தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. ‘அருஞ்சொல்’ இதழை வாசிப்பவர்கள் வெறும் வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், கொள்கை வகுப்பாளர்களான அரசியலர்கள் ¬– அதிகாரிகள், செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள் என்று பல்வேறு துறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’லை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளைப் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள் அல்லது aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள். தயைகூர்ந்து உங்கள் பெயருடன், ஊர் பெயரையும் குறிப்பிடுங்கள்.
தலித்துகளும் பாஜகவும்!
@ 100 பேர் தயார்பண்ணச் சொன்னார் பிரபாகரன்: திருமாவளவன் பேட்டி
அண்ணன் திருமாவளவன் அவர்கள் திருமணம்கூட செய்துகொள்ளாமல், தனது லட்சியத்திற்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டது போற்றத் தக்கது. ஆனால், 'தங்கள் கொள்கை மட்டும்தான் பெரிது, ஆர்எஸ்எஸ்காரர்களின் கொள்கைகள் பெரிதல்ல’ எனும் தொணியில் அவர் பேசுவது சரியல்ல. திருமாவளவன் அவர்களே சொல்வதைப் போல, ஆர்எஸ்எஸ்காரர்கள் எந்தப் புகழையும் விரும்பாமல் கொள்கைகளுக்காகவே வாழ்பவர்கள். ‘அருஞ்சொல்’லில் வந்திருக்கும் ராம்நாத் கோயங்காவின் பேட்டியைப் படித்துப் பார்த்தால் தெரியும்.
மாபெரும் கனவில் பிறந்தது ஆர்எஸ்எஸ். "இனி ஒருபோதும் நம் இந்திய தேசம் எவருக்கும் அடிமையாகிப் போய்விடக் கூடாது. சாதிய வேறுபாடுகளைத் தாண்டி, இந்து மதத்தார் இந்துக்களாக ஒன்றிணைய வேண்டும். மத மாறுபாடுகளைக் கடந்து, கலாசாரத்தின் அடிப்படையில் இந்தியர்கள் ஒருமைப்பாட்டு உணர்வோடு அமைதியாக வாழ வேண்டும். நமது வரலாற்று, பண்பாட்டுப் பெருமைகளை ஒருபோதும் இழந்துவிடாமல் முன்னேறிச் செல்ல வேண்டும். ஒழுக்கமும், நாட்டுப் பற்றும் கொண்ட மனிதர்களை உருவாக்கி, அர்களை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பி நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய வைக்க வேண்டும். இதன்மூலம் நம் நாட்டை உலகின் குரு ஆக்க வேண்டும்" எனும் லட்சியத்திற்காக கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாகத் தொடர்ந்து உழைத்துவருகிறது ஆர்எஸ்எஸ். மேற்கூறிய லட்சியங்களுக்காகத்தான் ஆயிரக்கணக்காரர்கள் திருமணம்கூட செய்துகொள்ளாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்து பணியாற்றிவருகிறார்கள்.
அவர்களைச் சுருக்கிப் பேசுவதையும், அவர்களைப் பற்றி திரித்துக் கூறுவதையும் அண்ணன் திருமாவளவன் அவர்கள் இனிமேலாவது செய்யாமல் இருக்க வேண்டும் எனக் கோருகிறேன். எந்த காங்கிரஸ் கட்சியை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மிகக் கடுமையாக எதிர்த்தாரோ, அந்த காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்துக்கொண்டு பாஜகவை எதிர்க்கிறார் திருமாவளவன். ராம்விலாஸ் பாஸ்வான், ராம்தாஸ் அத்வாலே போன்ற தலைவர்கள் எல்லாம் மாபெரும் ஆளுமைகள் விவரமில்லாமலோ, வேறு வழி இல்லாமலோ பாஜகவோடு சேரவில்லை. பாஜக நம் நாட்டு மக்கள் எல்லோரும் முன்னேற வேண்டும் என நினைத்துப் பணியாற்றிவருகிறது; தங்களோடு கூட்டணி சேரும் தலைவர்கள் அனைவரையும் மரியாதையோடு நடத்துகிறது. அதனால்தான் பல அரசியல் கட்சிகள் பாஜகவோடு சேர்கின்றன. தலித்திய அரசியல் கட்சிகள் பாஜகவோடு கூட்டணி சேர்வதோடு மட்டுமல்லாமல், பாஜகவுக்குள்ளும் தலித் தலைவர்கள் பலர் கோலோச்சுகிறார்கள். அவர்கள் எல்லாம் விவரமற்றவர்கள் இல்லை என்பதைத் திருமாவளவன் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
- வீர. திருநாவுக்கரசு, மாநிலச் செயலாளர், பாஜக இளைஞரணி.
தொல்.திருமாவளவனுடனான சமஸ் உரையாடல் ‘அருஞ்சொல்’லின் அருமையான முன்னெடுப்புகளில் ஒன்று என நினைவு கூரப்படும். அந்த அளவிற்கு கேள்விகளும் பதில்களும் அமைந்துள்ளன. இதுபோன்ற உரையாடல்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
- பி.சரவணன்
@ நீதிபதிகளின் ஊர்மாற்றம் எழுப்பும் கேள்விகள்
கொலீஜியம் மேற்கொள்ளும் நியமனங்களைப் பற்றி ஒன்றிய அரசே சில காலம் முன்னர் கொதிப்பு கொண்டிருந்ததாகவும் தலைமை நீதிபதியிடம் பேசியதாகவும் பேச்சுகள் நிலவிவந்தன. இச்சூழலில் இப்போது ஒத்திசைந்து இரு அதிகார மையங்களும் மாற்றங்களைச் செய்கின்றன எனும்போது இதில் இயல்பாகவே கவனம் போக வேண்டும். அதிலும் கட்டுரையாளர் மேனாள் நீதிபதி சந்துரு எனும்போது நாம் அதிகமாகவே கவனம் அளிக்க வேண்டியிருக்கிறது.
- அறிவன்
நெருக்கடிநிலைக் கால ஆட்சியைவிட மோசமாகவே இன்றைய ஆளும் பாஜக அரசு செயல்படுகிறது. தனது கொள்கைகளுக்கு உடன்படாதவர்களை, அதிலும் இந்திய நீதித் துறையை ஆட்டுவிப்பது அவர்களுக்கு கைவந்த கலையாக இருக்கலாம். நமக்கு கவலையாக அல்லவா இருக்கிறது?
- குணசேகரன்
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.