கட்டுரை, சினிமா, இன்னொரு குரல் 7 நிமிட வாசிப்பு
பொன்னியின் செல்வன்: ஓர் எதிர் விமர்சனம்
மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் தொடர்பில் ‘அருஞ்சொல்’ இதழில் கோம்பை அன்வர் எழுதி வெளியான ‘பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?’ கட்டுரைக்கு எதிர்வினை ஒன்றை எழுதியிருக்கிறார் எழுத்தாளரும், அந்தப் படத்தின் திரைக்கதையாசிரியர் - வசனகர்த்தாவுமான ஜெயமோகன். அதை இங்கே நம் வாசகர்களுக்குப் பகிர்கிறோம்.
கடைசியாக தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ தொடர்பில் பொருட்படுத்தத் தக்க ஓர் எதிர் விமர்சனம். பாராட்டுக்களைப் போலவே இதுவும் மதிப்பு மிக்கது.
கோம்பை அன்வர் சொல்லும் பல விமர்சனங்கள் உண்மையானவை, சினிமாவின் சாத்தியக்கூறுகள் சார்ந்து விவாதிக்கத்தக்கவை. வெறும் தனிநபர் வன்மங்கள், எளிய அரசியல் காழ்ப்புகள் மற்றும் சாதிக்காழ்ப்புகள், சினிமா அல்லது வரலாறு குறித்த முற்றிலுமான அறியாமை ஆகியவற்றில் இருந்து வெளிவரும் விமர்சனங்களால் நடைமுறைப்பயன் ஏதும் இல்லை. சொல்லப்போனால், அவை படத்தின் மீதான மிகையான எதிர்பார்ப்பைச் சற்று குறையச்செய்து, படத்தை ரசிக்கச்செய்து, மாபெரும் வெற்றிப்படம் ஆக ஆக்கிவிட்டன.
கோம்பை அன்வர் எழுதியது போன்ற இந்த வகையான விமர்சனங்கள் மிக முக்கியமானவை. இவை ஒரு படைப்புத்தரப்பிற்கு நேர் மறுமுனையில் ஏற்புத் தரப்பில் இருந்து எழுவன. விஷயமறிந்தவர்கள் பொறுப்பான மொழியில் எழுதும் இத்தகைய கட்டுரைகள் முன்வைக்கும் எதிர்பார்ப்பும் அதன் வழியாக உருவாகும் அழுத்தமும் படைப்புச் செயல்பாடு மேலும் கூர்மை கொள்ள வழிவகுக்கின்றன.
ஆகவே சால்ஜாப்புகளாக அன்றி, மெய்யாக இருக்கும் சவால்களாக இவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.
தமிழில் ஒரு பெரும் படம் தயாரிப்பதன் இரண்டு நடைமுறை எல்லைகள் பல போதாமைகளை உருவாக்குகின்றன. ஒன்று, இந்தியா முழுமைக்குமான படமாக, இளையோருக்கான படமாக மட்டுமே இந்தப் படத்தை எடுக்க முடியும். வசூல்கணக்கை கண்டிருப்பீர்கள், இப்படத்தின் வசூலில் மூன்றிலொரு பங்கு மட்டுமே தமிழ்நாடு சார்ந்தது. அப்படி இந்திய ரசனைக்குரிய படமாக, சிறுவர்கள் ரசிக்கும் படமாக இதை எடுக்கவில்லை என்றால் இந்த முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது.
ஆகவே இப்படத்துக்கு இந்திய அளவில் சிறந்த பின்னணிக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். முழுக்கமுழுக்க தமிழ்க் கலைஞர்கள் இதில் பங்கெடுக்க முடியாது. உண்மையில் இந்தவகை படைப்புகளில் தமிழ்ப் பண்பாட்டு அடையாளம் எந்த அளவுவரை இருக்கலாம் என்பதில் எப்போதும் ஓர் ஊசலாட்டம் இருக்கும்.
ஓர் உதாரணம் மலையாளத்தில் பெருவெற்றி பெற்ற ‘பழசி ராஜா’. அது முழுக்க முழுக்க மலையாளப் பண்பாட்டு அடையாளம் கொண்டது. கேரளத்தில் பெரும் வெற்றி பெற்ற அப்படம் வெளியே படுதோல்வி அடைந்தது. ஒட்டுமொத்தமாக பெரிய இழப்பையும் சந்தித்தது. முதன்மைக் காரணம் கேரள பாணிக் குடுமி மற்றும் ஆடைகள். பழசி ராஜா காட்டிய கேரள பாணி அரண்மனையைத் தமிழகத்திலேயே பல சினிமா விமர்சகர்கள் நையாண்டி செய்து எழுதியிருந்தனர்.
