பேட்டி, இலக்கியம், புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு

கோவை நூலகம் ஏன் மூடப்படுகிறது? தியாகராஜன் பேட்டி

ச.ச.சிவசங்கர்
24 Jun 2023, 5:00 am
0

கோவையின் அடையாளங்களில் ஒன்று தியாகு நூலகம். பல்லாண்டு காலப் பராமரிப்பின் வெளிப்பாடாய்  அரிதினும் அரிதான பல புத்தகங்களைச் சேமித்து வைத்திருக்கிறார் தியாகராஜன். அடிப்படையில் ஒரு தேர்ந்த வாசகரான இவர் புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பதிலும் சேகரிப்பதிலும் ரசனை கொண்டவர். ‘உங்கள் குழந்தை உங்களுக்கான பரிசு, அவர்களுக்கு வாசிப்பு எனும் கலையை பரிசளியுங்கள்’ எனும் செய்தியைத் தன் நூலகச் செயல்பாட்டின் வழியே மக்களிடம் கொண்டுசெல்பவர். விரைவில் இந்த நூலகம் மூடப்படவிருக்கிறது என்ற செய்தி கோவையைத் தாண்டியும் தமிழகம் முழுவதும் பரவிய சூழலில், தியாகராஜனைப் பேட்டி காணச் சென்றேன். ஆழ்ந்த துக்கம் தொனிக்கப் பேசலானார்.  

நீங்கள் நூலகத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?

நான் இந்தத் துறைக்கு வருவதற்குக் காரணம் என் அப்பா பெருமாள்சாமிதான். அவர் நடத்திய நூலகத்தின் வழியாகத்தான் எனக்குப் புத்தகங்கள் அறிமுகமாகின. சிறு வயதிலிருந்தே புத்தகங்களுடன் பயணித்தாலும், நூலக நிர்வாகத்தை  என்னுடைய பணியாக எடுத்துச் செய்வேன் என்று நினைக்கவில்லை. நான் 1977 – 1980இல் பிஎஸ்ஜி கல்லூரியில் என் பட்டயப் படிப்பை முடித்தேன். பிறகு வங்கி தேர்வுக்காக தயாராகிக்கொண்டிருந்தேன். அன்று வேலை அவ்வளவு எளிதாகக் கிடைக்காது. அப்போது அப்பா உடல் நலம் பாதிக்கப்பட்டு மூன்று மாத காலம் ஓய்வில் இருந்தபோது நூலகத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு என்னிடம் வந்தது. அந்த இடைப்பட்ட காலத்தில் நூலகத்தின் கட்டமைப்பையே மாற்றிவிட்டேன். புதிய புதிய புத்தகங்கள், வரவு செலவு உள்பட அனைத்தையும் செம்மைப்படுத்தினேன்.

நான் நூலகத்தை நிர்வகித்த விதத்தைப் பார்த்த என் அப்பா ஆச்சரியப்பட்டார். “நீ ஏன் வெளிய வேலை தேடணும்? இதையே பாரு” என்று ‘தியாகு நூலகம்’ என்ற பெயரில் தனியாக ஒரு புத்தக நிலையத்தை வைத்துக்கொடுத்தார். 1980ஆம் ஆண்டு ‘தியாகு நூலகம்’ தொடங்கப்பட்டது. இப்படித்தான் இந்தத் துறைக்குள் வந்தேன்.

அப்படியென்றால் உங்கள் அப்பாவுக்கும் இதே துறைதான், இல்லையா? அவர் எப்படி இதற்குள் வந்தார்? அவர் காலத்தில் நடத்துவது அவ்வளவு எளிதல்லவே?

ஆமாம்! நிச்சயமாக எளிதான காரியம் அல்ல. அப்பாவுக்குச் சொந்த ஊர் அன்னூர் பக்கத்தில் ஒரு கிராமம். மூன்றாம் வகுப்பு வரை திண்ணை பள்ளிக்கூடத்தில் படித்தவர்தான். தொழில் நிமித்தமாக கோயம்புத்தூர் வந்தவர் ஒரு பெட்டிக் கடையை தொடங்கினார். அந்தப் பெட்டிக் கடையில் மற்ற பொருள்களுடன் புத்தகத்தையும் விற்பனைக்கு வைத்தார். அது படிப்படியாக வளர்ந்து, பிறகு நூலகம் ஒன்றை உருவாக்கினார். கிராமப் பகுதிகளுகெல்லாம் சைக்கிளில் புத்தகங்களைக் கொண்டுசென்று அனைவரும் வாசிப்பதற்கான சூழலை ஏற்படுத்தினார். புத்தகங்கள் மீது கொள்ளைப் பிரியம் அவருக்கு. 1960இல் தொடங்கி 1987 வரை ‘எக்ஸலென்ட் புக் சென்டர்’ என்ற பெயரில் ஒரு நூலகத்தை நடத்திவந்தார். அப்பாவிடமிருந்து நூலக வேலையைக் கற்றுக்கொண்டாலும், நானும் மேம்படுத்திக்கொண்டேன். முக்கியமாக, நூலகம் என்பது ஓர் அறிவு இயக்கம்; வெறுமனே பணம் சார்ந்து இயங்கும் துறை அல்ல இது எனும் புரிதல் முக்கியமானதாக இருந்தது.

