கட்டுரை, புதையல், மொழி 15 நிமிட வாசிப்பு

கட்டுரை எழுதுவது எப்படி?

ஜார்டன் பீட்டர்சன்
26 Mar 2022, 5:00 am
3

ஜார்டன் பீட்டர்சன் (Jordan Peterson), கனடாவைச் சேர்ந்த உளவியல் நிபுணர், பேராசிரியர். இன்று உலக அளவில் அறிவுத்தளத்தில் புழங்குபவர்களில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர். தீவிர வலதுசாரி. 

இணைய ஆளுமை என்கிற பதம் தற்போது புழக்கத்தில் இருக்கிறது. சமூக ஊடகங்கள் வழியாகப் பிரபல்யம் அடைபவர்களையும், அங்கு கவனிக்கப்படுபவர்களாக இருப்பவர்களையும் குறிப்பது அது. அப்படியாக, அறிவுத் தரப்பிலிருந்து சமூக ஊடகங்கள் வழியாகக் கவனத்தை ஈர்த்தவர் ஜார்டன் பீட்டர்சன். இதுவரையில் மூன்று புத்தகங்கள் - ‘மேப்ஸ் ஆஃப் மீனிங்’  (Maps of Meaning 1999), ‘12 ரூல்ஸ் ஃபார் லைஃப்’ (12 Rules for Life 2018), ‘பியாண்ட் ஆர்டர்’ (Beyond Order 2021) - எழுதியிருக்கிறார். இவற்றில் ‘12 ரூல்ஸ் ஃபார் லைஃப்’ புத்தகம் அவருக்கு பெரும் வாசகப் பரப்பை ஈட்டித்தந்தது. எனினும், அவர் முதன்மையாக அவரது புத்தகங்களின் வழியாக அல்லாமல், அவரது யூடியூப் உரைகள், பாட்காஸ்ட் (Podcast) வழியாகவே அறியப்படுபவர். பெரும்பாலும் அவரது உரைகள் நடத்தைசார் நெறிகளை மையப்படுத்தியவை.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கனடாவின் டொராண்டோவில் உள்ள மெரிடியன் ஹாலில் 3,000 பார்வையாளர்களுக்கு முன்னிலையில் ஜார்டன் பீட்டர்ஸனுக்கும் தத்துவவியலாளர் ஸ்லாவாய் ஜிஜெக்குக்கும் (Slavoj Zizek) நடந்த விவாதம் மிகவும் புகழ்பெற்ற ஒன்று. பீட்டர்சன் இடதுசாரிகளை, பின்நவீனத்துவாதிகளைக் கடுமையாக விமர்சிப்பவர். இந்நிலையில் பீட்டர்சனின் அணுகுமுறை ‘போலி அறிவியல்’ என்று ஜிஜெக் விமர்சித்தார். அதற்கு பீட்டர்சன் ‘வாருங்கள் நேருக்கு நேர் விவாதிப்போம், எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும்’ என்றரீதியில் சவால் விட்டார். அதையெடுத்தான் மெரிடியன் ஹாலில் ‘மகிழ்ச்சி: முதலாளித்துவம் எதிர் மார்க்ஸிஸம்’ (Happiness: Capitalism vs Marxism) எனும் தலைப்பில் இருவருக்கிடையே விவாதம் ஏற்பாடு செய்யப்பட்டது. பார்வையாளர் கட்டணம் 300 டாலர். இந்திய மதிப்பில் ரூ.22,500.

பீட்டர்சன் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு கருந்துரையாற்றிவருகிறார். திரையரங்குகளில் கூட்டம் கூடுவதுபோல் அவருடைய உரை நிகழ்ச்சிகளுக்குப் பெருந்திரள் கூடுவது வழக்கம். அந்த அளவுக்கு பீட்டர்சனுக்கு மிகப் பெரும் ரசிகப் படை உண்டு. மிகக் கச்சிதமாகவும் மிக வலுவாகவும் (மூர்க்கமாக) தன் தரப்பை முன்வைக்கூடியவர். அரசியல் சரிநிலையைப் (Political Correctness) பொருட்படுத்தாது தான் மனதில் நினைப்பதைச் சொல்பவர்.  இதனால் எந்த அளவுக்கு இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவுக்கு இவரைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. 