ஆகவே, பின்னர் ‘மரக்கார் -அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை எடுத்தபோது மலையாள அடையாளம் மிகக் குறைவாக எடுத்தனர். (மலபார் இஸ்லாமியர் நீண்ட முடி வளர்ப்பதில்லை. மொட்டையடிப்பதே அவர்களின் வழக்கம். ஆனால், சினிமாவில் மோகன்லால் நீண்ட சடையுடன், ‘பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன்’ சாயலில் இருந்தார்). அந்தப் படம் முற்றிலும் அன்னியமாகி அங்கும் ஓடவில்லை, வெளியிலும் கவனிக்கப்படவில்லை. மீண்டும் இழப்பு.
இரண்டு எல்லைகள். நடுவே இந்தக் கத்திமுனை நடை என்பது ஒரு பெரிய சவால். பேசிப் பேசி, ஊசலாடி ஊசலாடி ஒரு மையப் பாதையானது கண்டடையப்படுகிறது. அது ஒரு சமரசப்புள்ளிதான். சுட்டப்படும் பல குறைகள் படத்தை எடுத்தவர்களும் அறிந்தவை. பல சமயம் அவை சமரசங்கள்.
எற்கெனவே நான் பலமுறை குறிப்பிட்டதுதான். வரலாற்றுக்கு அணுக்கமாக, கூடுமானவரை யதார்த்தமாக, படத்தை எடுத்தோமென்றால் ஆடம்பரமும் காட்சி விரிவும் இல்லாமலாகிவிடும். இத்தகைய சினிமாக்களை ரசிக்கும் சிறுவர்கள், உலகளாவிய பொது ரசிகர்கள் கண்களை விரித்துப்பார்க்கும் காட்சித்தன்மையை கொண்டுவரவேண்டிய தேவை உள்ளது. ஆகவே அரண்மனைகளும் கோட்டைகளும் அன்றைய தமிழக அரண்மனைகள் எப்படி இருந்திருக்குமோ அவற்றில் இருந்து பல மடங்கு பிரம்மாண்டமாகவே இப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. அதுவே சமரசம்தான்.
இந்த அம்சம் ஹாலிவுட் படங்களிலுள்ள பாணிதான். இது கலைப்படமோ ஆவணப்படமோ அல்ல. ஹாலிவுட் பாணியிலான கேளிக்கைப் படம். கண் மலைக்கும் காட்சிகளே இதன் வணிக வெற்றியை உருவாக்கும். கதையின் பெரும் பகுதி அரண்மனைகளுக்குள் நிகழ்கையில் யதார்த்த பாணி அரண்மனைகளைக் காட்டுவது படத்திற்கு உதவாது.
வெளி மாநிலக் கோட்டைகள் பயன்படுத்தப்பட்டபோது அவற்றிலுள்ள பல நுண்விவரிப்புகளும் காட்சிக்குள் வந்துவிட்டன. ஏனென்றால், அவற்றை விருப்பப்படி மாற்ற முடியாது. ஒரே ஒரு சோழர் கால அரண்மனை எஞ்சியிருந்திருந்தால்கூட மிகப் பெரிய வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கும். அது வரலாற்று விடுபடல்.
இந்த வகை கட்டாயங்கள் இல்லை என்பதனால் படத்திலுள்ள ஆடைவடிவமைப்பு, அணிகலன் வடிவமைப்பு இரண்டுமே நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு சோழர் காலச் சிற்பங்களை அடியொற்றியே அமைக்கப்பட்டுள்ளன (பெண்கள் மேலாடை அணிந்திருந்தார்களா என ஒரு விவாதம் இருந்தது. மேலாடை இல்லாமல் படத்தில் பெண்களைக் காட்ட முடியாது என்பது வெளிப்படை) ஆண்கள் அணிந்துள்ள கவச உடைகளுக்கெல்லாம் மாதிரி வடிவங்கள் தாராசுரம் உள்ளிட்ட ஆலயங்களின் சிறிய சிற்பங்களில் உள்ளன (நம் பழைய சரித்திரப்படங்களிலுள்ள அரசர்களின் தோற்றங்கள்தான் மிகச்செயற்கையானவை. பார்சி நாடகக்குழுக்களிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டவை அவை. இன்று பலர் அவை ‘தமிழ்த்தன்மை’ கொண்டவை என நினைப்பதை காண முடிகிறது).
ஆனால், இந்த ஊசலாட்டமும் சிக்கல்களும் எதிர்காலத்தில் அகலலாம். இப்போது பொன்னியின் செல்வன் ஈட்டும் வருவாய் இனி வருவோர்க்கு மேலும் நம்பிக்கையை அளிக்கலாம். முழுமையாகவே தமிழடையாளம் கொண்ட படங்கள், பெருஞ்செலவில் வரலாம். அதற்கும் பொன்னியின் செல்வனே வழிகாட்டியும் முன்னோடியுமாக இருக்கும். நாம் முதல் முறையாக தமிழ் மன்னனின் கதையை உலகம் பார்க்கச் செய்துவிட்டிருக்கிறோம். பேசவைத்துள்ளோம்.