புதுச்சேரி ஃபிரெஞ்ச் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த கண்ணன் தமிழில் வெளியாகியிருக்கும் நூல்களில் முதல் பதிப்புகளைச் சேகரித்து, அதை அவருடைய ஆய்வுப் பணியின் ஒரு பகுதியாக டிஜிட்டலைஸ் செய்து ஒரு நூலகமாக அமைத்திருக்கிறார் இல்லையா? அவருடைய நூலகத்துக்கு என் நூலகத்தில் இருந்து மட்டும் 2,000க்கும் அதிகமான முதல் பதிப்பு புத்தகங்கள் சென்றிருக்கிறது. அடுத்த பல நூறாண்டுகளுக்கு உயிர்ப்புடன் அந்நூல்கள் இருக்கும்; பல்லாயிரக்கணக்கானோர் இதனால் பயனடைவர்; அந்தப் பெரும் பணியில் என் சிறு பங்களிப்பும் உண்டு; இப்படியான  மகிழ்ச்சி தரும் பணிகள் - பங்களிப்புகள் பல என் வாழ்வில் நடந்திருக்கின்றன. இதற்கெல்லாம் உத்வேகம் அப்பா தந்ததுதான்.

அரசு நூலகங்கள், கல்லூரி நூலகங்கள் இடையே தனியார் நூலகங்களுக்கு எத்தகைய இடம் நம் சமூகத்தில் இருந்தது? 

நிச்சயமாக அன்றைக்கு ஒரு நல்ல இடம் இருந்தது. அரசு அல்லது கல்லூரி நிர்வாகங்கள் நடத்தும் நூலகங்களில் ஒரு புதிய புத்தகம் வந்தடைய ஆகும் தாமதம் இங்கே நிகழாது. நல்ல புத்தகங்கள் என்றால், சுடச்சுட வந்த வேகத்தில் வாங்கி வாசகர்கள் பார்வைக்கு வைத்துவிடுவோம். புத்தகங்களில் எல்லா வகைமைகளும் இருக்கும்; உதாரணமாக, அரசை விமர்சிக்கும் எத்தனை நூல்கள் அரசு அல்லது கல்வி நிலையங்களில் உள்ள நூலகங்களில் இருக்கும்? எங்களிடம் இருக்கும். இங்கு வரும் வாசகர் ஒருவரின் முதல் சந்திப்பிலேயே அவருக்கு பிடித்தமான வகைமை என்ன என்பதைக் கண்டுபிடித்துவிடுவது என் இயல்பு. அப்படியாக, வாசகர்களின் ருசி அறிந்து அவரவர் விருப்பத்துக்கேற்ப புத்தகங்களைப் பரிமாறுவோம். 

நூலகத்தைத் தொடங்கும்போது உறுப்பினர் சந்தா 10 ரூபாய். இப்போது 1000 ரூபாய். ஐந்தாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். நூலகத்தை மூடும் செய்தி அறிந்து பலரும் அழைத்தார்கள். கவலைப்பட்டார்கள். ஆனால், ஒருவர்கூட தங்கள் உறுப்பினர் உரிமத்தை விலக்கிக்கொள்ளவில்லை. நூலகம் மூடப்படும் செய்தி அறிந்து எழுத்தாளர் ராஜேஷ் குமார் வந்தார். தனது தொடக்கக் கால புத்தகங்களை தேடி எடுத்துக்கொண்டார். மிகுந்த மகிழ்ச்சியோடு சென்றார். இந்த மகிழ்ச்சிக்கு எதுவுமே ஈடில்லை. பழைய பதிப்புகள் என்பது நம் பொக்கிஷம். இது நூலகம் என்பதற்கு அப்பால் மனதுக்கு நெருக்கமான இடம். இது ஒவ்வொரு வாசகரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் மிகையில்லை. அதுதான் இந்த நூலகம் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நின்றதற்குச் சான்று.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

இதற்குத்தான் ஜெயித்தீர்களா ஜெயலலிதா?

சமஸ் | Samas 22 Sep 2021

நூலகத்தை மூட வேண்டும் என்ற திடீர் முடிவு ஏன்?

இது திடீர் முடிவல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இதுபற்றிய யோசனை இருந்துகொண்டுதான் இருந்தது. 2000த்துக்கு முன்பு புத்தகங்கள்தான் பொழுதுபோக்கு. அப்போது வாசகர்கள் அதிகம் இருந்தனர். வாசிப்புப் பழக்கமும் பரவலாக இருந்தது. இங்கே ஆர்.எஸ்.புரத்தில் இருக்கும் முக்கிய வீதிகளில், வீதிக்கு குறைந்தது பத்து பேர் என் வாசகர்கள் இருந்தனர். உண்மையில் 1980 முதல் 2000 வரை வாசிப்புக் கலாச்சாரத்தின் ‘பொற்காலம்’ என்றுதான் சொல்ல வேண்டும். அதன் பிறகு வந்த தொழிநுட்ப வளர்ச்சி அந்தப் போக்கை மாற்றி அமைத்து.