பீட்டர்சன் கட்டுரை எழுதுவதற்கான வழிகாட்டி ஒன்றை (Essay Writing Guide) எழுதியிருக்கிறார். கட்டுரை என்றால் என்ன? கட்டுரை ஏன் எழுதப்படுகிறது? ஒரு கட்டுரையை எப்படி ஆரம்பிப்பது? அதை எப்படி வடிமைப்பது? அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்? இப்படிக் கட்டுரை எழுதுவதற்கான அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய வழிகாட்டி அது. பீட்டர்சன் மீதான ஈர்ப்பு, விமர்சனம் ஆகியவற்றைத் தாண்டி அவரது இந்த வழிகாட்டி அவசியம் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. அந்த வழிகாட்டியின் சுருக்கத்தை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது. 

ஏன் கட்டுரை எழுதுவது அவசியம்?

ஒரு விஷயத்தைப் பற்றித் தெளிவான புரிதலைப் பெற, ஒரு விஷயத்தைப் பற்றிய சிந்தனையை வெளிப்படுத்த, ஒரு விஷயம் குறித்த கேள்விக்கு விடை காண எழுதப்படுவதுதான் கட்டுரை. தெளிவாகச் சிந்திப்பதற்கு எழுதவதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை. ஒரு சிந்தனையை எழுதிவிட்ட பிறகு அதை நாம் வேறு கோணங்களில் அணுக முடியும். ஆனால், எழுதாமல் மனதில் மட்டும் யோசித்துக்கொண்டிருக்கும்போது அந்தச் சிந்தனையை மேம்படுத்துவது கடினமானது.

நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற, உங்கள் தரப்பைத் தெளிவாக முன்வைப்பது அவசியம். எவர் ஒருவர் அவரது தரப்பைச் சிறப்பாக ஒருங்கமைத்துத் தெளிவாக முன்வைக்கிறாரோ அவர் எப்போதும் வெற்றிபெறுவார். எழுதுவதன் மூலம் நீங்கள் உங்கள் சிந்திக்கும் திறனையும், அதை வெளிப்படுத்தும் திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும். அது உங்களைப் பலமிக்கவராக மாற்றும். சிந்தனை என்பது உலகத்தை மாற்றும் வல்லமைக்கொண்டது. குறிப்பாக, அது எழுத்தில் இருக்கும்போது. ரோமானியர்கள் கட்டிடங்கள் கட்டினார்கள். இப்போது அவை மறைந்துவிட்டன. யூதர்கள் புத்தகங்கள் எழுதினார்கள். இப்போதும் அவை உள்ளன.

ஆக, சமூகத்தில் உங்கள் தரப்பு புறக்கணிக்கப்படாமலும், மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள். அதன் வழியே சிந்திக்கவும், சிந்தனையைத் தெளிவாக வெளிப்படுத்தவும் முடியும். இல்லையேல், அதில் தேர்ந்தவர்கள் உங்களைப் பின்தள்ளிச் சென்றுவிடுவார்கள். உங்கள் வாழ்க்கைக் கடினமாதாகவே தொடரும். எப்போதும் நீங்கள் அதிகாரப் படிநிலையின் கீழ்நிலையில் இருக்க வேண்டியதாகிவிடும்.  

வார்த்தைகளுக்கு இருக்கும் சக்தியைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். வார்த்தைகள் வழியாகத்தான் நாம் நாகரிகம் அடைந்துவந்துள்ளோம். வார்த்தைகள் இல்லாவிட்டால், இன்னும் நாம் மரங்களில்தான் வசித்துக்கொண்டிருப்போம். ஆக, நீங்கள் எழுதும்போது கலாச்சாரத்தின் முழு பலத்தையும் உங்கள் வார்த்தைகளில் பயன்படுத்துகிறீர்கள் என்பதை உணருங்கள்.

எப்போது எழுதுவது?

மனிதர்களின் மூளை காலை நேரத்தில் சிறப்பாக வேலைசெய்யும். எனவே அதிகாலையில் எழுந்திருங்கள். ஏதாவது சாப்பிடுங்கள். முறையான தூக்கமும் உணவும் இருந்தால் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். ஒரு நாளில் 90 நிமிடம் முதல் 3 மணி நேரம் வரையில் எழுதத் தயாராகுங்கள். தினமும் எழுதுவீர்கள் என்றால் 15 நிமிடங்கள் எழுதுவதுகூட பயனளிக்கக்கூடியதுதான். ஓய்வு நேரம் கிடைக்கும்போது எழுதலாம் என்று காத்திருக்காதீர்கள். ஒருபோதும் உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கப்போவதில்லை. இல்லாத ஒன்றை நம்பிக்கொண்டு உங்கள் வெற்றியை வீணடிக்காதீர்கள். சிறந்த எழுத்தாளர்கள் அநேகர் தினமும் எழுதக்கூடியவர்கள்.

