கட்டுரை, அரசியல், கல்வி, நிர்வாகம், கடிதம், கூட்டாட்சி 2 நிமிட வாசிப்பு
மையப்படுத்தக் கூடாது சமையல் கூடங்கள்: முதல்வருக்கு ஒரு கடிதம்
தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகளால் உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்திடவும், அதற்கான வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒருநபர் குழு தமிழ்நாடு அரசால் 2023ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன்படி நீதிபதி கே.சந்துரு குழு அறிக்கையை 2024 ஜூன் 18 அன்று சமர்பித்தார்.
இந்த அறிக்கையில் உள்ள சில பரிந்துரைகளில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. எடுத்துக்காட்டாக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுத் திட்டத்தில் மையப்படுத்தப்பட்ட சமையல் கூடம் வேண்டும் என ஒரு பரிந்துரை உண்டு. இந்தப் பரிந்துரையை அமல்செய்வதால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல் என்னவென்பதைச் சுட்டிக்காட்டி, பொருளாதார அறிஞர் ஜீன் டிரேஸ், ஆய்வாளர் எஸ்.செல்ல ராஜன், கல்விச் செயல்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் சகாதார மருத்துவர் சில்வியா கற்பகம், பொருளாதார நிபுணர் ரீத்திகா கேரா செயல்பாட்டாளர்கள் கருணா முத்தையா மற்றும் தி.ராமகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் ஆகியோர் இணைந்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதினர். இந்தக் கடிதத்தின் முக்கியத்துவம் கருதி ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.
மதிப்பிற்குரிய முதல்வர் அவர்களுக்கு,
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே சாதி மற்றும் சமூக உணர்வுகளின் அடிப்படையிலான வன்முறைகளைத் தவிர்த்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் ஆகியன தொடர்பான பரிந்துரைகளைக் கொண்ட ஓர் அறிக்கையை நீதியரசர் சந்துரு சமீபத்தில் மாநில அரசுக்குச் சமர்ப்பித்திருந்தார்.
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் தொடர்பான ஒரு குறிப்பிட்ட பரிந்துரையைப் பற்றி எங்களின் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த இக்கடிதத்தை எழுதுகிறோம்: குழந்தைகளுக்கு அளிக்கப்படும் மதியச் சத்துணவை பள்ளியில் சமைப்பதற்குப் பதிலாக நடுவண்மயப்படுத்தப்பட்ட சமையலறைகளில் சமைத்துப் பல பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் பரிந்துரை அது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
மற்ற மாநிலங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில், நடுவண்மயப்படுத்தப்பட்ட சமையலறைகளின் செயல்பாடு சரியாக இல்லை. நடுவண்மயமாக்கலில் முதன்மையான சிக்கல்கள் வருமாறு.
- ஒவ்வொரு பள்ளியிலும் மதியச் சத்துணவு சமைக்கும்போது மாணவர்கள், ஆசிரியர்கள், சில சமயங்களில் பெற்றோர்கள் முன்னிலையில் சமைப்பதால் பொறுப்புடைமை வளர்கிறது. மாறாக, பல பள்ளிகளுக்குத் தேவையான உணவை ஓரிடத்தில் சமைக்கும்போது பொதுமக்கள் மேற்பார்வைக்கான வாய்ப்புக் குறைவு. நாட்டில் சிறப்பாக அறியப்பட்ட சில நடுவண் சமையல் கூடங்களில் நிகழ்ந்த தவறுகள் குறித்து இந்தியத் தலைமைக் கணக்காளர் (CAG) மற்றும் தாழ்த்தப்பட்டோர் - பழங்குடிகள் நலன் பேணும் நாடாளுமன்றக் குழுக்கள் ஆகிய இரண்டு அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளன.
- சமையல் கூடங்களை நடுவண்மயமாக்குவதால் பண்டச் சேமிப்பு, போக்குவரத்து, (வெயில் காலங்களில்) குளிர்ப்பதனம் செய்தல் ஆகியவற்றுக்குக் கூடுதல் செலவாகும். உணவைப் பள்ளிகளுக்கு எடுத்துச்செல்லும்போது சரியான ஏற்பாடுகள் இல்லையேல் உணவு கெட்டுவிடும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
- அவ்வாறு கொண்டுசெல்லப்படும் உணவு சூடு ஆறிச் சுவை குன்றிவிடும். அதன் விளைவாக ஜார்க்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் உணவு சமைத்தல் நடுவண்மயப்படுத்தப்பட்ட பிறகு குழந்தைகள் அவ்வுணவைச் சாப்பிடாமல் வீணாக எறிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின. சில ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தானிலும் (Rajasthan) அப்படிப்பட்ட சில புகார்கள் எழுந்தன.
