கட்டுரை, சினிமா, அரசியல், சட்டம் 8 நிமிட வாசிப்பு

காவிமயமாகிவிடக் கூடாது திரைத் துறை!

கே.சந்துரு
27 Aug 2021, 12:00 am
2

தமிழ்த் திரைப்பட இயக்குநர் ருத்ரன் தயாரித்த ‘₹ 2000’ படத்துக்கு ஆரம்பத்தில் தணிக்கைக் குழு 105 வெட்டுகளை அளித்திருக்கிறது. படத்தில் அம்பேத்கர் படத்தைக் காட்டுவதற்குக்கூட ஆட்சேபித்திருக்கிறார்கள். இதை எதிர்த்து மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தில் சீராய்வு மனு தொடரப்பட்டது; மனுவை விசாரித்த உறுப்பினர்கள் கௌதமியும் லீலா மீனாட்சியும் (பாஜகவிலுள்ள நடிகர்களும்கூட) அவர்கள் பங்குக்கு 24 வெட்டுகளைப் பரிந்துரைத்திருக்கின்றனர். அவர்களது முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால், பொருட்செலவுடன் கால தாமதமும் ஆகலாம். அதுவரை திரையரங்குகளில் படத்தைக் காட்ட முடியாது.

மலையாளத்தில் ‘வர்த்தமானம்’ படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் மறுக்கப்பட்டதையும் இப்படிக் கவனிக்க வேண்டி இருக்கிறது. படத்தில் சித்தார்த் சிவாவும் பார்வதியும் ஜவாஹர்லால் பல்கலைக்கழக மாணவர்களாகக் காட்டப்படுவதும், அங்கு நடைபெற்ற மாணவர் போராட்டத்தைச் சித்தரித்ததும் தேச விரோதச் செயலாகக் கருதப்பட்டதுதான் காரணம் என்று தணிக்கைக் குழு உறுப்பினரும், பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞருமான சந்தீப் குமார் கூறியிருக்கிறார்ர்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவுடன் இது தொடர்பில் கட்சியினர் இடையே பேசினார் இந்நாள் பாஜக தலைவர் அண்ணாமலை. ‘ஊடகங்கள் ஆறு மாதத்துக்குள் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும்!’ அடுத்து, பாஜக அரசால் நியமிக்கப்பட்ட தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டபோது, அங்கும் ‘இனி திரைப்படங்களில் காட்டப்படும் தேச விரோத நடவடிக்கைகள் முற்றிலும் நீக்கப்படும்’ என்ற குரலைக் கேட்க முடிந்தது.  

தணிக்கைச் சட்ட வரலாறு

1952-ம் வருடத்திய திரைப்படத் தணிக்கைச் சட்டத்தின் மூலம் தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களை மட்டுமே பொது அரங்கங்களில் காட்சிக்கு வைக்க முடியும். தணிக்கை செய்வதற்காக மண்டலத் தணிக்கை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை சொல்வதற்கு அலுவல் சாராத ஆலோசனைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.

திரைப்படங்கள் இப்படித் தணிக்கை செய்யப்பட்ட பின் அவை பொதுமக்கள் காட்சிக்குத் திரையிடப்படுவது தொடர்பில், ‘U’ (அனைவரும் பார்க்கலாம்), ‘UA’ (சிறுவர்கள், துணையுடன் பார்க்கலாம்), ‘A’ (வயது வந்தவருக்கு மட்டும்) என்று தணிக்கைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அந்தச் சான்றிதழ்கள் பத்து வருடத்துக்கு மட்டும் பயன்பாட்டில் இருக்கும்.

தணிக்கை வாரியத்தின் முடிவில் திருப்தி இல்லை என்றால், திரைப்படக் குழுவினர் ஒன்றிய அரசின் திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திடம் மேல்முறையீடு செய்யலாம். தீர்ப்பாயத்தின் தலைவர் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பார். அவருக்கு உதவ மேலும் நான்கு நிபுணர்கள் குழுவில் இருப்பார்கள்.