எழுத உட்காரும்போது உங்கள் மனம் கவனம் குவிக்க மறுக்கும். இது இயல்பானது என்பதை முதலில் உணருங்கள். உங்கள் மூளையில் பழக்கமாகியுள்ள அன்றாட நடைமுறைகள் உங்களைத் திசை திருப்பும். பொறுமையைக் கைகொண்டு அந்தத் திசைத்திருப்பல்களை வெல்ல முடியும். எழுத உட்காரும் முதல் 15 நிமிடங்களுக்கு அந்தத் திசைத்திருப்பல் எண்ணங்களுக்கு செவிசாய்க்காமல் இருந்தால் அதன் பிறகு உங்கள் மனம் தானாகவே அமைதி அடைந்துவிடும். எழுத உட்காரும்போது திசைதிருப்பும் எண்ணங்கள் வருவது இயல்பு என்பதையும், அந்த எண்ணங்களுக்கு ஒப்புக்கொடுக்காமல் இருந்தால் கொஞ்ச நேரத்தில் அவை தானாகாவே மறைந்து, எழுதும் மனநிலை ஏற்பட்டுவிடும் என்பதை நீங்கள் உங்கள் மனதில் இருத்திக்கொள்ளுங்கள். இந்தக் கொள்கையைக் கடைப்பிடித்தாலும், திசைத்திருப்பும் எண்ணங்கள் ஏற்படத்தான்செய்யும். ஆனால், நீண்ட நேரத்துக்கு அவை நீடிக்காது.

அதேபோல் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் எழுத முடியும் என கற்பனைச் செய்துகொள்ளாதீர்கள். அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளவது. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 3 மணி நேரம்தான் முழு ஆற்றலுடன் எழுத முடியும். கவனம் குவித்த 3 மணி நேர எழுத்தானது கவனமற்ற 10 மணி நேர எழுத்தைவிடச் சிறந்தது.  தினமும் எழுத விரும்பினால். எழுதத் தொடங்குவதற்கு நீண்ட நேரம் காத்திருக்காதீர்கள். அதேசமயம், வெறிகொண்டு உங்களை வருத்திக்கொள்ளாதீர்கள். குறிப்பிட்ட இடைவெளியில் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். பூரணத்தை நோக்கி உட்கார்ந்து பலர் எதையும் எழுதாமல் இருந்துவிடுவார்கள். பூரணம் முக்கியமல்ல. ஒன்றை எழுதி முடிப்பதுதான் முக்கியம். நீங்கள் எழுதினால்தான் அதில் ஏதேனும் மாற்றி அமைக்க முடியும்.

வார்த்தை – வாக்கியம் - பத்தி

கட்டுரை எழுதுவதற்குச் சில அடிப்படையான விஷயங்கள் உள்ளன. முதலாவது வார்த்தைத் தேர்வு. அடுத்தது, தெளிவான வாக்கிய அமைப்பு. மூன்றாவது பத்தி ஒழுங்கு. ஒரு வாக்கியத்தில் ஒவ்வொரு வார்த்தையும் துல்லியமாகப் பொருந்தியிருக்க வேண்டும். ஒவ்வொரு வாக்கியமும் தர்க்கரீதியாகவும் முறையாகவும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பத்தியைப் பொறுத்தவரையில் 100 வார்த்தைகளுக்கும் மேல் ஒரு பத்தியை நீட்டிக்க வேண்டாம்.

ஒரு பத்தியில் ஏதேனும் ஒரு சிந்தனை முன்வைக்கப்பட்டிருக்க வேண்டும். 100 வார்த்தைகள் அளவில் ஒரு சிந்தனையை உங்களால் எழுத முடியாவிட்டால், அந்தச் சிந்தனை உங்களுள் இன்னும் முழுமை பெறவில்லை என்று அர்த்தம். அதுவே, ஒரு பத்தி 300 வார்த்தைகளுக்கு மேல் நீளும்பட்சத்தில் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட சிந்தனைகள் இருப்பதாக அர்த்தம். அவற்றை இனம்கண்டு தனித்தனியாகப் பிரிக்க வேண்டும். ஒவ்வொரு பத்திகளும் தர்க்கரீதியான வரிசைப்பாட்டில் அமைக்கப்பட வேண்டும். கட்டுரை எழுதுதலில் இதுதான் முக்கியமான விஷயம்.

