இடைவெளிவிட்டு 20 இலக்க எண்ணை காப்பி பேஸ்ட் செய்து 121க்குக் குறுஞ்செய்தி அனுப்புகிறார் நண்பர்.
“இன்னும் சில நிமிடங்களில் சேவை மாறிவிடும், முதல் சில மணிநேரங்களுக்கு தொடர்பு விட்டுவிட்டுக் கிடைக்கலாம். அதன் பிறகு சரியாகிவிடும். ஏர்டெல்லை அழைத்ததற்கு நன்றி. இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகிறேன்!”
அழைப்பை சேவை மையம் துண்டித்துவிட்டது.
“என்னடா! இவன் அழைத்துவிட்டு நாம் அழைத்ததாக நன்றி சொல்கிறான்!”
நண்பரும் குழம்பியவாறே அழைப்பைத் துண்டிக்கிறார்.
நிற்க, இதுபோன்ற அழைப்பு நமக்கு வந்திருந்தால் இத்தனை விசாரணைகளுக்குப் பின் நண்பரைப் போல நாமும் சிம் எண்ணை அனுப்பியிருப்போமா? இல்லையா? நிச்சயம் அனுப்பியிருப்போம்.
சரி நண்பருக்கு என்ன நிகழ்ந்தது?
ஏர்டெல்லில் இருந்து பேசுவதாக வந்ததுதான் நண்பருக்கு வந்த கடைசி அழைப்பு, அடுத்த நாள் வரை அவரது தொலைத்தொடர்பு சேவை முற்றிலும் இல்லை, அழைப்புகள், குறுஞ்செய்திகள் என எதுவும் வரவில்லை! நண்பர் தற்செயலாக தனது வங்கிச் செயலியைத் திறந்து பார்த்தார். அவரது சேமிப்புக் கணக்கு பூஜ்யம் எனக் காட்டியதும், நண்பர் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
மனைவியின் மொபைலில் இருந்து விரல்கள் நடுங்க வங்கிக்கு அழைத்து விசாரிக்க, ‘நீங்கள்தான் ஒரு குறிப்பிட்ட வங்கி கணக்குக்கு தொகையை மூன்று முறை அனுப்பியிருக்கிறீர்கள்’ என அவர்கள் தெரிவிக்கிறார்கள். “இது சாத்தியமே இல்லை! இந்தப் பரிமாற்றம் குறித்து எனக்குக் குறுஞ்செய்தி அறிவிப்புகூட வரவில்லையே” எனப் புலம்பினார். எங்கள் தரப்பில் அனைத்தும் சரியாக நடந்திருக்கிறது என்று அவர்கள் தெரிவித்தனர். பிறகு நண்பர் என்ன செய்வதென்று தெரியாமல் மனம் உடைந்துவிட்டார்.
நண்பருக்கு ஏதோ பொறி தட்டியது, மனைவியின் மொபைலில் இருந்து தனது எண்ணுக்கு அழைத்தபோது அழைப்பு செல்வது கேட்கிறது. ஆனால், தான் கையில் வைத்திருக்கும் தனது மொபைலில் எந்தவித சலனமும் இல்லை.
சில நொடிகளில் அழைப்பு ஏற்கப்படுகிறது, எதிர்முனை பேசுகிறது.
“வணக்கம் சார், நாங்கள் ஏர்டெல் சேவை மையத்திலிருந்து பேசுகிறோம். உங்களது 3ஜி சிம் கார்டை 4ஜியாக மாற்றிவிட்டார்களா?”
அப்போதுதான், தான் ஏமாந்தது வங்கியிடம் அல்ல, தொலைத்தொடர்பு மோசடிக்காரனிடம் என்பது நண்பருக்கு புரியத் துவங்குகிறது.
என்ன நிகழ்ந்தது?
இதில் ‘அன்ஸ்ட்ரெக்சர்ட் சப்லிமென்டரி சர்வீஸ் டேட்டா- யூஎஸ்எஸ்டி’ (Unstructured Supplementary Service Data- USSD) எனப்படும் துரித சேவைகளை அனைத்துத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கிவருகிறது. *121* என மொபைலில் அழுத்தியதும் இருப்புத்தொகை, இணைய மீதம் எல்லாம் தெரிவது இப்படித்தான். இதில் மேலும் பல சேவைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சிம் ஸ்வாப்.
