பிரிட்டன் அரசக் குலத்தின் பெரிய நிகழ்வுகள் செய்தியாகும்போதெல்லாம் ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஆபே’ எனும் சொல்லை நாம் கேட்க முடியும். லண்டனில் உள்ள இந்த ஆலயம் உலகப் பிரசித்திப் பெற்றது. இங்கிலாந்தில் வசிக்கும் ஆங்கிலிகன் கிறிஸ்தவர்களின் ‘தாய் ஆலயம்’ என்று இதைக் குறிப்பிடுவார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பிரிட்டன் அரச, அரசியர் முடிசூட்டு நிகழ்வு இங்குதான் மேற்கொள்ளப்படுவதால், அதிகார மையத்துக்கு மிகவும் நெருக்கமானது.
சென்னையிலும் அப்படி ஒரு ‘வெஸ்ட்மினிஸ்டர் ஆபே’ இருக்கிறது. அதாவது, ‘ஈஸ்டர்ன் வெஸ்ட்மினிஸ்டர் ஆபே’. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்திருக்கும் ‘புனித மரியாள்’ (St. Mary's) ஆலயம்தான் அது. இங்கிருக்கும் புராட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் ‘தாய் ஆலயம்’ இது.
இந்த ஆலயம் கட்டப்பட்டதிலிருந்து கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுநர்கள், அதிகாரிகள் என்று அதிகார மையம் வழிபடும் தலமாகவும் இருந்ததாலும், மேலும் சில ஒற்றுமைகளினாலும், இது காலப்போக்கில் ‘கிழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஆபே’ எனும் பெயரை அது பெற்றது.
முக்கியமான ஆவணப் படம்
342 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம் தமிழக, நவீன இந்திய வரலாற்றைக் கட்டமைத்த, நம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய பல வரலாற்று ஆளுமைகள் வழிபடும் தலமாகவும் இருந்துள்ள இந்த ஆலயம் குறித்து ஓர் அருமையான ஆவணப் படம் சமீபத்தில் வெளிவந்திருக்கிறது. ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஆபே ஆப் தி ஈஸ்ட்’ என்ற அந்தப் படம் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்தில் 342 ஆண்டுகள் வரலாற்றைச் சொல்லும் அரிய முயற்சி.
இந்தியாவுடனான கடல்வழி வணிகத்துக்காக ஐரோப்பியர்கள் இடையே நடைபெற்ற போட்டியும், அதன் விளைவாக பிரான்சிஸ் டே சென்னையில் 1639இல் வந்து இறங்கியதிலிருந்தும் படம் தொடங்குகிறது. வணிகத்துக்காக வந்திறங்கிய, 41 வருடங்களுக்குப் பின்னர்தான் ஸ்ட்ரெய்ன்ஷாம் மாஸ்டர் என்ற ஏஜென்ட் / ஆளுநர் முயற்சியால் 1680, அக்டோபர் 28இல் புனித ஜார்ஜ் கோட்டையினுள் ‘புனித மரியாள் ஆலயம்’ அர்ப்பணிக்கப்பட்டது.
லண்டனில் இருந்த கம்பெனியின் இயக்குநர்கள், வணிகத்திற்காகச் சென்ற இடத்தில் மத நடவடிக்கைகளை ஊக்குவிக்கக் கூடாது என்று அப்போது நிலைப்பாடு கொண்டிருந்தமையால், அவர்கள் அறியா வண்ணம் ‘ஸ்ட்ரெய்னஷாம் மாஸ்டர்’ புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்த நிர்வாகக் குழுவினரிடம் பணம் வசூலித்து, இரண்டு ஆண்டுகளில் புனித மரியாள் ஆலயத்தைக் கட்டி முடித்திருக்கிறார்.