கட்டுரையின் வார்த்தை எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் 1,000 வார்த்தைகளைத் தாண்டி எழுத வேண்டாம். பொதுவாக, 1,000 வார்த்தைகளுக்கும் மேல் கட்டுரை எழுதும்போது கட்டுரையின் சாராம்சம் திரிந்துவிடுவது உண்டு. அதனால், 1,000 வார்த்தைகள் அளவிலே கட்டுரை இருப்பது நல்லது. ஒரு பத்திக்கு நூறு வார்த்தைகள் எனில் 1,000 வார்த்தைகள் கட்டுரையில் 10 பத்திகள் இருக்கும். இதுவே நல்லதொரு செறிவான அமைப்பு.

எந்த ஒரு விதியும் இறுதியானது அல்ல. ஒரு தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவராக ஆகிவிட்டால் நீங்கள் பழைய விதிகளை உடைத்துப் புதிய சாத்தியங்களைக் காட்டலாம். தொடக்க நிலையில் உள்ள நபர் எனில், விதிகளைப் பின்பற்றுவதே நல்லது. வாக்கியங்களும் பத்திகளும் முறையாகவும் செறிவாகவும் அமைக்கப்பட்டிருப்பதால் மட்டும் ஒரு கட்டுரை நல்ல கட்டுரை ஆகிவிடாது. அதில் தனித்துவம் இருக்க வேண்டும். அது உங்கள் திறன் சார்ந்தது. அனைத்துக்கும் மேலாகக் கட்டுரையில் அழகியல் மிகவும் முக்கியம். உங்களுடைய மொழி நடையாகட்டும், வார்த்தைத் தேர்வாகட்டும் மிகவும் அழகாக இருக்க வேண்டும். ஒருபோதும், உங்கள் கட்டுரை அலுப்பு ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது.

தலைப்புக் கேள்வி

உங்களை ஈர்க்கும் விஷயங்களை, உங்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தும் விஷயங்களை, உங்களுக்கு முக்கியமாக இருக்கும் விஷயங்களை நீங்கள் கட்டுரை எழுதுவதற்குத் தேர்வுசெய்யுங்கள். நீங்கள் எழுத விரும்பும் விஷயத்தை, அதாவது கட்டுரையின் மையமாக நீங்கள் எதை பேசப்போகிறீர்களோ அதைக் கேள்வி வடிவில் மாற்றிக்கொள்ளுங்கள். கீழே சில உதாரணங்கள்.

  1. ஹெமிங்வேயின் ‘தி சன் ஆல்ஸோ ரைஸஸ்’ (The Sun also Rises) முக்கியமான புத்தகமா?
  2. மனதைப் பற்றிய கார்ல் யுங் மற்றும் சிக்மெண்ட் பிராயிட்டின் கருதுகோள்கள் எப்படி முரண்படுகின்றன?
  3. காலத்தைப் பற்றிய கருத்தாக்கத்தில் நியூட்டனும் ஐன்ஸ்டைனும் எப்படி வேறுபடுகின்றனர்?

வாசிப்புப் பட்டியல் மற்றும் குறிப்பு எடுத்தல்

நீங்கள் தேர்வுசெய்திருக்கும் தலைப்பு சம்பந்தமாக குறைந்தது 5 முதல் 10 கட்டுரைகள் அல்லது புத்தகங்களைப் படிக்க வேண்டும். அவற்றை 1,2,3… என்று பட்டியலிடுங்கள். ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் நீங்கள் முக்கியமெனக் கருதும் அல்லது நீங்கள் மாறுபடும் விஷயங்களைக் குறிப்பு எழுதுங்கள். அச்சில் படிப்பதாக இருந்தால் படிக்கும் பக்கங்களின் மீது பென்சில் வைத்து அடிக்கோடிடுவது, கணினியில் படிப்பதாக இருந்தால் மஞ்சள் நிறம்கொண்டு தனித்துக் காட்டுவது போன்றவற்றின் பெயர் குறிப்பெடுப்பது அல்ல. நீங்கள் படித்தவற்றின் சாராம்சத்தைத் தொகுத்து எழுதுவதுதான் குறிப்பு எடுப்பது. கட்டுரையாளர் என்ன எழுதியிருக்கிறாரோ அதே தொனியில் குறிப்பு எழுதக் கூடாது. மாறாக, நீங்கள் அந்தக் கட்டுரையை என்னவாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதைத் தொகுத்து எழுதுங்கள். அது உங்களைச் செறிவூட்டும். உங்கள் சிந்திக்கும் திறனையும் மொழி வளத்தையும் மேம்படுத்தும்.

