தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். ‘அருஞ்சொல்’ ஆசிரியர் சமஸ் எழுதி ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான ‘காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை’ எனும் கட்டுரை சமீபத்தில் ‘அருஞ்சொல்’ இதழில் மறுபிரசுரம் செய்யப்பட்டது. அந்த கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன; அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே தருகிறோம்.
உலக நாடுகளைப் பின்பற்றலாம்!
காலை உணவு குறித்து ஏப்ரல் 11 அன்று அருஞ்சொல் இதழில் வெளியான, சமஸ் அவர்களின் கட்டுரையை வாசித்தேன். எற்கெனவே இந்த கட்டுரையைத் தமிழ் இந்துவில் வாசித்திருந்தாலும், நீங்கள் கூறியபடி இது காலத்தின் தேவை.
நான் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர். இங்குள்ள கள யதார்த்தத்தைப் பற்றிக் கூறுகிறேன். பெரும்பாலான சமயங்களில் வீடுகளிலிருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் பல சூழ்நிலைகளால் காலை உணவு உண்பதில்லை.
காலை பிரார்த்தனையின்போது மைதானத்தில், குறிப்பாகக் கோடை காலங்களில் திடீரென மயங்கி அப்படியே கீழே விழுவார்கள், நாம் வெயிலின் தாக்கம் என நினைப்போம். ஆனால், பெரும்பாலும் காலை உணவு சாப்பிடாமல் வருவதே காரணமாக இருக்கும். முதல் பாடவேளை வருகைப் பதிவுக்கு பெயர் கூப்பிடும்போதே பிரச்சினைகள் ஆரம்பித்துவிடும். சிலர் துவண்டு விழுவர், சில குழந்தைகள் முகம் வாடிப்போய் வருத்தமுடன் காணப்படுவர். சில குழந்தைகள் கண்கள் உள்ளுக்குள் போய் கழுத்து எழும்பு வெளியே துருத்தியபடி ஏழ்மையை உணர்த்துவதாக இருப்பர். இவர்களைத் தீர விசாரித்தால் பல்வேறு வகையான காரணங்கள் நமக்கு பதில்களாகக் கிடைக்கும்.
உதாரணங்கள் சில...
ஒரு குழந்தையின் அம்மா இறந்திருப்பார். அல்லது குடும்பமே இறந்து விடுதியிலோ, பாதுகாவலர் என்கிற பெயரிலோ வேறு வீடுகளில் வளரும் குழந்தைகள். பாட்டியின் கவனிப்பில் வளரும் குழந்தைகள். யாருடைய கவனிப்புமின்றி தாங்களாகவே சமைத்துவிட்டு பள்ளிக்கு வரும் குழந்தைகள். அம்மா அப்பா வாழ்வாதாரப் பிரச்சினையால் வேலைக்காக மாதக் கணக்கில் வெளியூர் சென்றுவிடுவதால் சரியாக கவனிக்க ஆளே இல்லாத குழந்தைகள், எல்லாரும் இருந்தாலும், மது அருந்திய அப்பாவின் இரவு கலாட்டாவால் காலை சமைக்காத வீடுகளிலிருந்து வரும் பிள்ளைகள்.
சமைப்பதற்கு நேரமாவதும் பள்ளிக்குக் குறித்த நேரத்தில் வருவதன் பொருட்டு போக்குவரத்து பிரச்சினையால் தினமும் வெறும் வயிற்றுடனோ அல்லது வெறும் டீ குடித்துவிட்டு ஓடி வரும் பிள்ளைகள், தேர்வுக்காக சிறப்பு வகுப்பு எனக் காலை ஒரு மணி நேரம் முன்னதாகக் கிளம்பும் குழந்தைகள். இப்படி பல வகையில் காலை உணவு என்பதே இல்லாமல்தான் குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர்.
அக்கறையான சில ஆசிரியர்கள் ‘சாப்பிட்டிங்களா’ எனக் கேட்டுவிட்டு வகுப்பை ஆரம்பிப்பார்கள். அப்போது சில குழந்தைகள் காலை உணவு சாப்பிடாமல் வந்திருந்தால் சாப்பிட ஏற்பாடு செய்வது உண்டு. அதேபோல் குழந்தைகளின் நண்பர்களின் மதிய உணவை பகிர்ந்துகொள்ளவும், சத்துணவில் சாப்பிடவும் ஏற்பாடுகள் செய்வர். ஆனால், எத்தனை ஆசிரியர்களால் கற்பித்தல் பணியைத் தாண்டி இப்படி கவனிக்க இயலும் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.
காலை உணவு குழந்தைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை பல நாடுகளின் நடைமுறையிலிருந்து விளக்கி இருந்தார் சமஸ். நம் சமூகத்தில் இத்தகைய சூழலில் இருந்துதான் குழந்தைகள் கல்வி கற்க வருகின்றனர். இந்நிலையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவைத் தருவது அரசின் தலையாய கடமைதானே!
கல்வி, மருத்துவம் இரண்டும் அரசுக்கு இரு கண்கள் எனக் கூறுவதை மனதாரப் பாராட்டுகிறோம். அதேவேளையில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு நம் குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையதல்லவா.
மதிய உணவு வழங்குவதுகூட உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்குக் கிடையாது. அதேபோல், சிறு வகுப்புகளுக்கும்கூட ஒரு பள்ளியின் அனைத்து மாணவர்களுக்கும் கிடையாது. பிரேசிலைப் போலவும் ஜப்பான், பின்லாந்து உள்ளிட்ட நாடுகளின் கல்விமுறையில், குழந்தைகளின் ஆரோக்கியம் எத்தகைய வழிகளில் இடம்பெற்றிருக்கிறது என்பதை நமது நாட்டிலும் குறிப்பாக தமிழகத்திலும் பின்பற்றுவதுதான் நியாயமான வழியாகும்.
-சு.உமாமகேஸ்வரி
தொடர்புடைய கட்டுரை: காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை
2
2
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
A M KHAN 3 years ago
விரிவான பதில் பதிவு. ஆரோக்கியமான விளக்கம்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Umadeenadhayalan 3 years ago
Excellent Mam 👍👍👍
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.