கலை, இலக்கியம் 6 நிமிட வாசிப்பு
கதையைக் கச்சிதமாக முடிக்க வேண்டிய தேவை இல்லை: லிடியா டேவிஸ் பேட்டி
கரோனா காலகட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பலரும் குறுங்கதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்: இதற்கு விதை போட்டவர்களில் ஒருவர் லிடியா டேவிஸ். ‘அது எங்கள் நாயாக இருந்திருக்கக் கூடும். ஆனால், அது எங்கள் நாய் இல்லை. ஆகவே, அது எங்களைப் பார்த்துக் குரைக்கிறது’ என்பதுபோல ஆங்கிலத்தில் பல ஒரு வரிக் கதைகளை எழுதியவர். மேன் புக்கர் சர்வதேச விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றவர். மார்செல் ப்ருஸ்த், கஸ்தவ் ஃப்ளொபெர் உள்ளிட்டோரின் படைப்புகளை பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் லிடியா டேவிஸ். அவரது பேட்டிகளின் முக்கியமான பகுதி மட்டும், 'அருஞ்சொல்' வாசகர்களுக்காக இங்கே…
நன்றாக எழுதுவதற்கு நீளமாக எழுதத் தேவையில்லை என்பதை நீங்கள் எப்போது உணர்ந்தீர்கள்?
1973-ம் ஆண்டின் இலையுதிர்கால நாள் ஒன்றில்தான் என்பதை என்னால் துல்லியமாகக் கூறிவிட முடியும். அப்போது எனக்கு 26 வயது. ரஸல் எட்ஸனின் சிறுகதைகளை அல்லது வசனகவிதைகளைப் படித்துக்கொண்டிருந்தேன். ஏதோ ஒரு காரணத்தால் அவற்றால் நான் சுண்டி இழுக்கப்பட்டேன். “இவற்றைப் படிக்க வேடிக்கையாகவும், உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்திலும், சுவாரஸ்யமாகவும் இருக்கிறது, நானும் இவற்றைப் போல எழுத வேண்மென்று விரும்புகிறேன்” என்று நினைத்தேன். ஆகவே, என்னதான் நடக்கும் என்பதைப் பார்க்கவே, தினமும் மிகவும் சிறிய சிறுகதைகள் இரண்டை எழுதும் சவாலை எனக்கு நானே ஏற்படுத்திக்கொண்டேன்.
‘கான்ட் அண்டு வோன்ட்’ கதையில் வருவதுபோல் சுருக்கவடிவச் சொற்களைப் (contratctions) பயன்படுத்தியதற்காக உங்களுக்குப் பரிசுகள் மறுக்கப்பட்டிருக்கிறதா?
அப்படி நடந்திருந்தால் வேடிக்கையாக இருந்திருக்கும். அந்தக் கதை எனக்கு வந்த ஒரு கனவு. அதனை ரொம்ப நல்ல கனவு என்று நான் நினைத்ததால் கதையாக எழுதினேன்.
ஒரு கதை எப்போது முடிகிறது என்பதை எப்படி அறிவீர்கள்?
ஒரு கதையின் மையக் கரு எவ்வளவு பெரிது, அதற்கு எவ்வளவு இடம் தேவைப்படும், மிக முக்கியமாக அது பிறருடைய ஆர்வத்தை எவ்வளவு தூரம் தக்கவைக்கும் என்பதையெல்லாம் பற்றிய ஒரு உணர்வு அந்தக் கதையின் தொடக்கத்திலேயே எனக்கு இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு கதை எனக்கு இரண்டு தெரிவுகளை வழங்கும்போது அவற்றுள் எதையாவது ஒன்றை நான் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்போதுதான் அது எனக்கு ஒரு பிரச்சினையாக சில சமயங்களில் ஆகிவிடும்.
எழுத்து உங்களுக்கு சலிப்பேற்படுத்துமா?
சலிப்பேற்படுத்தினாலும் அதுவே கடந்துவிடும். அதாவது, ஒரு கதையின் போக்கில், வருத்தத் தெரிவிக்கும் தொனியில், “சரி, சில சமயம் என்னுடைய சொந்தச் சிந்தனைகளாலேயேகூட நான் களைப்படைகிறேன்” என்று நான் நினைத்துக்கொள்வது உண்டு; ஆக, நம் மனது வெறுமையை உணரும்போது உண்மையிலே ஒரு தியான நிலைக்குள் செல்வதற்கு நம்மால் இயல வேண்டும். அப்படி முடிந்தால் நன்றாக இருக்கும். அந்த வெறுமை நிலை ரொம்ப நேரம் நீடிக்காது. தற்காலிகமானதுதான்.
உங்களின் ‘பிளைண்டு டேட்’ வெறுமனே தற்கூற்றுக் கதையாக இருந்திருக்க முடியும்; ஆனால், அதில் கதைசொல்லி தனது தோழி சொல்லும் கதையை, அந்தக் கதையில் கிட்டத்தட்ட எந்தக் குறுக்கீடும் செய்யாமல் கேட்டுக்கொண்டிருப்பாள். அதேபோல், ‘பிரேக் இட் டவுன்’ கதையில் கதையைத் தொடங்கிவைக்கும் ‘அவன்’ என்ற படர்க்கைக் கதைசொல்லி அதற்குப் பிறகு திரும்ப கதைக்குள் வருவதேயில்லை. எப்படி இந்த முடிவுகளை மேற்கொள்கிறீர்கள்?