உள்ளடக்கக் கேள்விகள்

உள்ளடக்கக் கேள்விகளை உருவாக்குவதுதான் கட்டுரை எழுதுவதில் மிகவும் முக்கியமான இடம். அதுதான் கட்டுரையின் உள்ளடக்கமாக இருக்கப்போகிறது. 1,000 வார்த்தைகள் கட்டுரைக்கு 10 உள்ளடக்கக் கேள்விகள் தேவை. அதிகபட்சம் 15 உள்ளடக்கக் கேள்விகள் இருக்கலாம். அதற்குமேல் வேண்டாம். உள்ளடக்கக் கேள்விகளுக்கான உதாரணம்:

ஆபிரகாம் லிங்கன் என்பவர் யார்? இதுதான் நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கும் தலைப்பு என்றால், அதற்கான உள்ளடக்கக் கேள்விகள் கீழ்வருமாறு இருக்கலாம்.

  1.  ஏன் ஆபிரகாம் லிங்கன் நினைவுகூரப்பட வேண்டியவராகிறார்?
  2.  அவருடைய குழந்தைப் பருவத்தில் நடந்த முக்கியமான நிகழ்வு என்ன?
  3.  அவருடைய வாலிபப் பருவம் பற்றி?
  4.  அவருடைய இளவயது வாழ்க்கையைப் பற்றி?
  5.  அவர் எதிர்கொண்ட சவால்கள் என்ன?
  6.  அவருடைய காலத்தில் முதன்மையான பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினை என்ன?
  7.  அவருடைய எதிரிகள் யார்?
  8.  அந்த எதிரிகளை அவரை எப்படிக் கையாண்டார்?
  9.  அவருடைய முக்கியமான சாதனைகள் என்ன?
  10.  அவர் எப்படி இறந்தார்?

நீங்கள் மூவாயிரம் வார்த்தைகள் கொண்ட நெடுங்கட்டுரை எழுத விரும்பினால் அதற்கான உள்ளடக்கக் கேள்விகள் கீழ்வருமாறு இருக்கலாம்.

முதலாளித்துவம் என்பது என்ன? இது நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பாக இருந்தால் அதற்கான உள்ளடக்கக் கேள்விகள்:

1.  முதலாளித்துவம் எப்படி வரையறுக்கப்படுகிறது? முதலாளித்துவம்பற்றி வெவ்வேறு எழுத்தாளர்கள், கோட்பாட்டளர்கள் கூறிய வரையறை.

  • எழுத்தாளர் 1
  • எழுத்தாளர் 2
  • எழுத்தாளர் 3

2.  எங்கு, எப்போது முதலாளித்துவம் தோன்றியது?

  • நாடு 1
  • நாடு 2

3.  முதலாளித்துவம் அது தோன்றிய முதல் 50 ஆண்டுகளில் எப்படி வளர்ந்தது?

  •  இரண்டாவது 50 ஆண்டுகளில் அதன் வளர்ச்சி எப்படி இருந்தது?

4.  முதலாளித்துவத்துக்கு முன்னோடி என்ன?

5.   முதலாளித்துவத்தின் நன்மைகள் என்ன?

  • சொத்து உருவாக்கம்
  • தொழில்நுட்பப் பாய்ச்சல்
  • தனிநபர் சுதந்திரம்

6.  முதலாளித்துவத்தின் தீமைகள் என்ன?

  • சமத்துவமற்ற பகிர்வு
  • மாசுபாடு மற்றும் ஏனைய பாதிப்பு

7.   முதலாளித்துவத்துக்கு மாற்று என்ன?

  • பாசிஸம்
  • கம்யூனிஸம்

8.      மாற்றுகளின் விளைவுகள் எப்படியானதாக இருக்கும்?