ஓல்லாந்தாருக்கும் (Dutch) ஆங்கிலேயருக்கும் இடையே நிலவிய கடுமையான வணிகப் போட்டி, ஐரோப்பாவைத் தாண்டி அவர்கள் கால் பதித்திருந்த காலனிகளில், உக்கிரமான கடல் போராகவும் மாறிய காலகட்டத்தில்தான் ஆலயம் கட்டப்பட்டது. ஆகவே கப்பலில் இருந்து வீசப்படும் குண்டுகளைத் தாங்கும் திறன் கொண்டதாக ஆலயத்தின் சுவர்களும், குறிப்பாக மேற்கூரையும் வடிவமைக்கப்பட்டன. கட்டி முடிக்கப்பட்ட சிறிது காலத்தில், செய்தி தெரிந்ததாலோ என்னவோ மாஸ்டர் லண்டனுக்குத் திரும்ப அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஆளுநர் எலிஹூ யேல்
புனித மரியாள் ஆலயம் கட்டப்பட்டவுடன் நடந்த முதல் திருமணம் ‘எலிஹூ யேல்’ உடையது. அவர் காத்தரின் என்ற விதவையை மறுமணம் புரிந்தார். எலிஹூ யேல் கொடுத்த நன்கொடை கொண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘யேல் கல்லூரி’தான், பின்னர் புகழ் பெற்ற யேல் பல்கலைக்கழகமாக உருவானது என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. அவ்வளவாக அறியப்படாத செய்தி என்னவென்றால், புனித மேரி தேவாலயத்துடன் இணைந்து சென்னையில் மருத்துவமனை கட்டுவதற்கும் ஆளுநர் யேல் உதவினார் என்பது ஆகும். அந்த மருத்துவமனைதான் இன்று ‘ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை’ என்ற பெயரில் விரிவடைந்திருக்கிறது.
ஆளுநர் யேல் கல்லூரி நிறுவிடவும், மருத்துவமனை கட்டிடவும் உதவினாலும், இன்னொரு பக்கம் முகலாயர்களால் தடைசெய்யபப்ட்ட, மனிதாபிமானமற்ற அடிமைகள் வியாபாரத்தில் (Slave Trade) பணம் சம்பாதித்தார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உண்டு. அதையும் இந்த ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.
இப்படிப் பல்வேறு கோணங்களிலும், பாரபட்சமில்லாமல் ஆலயத்தையும், ஆலயத்தோடு தொடர்புடைய மனிதர்களையும், ‘புனித மரியாள்’ ஆலயத்தில் ஆயராக (2011-2017) பணிபுரிந்த அருள்திரு. ஜே.கிருபா லில்லி எலிசபெத் கவனமாக, எழுத்தின் மூலம் ஆவணப்படுத்தியுள்ளார்.
ஆலயப் பதிவேடுகள், ஆலயத்தின் தரையில் பதிக்கப்பட்டுள்ள கல்லறைக் கற்கள், உட்சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள அழகிய பளிங்கு நினைவுச் சிற்பங்கள், ஓவியங்கள் என்று பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் ஆவணப்படம் நகர்கிறது. அதோடு நின்றுவிடாமல் மசூலிப்பட்டினம், கல்கத்தா, பாம்பே, சூரத், தஞ்சாவூர் என்று பல்வேறு இந்திய நகரங்களுக்கும் பயணித்து, ஆலயத்துடன் தொடர்புடைய கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுமைகளின் தாக்கத்தை புரிந்துகொள்ள வரலாற்று ஆய்வாளர்களிடமும், அறிஞர்களிடமும் உரையாடுகிறது.
முந்தைய வரலாற்றுக் காலகட்டத்தை, திரையில், அதுவும் பெரிதும் நிதி வசதி இல்லாத ஆவணப்படத்தில் காட்சிப்படுத்துவது எளிதல்ல. அத்தகைய சிக்கலை ஒரு சுவராஸ்யமான யுக்தி மூலம் இப்படத்தின் இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் அணுகியுள்ளார்.
