கட்டுரை, அரசியல், வரலாறு, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

இஸ்ரேல்: யூதர்களைப் புரிந்துகொள்ளல்

கார்த்திக் வேலு
17 Oct 2023, 5:00 am
2

லகின் பெரிய விவகாரங்களில் ஒன்று இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல். இந்தப் பிரச்சினையின் ஆணி வேர் என்ன?  எப்போது இது ஆரம்பித்தது? எதை நோக்கி இது செல்லும்? இந்த விவகாரத்தைப் பின்னின்று இயக்கும் கரங்கள் எவை? இந்த வரலாற்றை ஐந்து அத்தியாயங்கள் கொண்ட தொடராக ‘அருஞ்சொல்’ வெளியிடுகிறது. ஒவ்வொரு கட்டுரையையும் தனித்த விஷயங்களில் கவனம் குவிக்கின்றன என்பதால், இந்தக் கட்டுரைகளைத் தனித்தும் வாசிக்கலாம்; தொடராகவும் வாசிக்கலாம்.  

ன்று இஸ்ரேலிலும் பாலஸ்தீனத்திலும் விழும் குண்டுகள், பல நூறாண்டுகளுக்குப் முன்னரே எங்கிருந்தோ ஏவப்பட்டுவிட்டன என்பதே உண்மை.

இஸ்ரேலை அறிய முதலில் யூத மதம் உருவாகிவந்த விதம் குறித்து அறிவது உதவியாக இருக்கும். வரலாற்றை பின்நோக்கிப் பார்க்கையில் மக்கள் - மதம் - தேசம் என்ற மூன்றும் எப்படி ஒன்றை ஒன்றைச் சார்ந்து வளர்ந்தன என்ற சித்திரமும் பிடிபடும்.  யூத மதம், யூதர்கள், யூதர்களுக்கான நாடு மூன்றுமே படிப்படியாக பரிணாமம் கொண்ட விஷயங்கள். 

யூத மதத்தின் பின்னணி

யூத மதம் சுமார் நான்காயிரம் ஆண்டுகள் பழமையான வேர்களைக் கொண்டது. அதேசமயம், வரலாற்றுப் பரிணாமத்தில் புறச்சூழல்களுக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொண்ட மதமும்கூட. 

ஆபிரகாமிய மதங்கள் என்று சொல்லப்படும் ஓரிறை (Monotheistic) நம்பிக்கை கொண்ட மதங்களில் முதலாவதாக உருவானது யூத மதம். இதற்குப் பின்னரே கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற பிற அபிரகாமிய மதங்கள் உருவாகிவந்தன. யூத மதத்தின் கிளையாக உருவாகி பின்னர் தனி மதமாக பிரிந்துவிட்டதே கிறிஸ்துவம்.  இஸ்லாம் அதற்கும் பின்னர் ஏழாம் நூற்றாண்டில்தான் உருவாகிறது. 

இன்று நாம் மத்திய கிழக்கு பகுதிகளில் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்றெல்லாம் குறிப்பிடும் மத்திய திரைகடலை ஒட்டிய நிலப் பகுதிகள் ‘லெவான்ட்’ (Levant) என்று அழைக்கப்படுகிறது. ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கு இருந்த ஒரே நில வழிப் பாதை லெவான்ட் பகுதியைத் தொட்டுத்தான் செல்லும்.

இந்த வழியாகவே ஆதிமனிதர்கள் உலகின் பிற இடங்களுக்குப் பரவ ஆரம்பித்தார்கள்.  எனவே, லெவான்ட் பகுதி மிகவும் வளமான, பல்வேறு இனமக்கள் கலந்து உறவாடும் களமாகவே வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டு இருந்திருக்கிறது. 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

இஸ்ரேலின் தோற்றம்

ஐரோப்பாவில் இந்த பகுதியில்தான் முதன்முதலில் விவசாயம் செய்யப்பட்டு, மக்கள் ஓரிடத்தில் தங்கி வாழும் சமூகங்கள் உருவாகியிருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் இங்கு வாழ்ந்த மக்களைக் ‘கேனனைட்ஸ்’ என்கிறார்கள்.  லெவான்ட் ஆப்பிரிக்காவில் இருந்து ஐரோப்பாவுக்கும், மத்திய கிழக்கு பகுதிக்குச் செல்லும் வணிகப் பாதையில் அமைந்திருந்தால் அங்கு சிறு சிறு வணிக நகரங்கள் தோன்றின.

