இந்திய அரசு அறிவித்துள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் (IAS officers ) பணி மாற்றம் தொடர்பான விதி மாற்றங்கள், பல மாநிலங்களின் தரப்பில் இருந்தும் கடும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. இத்தகைய விதி மாற்றம் மாநிலங்களின் உரிமைகளிலும் செயல்பாட்டிலும் தலையிடுவதாகவும் மாநில அரசுகள் கருதுகின்றன. இந்த மாற்றத்தை தமிழ்நாடு, வங்கம், கேரளா உட்பட ஆறு மாநிலங்கள் இதுவரை வெளிப்படையாக எதிர்த்துள்ளன; ஜனநாயக அமைப்புகளும் பத்திரிகைகளும் கண்டித்துவருகின்றன என்றாலும், இந்த விஷயத்தின் தீவிரம் அணுகப்படும் விதத்தைக் காட்டிலும் அதிகம்.
பின்னணி
இந்திய குடிமைப் பணி சார்ந்த மூன்று முக்கிய சேவைகள் அனைத்திந்திய சேவை ( All Indian Service ) என்னும் பிரிவுக்குள் வரக் கூடியவை - இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS) மற்றும் இந்திய வனப் பணி (IFS). இந்தப் பணிகளுக்கு அதிகாரிகள், ஒன்றிய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு (UPSC) பயிற்றுவிக்கப்படுகிறார்கள். பின் அந்தந்த மாநிலங்களின் தேவைக்கு ஏற்ப ஒவ்வொரு வருடமும் பணி நியமிக்கப்படுவார்கள். இப்படி ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பணியில் அமர்த்தப்படுவதை 'கேடர்' (cadre) என்கிறார்கள் . தமிழ்நாட்டில் பணி நியமிக்கப்பட்ட அதிகாரியை 'தமிழ்நாடு கேடர்' என்பார்கள்.
இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளைக் குறிப்பிடும்போது, கூடவே அவர் எந்த பேட்ச், எந்த கேடர் என்பதையும் சேர்த்துக் குறிப்பிடுவதைப் பார்க்கலாம். பல அதிகாரிகள் அவரவர் கேடரிலேயே (அதாவது மாநிலத்தில்) தங்கள் மொத்தப் பதவிக் காலத்தையும், வெவ்வேறு பதவிகளில் கழிப்பார்கள். அதுபோல மாநிலத்தில் குறிப்பிட்ட காலம் பணி செய்து அனுபவம் பெற்ற மூத்த அதிகாரிகள் கூடுதல் அதிகாரம் கொண்ட ஒன்றிய அரசு மற்றும் ஒன்றிய அரசு அமைப்புகள் சார்ந்த பணிகளுக்கு என்று பணி மாற்றப்படுவார்கள்.
இந்தப் பணி மாற்றம் ஒன்றிய அரசும் மாநில அரசும் கலந்து ஆலோசித்து முடிவுசெய்யும் ஒன்றாகவே இதுவரை இருந்துவந்தது. ஒவ்வொரு வருடமும் அந்தந்த மாநிலத்தில் தகுதியும் ஆர்வமும் கொண்டோர் பெயர்ப் பட்டியலை (Offer list) மாநில அரசு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். மத்திய அரசு பல்வேறு மாநிலங்களில் இருந்து இது போன்ற பட்டியல்களைப் பெற்று அதை மேலும் பரிசீலித்து தேவையானவர்களை மத்திய அரசு பணிகளுக்கு ஏற்றுக்கொள்ளும். சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் அந்த மாநிலத்தின் விருப்பம் இல்லாமல் இது போன்ற பணி மாற்றங்கள் பொதுவாக நிகழாது.
புதிய மாற்றங்கள்
தற்போது ஒன்றிய அரசு உத்தேசித்திருக்கும் மாற்றம் இவ்வாறாக மாநிலத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்காக அதிகாரிகளை தன்னிச்சையாக மாற்றலாம் என்ற அதிகாரத்தை அவர்களுக்கு அளிக்கும் (இந்த மாற்றத்தை 'specific period' மற்றும் 'specific circumstances' என்று வேண்டுமென்றே விருப்பமானபடி பொருள் கொள்ளும் வண்ணம் தெளிவில்லாமல் விட்டிருக்கிறார்கள்). அந்தக் குறிப்பிட்ட தருணம் என்ன, அந்தக் கால வரையறை என்ன என்பதைத் தன் மனம் போனபடி ஒன்றிய அரசு முடிவு செய்வதற்கே இது வழி வகுக்கும்.