ஆனால் மேல்முறையீட்டு வாரியம், நீதிபதி தலைமையிலான குழுவின் தீர்ப்பின்படி செயல்பட்டாலும் அதன் உத்தரவை ஒன்றிய அரசு சீராய்வுசெய்து, ரத்துசெய்வதற்கு அதிகாரம் பெற்றிருந்தது. இதை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில், ‘நீதிமன்ற உத்தரவுகளை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த முடியாது’ என்று சொல்லி ஒன்றிய அரசுக்கு வழங்கப்பட்ட இறுதி சீராய்வு அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்தது (கே.எம்.சங்கரப்பா – எதிர் - இந்திய ஒன்றிய அரசு, 2001 (1) SCC 582). இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் தீர்ப்பாயத்தின் முடிவுக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் உயர் நீதிமன்றங்களையும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தையும் அணுகி நிவாரணம் பெறலாம் என்ற நிலைமை இருந்தது. 

இதற்கிடையிலேயே பல்வேறு தீர்ப்பாயங்களில் நியமிக்கப்படும் நீதித் துறையைச் சார்ந்த தீர்ப்பாய உறுப்பினர்களின் தகுதி மற்றும் பணி நிலைமைகள் தொடர்பிலான பல்வேறு வழக்குகளையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து அவ்வப்போது பல உத்தரவுகளைப் பிறப்பித்துவந்தது. நீதித் துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். இந்தத் தீர்ப்புகளின் அடிப்படையில் 2017-ல் கொண்டுவரப்பட்ட நிதிச் சட்டத்தின் கீழ் வகுக்கப்பட்ட விதிகளின் கீழ் தீர்ப்பாய உறுப்பினர்களின் தகுதி, பணி நிலைமைகள் முடிவுசெய்யப்பட்டன. ஆனால், அவற்றை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் அந்த விதிகள் ரத்துசெய்யப்பட்டன.

இதனால், ஒன்றிய அரசு 17 தீர்ப்பாயங்களைக் கலைத்துவிட்டது. இவற்றில் ஒரு தீர்ப்பாயம் திரைப்படத் தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் ஆகும். இந்தக் கொள்கை முடிவு எடுக்கப்பட்டவுடன் பலரும் தங்களது வருத்தத்தைத் தெரிவித்தனர். ஏனெனில், மண்டலத் தணிக்கை வாரியத்தின் முடிவுக்கு எதிராக இனி உயர் நீதிமன்றங்களுக்கும், அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்துக்கும் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலைமையும், இதனால் நிதிச் சுமையும், காலவிரயமும் ஆகும் என்ற எண்ணமும் உருவாயின.

புதிய சட்டத் திருத்தம்

இதனால் ஏற்பட்ட மேல்முறையீட்டு உரிமை இழப்பைப் பாதுகாப்பதற்காக உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் உரிய மேல்முறையீட்டு மன்றத்தை உருவாக்காமல், ஒன்றிய அரசே அனைத்து அதிகாரங்களையும் எடுத்துக்கொள்ள முடிவெடுத்ததன் விளைவே புதிய சட்டத் திருத்தம். 2019-ல் திரைப்படத் தணிக்கை வாரியத் திருத்தச் சட்டம் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது (1.2.2019). அதன் பின்னர், நிலைக் குழுவின் அறிக்கையைப் பெற்று 16.3.2020 அன்று மக்களவையில் திருத்தம் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது சில மாற்றங்களுடன் வரைவு மசோதாவின் பேரில் மக்கள் கருத்தை அறிய முற்படுகிறது ஒன்றிய அரசு.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவில் உள்ள புதிய சங்கதிகள் இவைதான்: 

1) சிறுவர்கள், வயது வந்தோர் துணையுடன் பார்க்கக்கூடிய ‘UA’ என்ற சான்றிதழ் இனி மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படும். 7 வயதுக்கு மேற்பட்டோர் = ‘UA7+’, 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் = ‘UA13+’, 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் = ‘UA 16+’

2) பத்து வருடங்களில் காலாவதியாகும் தணிக்கைச் சான்றிதழ்களுக்கான காலக்கெடு ரத்துசெய்யப்படுகிறது.

