கட்டுரை, கலை, கலாச்சாரம் 5 நிமிட வாசிப்பு

அப்துல் காதிரும் தியாகராய கீர்த்தனைகளும்

கோம்பை எஸ் அன்வர்
14 Jan 2023, 5:00 am
0

திருவையாறில் 176வது தியாகராய ஆராதனா நடந்து முடிந்த இவ்வேளையில், கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தியாகராய கீர்த்தனைகளைப் பாடி இசைத்தட்டுக்களாக வெளியிட்ட எஸ்.எம்.அப்துல் காதிரை மனம் வியந்து பார்க்கிறது. எஸ்.எம்.ஏ.காதிர் சாதாரண பாடகர் அல்ல, தமிழ்நாட்டின் முக்கிய சூஃபிஸ்தலமான நாகூர் தர்காவின் ஆஸ்தான வித்வான்.

தர்காவின் ஆஸ்தான வித்வான்கள்

பல நூற்றாண்டுகளாக மதங்களைக் கடந்து மன்னர்கள் மற்றும் மக்களின் பேராதரவைப் பெற்ற இறை நேசர் அடங்கியிருக்கும் முக்கிய நகரம் நாகூர். இறை நேசர் சாகுல் ஹமீது பாதுஷா நாயகம் அவர்கள் இசையை பெரிதும் விரும்பினார்கள் என்பர். நாகூர் தர்காவின் நுழைவுவாயில் முன்னர் அமைந்திருக்கும், தஞ்சை மராத்திய மன்னர் பிரதாப சிங் (1739 - 1763) கட்டிய வானுயர்ந்த மினாராவுக்கு இருபுறமும் இருக்கும் மேடைகளில் இன்றளவும் அதிகாலை தொழுகை முடிந்தவுடன் மேளவாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மடங்களைப் போல், கிட்டத்தட்ட 400 வருடங்களுக்கும் பழமையான நாகூர் தர்காவும் இசை, இன்னபிற கலைகளையும் ஆதரித்துவந்துள்ளது. பல இசை மேதைகள் தர்காவின் ஆஸ்தான வித்வான்களாகவும் பணியாற்றியுள்ளனர். உஸ்தாத் கௌஸ் மியானைப் பின்தொடர்ந்து 1940களில் தர்காவின் ஆஸ்தான வித்வானான உஸ்தாத் தாவூத் மியான் இந்துஸ்தானியிலும், கர்நாடக இசையிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அதிலும் கர்நாடக இசையில் இன்று பெரும்பாலும் காணாமல் போய்விட்ட ஹார்மோனியத்தைப் பக்கவாத்தியமாக வாசிக்கத் தெரிந்தவர்.

எஸ்.எம்.அப்துல் காதிர் 

சிங்கப்பூரில் துணிக் கடை, நாகூரில் விவசாய நிலங்கள் என்று வசதியான குடும்பத்தில் பிறந்த எஸ்.எம்.ஏ.காதிரை பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் ஹார்மோனியம் கற்றுக்கொள்ளட்டுமே என்று மச்சான் முகம்மது அலி, உஸ்தாத் தாவுத் மியனிடம் அழைத்துச் செல்ல, காதரின் இசைப் பயணம் தொடங்கியது. தாவுத் மியனின் மற்றொரு சிறந்த மாணவர் எஸ்.ஜி.கிட்டப்பா.

ஹனீஃபாவின் சமகாலத்தவர் காதிர்

ஹார்மோனியம் வாசிப்பதைவிட இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையைப் பாடுவதில் காதிருக்கு இருந்த ஆர்வத்தை சரிவரக் கண்டறிந்து, அவரைத் தேர்ந்த இசைக் கலைஞராக உருவாக்கிய பெருமை உஸ்தாத் தாவுத் மியானைச் சாரும். இரு இசை மரபுகளையும் கற்றிருந்தாலும் அவரது உஸ்தாதின் விருப்பத்துக்கு இணங்கி பெரும்பாலும் கர்நாடக இசையில் கீர்த்தனைகள் பாடுவதில் காதிர் ஆர்வம் காட்டினார். உஸ்தாதின் மறைவினை அடுத்து, 1952இல் நாகூர் தர்காவின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்ட எஸ்.எம்.ஏ.காதிர் 2014இல் இறக்கும் வரை அந்தப் பதவியை அலங்கரித்தவர்.