இந்திய அரசுப் பணிக்கு அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்தல், பயிற்றுவித்தல், எவ்வளவு பேரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவுசெய்தல், அவர்களை வெவ்வேறு மாநிலங்களில் பணி ஒதுக்குதல், அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தல், பணிக்காலத்தை நீட்டித்தல், ஒன்றிய அரசு நிர்வாகத்தில் உயர் பதவிகளுக்கான தேர்வுப் பட்டியல் தயாரித்தல் (Empanelment) என்று எல்லா விஷயங்களிலும் ஒன்றிய அரசே இறுதி அதிகாரம் கொண்டது. மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளை எந்தப் பதவியில் எங்கு அமர்த்துவது மாநிலத்துக்குள் அவர்களை எங்கு பணிமாற்றுது என்பதில் மட்டுமே மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகள்.
தற்போது ஒன்றிய அரசு உத்தேசிக்கும் விதி மாற்றம், மாநில அரசின் இந்த உரிமையிலும் கை வைப்பதாகவே அமையும். இது அமலுக்கு வந்தால் ஒன்றிய அரசு எந்த ஐஏஎஸ் அதிகாரியையும் எந்த நிமிடமும் மத்திய அரசு பணிகளுக்கு எடுத்துக்கொள்ளலாம், அதை ஆட்சேபிக்க மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இருக்காது. மேலும் இது அதிகாரிகளிடையே ஒன்றிய அரசுக்கு இயைந்து நடக்கும் மனநிலையை ஊக்குவிக்கும். ஒரு மாநிலத்தில், மாநில அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் ஏற்றுக்கொண்டு அதை அமல்படுத்த வேண்டிய நிலையில் இருக்கும் அதிகாரி, அது குறித்த மத்திய அரசு என்ன நினைக்குமோ என்னும் கவலைகொள்ளும் சூழலை இது உருவாக்கும். ஒன்றிய அரசு அளிக்கும் பணி மாற்றம் என்பது பாதகமான விளைவுகள்.
ஓர் உதாரணம் சொல்கிறேன். கீழடி விவகாரத்தில், அதை ஆரம்பித்து, முன்னெடுத்து மேற்பார்வையிட்டுவந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் எப்படி தேவையே இல்லாமல் தூக்கியடிக்கப்பட்டார் என்பதைப் பார்த்தோம். அந்தப் பணி மாற்றம் நிகழத் தேவையே இல்லாத சூழலில் நடந்தது. உயர் நீதிமன்றமே அவரை மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றுபடி கேட்டுக்கொண்டது. ஆனால் விதிகளின்படி, அந்த மாற்றத்துக்கு இடம் இருந்தது என்பதால் அதை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்த மாற்றலின் காரணமான கீழடி மூன்றாம் கட்ட ஆய்வில் தொய்வும் தாமதமும் ஏற்பட்டதை நாம் அறிவோம். அதன் பின் தமிழகத் தொல்லியல் துறையே இந்தப் பணியை ஏற்கும் நிலை வந்தது.
இந்திய அரசுப் பணியில் இப்படியான ஒரு விதி மாற்றம் அமலுக்கு வந்தால் ஒன்றிய அரசு முக்கியமான மாநில பணியில் ஈடுபட்டிருக்கும் யாரையும் எங்கும் மாற்றலாம். கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. மாநில அரசின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியதில்லை. மாநில நிர்வாகத்தில் இது தேவையில்லாத குழப்பத்தையும் நிலையற்ற தன்மையையும் உருவாக்கும். நமக்குக் கீழே வேலை பார்க்கும் ஒருவரை வேறு யாரோ ஒருவர் எந்நேரம் வேண்டுமானாலும் பணி மாற்றம் செய்யலாம் என்னும் நிலை இருந்தால் அவர் மனதளவில் யாருக்குக் கட்டுப்பட்டுச் செயல்படுவார்?