இன்றைக்குச் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பகுதிகளை எகிப்து பேரரசு தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்தது. எகிப்து அப்போதே நல்ல வளர்ச்சி கண்ட நாகரிகமாக இருந்திருக்கிறது. எகிப்திய பிரமிடுகள் இதெல்லாம் நடப்பதற்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக ஆரம்பித்துவிட்டன என்பதை நாம் இங்கு நினைவில் கொள்ளலாம். 

முன்னர் சிறு சிறு வியாபார நகரங்களாக இருந்த பகுதிகள் இஸ்ரேல், ஜூடா உட்பட தனி நாடுகளாக வடிவெடுக்கின்றன. ஆபிரகாமின் வழிவந்த குலத்தந்தையான (Patriarch) யாகேபுவின் மற்றொரு பெயர்தான் இஸ்ரேல். அவருடைய 12 மகன்களின் வழிவந்த 12 குடிகளைத்தான் பூர்வ இஸ்ரேலியர்களாகப் புனித நூல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நாடுகளில் இருந்துவந்த பகுதிகளைத்தான் தோராயமாக தற்கால இஸ்ரேல் - பாலஸ்தீன நிலப்பரப்பு என்கிறோம்.

பைபிளைத் தவிர்த்து வரலாற்றுரீதியாக இஸ்ரேல் குறித்த முதல் குறிப்பு 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட எகிப்திய கல்வெட்டில் காணக் கிடைக்கிறது. லெவான்ட் பகுதியைச் சார்ந்த பலவேறு நாடுகளை எகிப்து வென்றதைச் சொல்லும் இந்தக் கல்வெட்டில் இஸ்ரேல் குறித்து முதல் குறிப்பே இப்படித்தான் வருகிறது, ‘இஸ்ரேல் இஸ் வேஸ்டட், பேர் ஆஃப் சீட்’ (Israel is wasted, bare of seed). அதன் பின் வந்த காலகட்டத்தில் (12C BCE) இந்தப் பகுதியின் மீது எகிப்தின் பிடி தளர ஆரம்பித்தது.

நட்சத்திர அடையாளம்

இதன் பிறகு மீண்டும் அனைத்துக் குலங்களையும் (11C BCE) டேவிட் (தாவீது) அரசனின் கீழ் ஒருங்கிணைகிறார்கள். இவரின் காலகட்டத்தில்தான் (10C BCE) ஜெருசலம் இஸ்ரேலின் தலைநகராகிறது. இவரின் பெயரால்தான் யூதர்களின் ‘ஸ்டார் ஆஃப் டேவிட்’ (Star of David) என்னும் புனிதக் குறியீடு வழங்கப்படுகிறது. இன்று நாம் இஸ்ரேலிய கொடியில் காணும் நட்சத்திர குறியீடு இதைச் சுட்டுவதே.

ஜெர்மனியில் யூத இன அழித்தொழிப்பின்போது யூதர்களைத் தனியே அடையாளப்படுத்திக்கொள்ள அவர்கள் தங்கள் உடையில் இந்த நட்சத்திர சின்னத்தைக் குத்திக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் இருந்தது. டேவிட்டின் மகனான சாலமனின் ஆட்சியில்தான் யூதர்களின் முதல் கோவில் கட்டப்படுகிறது.

இதற்கும் சில நூற்றாண்டுகள் (8C BCE) கழித்து பலம் வாய்ந்த அசிரியப் பேரரசு (தற்கால சிரியா) இந்தச் சிறுநாடுகளை தன்னுடன் இணைத்துக்கொண்டது. இந்த ஆக்கிரமிப்பை எதிர்க்க முனைந்த இஸ்ரேல் நாடு அழிக்கப்பட்டது. அங்கிருந்த மக்கள் ஜூடேயா நாட்டுக்குப் புலம்பெயர்ந்தார்கள். இதுவே யூதர்களின் முதல் புலப்பெயர்வு. இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தப் பகுதி பாபிலோனியர் (சமகால ஈராக்) ஆதிக்கத்தின் கீழ் வந்தது.

இந்தக் காலகட்டத்தில் ஜூடேயாவில்  இருக்கும் பெரும்பான்மை யூதர்கள் அங்கிருந்து பாபிலோனியாவுக்கு நாடு கடத்தப்படுகிறார்கள். ஜெருசலத்தில் யூதர்களின் அரசரான சாலமனால் கட்டப்பட்ட யூதர்களின் முதல் கோவில் (First Temple) இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. 

இது நடந்து ஒரு எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, பாரசீக அரசன் சைரஸ் (Cyrus) பாபிலோன் மீது போர் தொடுத்து அவர்களை வெல்கிறார். இந்த வெற்றிக்குப் பின் மீண்டும் யூதர்கள் ஜூடேயா நாடு திரும்புவதற்குப் பாரசீகர்கள் அனுமதிக்கிறார்கள். நாடு திரும்பிய மக்கள் (5C BCE) மீண்டும் தங்களது கோயிலைக் கட்டி எழுப்புகிறார்கள் (Second Temple).