9.      எதிர்கால சாத்தியம் என்ன?

10.  முடிவு

பத்து உள்ளடக்கக் கேள்விகளுக்கான பதில்களை எழுதிவிட்டீர்கள் என்றால் உங்கள் கட்டுரையின் முதல் வரைவு முடிவுக்கு வந்துவிட்டது என்று அர்த்தம். 1,000 வார்த்தைகள்கொண்டதாக உங்கள் கட்டுரை இருக்க வேண்டும் என்றால், உங்கள் முதல் வரைவில் நீங்கள் 1,250 வார்த்தைகள் எழுத வேண்டும். அதாவது எப்போதும் முதல் வரைவு என்பது இறுதி வடிவத்தில் நீங்கள் திட்டமிட்டிருக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கையைவிட 25% கூடுதலாக இருக்க வேண்டும்.

எப்போதும் முதல் வரைவு என்பது குப்பைக்கூளம் போல்தான் இருக்கும். அது குறித்துக் கவலைப்படாதீர்கள். எடிட்டிங்கில் அதை சரிசெய்துகொள்ளலாம். பொதுவாக, கட்டுரை எழுதுவது என்பது இரண்டு கட்டங்களால் ஆனது. முதலாவது உருவாக்கம். இரண்டாவது எடிட்டிங். இந்த இரண்டையும் ஒரேநேரத்தில் மேற்கொள்ளக் கூடாது. முதலில் எழுத வேண்டிய அனைத்தையும் எழுதிவிடுங்கள். அதன் பிறகு அதை எடிட்செய்யுங்கள்.

எடிட்டிங்

ஒவ்வொரு பத்தியாக எடிட்செய்ய வேண்டும். முதலில் ஒரு பத்தியின் ஒவ்வொரு வாக்கியத்தையும் தனித்தனி வரியாக ஆக்கிக்கொள்ளுங்கள். இப்போது அந்த வாக்கியத்தை மாற்றி எழுதுங்கள். அதாவது முந்தைய வாக்கியத்தைவிட செறிவு மிக்கதாக. ஏனென்றால், முதல் வரைவில் நீங்கள் ஒரு வாக்கியத்தைச் சீரானதாக, துல்லியமானதாக எழுதாமல் இருந்திருக்கலாம். அதனால் இப்போது அதை மாற்றி எழுதுங்கள். தேவையற்ற வார்த்தைகளைப் பாரபட்சமில்லாமல் நீக்குங்கள். ஒவ்வொரு வாக்கியத்தையும் வாய்விட்டு வாசித்துப்பாருங்கள். அது உங்களுக்கு எப்படி ஒலிக்கிறது என கவனியுங்கள். இவ்வாறாக ஒவ்வொரு பத்தியையும் எடிட்செய்யுங்கள். வாக்கியத்தை முன்னும் பின்னும் மாற்றியமைத்தால் சரியாக இருக்கும் எனத் தோன்றினால் அதையும் செய்யுங்கள்.

இப்போது உங்கள் கையில் எடிட்செய்து புதிதாக உருவாக்கப்பட்ட 10 பத்திகள் இருக்கும்.  இப்போது ஒவ்வொரு பத்தியாக சரிபாருங்கள். பத்திகள் சரியான வரிசையில் அமைக்கப்பட்டிருக்கின்றனவா, அவை ஒவ்வொன்றும் தம்மளவில் சிந்தனையைக் கடத்துகின்றனவா, அவை உள்ளடக்கக் கேள்வியுடன் பொருந்திப்போகின்றனவா என்பதைத் தீவிர கவனம் எடுத்துப்பாருங்கள். பொருத்தமற்று இருக்கும்பட்சத்தில் பத்திகளை மாற்றியமைத்து ஒத்திசைவை உருவாக்குங்கள். பத்திகளை வரிசைப்படுத்துவதில் தர்க்க ஒழுங்கு மிகவும் முக்கியமானது.

இப்போது உங்கள் கையில் இருப்பது கட்டுரையின் இரண்டாவது வரைவு. இரண்டாவது வரைவிலேயே உங்கள் கட்டுரை மற்றவர்களின் கட்டுரைகளைவிட மேம்பட்டதாக மாறிவிடும். ஆனால், உங்கள் கட்டுரை இன்னும் முடிந்துவிடவில்லை. இப்போது உங்கள் கட்டுரையை ‘பி’ நிலையிலிருந்து ‘ஏ’ நிலைக்கு, அதாவது ‘நல்ல’ என்ற நிலையிலிருந்து ‘சிறந்த’ என்ற நிலைக்கு எடுத்துச்செல்ல வேண்டும். அதற்கு பின்வரும் வழிமுறைகள் உதவும்.