அப்துல் காதிரின் கிட்டத்தட்ட சமகாலத்திய, நாகூரைச் சார்ந்த மற்றொரு இசை பிரபலம் நாமெல்லாம் நன்கு அறிந்த இசை முரசு நாகூர் இ.எம்.ஹனீஃபா ஆகும். ஹனீஃபா திராவிட இயக்கத்தின் எழுச்சிக் குரல் என்றால், ஆரவாரமில்லாமல், ஆனால் அழுத்தமாக ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் நாகூர் காரியதரிசியாக செயல்பட்டவர் காதிர். இருப்பினும் இருவரும் நண்பர்கள் மட்டுமல்லாது, ஹனீஃபா சிறிது காலம் காதிரிடம் கர்நாடக இசையின் அடிப்படைகளையும் பயின்று, அவ்வப்போது ஆலோசனைகளையும் பெறுவது உண்டு. ஊர், உலகம் எல்லாம் சென்று கச்சேரி செய்த வெண்கலக் குரலுக்கு சொந்தக்காரரான ஹனீஃபா, தன் திருமணத்தில் கச்சேரி செய்யுமாறு கேட்டுக்கொண்டது, அவரால் பெரிதும் மதிக்கப்பட்ட, கர்நாடக சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ.காதிர் அவர்களை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதையும் வாசியுங்கள்... 25 நிமிட வாசிப்பு

ஹார்மோனியத்தின் கதை

பழ.அதியமான் 31 Oct 2021

“தினமும் வாப்பா (தந்தை) பல மணி நேரங்கள் வீட்டிலேயே சாதகம் செய்து கீர்த்தனைகளை மெருகேற்றிக்கொள்வார்” என்கிறார் காதிரின் மூத்த மகன் நூர் சாதிக். வருடா வருடம் இறை நேசரின் கந்தூரி நிகழ்வில் பிறை 6 அன்று இரவு, நாகூர் தர்காவினுள் அமைந்திருக்கும் அம்மா சாகிப் ஒலியுல்லா அடக்கவிடத்திற்கு எதிராக அமர்ந்து, பல நூற்றாண்டுக்கு முன்னர் இயற்றப்பட்ட தமிழ் இஸ்லாமிய காவியங்களிலிருந்து உருவாக்கப்பட்ட கீர்த்தனைகளைப் பாடுவது காதிரின் வழக்கம். உதாரணமாக “17ஆம் நூற்றாண்டின் இறுதியில் உமறுபுலவரால் இயற்றப்பட்ட நபிகள் நாயகத்தின் வரலாற்றை விவரிக்கும் சீறாப்புராணத்தை 19ஆம் நூற்றாண்டில் கோட்டாரைச் சார்ந்த புலவர் செய்யது அபூபக்கர் கீர்த்தனைகளாக்கினார்" என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக்கழக பேராசிரியர் தேவேஷ் சோனேஜி. அந்தக் கீர்த்தனைகளோடு குணங்குடி மஸ்தான் சாகிபு, ஆரிபு நாயகம், காசிம் புலவரின் திருப்புகழ், நாகூர் கவிஞர்களின் பாடல்கள் என்று அவரின் பாடல்கள் அமைந்திருக்கும். காதிரின் சேவைக்காக “தர்கா நிர்வாகம் அளிக்கும் 101 ரூபாயையும் பெரும் மரியாதையையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்வார் வாப்பா” என்கிறார் நூர் சாதிக். 

நாகூர் ஹனீஃபா வீட்டு புதுமனை புகு விழாவில் பேரறிஞர் அண்ணாவுடன் எஸ்.எம்.ஏ.காதிர், நாகூர்  ஹனீஃபா

காதிரின் இசைத்தட்டுகள்

தர்கா மட்டுமல்லாது காதிர் கோயில்கள், வேறு பல இடங்களில் கச்சேரிகள் செய்தும், இசைத்தட்டுகள் வெளியிட்டும் உள்ளார். 1952இல் எஸ்.எம்.ஏ.காதிர் வெளியிட்ட முதல் இசைத்தட்டு “என் முகம் பாருமையா நாகூர் மீரான்” ஆகும். அதனையடுத்து காசிம் புலவரின் திருப்புகழ், குணங்குடி மஸ்தான் சாகிபு என்று பல இஸ்லாமிய கீர்த்தனைகளைக் காதர் இசைத்தட்டுகளாக வெளியிட்டுள்ளார். அவரது குணகரமருள் என்ற கானடா ராகத்தில் இயற்றப்பட்ட பாடலுக்கு வயலின் வாசித்தவர் பிரபல இசைக் கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன். 