3) மண்டலத் தணிக்கை வாரியம் வழங்கும் தணிக்கைச் சான்றிதழ்களை எப்போது வேண்டுமானாலும் பரிசீலித்து அதை ரத்துசெய்து மீண்டும் தணிக்கை வாரியத் தலைவரின் மறுபரிசீலனைக்கு விடும் அதிகாரத்தை ஒன்றிய அரசு புதிதாக ஏற்படுத்திக்கொள்கிறது.

4) திரைப்படங்களை ரகசியமாகப் பிரதி எடுத்து அதன் உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் திருட்டு கேசட் வெளியிடுவது கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. மூன்று வருடம் வரை சிறைத்தண்டனையும், திருட்டு கேசட் வெளியிட்டதில் வரும் வருமானத்தில் 5% வரை அபராதம் விதிக்கவும் புதிய சட்டத் திருத்தம் வழிவகுத்துள்ளது.

திருத்தங்களால் என்ன பிரச்சினை?

இப்படி வயதுவாரியான பிரிவுகளை அதிகமாக்குவதால், திரைப்படம் எடுப்பவர்களுக்குப் பல நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும். திரைப்படங்களைப் பார்க்க வருபவர்களை இப்படிப்பட்ட வயது சார்ந்த நுண்ணிய அளவுகோல்களால் மதிப்பிட முடியாது. திரையரங்குகளுக்கும் பார்வையாளர்களை அனுமதிப்பதில் சிக்கல்கள் ஏற்படும்.

புதிய 2021 மசோதா சட்டத் திருத்தத்தின்படி ஒன்றிய அரசு எப்போது வேண்டுமானாலும் திரைப்படங்களின் தணிக்கைச் சான்றிதழை மறுபரிசீலனைக்கு உட்படுத்தலாம் என்று கூறுவது திரைப்படத் தயாரிப்பாளரின் கழுத்தின் மேல் தொங்கும் கத்தியாக அந்த அதிகாரம் விளங்கும். இதனால், ஒரு நிச்சயமற்ற சூழல் திரைப்படங்களுக்கு உருவாகும். ஆட்சி மாறினால் காட்சி மாறும் என்ற சொலவடைபோல் ஆட்சி மாறும்போதெல்லாம் தணிக்கைச் சான்றிதழ்களும் மாற்றப்படலாம் என்ற அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படும். மேலும், திரைப்படத்தைத் தயாரிக்கும் கலைஞர்களின் படைப்புரிமையையும் இது பறிப்பதாக அமையும். சங்கரப்பா வழக்கில் உச்ச நீதிமன்றம் பறித்த அதிகாரத்தை மீண்டும் ஒன்றிய அரசு தக்க வைத்துக்கொள்ளும் செயலாகும்.

காலக்கெடுவற்ற சீராய்வு அதிகாரம்

ஏனைய திருத்தங்களை எல்லாம்விட மோசம், ஒன்றிய அரசுக்குக் காலக்கெடு ஏதுமின்றிக் கொடுக்கப்பட்டுள்ள சீராய்வு அதிகாரம். ஒன்றிய அரசின் சீராய்வு அதிகாரத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பதை இங்கே நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

1987-ல் பாளை சண்முகத்தின் லதா கிரியேஷன்ஸ் சார்பில், ‘காணிநிலம்’ என்ற படத்தை அருண்மொழி இயக்கினார். அந்தப் படத்துக்கு 13 வெட்டுகளுடன் 1.1.87 தேதியன்று தணிக்கைக் குழு ‘U’ சான்றிதழ் கொடுத்தது. அந்தப் படத்தில் ஒரு வசனம் வருகிறது. “முதலமைச்சரின் மனைவியின் காலில் போய் விழு. அவர்கள் மன்னித்தால்தான் உனக்கு வாய்ப்பு.” இந்த வசனத்துக்கு ஆட்சேபணையை மண்டலத் தணிக்கைக் குழு தெரிவிக்கவில்லை. ஆனாலும், ஒன்றிய அரசுக்கு அன்றைய ஆளுங்கட்சி பலத்த அழுத்தத்தைக் கொடுத்ததன் விளைவாக ஒன்றிய அரசு சினிமா தணிக்கைச் சட்டம் பிரிவு 6-ன் கீழ் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி சுயமாக சீராய்வு செய்து அந்த வசன வரிகளை நீக்குமாறு உத்திரவிட்டது (3.2.1988). இதை எதிர்த்து வழக்கு தொடுப்பதற்காக என்னை பாளை சண்முகம் ஆலோசனை கேட்டார். ஆனால், காலதாமதம் ஆகிவிடும் என்பதால் அந்த வசனம் நீக்கப்பட்டுப் படம் திரையிடப்பட்டது.