கீழ்வரும் விதிகள் உங்களுக்குத் தேவையற்றதாக எரிச்சலூட்டக்கூடியதாகத் தோன்றலாம். ஆனால், இந்த விதிகள்தான் உங்கள் கட்டுரையைத் தனித்துக் காட்டக்கூடியது.

உங்கள் கையில் இருக்கும் இரண்டாவது வரைவை மீண்டும் ஒருமுறை முழுமையாக வாசியுங்கள். நீங்கள் வாசித்ததிலிருந்து புதிதாக மீண்டும் 10 உள்ளடக்கக் கேள்விகளை எழுதுங்கள். அவற்றை எழுதும்போது உங்கள் கட்டுரைக்குச்சென்று பார்க்காதீர்கள். உங்கள் நினைவிலிருந்து எழுதுங்கள். அப்படி எழுதும்போது மிக அத்தியாவசியமானவையும் முக்கியமானவையும் மட்டுமே தங்கும். தேவையற்றவை நீங்கிவிடும். இப்போது உங்கள் உள்ளடக்கக் கேள்விகளுக்கு ஏற்ப, நீங்கள் கட்டுரையில் எழுதிய பத்திகளைப் பொருத்துங்கள். அப்படிப் பொருத்தும்போது உங்கள் முந்தைய வரைவில் எழுதிய பல விஷயங்கள் உங்களுக்குத் தேவையற்றவையாகத் தோன்றக்கூடும். பாரபட்சம்பார்க்காமல் அவற்றைக் கழித்துவிடுங்கள்.

இப்போது உங்கள் கையில் இருப்பது மூன்றாவது வரைவு. சில நாட்கள் காத்திருந்து வாசித்துப்பாருங்கள். இன்னும் மேம்படுத்தலாம் எனத் தோன்றினால், மீண்டும் எடிட்செய்யுங்கள். எடிட் பண்ணுவதற்கு இடமே இல்லை என்ற நிலை வரும்போது உங்கள் கட்டுரை முடிந்துவிட்டதாக அர்த்தம்.

சிறந்த கட்டுரை எழுதுவதற்கு என்னுடைய வாழ்த்துகள்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: எஸ்.அப்துல் ஹமீது

10

7





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Prabagaran M   3 years ago

சிறப்பான கட்டுரை. நான் நீண்ட காலமாக நான் வேலை செய்யும் துறை எழுத வேண்டும் என அவ்வப்போது நினைப்பேன். ஆனால் எப்படி எழுத வேண்டும் என இந்த கட்டுரை வழிகாட்டி இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Piku   3 years ago

மிக அற்புதமான கட்டுரை. மொழிபெயர்ப்பும் கச்சிதமாக அமைந்திருக்கிறது. சேமித்து வைத்து அடிக்கடி எடுத்து வாசிக்க வேண்டிய கட்டுரை. மொழிபெயர்த்து வெளியிட்டமைக்கு நன்றி!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Dhandapani   3 years ago

பயனுள்ள தகவல்கள் மற்றும் துணுக்குகள். மகிழ்ச்சி.... நன்றி

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

கவசம்அடக்கமான சேவைதி டிஸ்கவரி ஆஃப் இந்தியாபிரேசில் அரசியல்அப்பாஜான்தனிக் கட்சிகண்காட்சிதிருவாரூர் தேர்ஹிஜாப்உணவியல்கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பேட்டிபாரதிய நியாய சம்ஹிதைவரி நிர்வாகம்காளியாஜனசக்திமோடி அரசாங்கம்ப.சிதம்பரம்கூத்துப்பட்டறைபர்ஸாthiruma interviewஊழல் எதிர்ப்பாளர்தனிமங்கள்இஸ்லாமிய வெறுப்புதமிழ்க் கல்விமுகப்புக் கடிதம் எழுதுவது எப்படிஜூம்கலைஞர் தெற்கிலிருந்து ஒரு சூரியன்வகுப்புவாதம்எடிட்டிங்தமிழ்நாட்டைப் பிரிக்கலாமா சமஸ் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!