இதன் பிறகு சுமார் ஒரு நூறாண்டு காலம் யூதர்களுக்குத் தங்களைத் தாங்களே ஆண்டுகொள்ளும் சுதந்திரம் கிட்டுகிறது. பிறகு மீண்டும் ஒரு படையெடுப்பு. இந்த முறை கிரேக்க அலெக்ஸாண்டர் பாரசீகத்தைக் கைப்பற்றுகிறார்.  எனவே, ஜூடேயா நாடும் அவர் ஆளுகையின் கீழ் வருகிறது. 

எஞ்சி இருக்கும் சுவர்

கிரேக்க ஆட்சியின்போது கிரேக்கர்களின் பல்லிறை (Polytheistic) மதமான ஹெலனிசத்துடன் சிறிது காலம் யூத மதம் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. சில நூற்றாண்டுகளுக்குப் யூதர்கள் மீண்டும் தனியே பிரிந்துவந்து, தங்களின் தனித்துவமான அடையாளத்தைத் தக்கவைத்துகொண்டார்கள். இதன் பிறகு ரோமப் பேரரசின் (1C BCE) அதிகாரத்தின் கீழ் யூதர்கள் வந்தார்கள்.

ரோமானிய ஆட்சியை யூதர்களின் கலகம் தோல்வியில் முடிந்தது. ரோம கவர்னரான டைடஸ் ஜெருசலத்தில் யூதர்கள் கட்டிய இரண்டாம் கோவிலையும் சூறையாடி, இடித்துத் தரைமட்டமாக்கினார். 

பலரும் காணொளிகளில் யூதர்கள் ஒரு பழைய சுவற்றின் முன் நின்று வழிபடுவதைப் பார்த்திருக்கலாம். இதை ‘வைலிங் வால்’ (wailing wall) என்கிறார்கள். இடிக்கப்பட்ட இரண்டாம் கோவிலின் எஞ்சி இருக்கும் சுவர்தான் அது. அதன் காரணமாகவே இது யூதர்களுக்கு மிகவும் புனிதம் வாய்ந்த இடமாகத் திகழ்கிறது. 

வைலிங் வால்

இடிக்கப்பட்ட இந்தக் கோயிலின் மீது ரோமர்கள் தங்களின் முதன்மைக் கடவுளான ஜூபிடருக்கு கோயில் கட்டுகிறார்கள். யூதர்கள் மத வழிபாடு செய்ய மத வரி விதிக்கப்படுகிறது. இதை எதிர்த்துக் கலகம் செய்த யூதர்கள் முடக்கப்படுகிறார்கள். வருடத்தில் ஒரு நாள் தவிர ஜெருசலேம் நகருக்குள்ளேயே அவர்கள் வர முடியாதவாறு தடை விதிக்கப்படுகிறார்கள். ‘வைலிங் வால்’ முழுமையாகவே மண்ணைக் கொட்டி  மூடி மறைக்கப்படுகிறது. கோயில் இடிப்பு மதரீதியாக யூத மரபில் பெரும் சோகமாக இன்றும் பார்க்கப்படுகிறது.

ரோமர்களில் ஆட்சிக் காலத்தில் அவர்கள்தான் இந்தப் பகுதியைச் 'சிரியா பலஸ்தீனா' என்று முதன்முதலாக குறிப்பிடுகிறார்கள். யூதர்களின் வரலாற்றுரீதியான எதிரிகளான பிலிஸ்தீனியர்களைக் குறிக்கும் இடமாக உத்தேசித்து இந்தப் பெயரை இடுகின்றனர். இதுவே பின்னர் ‘பாலஸ்தீனம்’ என்ற பெயராக உருவெடுக்கிறது (நாம் ஆங்கிலத்தில் பயன்படுத்தும் ‘பிலிஸ்தீன்’ (philistine) என்ற சொல்லும் இதிலிருந்து வந்ததுதான்).

யூத மதத்தின் பரிணாமம்!

இன்றைக்கும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே யூதர்களின் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு அவர்கள் பலமுறை தங்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழ்நிலையைப் பார்க்கிறோம். எகிப்தியர்கள், அசிரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள் என்று வரலாறு நெடுகிலும் ஒன்றிலிருந்து இன்னொன்றாக பல்வேறு பேரரசுகளின் ஆளுகையின் கீழ் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

இன்று நாம் பெரும் மதங்களாக கருதும் கிறிஸ்துவமும், இஸ்லாமும் உருவாகும் முன்னரே யூதர்களின் இந்த அலைக்கழிப்பு ஆரம்பித்துவிட்ட இந்த வரலாற்றுச் சித்திரம் இங்கு முக்கியமானது. 