குறிப்பாக கரோனா காலம் நூலகத்துக்கு எதிர்மறைத் தாக்கத்தையே ஏற்படுத்தியது. ஒரு நாளைக்கு 25 முதல் 30 வாசகர்கள் வரை வந்துகொண்டிருந்த நூலகத்தில் இரண்டு பேர் மூன்று பேர் மட்டுமே வந்தார்கள். நூலகத்துக்குச் சொந்த கட்டிடம் இல்லை. பொருளாதாரத்திலும் சுணக்கம் ஏற்பட்டது. வாடகையும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் நூலகத்தை நடத்துவது கேள்விக்குறி ஆனது. மனம் ஒப்பவில்லை என்றாலும், இந்தக் கடினமான முடிவை எடுக்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகியது. என் காலம் வரையிலும் இந்த நூலகத்தை நடத்த வேண்டும் என்பதே திட்டம். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போனது. என்ன செய்வது கால மாற்றத்தை நாம் ஏற்றுக்கொள்ளதான் வேண்டும்.

இந்தப் பாரம்பரியமான நூலகத்தை எடுத்து நடத்த அரசு உள்பட யாருமே முன்வரவில்லையா?

இல்லை! நான் எல்லாத் திசைகளிலும் முயன்று பார்த்தேன். எதுவுமே எடுபடவில்லை. சரி, இதை நம் வாசகர்களிடமே சேர்த்துவிடலாம் என்று முடிவெடுத்தோம். பிறகு நூல்கள் விற்பனைக்கான அறிவிப்பை ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். அன்றும், இன்றும் வாசகர்கள் என்னை ஏமாற்றவே இல்லை. அனைவரும் அந்த அளவுக்கு ஆதரவு கொடுத்தார்கள். இந்தச் செய்தி அறிந்து வருபவர்கள் அவரவர்களுக்கு விருப்பமான புத்தகங்களை அள்ளிச் செல்கிறார்கள். ஒரு பள்ளிக்கு 10,000 சிறார் நூல்களைக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். புத்தகங்கள் நல்ல வாசகர்களிடம் சென்று சேர்வதில் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி. 

சரி, ஒரு வாசகராக இந்தப் புத்தகங்களில் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்தால், எந்தப் புத்தகங்களை எடுத்துக்கொள்வீர்கள்? 

தி.ஜானகிராமனின் ‘மோக முள்’ ராபர்ட் ஜேமஸ் வாலரின் ‘த பிரிட்ஜெஸ் ஆஃப் மேடிசன் கௌன்டி (The Bridges of Madison County). இந்த இரண்டு புத்தகங்களை மட்டுமே எடுத்துக்கொண்டேன். இவை இரண்டுமே என்னளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவை. 

சரி, ஜூன் 30க்கு பிறகு உங்கள் அடுத்த திட்டம்?  

அதை யோசிக்கவில்லை. யோசிக்கவே முடியவில்லை! 

 

நூலகத்தில் உள்ள புத்தகங்களைச் சலுகை விலையில் வாங்க தியாகு நூலகத்தை அணுகலாம்:

தொடர்புக்கு:

செல்: 9443395895
தொலைபேசி: 0422 2456895

முகவரி: 

32, முதல் தளம், 
கேப்டன் பழனிசாமி லேஅவுட், 
தடாகம் சாலை, ஆர்.எஸ்.புரம், 
கோயம்புத்தூர் – 641 002.

இதற்குத்தான் ஜெயித்தீர்களா ஜெயலலிதா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ச.ச.சிவசங்கர்

ச.ச.சிவசங்கர், பத்திரிகையாளர்.


2


1




குகி மக்கள் கூட்டணிநெல்சன் மண்டேலாஅவட்டைகிளாம்பாக்கம் ஏன் கிந்தனார்களே?அபர்ணா கார்த்திகேயன்ஸ்வாஹிலிநாராயண் ரானேமனிதவளத் துறைகுஜராத் சாயல்தொங்கு பாலம்டாக்கா மருத்துவக் கல்லூரிசண்முகநாதன் சமஸ் பேட்டிகதைபாசிகர்சான் வைலிஅரபுவாக்காளர்கள்நார்சிஸ்டுகளின் இருண்ட பக்கம்மத நம்பிக்கைசத்தியாகிரகம்அரிசி ஆலைநாடு பிளவுபடாமல் காக்கப்படுவது அவசியம்பொருளாதார வளர்ச்சியின் பொற்காலம்வெறுப்பரசியல்அமுல் 75புத்தக அட்டைஹார்னிமன்பெண்களின் அட்ராசிட்டிமக்களாட்சிக்கு நன்மை உதயநிதிகளின் தலைமைகிரிக்கெட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!