சிம் பழுதடைந்தாலோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ, புதிய சிம்மில் நமது எண்ணை மாற்றிக்கொள்ளும் இச்சேவை ‘சிம் இடமாற்றம்’ (SIM SWAP ) என அழைக்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். அதாவது, சிம் (SIM) என டைப் செய்து இடைவெளிவிட்டு 20 இலக்க எண்ணைக் குறிப்பிட்டு வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பினால் புதிய சிம்மில் நமது எண்ணின் அனைத்து சேவைகளும் மாறிவிடும். சேவை மையத்திற்கு நேரடியாகச் சென்றாலும் அந்த அதிகாரி நமது மொபைலில் இருந்து இச்செய்தியை அனுப்பியே சிம் மாற்றத்தைச் செய்து தருவார். இதைத்தான் மோசடியாளர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.
‘எனது சிம் எண்தான் உனக்கு தெரியுமே! அனுப்பு’ என நண்பர் சொன்னதும் அவன் அனுப்பினான் அல்லவா, அது அவரது சிம் எண் அல்ல, மோசடியாளர்கள் கையில் வைத்திருக்கும் புதிய சிம் அட்டை, அதன் 20 இலக்க எண்ணை அனுப்பியதும் நண்பர் இந்த எண்ணைக் குறிப்பிட்டு தனது மொபைலிலிருந்து சிம் இடமாற்ற செய்தியை அனுப்பிவிட்டார். ஆகவே, அவரது மொபைல் சேவை முழுவதும் மோசடியாளர்கள் வசம் சென்றுவிட்டது. அவருக்கும் வரும் அழைப்புகள், வங்கி குறுஞ்செய்திகள், ஓடிபி எண்கள் என அனைத்தும் அவர்களுக்கே செல்லும். அதை வைத்தே அவரது சேமிப்புக் கணக்கில் இருந்த தொகையைத் திருடி இருக்கிறார்கள்.
இதே வகையில் *401* இடைவெளி XXXXXXXXXX என எந்த மொபைல் எண்ணைக் குறிப்பிட்டு வடிக்கையாளர் சேவை மையத்துக்கு செய்தி அனுப்பினால் அதற்கு உங்களது அழைப்புகள் அனைத்தும் மாற்றிவிடப்படும் (Call Forwarding). இந்த மோசடியும் தற்போது பரவலாக நிகழ்ந்துவருகிறது.
ஆகவே உஷார் நண்பர்களே! இந்நிகழ்வில் குறிப்பிடப்பட்ட 3ஜி, 4ஜி காரணம் மாறலாம்! புதிது புதிதான காரணங்களுடன் மோசடியாளர்கள் உங்களை அழைக்கலாம். ஆனால், எதற்காகவும் இதுபோன்ற துரித சேவைகளை பிறர் சொல்லி பயன்படுத்தாதீர்கள். எந்தத் தொலைத்தொடர்பு நிறுவனமும் வாடிக்கையாளர்களை அழைத்து இதுபோன்ற சேவைகளை முயற்சிக்க சொல்வதில்லை. ஆகவே தெரிந்துகொள்ளுங்கள், நவீன மோசடிகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்!
(பேசுவோம்)
7
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Ramesh Ramalingam 2 years ago
மிக பயனுள்ள கட்டுரை. முன் ஜாக்கிரதையொடு நாம் பயன் படுத்தும் சேவைகள் குறித்த அறிவும் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கிய விதம் அருமை. நன்றிகள்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Vikram Sathish A 2 years ago
அவசியமாக இந்த கட்டுரைகளை நம் பெரியவர்களுக்கு அனுப்பி அவர்களை உஷார் செய்ய வேண்டும் வாழ்த்துக்கள் ஹரி
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
M. Balasubramaniam 2 years ago
மிகவும் பயனுள்ள கட்டுரைத் தொடர். தொழில்நுட்பம் வளர்கையில், அவைச் சரியாக கண்காணிக்கபடுவது எவ்வளவு முக்கியம் என்பதைக் கட்டுரை உணர்த்துகிறது
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
புதிய தகவல். நன்றி
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.