(அதிலும் பல படிநிலைகள். தமிழ்ச்சூழலில் இருந்து என்னவென்றே தெரியாமல் முன்வைக்கப்பட்ட காழ்ப்புகள் பல வெளிவந்தன. என்ன காரணத்தினாலோ டிரையிலர் வெளியாகும்போது இருந்த ஏற்புநிலை மாறி படம் வெளிவந்தபோது தெலுங்கில் இருந்து உச்சகட்ட காழ்ப்புகள் வெளிப்பட்டன. படம் அங்கே போதிய அளவு ஏற்படையாமல் செய்ய அந்தக் காழ்ப்புகளால் இயன்றது. நேர்மாறாக கேரளம் படத்தை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.)
இரண்டாவது நடைமுறைச் சிக்கல், தமிழகத்தில் ஆலயங்கள், நீர்நிலைகள், காடுகள் உட்பட எந்தப் பொதுவெளியியிலும் சினிமா எடுக்க சட்டபூர்வத் தடை உள்ளது. தமிழகத்தை இன்று சினிமாவில் காட்டவே முடியாதென்பதே உண்மைநிலை. உலகில் எப்பகுதியிலும் அப்பகுதியை சினிமாவில் காட்ட இந்த அளவுக்கு தடைகள் இல்லை.
2010இல் முதலில் திட்டமிட்டபோது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் தஞ்சை கோட்டையாக முடிவுசெய்யப்பட்டது மன்னார்குடி ராஜகோபால சாமி ஆலயத்தின் கோட்டைச்சுவர். ஆனால், அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. பல போராட்டங்களுக்குப்பின் படமே கைவிடப்பட்டது.
பொன்னியின் செல்வனில் காவேரியின் ஒரு காட்சிகூட காட்டப்பட முடியாது. அன்றைய நீர்ப்பெருக்குள்ள காவேரி இன்றில்லை. இன்றைய காவேரியின் எல்லா கரைகளும் கட்டிடங்கள் அல்லது குப்பைமலைகள் செறிந்தவை. காவேரிக்கரையின் சோலைகள் எங்கும் இல்லை. காவேரிக்கரை வழியாக நானும் மணி ரத்னமும் நடத்திய நீண்ட பயணத்திற்குப் பின் காவேரியை காட்டவே முடியாது என கண்டடைந்தோம்.
அத்துடன் சினிமாவுக்கே உரிய நடைமுறை நெருக்கடிகள். படம் கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. ஒரு இடம் முடிவுசெய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கையில் அனுமதி ரத்தாகும். உடனே இன்னொரு இடம் தெரிவுசெய்யப்படும். பெருமுதலீடு கொண்ட படங்களில் ஒருநாள் தாமதமும் இழப்பு உருவாக்கும். ஆகவே தொடர்ச்சியாக சமரசங்கள், விடாமுயற்சி வழியாக படம் நிறைவுசெய்யப்பட்டது. இனிவரும் படங்களில் இச்சிக்கல்கள் களையப்படலாம்.
இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு
பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?
21 Oct 2022
இரண்டு விளக்கங்கள் மட்டும்.
ஒன்று, தஞ்சை கோட்டையாக படத்தில் காட்டப்படுவது ஒரு மேட்டின் மேல் உள்ளது (மலை மேல் அல்ல). அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பு மிகுதி. ஆற்றங்கரையோர கோட்டைகள் சமநிலப்பரப்பில் இருந்து ஐம்பதடி வரை உயரமான செயற்கைமேடு, அல்லது இயற்கைமேட்டின்மேல் கட்டப்பட்டிருக்க வாய்ப்புண்டு. திருவட்டார் ஆலயம் அவ்வாறுதான் அமைந்துள்ளது. கர்நாடகத்திலும் தமிழகத்திலும் இன்று நாம் நிலப்பரப்பில் பார்க்கும் பல ஆற்றங்கரை ஆலயங்கள் பழங்காலத்தில் மேட்டின்மேல் அமைந்தவை. உதாரணம் சுசீந்திரம். ஆற்றங்கரை நிலம் சதுப்புப்படிவால் இன்று இருபதடி வரை மேலேறியிருக்கிறது.