உண்மையான பிரச்சினை
இதை நியாயப்படுத்த ஒன்றிய அரசு சொல்லும் முக்கிய காரணம், மாநிலத்தில் இருந்து மத்திய பணிக்கு போதிய அளவு அதிகாரிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு மாநிலமும் இவ்வளவு பேரை மத்திய அரசு தொடர்பான பணிகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற தேவை உள்ளது என்கிறார்கள். மற்றொருபுறம் மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் அந்த அதிகாரிகளுக்கான தேவை இருப்பதாக சொல்கிறார்கள், குறிப்பாக அனுபவமிக்க அதிகாரிகளுக்கு.
இந்திய அளவில் பணி நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 6500, ஆனால், தற்சமயம் பணியில் இருப்போர் எண்ணிக்கை மொத்தமே 5100. இப்படித் தொடர்ந்து 1400-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பாமல் விடப்படுவது இந்தியா போன்ற வேகமாக வளரும் நாட்டுக்கு, அரசுத் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் தடைகளை ஏற்படுத்துகிறது. இந்திய ஆட்சிப் பணிக் காலியிடங்களில் அனைத்து இடங்களும் ஒவ்வோர் ஆண்டும் பூர்த்திசெய்யப்படுவதில்லை என்பதும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.
இவ்வாறான சூழலில் பணியில் சிறிது அனுபவம் பெற்ற அதிகாரிகளை ஒன்றிய பணிக்கு உடனே விட்டுக்கொடுப்பது மாநில அளவில் திட்டங்களை செயல்படுத்துவதில் பெரும் சுணக்கங்களை ஏற்படுத்தும் என்பதையும் நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம். இந்த சுணக்கம் எதோ ஒரு மாநிலத்துக்கானது மட்டும் அல்ல. பெரும்பாலான மாநிலங்கள் போதிய அளவு ஐஏஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிக்கு அனுப்ப முடிவதில்லை.
அதிகாரிகள் தரப்பிலும் ஒரு சாரார் இப்படி மத்திய அரசின் துறைகளில் சென்று பணி செய்ய விரும்புவதில்லை. மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகிப்போகும் சிலர் ஓரிரு வருடங்களிலேயே திரும்ப அனுப்படுவது அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படுவது, பதவி உயர்வில் வெளிப்படைத்தன்மை இல்லாதது போன்ற காரணங்களால் பல அதிகாரிகள் மத்திய அரசின் துறைகளில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டுவதில்லை. இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமும் தலைநகருக்கு நெருக்கமான மாநிலமுமாக உத்தர பிரதேசம்கூட 134 அதிகாரிகளை அனுப்ப வேண்டியதற்கு 44 அதிகாரிகளை மட்டுமே அனுப்ப முடிந்திருக்கிறது.
பொதுவாகவே இந்திய ஆட்சிப் பணியில் பதவி உயர்வுகளை நிர்வகிப்பது சார்ந்த சிக்கல் உள்ளது. மிக உயர் பதவிகள் என்று பார்க்கப்போனால் அவை ஒப்புநோக்கக் குறைவாகவே உள்ளன. எனவே புதியவர்களை பணியில் அமர்த்தி அனுபவமிக்க அதிகாரிகளை பதவி உயர்வளித்து மேலும் முக்கிய பொறுப்புகளுக்கு அனுப்புவதில் இது தடையாக இருக்கிறது. இதனால் இடைநிலைப் பதவிகளில் மிக அதிகமானோர் தேக்கம் கொள்ளும் நிலை உருவாகிறது.
இங்கு நம் முன் உள்ள சவால் சமகாலத்தையும் எதிர்காலத்ததையும் கணக்கில்கொண்டு, காலி பணியிடங்களை நிரப்புதல், பதவி உயர்வுகளை திறம்பட நிர்வகித்தல், உயர் பதவிகளை மேலும் விரிவாக்கி ஒழுங்கு (rationalise) செய்தல் போன்றவையே. இப்படி நிரப்ப வேண்டிய பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது தேவையில்லாமல் ஒரு சாதாரண நிர்வாக சிக்கலை பூதாகரமாக ஆக்குகிறது . பின் அதை சுட்டிக்காட்டி ஒன்றிய அரசு மேலும் மேலும் அதிகாரங்களை தன்வசமாக்கிக்கொள்கிறது.
