சுதந்திரம் பெறுவதற்கு முன் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ முழக்கம் இல்லாத பேரணியே இந்தியாவில் அரிது. அந்த முழக்கத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் சொந்தக்காரர்கள் அல்ல. காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஊர்வலங்களிலும் அம்முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சிகளும், அதன் தொடர்புடைய வெகுஜன இயக்கங்களும் மட்டுமே அம்முழக்கத்தைப் பயன்படுத்தலாயின.
இவ்விரு வார்த்தைகளும் உருது மொழியிலிருந்து பெறப்பட்டது. இன்குலாப் என்றால் ‘புரட்சி’, ஜிந்தாபாத் என்றால் ‘வெல்க.’ 1921இல் தொழிற்சங்கத் தலைவர் மௌலானா அஸ்ரத் மொஹானிதான் இந்த முழக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தினார். ஜிந்தாபாத் எனும் சொல்லுக்கு நேர் எதிரான முழக்கம் முர்தாபாத். அந்த வார்த்தைக்குப் பொருள் ‘வீழ்க.’
பல வட மாநிலங்களில் நடைபெறும் கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் செல்ல நேரும்போதுதான் அங்கு நடைபெறும் பேரணிகளில் இவை சகஜமாக பயன்பட்டுவந்ததைப் பார்த்த தோழர்கள், தங்கள் ஊர் திரும்பிய பின் இங்கும் அம்முழக்கங்களை எழுப்ப ஆரம்பித்தனர்.
காம்ரேடுகள் இப்படி முழக்கங்கள் எழுப்புவதைப் பார்த்த இதர சிலரும் அம்முழக்கங்களை தங்களது பேரணிகளில் பயன்படுத்த ஆரம்பித்தனர். அதைப் பார்த்த சிலர் காம்ரேடுகளிடம் “அதென்னய்யா பகாளாபாத்?” என்று கேலி செய்வது உண்டு. இருப்பினும் ‘புரட்சி வெல்க’ என்ற முழக்கத்தை இன்றும் பேரணிகளில் கேட்கலாம். அம்முழக்கத்தை எழுப்பியதற்காகவே யாரும் அவர்கள் மீது வழக்கு தொடுத்ததில்லை. ஏனெனில், கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதோடு, ஒருவருடைய விருப்பத்தைக் கூறுவதனாலேயே அவர் ஆயுதம் ஏந்தி புரட்சியின் மூலம் அரசு இயந்திரத்தைக் கவிழ்த்துவிட முடியாது. அதிகபட்சம் அது அவருடைய ஆசையாக மட்டுமே இருக்கலாம். ஆசையை வெளிப்படுத்தியதனால் அவரை சிறையில் தள்ள முடியாது.
இந்தியாவும் புரட்சி முழக்கங்களும்
நக்ஸல்பாரி இயக்கத்தைத் துவக்கிய சாரு மஜும்தார் ‘வசந்தத்தின் இடிமுழக்கம்’ என்று ஒரு கட்டுரை வெளியிட்டதுடன், அதில் இந்தியப் புரட்சிக்கு தேதிகூட குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்படி ஏதும் நடைபெறவில்லை. அந்த இயக்கம் பிளவுபட்டதுடன், தடைசெய்யப்பட்ட இயக்கமாகவும் மாறியதுதான் மிச்சம். அவர்கள் மீது போடப்பட்ட வழக்கொன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஓ.சின்னப்ப ரெட்டி இவ்வாறு குறிப்பிட்டார்: “நக்ஸல்பாரிகளை சிலர் பிரெஞ்சு வீராங்கனை ஜோன் ஆஃப் ஆர்க் என்றும் கருதுவார்கள். சிலர் அவர்கள் ரத்தக் காட்டேரிகள் என்றும் கூறுவார்கள். இவையெல்லாம் அவரவர் வர்க்கம் சார்ந்த கணிப்புகளே.”
சமீபத்தில் சண்டீகர் விமான நிலையத்திற்கு சாஹித் பகத்சிங் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரை பிரதமர் மோடி சூட்டி மகிழ்ந்தார். ‘சாஹித்’ என்ற அந்த உருது சொல்லிற்கு தியாகி என்று பொருளாகும். புரட்சி வீரன் பகத்சிங், தான் 1928இல் எழுதிய கட்டுரையில் பிரதமர் நேருவைப் பற்றிக் கூறும்போது அவரை 'கிராந்திகாரி' என்று அழைத்தார். தற்போதைய ஆட்சியாளர்களால் எதற்கெடுத்தாலும் குறை கூறப்படும் மனிதராக ஆகிவிட்ட ஜவஹர்லால் நேருவை 100 ஆண்டுகளுக்கு முன்னரே ‘புரட்சிக்காரர்’ என்று பகத்சிங் அழைத்தது தெரியாது.
வட இந்தியாவில் ‘கிராந்தி’ (புரட்சி) என்ற அடைமொழியுடன் அரசியல் கட்சிகள் தங்களை அழைத்துக்கொள்கின்றனர். உதாரணத்திற்கு ‘பாரதீய கிராந்தி தல்’ (பிகேடி- BKD).
