இன்னொரு குரல் 5 நிமிட வாசிப்பு
ஆம், அனைவரும் பொறுப்புதான்: ஆசிரியரின் எதிர்வினை
தமிழில் விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் – அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயவுசெய்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள். பெருமாள் முருகன் எழுதி சமீபத்தில் வெளியான ‘மயிர்தான் பிரச்சினையா? அன்பைக் கூட்டுவோம்!’ கட்டுரைக்கு ஏராளமான எதிர்வினைகள் வந்தன; அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே தருகிறோம்.
ஆசிரியர் - மாணவர் உறவுமுறையின் சிக்கல்
இன்று பெருமாள்முருகனின் ‘மயிர்தான் பிரச்சினையா? அன்பைக் கூட்டுவோம்!’ கட்டுரையை வாசித்தேன். வெகு நாட்களாகப் பேச வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த பலவற்றைக் கட்டுரை சுட்டிக்காட்டியது.
இன்றும் பள்ளிகளில் மாணவர்களைப் பொறுக்கி, ரவுடி, லாயக்கற்றது, ஊர்சுற்றி, ஊரையே வித்துடும், உருப்படாதது, தண்டம், அடங்க மாட்டேங்குது என்ற அஃறிணைச் சொற்களில் சரளமாகப் பேசும் ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
தனியார் பள்ளிகளில் நிர்வாகத்திற்கு பயந்தும், குழந்தைகளுக்கு பயந்தும் அடக்கி வாசிப்பார்கள் பெரும்பாலும். ஏனெனில், குழந்தைகள் பெற்றோர்களிடம் சொன்னதும், அவர்கள் கேள்வி கேட்க நிர்வாகத்தை அணுகுவார்கள். ஆகவே அங்கு இப்படியான சொல்லாடல்கள் இருக்கின்றனவா என்பது ஆய்வுக்குட்பட்டது.
ஆனால் அரசுப் பள்ளிகளில் நிலைமை வேறு. தொடக்க வகுப்புகளில் குழந்தைகளாகப் பார்க்கப்படும் மாணவர்கள் அந்தந்த பள்ளிக்குள் பெரும்பாலும் சொந்தக் குழந்தைகளாகவே நேசிக்கப் பாடுகின்றனர். அதோடு திட்டினாலும் குழந்தைகள் வயதின் காரணமாக அதுபற்றி பெரியதாக எதிர்வினை ஆற்றுவதில்லை. அதே போல நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த சிக்கல்கள் பெரிதாக ஏற்படுவதில்லை.
ஆனால் 6ஆம் வகுப்பில் ஒரு குழந்தை புதிதாக மேல்நிலைப் பள்ளிக்குள் நுழையும்போதே அங்குள்ள ஆசிரியர்களின் அதிகாரப் பரப்பிற்குள் மாட்டிக்கொள்கின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் பழங்கால நடைமுறையிலேயே மாணவர்களை நடத்துகின்றனர். ஏய், அறிவுகெட்டது, கழுதை என அழைப்பதும், நாயே, பேயே, சனியனே என்று சாடுவதும் வெகு சகஜமான போக்கு.
சமீபத்தில் ஒரு பள்ளியில் நடந்தது. ஆசிரியர் இல்லாத வகுப்பறை ஒன்றில் 50 குழந்தைகள் இருந்தனர். அதன் வகுப்புத் தலைவி ஏய் சத்தம் போடாதீங்க என ஒருபுறம் கத்துகிறார். எதுவும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அனைவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது வகுப்பிற்கு சம்பந்தம் இல்லாத ஆசிரியர் ஒருவர் இரும்பு ஸ்கேலில் எல்லாக் குழந்தைகளையும் அடித்து அமைதிப்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறார்.
தொடர்ந்து அடுத்த நாட்களில் அடிவாங்கியதில் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்ல மாட்டேன் வலிக்கிறது எனக் கூறியது. அதன் காரணத்தைக் கேட்ட அப்பா பள்ளியில் விசாரித்தபோது, பொறுப்பில் இருந்த ஆசிரியர் சமாதானம் செய்து அனுப்பி இருக்கிறார். ஆனால் மாவட்டக் கல்வி அலுவலகத்துக்கும் தகவல் அளித்து பள்ளிக்கு விசாரணை அழைப்பு வந்து கடைசியில் முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
இதுபோல பல பள்ளிகளில் 45, 50 வயது திடகாத்திரமான ஆசிரியர்கள் 13, 14 வயதுள்ள குழந்தைகளை அடிப்பது எந்த வகையில் நியாயம்? தங்கள் மீதான துறையின் அழுத்தத்தைக் குழந்தைகள் மீதும் காட்டுகின்றனர்.
அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர்கள் இல்லாத வகுப்பறைகளுக்கு வகுப்புத் தலைவர்களே ஆசிரியர்களாக இயங்குவார்கள். அவர்களும் ஆசிரியர்களின் அதிகாரத் தொனிகளையே பின்பற்ற ஆரம்பிக்கின்றனர். பின் ஆசிரியர்கள் யாரும் வகுப்பறைகளை காலியாக வைக்கக் கூடாது என்று துறை ஆணை பிறப்பிக்கும். ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, ஆசிரியர் தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பின் போது, எப்படி எல்லா வகுப்பறைகளுக்கும் ஆசிரியர் இருக்க முடியும். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் இல்லாத பணிகளைக் கல்வித் துறை தொடர்ந்து தருகிறது. எல்லா நிர்வாகச் சிக்கல்களுக்கும் பலியாகும் ஆசிரியர்கள் குழந்தைகள் மீது அவற்றைக் காட்டுவதை நாம் சரி என்று எப்படி நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும்?
திறன் வகுப்பறைகளைத் திட்டமிடும் அரசு, ஆசிரியர் - மாணவர் உறவுமுறை பள்ளிகளில் எவ்வாறு உள்ளது என ஆய்வுக்கு உட்படுத்தினால் நல்லது. ஒருபுறம் பாடச்சுமை, சமூகத்தின் தாக்கம், மற்றொரு புறம் இணையங்களின் அதீத வளர்ச்சி இவற்றுக்கிடையில் ஆசிரியர்கள் இன்னும் பழமையான அணுகுமுறைகளையும் அடக்குமுறைகளையுமே வெளிப்படுத்திவருகின்றனர்.
வருடத்தில் ஒரு முறையாவது ஆசிரியர்களுக்கு குழந்தைகளுடனான அணுகுமுறையை பயிற்சியாகவோ வழிகாட்டலாகவோ கல்வித் துறை தந்துள்ளதா? உயர் அதிகாரிகளின் உறுமல்களையும் தண்டனைகளையும் கண்டு பயப்படும் ஆசிரியர்களும் அதே உறுமல்களையும் அதிகாரப் போக்கையும் குழந்தைகளிடம் எதிரொலிக்கின்றனர். உஷ்... சத்தம் போடாதே, எதிர்த்துப் பேசாதே, சொல்வதை மட்டும் செய். இப்படியான வகுப்பறைகள் எதை உருவாக்கும்?
இங்கு வலிமையானவர்கள் எளியோர்களை அடக்கி ஆள நினைக்கும் தத்துவம் பள்ளிகளையும் விட்டுவைக்கவில்லை என்பதே யதார்த்தம். ஆக, சிக்கலுக்கு கல்வித் துறையே பொறுப்பேற்க வேண்டும்.
-சு.உமாமகேஸ்வரி
தொடர்புடைய கட்டுரை: மயிர்தான் பிரச்சினையா? அன்பைக் கூட்டுவோம்!
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.