அடுத்த ஐந்தாண்டுகளில் நிலைமை மேலும் மோசம் ஆனது. ஆர்.கே.செல்வமணி தன்னுடைய ‘குற்றப்பத்திரிகை’ படத்தைத் தணிக்கைக்காக 31.12.1992-ல் அனுப்பி வைத்தார். ஆனால், கிட்டத்தட்ட ஓராண்டுக்குப் பிறகு ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் இருப்பதால் பொதுநலன் கருதி திரைப்படத்துக்குத் தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். திரைப்படச் சான்றிதழ் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்துக்கு மேல்முறையீடு செய்ததில் ஜுன் 1994-ல் பல வெட்டுகளுடன் வயதானவர்களுக்கு மட்டுமான ‘A’ சான்றிதழை அளித்தனர்.

திரைப்பட நிறுவனம் தீர்ப்பாயம் கூறிய வெட்டுகளை நிறைவேற்றிய சூழ்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசின் சான்றிதழ் வாரியம் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதை விசாரித்த இரு நீதிபதிகள் தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்துசெய்தனர். படத் தயாரிப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகியதில், ‘தீர்ப்பாயம் மறுபடியும் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தீரப்பாயத்தின் மூன்று உறுப்பினர்களின் தலைவர் (ஓய்வு பெற்ற நீதிபதி), ‘உரிய வெட்டுகளுடன் வயது வந்தவர்களுக்கான சான்றிதழ் கொடுக்கலாம்’ என்று கூறியும், மற்ற இரு உறுப்பினர்கள் தணிக்கைச் சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். மறுபடியும் படத் தயாரிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். 22.9.2005 தீர்ப்பின்படி தனி நீதிபதி மீண்டும் தீர்ப்பாயத்தின் அனைத்து உறுப்பினர்கள் அடங்கிய அமர்வு விசாரிக்க உத்திரவிட்டார்.

தீர்ப்பாயம் தனது 15.12.2005 உத்திரவின் பேரில் ‘A’ சான்றிதழ் கொடுத்துப் படத்தை வெளியிடலாம் என்று கூறியது. மறுபடியும் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பாயத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. அதை விசாரித்த தனி நீதிபதி, திரைப்படம் நடந்த சம்பவங்களை முறையாகப் பிரதிபலித்துள்ளது என்று கூறியதுடன், அவர் பங்குக்குப் படத்தில் சில வெட்டுக்களை நிறைவேற்றுமாறு கூறி அதன் பின்னர் தணிக்கைக் குழு படத்துக்குச் சான்றிதழ் வழங்க உத்திரவிட்டார். படத் தயாரிப்பாளரும் மீண்டும் ஒரு முறை நீதிமன்றம் கூறிய திருத்தங்களை செய்து வெளியிட முன்வந்தனர்.

நடுக்கம் உண்டாக்கும் செயல்பாடு

இந்தச் சூழ்நிலையில் மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்தது. அவ்வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.ஷாவும் நானும் இருந்த அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் விருப்பத்துக்கு இணங்க திரைப்படத்தைத் தனியார் திரையரங்கம் ஒன்றில் எங்களுக்குத் திரையிட்டுக் காட்டினர். ‘மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் கூறிய குறைகள் எவையும் சாரமற்றவை’ என்றும், திரைப்படத்தை 12 வருடங்களுக்குத் தாமதப்படுத்தியதற்கு அவர்களைக் குறைகூறியதுடன், திரைப்படம் எந்த விதத்திலும் வன்முறையைத் தூண்டவில்லை என்றும், நான்கு வாரத்தில் திரைப்படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழைக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டோம். இத்தனை முயற்சிகளுக்குப் பிறகுதான் ‘குற்றப்பத்திரிகை’ படம் திரையங்குகளுக்கு வந்தது. ஆனால், ஒரு மாமாங்கம் கழிந்த பின்னர் வரும் படத்துக்கு மக்கள் என்ன வரவேற்பைத் தருவார்கள்? நீதி பரிபாலனத்தில் நடந்த தாமதத்தில் படத் தயாரிப்பாளருக்குத்தான் எத்தனை நஷ்டம்!