இந்திரா காந்தியின் சர்வாதிகாரத்தை எதிர்த்த காந்தியர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தனது இயக்கம் ‘முழுப் புரட்சி’க்காகச் செயல்படும் என்று அறிவித்தார். அது தவிர லட்சக்கணக்கான உழைக்கும் மக்கள் தங்களது பேரணிகளில் ‘புரட்சி வெல்க’ என்று முழக்கமிட்டுச் செல்கின்றனர். இதைப் பார்த்து உற்சாகமான மாணவர்களும் தங்களது முழக்கமாக ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்று சொல்வதைப் பார்க்கிறோம்.
திமுகவிலிருந்து விலகி புதிய கட்சியை ஆரம்பித்து அதுவரை புரட்சி நடிகர் என்று அழைக்கப்பட்ட எம்ஜிஆர் திடீரென்று ‘புரட்சித் தலைவர்’ என்று அழைக்கப்பட்டார். அவருடைய வாரிசாக பதவிக்கு வந்த ஜெயலலிதாவை ‘புரட்சித் தலைவி’ என்று அழைத்துவந்தனர். இன்று சென்னை ரயில் நிலையத்தின் பெயரே ‘புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. இவர்களெல்லாம் புரட்சி என்ற அடைமொழியைத் தங்களுக்குப் பட்டப்பெயர்களாக சேர்த்துக்கொண்டது அரசியல் வினோதங்களில் ஒன்று என்றாலும், இந்திய அரசியலில் இதுவெல்லாம் இயல்பு.
நர்மதா அணைக்கட்டு கட்டுவதனால் பழங்குடி மக்களுக்கு ஏற்படும் ஆபத்தை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்திய மேத்தா பட்கருக்கு சென்னையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் தலைமையேற்றுப் பேசிய நான், இஸ்திரிப் பெட்டியையும், தையல் இயந்திரத்தையும் இலவசமாக வழங்கியவர்களெல்லாம் புரட்சித் தலைவி என்று அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால், நீரில் நாற்பது நாள் உண்ணாவிரதம் இருந்த மேத்தா பட்கர் அல்லவோ புரட்சித் தலைவி என்று பேசினேன்.
நான் சட்டக் கல்லூரி விடுதியில் தங்கியிருக்கும்போது சில இடதுசாரி மாணவ நண்பர்கள் ஒருவரையொருவர் பார்க்கும்போது ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ என்றும், ‘செவ்வணக்கம்’ என்றும் விளிக்க ஆரம்பித்தார்கள். காரணம், நாம் ஏன் வெள்ளைக்காரன் பாணியில் முகமன் கூற வேண்டும் என்று விளக்கம் வேறு அளித்தார்கள்.
உமர் காலித் வழக்கின் கதை
முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவரும், ஜனநாயக மாணவர் சங்கத் தலைவருமான உமர் காலித் பிப்ரவரி 2020இல் டெல்லியில் உரையாற்றும் முன்னர், ‘இன்குலாபி சலாம்’, ‘கிராந்திகாரி இஸ்திக்பால்’ என்று முழக்கம் எழுப்பியதைக் குறித்து வைத்த காவல் துறை டெல்லியில் நடந்த கலவரத்துக்குப் பின்னால் அவரைக் கைது செய்தார்கள். குற்றப்பத்திரிகையில் அவருடைய ‘புரட்சி வெல்க’ என்ற முழக்கங்கள்தான் கலவரத்தைத் தூண்டியது என்று கூறினார்கள். அவரை தேச சட்ட விரோத சீர்குலைவு சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். இரண்டு ஆண்டுகள் ஆன பின்னரும் அவரால் பிணையில் வெளிவர முடியவில்லை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது பிணை வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதிகள் சித்தார்த் மிருதுல், ரஜினீஷ் பட்னாகர் என்ற இருவரும் அவரது பிணை மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள கருத்துகள்தான் விசித்திரமாக உள்ளது. அவர்கள் தங்களது தீர்ப்பில் உமர் காலித் ஆற்றிய உரையை ஆராய்ந்து அவர் எழுப்பிய ‘இன்குலாபி சலாம்’ என்ற வார்த்தைகள் சாதாரணமாகக் கருத முடியாது என்று குறிப்பிட்டனர்.
மேலும் அவர்கள் கூறியதாவது: “புரட்சி என்பது ரத்தமின்றி வராது. அப்படிப்பட்ட புரட்சியை அவர் கருதியிருந்தால் அவர் கூறிய ‘புரட்சி’ என்ற வார்த்தைக்கு முன்னால் ரத்தமின்றி என்று சேர்த்திருக்க வேண்டும். ஆனால், புரட்சி என்று கூறும்போது அதில் ரத்த சேதமும் கலந்திருக்கும் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.