யூத மதம் உருவாகிவந்த காலகட்டத்தில் உலகெங்கிலும் பல்வேறு பண்டைய மதங்களும் வழிபாட்டு முறைகளும் இருந்தன. எகிப்தில் பல்லிறை வழிபாடும் மிக வலுவாகவும் மிகச் செழிப்பாகவும் இருந்தது.  ஹெலனீய மதம் கிரேக்க சாம்ராஜ்ஜியம் முழுதும் பரவ வாய்ப்பு இருந்தது. அதேபோலதான் ரோமானியர்களின் பல்லிறை மதமும். 

மெசப்சோமிய பகுதிகளிலும் பல்வேறு பல்லிறை மதங்கள் இருந்தன. மிகப் பழமையான சுமேரிய நாகரீகம் யூத மத உருவாக்கத்தும் முந்தையது. உலகில் மிகப் பழமையான காவியமான ‘கில் காமேஷ்’ யூத மத உருவாக்கத்துக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதப்பட்டுவிட்டது. 

எகிப்தில் இன்று பெருபான்மை மதம் இஸ்லாம், மீதமுள்ள 10% மக்கள்தொகை மரபுவாத கிறிஸ்துவர்கள். ரோம், கிரேக்க நாடுகளில் இன்று கத்தோலிகர்களே பெரும்பான்மையினர். சிரியா பலரும் இஸ்லாமிய நாடு என்று புரிந்துவைத்திருக்கிறார்கள். நிஜத்தில் அசிரியர்களுக்கு அவர்களுடைய தனித்துவமான மதம், வழிபாட்டு முறை எல்லாம் இருந்தன. ஆனால், இன்று இந்த மதங்கள் எல்லாம் எங்கே? 

இந்த சாம்ராஜ்ஜியங்கள் எல்லாம் ஒரு காலகட்டத்தில் பந்தாடிய யூத மதம் எப்படி இன்றும் தாக்கு பிடித்து நிற்கிறது? 

யூதர்கள் முதல் இரண்டாயிரம் ஆண்டுகளில் எதிர்கொண்ட சவால்களும் ஒடுக்குமுறைகளும் அடுத்த இரண்டாயிரம் ஆண்டுகளில் யூத மதம் கொண்ட பரிணாமத்திலும் அதன் ஆச்சாரவாத நோக்கையும் வடிவமைத்ததிலும் பெரும் பங்காற்றி இருப்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ளலாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரை

உக்ரைன்: நியாயங்களும் நிலைப்பாடுகளும்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கார்த்திக் வேலு

கார்த்திக் வேலு, எழுத்தாளர். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வசிக்கிறார். அரசுத் திட்டங்கள், வெளியுறவுத் துறை விவகாரங்கள் தொடர்பில் எழுதுகிறார். தொடர்புக்கு: writerkayvee@gmail.com


7

1





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Sridharan    9 months ago

மிக அருமையான பதிவு

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Amos Gilbert   9 months ago

இச்சிறப்பான வரலாற்றுத்தொகுப்புக்காக ஆசிரியருக்கு நன்றி! அபிரகாமின் வழிவந்த குலத்தந்தையான (Patriarch) யாகேபுவின் என்பது யாக்கோபு(Jacob) ஆகும்.

Reply 6 0

Login / Create an account to add a comment / reply.

2000 ரூபாய் நோட்டுகல்லூரிகள்அகரம்வரி நிர்வாக முறைபழங்குடிக் குழுக்கள்வகுப்பறைக்குள் வகுப்புவாதம்நாத்திகர்காலச்சுவடுராகுல் நடைப்பயணம் இதுவரை சாதித்தது என்ன?355வது கூறுஎழுத்துத் தேர்வுயூஎஸ்எஸ்டிகல்வி மற்றும் சுகாதாரம்பாரம்பரியம்g.kuppusamyநிறமும் ஏறுகளும்சிக்கனமான நுகர்வுதன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்எஸ்பிஐநுகர்பொருள்இலக்கும் அதை அடைவதற்கான வழிகளும்!ஏன் எதற்கு எப்படி?தகவல்தொடர்புபிட்காயின்ஆரோக்கிய பிளேட்வனப் பகுதிஜவாஹர்லால் நேரு கட்டுரைபார்ப்பனர் பார்ப்பனரல்லாதோர்ஆதீனம்பா.இரஞ்சித்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!