காதிர் பாடிய 15 இசைத்தட்டுக்கள் பெரும்பாலும் தமிழ் இஸ்லாமியக் கீர்த்தனைகளாக இருப்பினும், சில தமிழ் இந்துக் கீர்த்தனைகளோடு அவர் இரண்டு தியாகராயர் கீர்த்தனைகளையும் பாடியுள்ளார் என்பது சுவராசியமானது. “பைரவி ராகத்தில் ஆதி தாளத்தில் இவர் பாடிய ‘சேது லார’ என்ற பாடல் ஓர் இஸ்லாமிய இசைக் கலைஞர் பாடிப் பதிவுசெய்த தியாகராசர் கீர்த்தனை என்ற பெருமையைத் தட்டிச் சென்றது” என்கிறார் நாகூரைச் சார்ந்த எழுத்தாளர் அப்துல் கையூம். இசைத் தட்டுக்காக, பந்துவரளி ராகத்தில் ஆதி தாளத்தில் பாடிய மற்றொரு தியாகராய கீர்த்தனை ‘வாடேரா’ ஆகும்.

இசை நிகழ்ச்சியில் தனது முதன்மை சீடர் இசைமணி எம்.எம்.யூசுப் உடன் எஸ்.எம்.ஏ.காதிர்

பன்மைத்துவ மரபின் உதாரணம்

இவற்றை இசைத்தட்டுக்களாக வெளியிட முற்பட்டபோது “அவருடைய மதத்தை முன்னிறுத்தி சிறிது சலசலப்பு உருவானது. எதிர்ப்பாளர்களைச் சட்டரீதியாக சந்திக்கத் தயார் என்று காதர் துணிவுடன் களத்தில் இறங்க, அவை இரண்டும் ஹெச்எம்வி (HMV) நிறுவன வெளியீடுகளாக வெளிவந்தன” என்கிறார் புதுக் கல்லூரி பேராசிரியர் முரளி அரூபன்.

இருப்பினும், ஒரு நாகூர் தர்கா வித்வான் தியாகராயர் கீர்த்தனைகளைக் பாடுவதில் ஆர்வம் காட்டியது ஏன்? என்ற கேள்வி எழாமல் இல்லை. “அந்தக் காலகட்டத்தில் தமிழனாக இருந்தாலும், தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினால்தான் ஒருவரை சிறந்த வித்வானாக ஏற்றுக்கொண்டபடியால், எஸ்.எம்.ஏ.காதிர் கர்நாடக இசையில், தான் யாருக்கும் சளைத்தவரில்லை என்று உணர்த்துவதற்காக பாடியிருக்க வேண்டும்” என்கிறார் தமிழ் இசை ஆய்வாளர் அறிஞர் நா மம்மது.

மனிதர்கள் அனைவரையும் சாதி, மத பாகுபாடின்றி அரவணைத்துச் செல்லும் தன் ஆன்மீக குருநாதர் சாகுல் ஹமீது வழியில் தன்னையும் ஒரு கலைஞனாக காதிர் அடையாளம் கண்டார் என்று புரிந்துகொள்ளலாம். அத்தோடு எஸ்.எம்.அப்துல் காதிரின் இசை என்பது மதங்களைக் கடந்த இந்திய, தமிழ் பன்மைத்துவ மரபின் சிறந்த உதாரணமாகக் கருதலாம்.

புகைப்பட உதவி: நூர் சாதிக்  

 

தொடர்புடைய கட்டுரை

ஹார்மோனியத்தின் கதை
தவிலுக்கு ஒரு சரியாசனம் தந்த ஷண்முகசுந்தரம் பிள்ளை

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கோம்பை எஸ் அன்வர்

கோம்பை அன்வர், வரலாற்று ஆய்வாளர். ஆவணப்பட இயக்குநர். தொடர்புக்கு: anvars@gmail.com


3






அமித் ஷாவின் கேள்விகள்அரசியல் நகர்வு‘குடி அரசு’ ஏடுதமிழ்க் கொடி1232 கி.மீ.பொதுச் சுடுகாடுமார்க்ஸிய ஜிகாத்2024: யாருக்கு வெற்றி?செய்தித் தொலைக்காட்சிகள்கட்டமைப்பு வரைபடம்சமஸ் புதிய தலைமுறைஇது சாதி ஒதுக்கீடு!அப்பாபொது முடக்கம்அன்வர் ராஜா சமஸ் பேட்டிவிவசாய அமைப்புகள்யி ஷெங் லியான் கட்டுரைஇந்திய மருத்துவமுறைஇதய வலிஇரைப்பைப் புண்வாக்குச்சாவடிசாதி உணர்வுநோயாளிசிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு!சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்இந்திய விவசாயம்நெடில்புரட்சிகர சிந்தனைசமஸ் - நர்த்தகி நடராஜ்தோள்பட்டை வலி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!