அன்றைய காவேரி ஆண்டுதோறும் பெருவெள்ளம் வருவது. கொள்ளிடம் ஆறு அவ்வெள்ளத்தை கட்டுப்படுத்தும்பொருட்டு பிற்காலத்தில் சோழர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. வெண்ணாற்றுக்கு அருகே அமைந்திருந்த அன்றைய தஞ்சையில் அமைந்திருந்த கோட்டை ஒரு கல்மேட்டின்மேல் அமைந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவ்வாறே படத்தில் உள்ளது. இன்று நமக்கு சோழர்காலக் கோட்டையோ, கட்டுமானமோ ஏதுமில்லா நிலையில் இக்கற்பனைக்கான வாய்ப்பு உள்ளது.
மற்றொன்று. சிலர் சாளர முகப்புகளின் முகலாய பாணி வளைவுகளைப் பற்றி சுட்டிக்காட்டியிருந்தனர். நிபுணர்கள் அல்லாதவர்கள் அதீத தன்னம்பிக்கையுடன் சுட்டிக்காட்டியபோது அவர்களுடன் விவாதிக்க முயலவில்லை. அது வீண் பணி. பொன்னியின் செல்வனில் அக்காட்சிகள் வட இந்திய கோட்டையில் (ஓர்ச்சா) எடுக்கப்பட்டவை. அவ்வளவு பெரிய கோட்டை இந்தியாவில் அங்குதான் உள்ளது. வரைகலை வழியாக கோட்டைகளை உருவாக்கலாம்தான். பாகுபலிபோல செயற்கையான படமாகத் தெரியும். மணி ரத்னம் உண்மைக் கோட்டையை விரும்பினார். ஆகவே வேறுவழி இல்லை.
அக்கோட்டை மற்றும் அரண்மனைகளில் இருந்த முகலாயக் கூம்புகள் நீக்கப்பட்டன. ஆனால் ஆராய்ச்சிக்குப் பின் சாளரத்தின் மேல்வளைவுகள் முகலாயர் கலைக்கு மட்டும் உரியவை அல்ல என்று முடிவுசெய்யப்பட்டது. செங்கல் கட்டுமானத்தில் மிக வலுவாக இயற்கையாக அமைவது அந்த வளைவுதான். அவை இந்தியாவில் முகலாயர் காலத்திற்கு முந்தைய செங்கல் கட்டுமானங்கள் பலவற்றில் உள்ளன.
சோழர் காலச் செங்கல் கட்டுமானங்கள் நமக்கு அனேகமாகக் கிடைக்கவில்லை. ஆகவே, அன்று அத்தகைய மேல்வளைவுகள் இருந்திருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதுவும் ஒரு சுதந்திரம்தான். முதலில் நம் வரலாற்றை படமாக எடுக்குமளவுக்கு நிதி திரளுமா என்பதே ஐயமாக இருந்தது.
இனி மேலும் முன்செல்ல முடியும் எனத் தோன்றுகிறது.
தொடர்புடைய கட்டுரைகள்
பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?
பொன்னியின் செல்வன்: தமிழ்ச் சன்னதம்
தொடர்புடைய கட்டுரை
பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?
6
1
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
இ.பு.ஞானப்பிரகாசன் 11 months ago
இந்தக் காரணங்களும் விளக்கங்களும் உண்மை என்றால் கண்டிப்பாக இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் கதையையே மாற்றி எடுத்ததற்கு என்ன காரணம் சொல்ல முடியும்? ஆதித்த கரிகாலன் பாண்டிய ஆபத்துதவிகளால் கொலை செய்யப்பட்டான் என்பதுதான் உண்மை வரலாறு. கல்கி, பொன்னியின் செல்வனில் குற்றவாளி யாரென்பதை நேரிடையாகக் குறிப்பிடாவிட்டாலும் தான் உள்ளே செல்லும் முன்பே ஆதித்த கரிகாலன் குத்தப்பட்டு விட்டார் என்றுதான் பழுவேட்டரையர் சொல்வதாகக் கதையில் எழுதியிருப்பார். ஆனால் படத்தில் ஆதித்த கரிகாலன் தற்கொலை செய்து கொண்டதாகக் காட்டி அந்த மாவீரனை இழிவுபடுத்தினார்கள். இதற்கு செயமோகன் என்ன விளக்கம் வைத்திருக்கிறார்?
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
Writer Jeyamohan's explanation on the points raised by Kombai Anver over the film Ponniyin Selvan, not only brings out the difficulties in producing historical films, but also reveals the inadequacies of India as a country and the people's callousness in preserving our heritage sites. It may be a shocking revelation that it took 800 years for bringing out the fact to the public knowledge that Raja Rajan was the one who built the Big Temple. Till then general public were ignorant of this fact. Although Raja Rajan's name was engraved in the memorial stone, it was a neglected piece and nobody bothered to preserve it. Thanks to the efforts of a German Archeologist who deciphered the name of Raja Rajan and made it public.
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.
Ramesh 2 years ago
எதார்த்த நிலையை சொல்லி இருக்கிறார்! சிறப்பு
Reply 1 1
Login / Create an account to add a comment / reply.