- ஒவ்வொரு பள்ளியிலும் சமையல் செய்யும்போது சமையல்காரர், உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் பல பெண்களுக்கு வேலை கிடைக்கிறது. தமிழ்நாட்டில் இவ்வாறு வேலை செய்பவர்களில் 27 சதவீதத்தினர் தலித் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களை வேறு அரசுத் துறைப் பதவிகளில் அமர்த்தலாம் எனச் சந்துரு குழு அறிக்கை கூறுகிறது; ஆனால், இதைச் சொல்வது எளிது, செய்வது மிகக் கடினமானது.
- நடுவண்மயப்பட்ட சமையல் ஒப்பந்தங்களைத் தனியார் ஒப்பந்ததாரர்களுக்குத் தந்தால் குழந்தைகளுக்குச் சத்துணவு தருவதைவிடத் தம் லாபத்தை அதிகப்படுத்துவதில்தான் அவர்கள் அதிக ஆர்வம் செலுத்துவார்கள். சில சமயங்களில் இந்த ஒப்பந்தங்களைப் பெறும் அமைப்புகள் மதிய உணவுப் பட்டியலில் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை விதிக்கின்றன; எ.கா., முட்டைகளைத் தவிர்த்தல், சில சமயங்களில் வெங்காயம், பூண்டு ஆகியவற்றையும்கூடத் தவிர்த்தல்.
தலித் மதிய உணவு சமையல்காரர்களுக்கு எதிரான பாகுபாட்டுச் சிக்கல்களை நடுவண்மயப்படுத்தப்பட்ட சமையலறைகள் தவிர்க்கும் என்பதுதான் சந்துரு குழு அறிக்கையின் முக்கிய வாதம். தலித் சமையல்காரர்களில் சிலர் பல்வேறு வகையான பாகுபாடுகளை எதிர்கொண்டிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.
எனினும், இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்கெனச் சமையலறைகளை நடுவண்மயப்படுத்துவது நன்மையைவிட அதிகத் தீங்கைத்தான் விளைவிக்கும்; முதலாவதாக, அது பின்வாங்குவதற்குச் சமம். மதிய உணவைச் சமைப்பதற்கு தலித் பெண்களுக்குள்ள உரிமையை வலியுறுத்துவதே சிறந்த அணுகுமுறை என்பதை அனுபவம் காட்டுகிறது. நிர்வாகம் உறுதியாக நிற்கும்போது, எதிர்ப்பு வலுவிலந்துபோகும். இது சிக்கலைத் தவிர்ப்பதற்குப் பதிலாக அதைத் தீர்க்க உதவுகிறது.
இரண்டாவதாக, நடுவண்மயப்படுத்தப்படுத்தும் திட்டத்திற்குச் சம்பந்தப்பட்ட பெண்கள் (பாகுபாட்டால் பாதிக்கப்பட்ட தலித் சமையல்காரர்கள்) ஆதரவு கொடுப்பார்கள் என்பது மிகுந்த சந்தேகத்திற்கு உரியது. சந்துரு குழு அவர்களின் கருத்துக்களைக் கேட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பள்ளிகளில் மதியச் சத்துணவு தருவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகத் திகழ்ந்துள்ளது. அந்நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும் சமைப்பதை நிறுத்தி, சமையலை நடுவண்மயமாக்கல் என்பது முன்னேற்றத்துக்கு எதிராகப் பின்னோக்கிப் பெரிய அடியெடுத்து வைப்பதற்கு ஒப்பானது. எனவே, சந்துரு குழு அறிக்கையிலுள்ள இந்தப் பரிந்துரையை ஏற்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புடைய கட்டுரைகள்
உங்கள் ஊர் பள்ளியில் சமத்துவம் இருக்கிறதா?
காலை உணவுக்குத் தேவை கண்ணியமான கற்பனை
ஸ்டாலினின் காமராஜர் தருணம்
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.