ஆளுநர்கள் யேல், ராபர்ட் கிளைவ், பிகட், ஆகியோருடன் சர் ஐயர் கூட், அருட்பணியாளர்கள் சீகன் பால்க், ஸ்வார்ட்ஸ் போன்ற வரலாற்று நாயகர்களைச் சிறிய களிமண் பொம்மைகளாக வடிவமைத்து, வர்ணம் பூசி, அவர்கள் தோன்றும் காட்சி பின்னணி அரங்கையும் அதற்கேற்றாற்போல் வடிவமைத்து, நேர்த்தியாகப் படமாக்கி உள்ளார் ரஃபீக் இஸ்மாயில். வரலாற்று ஆளுமைகளைக் களிமண் பொம்மைகளாக தத்ரூபமாக வடிவமைத்த கலை இயக்குநர் கதிரவனும் நம் பாராட்டுக்குரியவர் ஆகிறார்.
ராபர்ட் கிளைவ்
1744இல் பெருங்கனவுடன் மதராஸ் வந்தடைந்த ராபர்ட் கிளைவ், கம்பெனி ராணுவத்தில் சேர விரும்பி, அது கைகூடாமல் போக, வேறு வழியின்றி கோட்டையில் எழுத்தராகப் (Writer) பணிபுரியலானார். விரக்தியில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று, அதுவும் தோல்வியுற, பின்னர் அவர், தன் நண்பரின் தங்கை மார்கரெட் மாஸ்கலினை மணம் புரிந்தது, வங்காளத்தில் பிளாசி போரில் நவாப் சிராஜ் உத்தவுலாவை வெற்றி வாகை சூடியது என்று அனைத்தையும் களிமண் பொம்மைகள் மூலமாக காட்சிகளாக நகர்த்தியுள்ளனர். இதற்கு நீல் செபாஸ்டியனின் பின்னணி இசை உயிர் கொடுத்திருக்கிறது.
முக்கியமான இன்னொரு விஷயம், வரலாற்று ஆளுமைகள் குறித்த ஓவியங்களும், சிற்பங்களும் இருப்பின், அவற்றையும் முறையாகப் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக விவசாய நிலங்களில் இருந்து வரி வசூல் செய்யும் ‘ரயத்துவாரி முறை’யை அறிமுகப்படுத்திய, ராயலசீமா விவசாயிகளால் ‘மண்ரோலப்பா’ என்று அன்புடன் அழைக்கப்படும் தாமஸ் மன்றோவின் வரலாறு, ஓவியங்களுடனும், மவுன்ட் சாலையில் குதிரை மேல் அமர்ந்திருக்கும் சிற்பத்தையும் கொண்டும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மன்றோ எடுத்த முயற்சிதான் பின்னர் பிரசிடென்சி கல்லூரியாக உருவெடுத்தது என்பதையும் நினைவுகூர்கிறது இந்த ஆவணப்படம்.
படம் ஆலயத்தின் உட்சுவர்களில் பதிந்திருக்கும் அழகிய பளிங்கு நினைவுச் சின்னங்களைப் பற்றி பேசும்போதுதான் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் அமைந்திருக்கும் ‘புனித மரியாள்’ ஆலயத்தை ‘கிழக்கு வெஸ்ட்மின்ஸ்டர் ஆபே’ என்று அழைப்பதற்கான முழு அர்த்தமும் நமக்குத் தெளிவாகின்றது. இங்குள்ள பல சிற்பங்கள் லண்டனில் உள்ள ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஆபே’வுக்குச் சிற்பங்களை வடிவமைத்த ஜான் பேகன் ஜூனியர், ஜான் பிளக்ஸ்மான் ஆகியோர்களால் செதுக்கப்பட்டவை.
பிரிமேசனரியும் ஆலயமும்
அதோடு ஆவணப் படம் மற்றொரு சுவராஸ்யமான, ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமையையும் நமக்குச் சுட்டிக்காட்டுகின்றது. ஃப்ரிமேசனரி (Freemasonry) என்ற மதங்களைக் கடந்த, இறை நம்பிக்கையாளர்களை ஒன்றிணைக்கும், கிட்டத்தட்ட ரகசிய சடங்குகளுடன் செயல்படக்கூடிய அமைப்பு, பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பினும், 18ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா, ஆசியா என்று வெகுவாகப் பரவ ஆரம்பித்தது.