புரட்சிக்காக அறைகூவல் விடுவது அக்கூட்டத்தில் இருப்பவரையும் தாண்டி விளைவுகளை விதைக்கும். பண்டித நேரு அவர்கள் புரட்சிக்காரர் என்று அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் பெற்றுத் தந்த சுதந்திரம் ரத்தப் புரட்சியினால் உருவானது அல்ல. பிரெஞ்சுப் புரட்சியில் ஈடுபட்ட ராபஸ்பியரின் புரட்சியையும், இந்தியா நடத்திய புரட்சியால் பெற்ற சுதந்திரத்தையும் உமர் காலித் ஒப்பிட்டுப் பார்த்திருக்க வேண்டும். எனவே, டெல்லி கலவரத்தில் அவருடைய இன்குலாபி சலாம் என்ற முழக்கத்திற்கு தாக்கம் இருந்திருக்கவில்லை என்று நாங்கள் நம்பவில்லை.”
இப்படி கருத்து தெரிவித்து உமர் காலித்தின் பிணை மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இருண்டதெல்லாம் பேய்
இந்தத் தீர்ப்பைப் பார்க்கும்போது, டெல்லி நீதிமன்றத்தின் அவ்விரு நீதிபதிகளைப் பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. புரட்சி என்ற வார்த்தையைக் கேட்டாலே சில பேருக்கு கிலி பிடித்துவிடுகிறது. சமீபத்தில் பீமாகோரேகான் வழக்கில் கைதுசெய்யப்பட்ட 16 பேரில் ஒருவரான அருட்தந்தை ஸ்டான்சுவாமிக்கு குவளையிலிருந்து தண்ணீர் பருகுவதற்கு உறிஞ்சான் ஒன்று கொடுக்க மறுத்தனர். அதே வழக்கில் கைதுசெய்யப்பட்ட நவ்லாகர் சிறையில் படிப்பதற்கு பி.ஜி.உட்ஹவுஸ் எழுதிய நகைச்சுவை நாவல் ஒன்றை சிறை அதிகாரிகள் தர மறுத்தனர். ஏனென்றால், அந்த நாவல் புரட்சிகரமான நாவலாக இருக்குமோ என்று அவர்களுக்கு சந்தேகம் வந்ததாம். ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.’
1963இல் ஆவடியில் காங்கிரஸ் நிறைவேற்றிய சோஷலிஸ பாணி சமுதாயம் அமைப்போம் என்ற தீர்மானத்தை விமர்சித்து அறிஞர் அண்ணா குறிப்பிட்டார்: “காகிதப்பூ மணக்காது. காங்கிரஸ் சோஷலிஸம் இனிக்காது.”
சர்க்கரை என்று ஒரு தாளில் எழுதினால் அந்த தாளுக்கு இனிப்பு வந்துவிடுமா? அதனால்தான் தமிழில் கூறுவார்கள்: “ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.”
இதையெல்லாம் அந்த நீதிபதிகளுக்கு யார் கூறுவார்கள்? (அ) உமர் காலித்தின் பிணை இன்குலாப் ஜிந்தாபாத் முழக்கம் வெற்றி பெற்ற பிறகுதானா?
தொடர்புடைய கட்டுரை
3
2
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Prabachandran 2 years ago
"இன்குலாப் என்பதன் பொருள் முற்போக்கான வளர்ச்சிக்கு மாறுவதற்கான விருப்பம் மற்றும் அதற்கான உணர்வு என்பதுதான். பழமையை விரும்பும் சக்திகள் மனித சமுதாயத்தை செயலின் மை என்கிற தவறான பாதைக்கு வழிகாட்டுவதுடன் சமுதாய வளர்ச்சி பாதைக்கு தடைக்கற்களை வைக்கின்றன.பழைய முறை நிரந்திரமாக நிலைத்திருக்கக்கூடாது என்பதும் புதிய முறைக்கு அது வழிவிட வேண்டும் என்பதும் அவசியம். இன்குலாப் ஜிந்தாபாத் என்று நாங்கள் கோஷம் எழுப்பும் போது இந்த குறிக்கோளைத்தான் நாங்கள் எங்கள் மனதில் வைத்திருக்கிறோம். இந்த நாட்டில் பொதுவுடைமை சிந்தனைக்கு நானோ வேறு யாரோ உயிர் கொடுக்கவில்லை.மாறாக நமது காலங்கள் மற்றும் சூழ்நிலைகள் நம் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவுதான் இது.இந்த கருத்துக்களை எங்கும் பரப்பிட நாங்கள் எளிய அளவில் முயற்சி செய்து இருக்கிறோம். இந்த பொறுப்பான பணியின் சுமையை நாம் ஏற்றுக் கொண்டிருப்பதால் அப்பணியை தொடர்ந்து நடத்தி நிறைவேற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். - பகத்சிங்
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 2 years ago
Umar Kalith's is yet another case that proves that the Indian courts are not free from prejudices on the basis of religion, class and caste.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 2 years ago
' ஏட்டுச்சுரைக்காய்...... படிப்பறிவை விட அனுபவ அறிவே சிறந்தது என்னும் பொருளை தருவதாக நினைத்துக்கொண்டு இருந்தேன்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.