பக்கவாட்டு பணி நுழைவு
ஒருபுறம் மாநிலத்தில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் வேண்டும் என்று அடித்துக்கொள்ளும் அரசு தான், மற்றொரு புறம் பக்கவாட்டு பணி நுழைவு (Lateral Entry) என்னும் வழிமுறை மூலம் யுபிஎஸ்ஸி பரீட்சை எழுதித் தேர்வாகாமல் தனியார் துறையில் இருந்து தேவையானவர்களை நேரடியாக ஆட்சிப் பணி பதவிக்கு எடுக்கிறது. போனவருடம் மூத்த பதவிகளான இணைச் செயலாளர், இயக்குனர் மற்றும் துணை இயக்குநர் தரப் பதவிகளுக்கு நேரடியாக தனியார் துறையில் இருந்து அதிகாரிகளை நியமித்துள்ளது. இப்படி செய்யும் நியமனங்களில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படாதது சட்டத்தை மீறும் செயல் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. போனவருடம் மட்டும் 31 மூத்த அதிகாரிகள் இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டுக்கு என்று அனுமதிக்கப்பட்ட ஐஏஎஸ் காலி இடங்கள் மொத்தம் 376. அதில் கிட்டத்தட்ட 300 சொச்சம் இடங்களுக்கே பணி நியமனம் நடந்துள்ளது. போன வருடம் இதில் இருந்து 10 அதிகாரிகள் மத்திய அரசு துறை பணிகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மத்திய அரசு எதிர்பார்ப்பது மொத்த அதிகாரிகளில் 40% (அதிகபட்சமாக) வரை மத்திய அரசு பணிகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று. அப்படிப் பார்த்தால் இருக்கும் முன்னூறு நபர்களில் 120 பேர்களை மத்திய அரசு பணிக்கு மாற்ற வேண்டும். இது நடைமுறையில் செயல்படுத்தக்கூடிய விஷயம் தானா என்று நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
மீண்டும் மீண்டும் இந்த அரசிடம் காணும் கூட்டாச்சிக்கு எதிரான அணுகுமுறையின் மற்றொரு வடிவம்தான் இந்த விதி மாற்றமும். ஜிஎஸ்டி நிலுவையில் இருந்து சமீபத்தில் முன்வைக்கப்பட்ட இந்திய துறைமுக சட்ட மசோதா 2022 வரை. இவை யாவும் யதேச்சையாக நடப்பதில்லை. இவை ஒவ்வொன்றிலும் மாநிலங்களில் உரிமையும் அதிகாரமும் எதோ வகையில் மெல்ல மெல்ல சுருக்கப்படுவதை நாம் கண்கூடாக காணலாம்.
ஒன்றிய அரசு முதலில் ஒரு பிரச்சினையை அடையாளப்படுத்துகிறது அல்லது அதை உருவாக்குகிறது. பின் அதை நிவர்த்திசெய்கிறேன் என்னும் கோணத்தில் மாநிலங்களின் அதிகாரத்தை, உரிமையை மெல்ல மெல்ல உருவி எடுக்கிறது. இது வெறும் அரசியல் மாற்றுக்கருத்து என்று நாம் பார்க்கக்கூடாது. இது ஜனநாயக கூட்டாட்சி தத்துவத்தையே மெல்ல முடக்கும் செயல். முழங்காலில் காயம் என்பதைக் காரணம் காட்டி மூளைக்கு அறுவைச் சிகிச்சை செய்வேன் என்னும் நிலைப்பாடு இது.
மாநில அரசுகளும் மூத்த இந்திய அரசு பணி அதிகாரிகளும் இந்த அணுகுமுறையில் உள்ள சமநிலையற்ற தன்மையை சுட்டிக்காட்டி இந்த சிக்கலின் உண்மையை காரணத்தை அடையாளப்படுத்தி அதை களைவதற்கான யோசனைகளையும் அணுகுமுறைகளையும் முன்வைக்க வேண்டும். இந்திய ஆட்சிப்பணி என்பது பொது நிர்வாகத்தின் முதுகெலும்பு, அரசுகள் பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் அதை செய்து முடிப்பது இந்த அதிகாரிகளே இதை கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
3
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.