ஆக, இந்தப் பின்னணிகளையெல்லாம் சேர்த்து வைத்துப் பார்த்தால்தான் இப்போதைய அரசு முன்வைக்கும் திருத்தங்களிலுள்ள அபாயம் புரியவரும். புதிய சட்டத் திருத்தத்தால் மீண்டும் ஒன்றிய அரசு சீராய்வு அதிகாரத்தைத் தன்னிடம் தக்க வைத்துக்கொண்டதுடன், தணிக்கை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தையும் கலைத்துவிட்டது பாஜக அரசு. அது மட்டுமின்றி மண்டலத் தணிக்கைக் குழுக்களில் அது பாஜகவினரைத் திணித்திருப்பதும், வெளியே அக்கட்சியினர் பேசிவருவதையும் சேர்த்துப் பார்த்தால், ‘₹ 2000’, ‘வர்த்தமானம்’ படங்களுக்கு ஏற்பட்ட கதியே விமர்சனப் பார்வையை முன்வைக்கும் படங்களுக்கு ஏற்படும் என்று தோன்றுகிறது. நடுக்கத்தை உண்டாக்கும் செயல்பாடு இது. இப்படிப்பட்ட கருத்துக் கட்டுப்பாடுகள் மூலம் ஊடகங்களைக் காவிமயப்படுத்தும் செயலை நாம் தடுக்கவில்லை என்றால், இனி ‘சம்பூர்ண ராமாயணம்’ போன்ற படங்களை மட்டுமே நாம் திரையில் காண முடியும்.

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.


1






பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

V B Ganesan   3 years ago

ஒரு திரைப்படத்தை உருவாக்க செலவழிக்கப்படும் பணம், நேரம், உழைப்பு ஆகியவற்றுக்குப் பின்பும் அரசின் கருத்தையே திணிக்க வற்புறுத்தும் தணிக்கை விதிமுறைகளைக் கொண்டு வேண்டுமென்றே இத்தகைய காலதாமதத்தை ஏற்படுத்தும் அரசு அமைப்புகளுக்கு நீதிமன்றங்கள் ஏன் தண்டம் விதிக்கக் கூடாது? இத்தகைய தாமதத்தால் போட்ட முதலீட்டை எடுக்க முடியாமல் நட்டம் அடையும் தயாரிப்பாளர்களுக்கு உரிய நட்ட ஈட்டை வழங்குவதாகவும் அது இருக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

udhaya kumar   3 years ago

well written.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

பரப்பும் உரிமைஅதிகரிக்கும் மன அழுத்தம்சமஸ் உதயநிதி ஸ்டாலின் அருஞ்சொல் கட்டுரையூனியன் பிரதேசம்இயற்கை உற்பத்திVATநீதிபதிகள்கருக்குழாய்இளம் வயது மாரடைப்புஜெகந்நாதரின் தேர்பெருநகரம்பெகஸஸ்பட்ஜெட் அருஞ்சொல்இந்திய ஜனநாயகம் எப்படி வீழ்கிறது?நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்நோக்கமும் தோற்றமும்ஜோ பைடன்சட்டப்பேரவை பொதுத் தேர்தல்சண்முகநாதன் கருணாநிதிதவல் புச்சிதம்பரம் கட்டுரைஉயிர்கள்காவிரி டெல்டாகலவிஅனுபல்லவிபிரதமர் உரைபஜாஜ் ஸ்கூட்டர்கள்நிதித் துறைதண்டல்ஜாபிட்ரோடா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!