இந்த அமைப்பின் உறுப்பினர்களாக மன்னர்கள், பிரபுக்கள், கலைஞர்கள், மதகுருமார்கள் என்று பலதரப்பட்ட மக்கள் இருந்திருக்கின்றர். ஆற்காடு நவாப் உம்தத்துல் உம்ராகூட இதன் உறுப்பினர். இங்கிலாந்து மன்னர், கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள், ஆளுநர்கள் மற்றும் புனித மரியாள் ஆலயத்தில் ஆயராகப் பணியாற்றிய ரிச்சர்ட் ஹால் கெர் போன்றோர் அதன் அங்கத்தினர்களாக இருந்தனர். ஆகவே ‘வெஸ்ட்மின்ஸ்டர் ஆபே’யில் சில சிற்பங்களில் காணப்படும் ஃப்ரிமேஷனரி குறியீடுகள் சென்னை புனித மரியாள் ஆலயச் சிற்பங்கள் சிலவற்றிலும் காணப்படுகின்றது. இது போன்று கடந்த காலத்தை ஒளிவு மறைவின்றி பேசுவது இந்த ஆவணப்படத்தின் சிறப்பு.
புனித மரியாள் ஆலயமும் தமிழும்
1716இல், ஆங்கிலேயர் ஆட்சியில், ‘மலபார் பாடசாலை’ என வேப்பேரியில் தொடங்கப்பட்ட முதல் தமிழ்ப் பள்ளியின் மேற்பார்வை ஆயராக இருந்த வில்லியம் ஸ்டீஃபன்சன் புனித மரியாள் ஆலயத்தின் ஆயரும் ஆவார். 1779இல்கூட மலபார் மொழி என்று ஐரோப்பியர்கள் இடையே தமிழ் அறியப்பட்ட காலத்தில், ‘எ மலபார் இங்கிலீஷ் டிக்ஷனரி’ எனும் தமிழ் - ஆங்கில அகராதியை உருவாக்கிய பெருமை உதவி ஆயராக இருந்த பாப்ரிசியசைச் (Fabricius) சாரும்.
திருச்சபை அங்கத்தினராக இருந்த நத்தானியல் எட்வர்ட் கிண்டெர்ஸ்லி திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயற்சித்த முன்னோடிகளில் ஒருவர். இருப்பினும், 1896இல் ஆயர் சி.ஹெச். பெல்லி புனித மரியாள் ஆலயத்தில் தமிழ் வழிபாடு (Service) நடத்த முயற்சி செய்ய, அது இந்தியா சுதந்திரம் பெற்று 2012இல்தான் நடைமுறைக்கு வந்தது.
இவ்வாறு புனித மரியாள் ஆலயமும் அதன் தொடர்புடைய வரலாற்று ஆளுமைகள், கல்வி முறை, மருத்துவம், போன்ற எண்ணற்ற தமிழக - இந்திய சமூகத்திற்கான பங்களிப்புகளை ஒன்றன் பின் ஒன்றாக ஆவணப்படம் அழகாக, அலுக்காமல் அடுக்கிச் செல்கின்றது.
தென்னிந்திய திருச்சபையின் சென்னைப் பேராயர் பேரருள்திரு. ஜே.ஜார்ஜ் ஸ்டீபன் ஊக்குவிப்புடன், ‘கட்டியக்காரி புரொடக்சன்ஸ்’ சார்பில் வெளிவந்திருக்கும் இந்த ஆவணப்படம், நமது வரலாறு குறித்த புரிதலை, மேலும் விரிவாக்குகின்றது. இன்றோடு (அக்டோபர் 28, 2022) வரலாற்று சிறப்புமிக்க, புனித மரியாள் ஆலயம் சென்னையில் அர்ப்பணிக்கப்பட்டு சரியாக 342 வருடங்கள் ஆகின்றது!
படங்கள் உதவி: அருள்திரு. ஜே.கிருபா லில்லி எலிசபெத்
1
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
ஓரு திருத்தம் : //செயின்ட் ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்திருக்கும் ‘புனித மரியாள்’ (St. Mary's) ஆலயம்தான் அது. இங்கிருக்கும் புராட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் ‘தாய் ஆலயம்’ இது// Protestant never worship mary..
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.