இரண்டாவது கதையைப் பற்றி கொஞ்சம் எளிதாக என்னால் கூற முடியும். ஆரம்பத்தில் இன்னும் கொஞ்சம் மேலதிகக் கதைச் சட்டகத்தைக் கொண்டிருக்கும் கதையாகத்தான் அது எழுதப்பட்டது. தொழில்முறை எடிட்டராக இருக்கும் ஒரு தோழியிடம் அந்தக் கதையைக் காட்டினேன். அந்தக் கதையைப் படித்துப் பார்த்துவிட்டு அவர் மிகவும் நெகிழ்ந்துபோய், “கதையைச் சூழ்ந்திருக்கும் புறக் கதையை ஏன் நீ வெட்டியெறிந்துவிடக் கூடாது? உனக்கு அது உண்மையிலேயே தேவை இல்லை” என்று சொன்னார். ஆனாலும், தொடக்கத்தில் இருந்த அந்தச் சிறு பகுதியை நான் வைத்துக்கொள்ளவே விரும்பினேன். ஒரு ஆணின் பார்வையில் சொல்லப்படுவதாகக் கதை அமைவது தெளிவாகத் தெரிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நான் விரும்பியிருக்கலாம். ஆகவே, கதையின் தொடக்கத்தில் அந்த ‘அவன்’ தேவைப்படுகிறான், இல்லையென்றால் ஒரு பெண் அந்தக் கதையைச் சொல்வதாக எடுத்துக்கொள்ளப்பட்டு முற்றிலும் மாறான ஒரு புரிதலைத் தந்திருக்கும். ஆகவே, கதையை முடித்துவைப்பதற்கான சட்டகம் தேவையென்று நான் கருதவில்லை. ஒரு கதையைக் கச்சிதமாக முடிக்க வேண்டுமென்று இளம் எழுத்தாளர்கள் எண்ணுகிறார்கள் என்று நான் அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு. அப்படிச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
கதையை எப்படித் திருத்துவீர்கள் என்பதைச் சொல்ல முடியுமா?
எனக்குக் கவலை ஏற்படுத்தும் ஏதும் கதையில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வரை நான் திரும்பத் திரும்பப் படிப்பேன். அப்போதும்கூட, சில சமயம் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக நான் உணரும் கதைகள் இருப்பதுண்டு. ஒருவேளை அதற்கு மேலும் ஏதும் எனக்கு கவலை ஏற்படுத்தாமல் இருக்கலாம், கதை முடிந்துவிட்டதாக இருக்கலாம், ஆனால் உலுக்கியெடுக்கும் விதத்தில் இல்லாமல் இருக்கலாம். சில கதைகள் சட்டென்று முடிந்துவிடுகின்றன- அவற்றைத் திரும்பவும் பார்க்கும்போது கதை முழுமை பெற்றதாக இருப்பதையும் தலைப்பு மட்டுமே தேவைப்படுவதையும் உணர்ந்து அதற்குத் தலைப்பு வைப்பேன். சில சமயங்களில் தலைப்புகள்தான் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்திவிடும். சில சமயங்களில் அவை மிகவும் வெளிப்படையானவையாகவும் சில சமயங்களில் சிக்கலானவையாகவும் இருக்கும்.
ஓர் இளம் எழுத்தாளருக்கு நீங்கள் அளிக்க விரும்பும் மிக முக்கியமான அறிவுரை என்ன?
மிக முக்கியமான பல அறிவுரைகள் இருக்கின்றன. ஒன்றே ஒன்றைக் கொடுக்க வேண்டும் என்றால் சிறந்த எழுத்தாளர்களின் உத்தியையும் எழுத்தின் நுட்பத்தையும் மிக ஆழமாக உற்றுநோக்குங்கள். இந்த எழுத்தாளர்கள் பட்டியலில் நான் சில எழுத்தாளர்களை உள்ளடக்க மாட்டேன். எழுத்தின் மேன்மைக்காக ஜே.கே.ரோலிங்கின் எழுத்துகளை நான் உற்றுநோக்க மாட்டேன், இதைச் சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதற்கான நான் படித்த எழுத்தாளர்களின் பட்டியலை நான் விஸ்தரித்துக்கொண்டே இருக்கிறேன் – பெக்கெட், காஃப்கா, ஜாய்ஸ், நொபக்கோவ் ஆகியோரைத்தான் நான் எப்போதும் குறிப்பிடுவேன், இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜேம்ஸ் ஆகீ, சால் பெலோ, கிரேஸ் பாலீ என்று பலரையும் குறிப்பிடுவேன். இளம் எழுத்தாளராக இருந்தபோது நான் நிறையப் படித்தேன், நான் என்ன படித்தேன் என்பதைக் குறித்தும் வைத்திருந்தேன். உங்கள் இலக்கிய உணர்வு பரிணாமமடைவதற்கு ஏராளமான புத்தகங்கள் உங்களுக்குத் தீனி அளிக்கின்றன.
பெரும்பாலான எழுத்தாளர்கள் இலக்கணத்தை இலக்கியத்துக்கான ஒரு ஊடகமாக மட்டுமே பயன்ப்டுத்துவார்கள். நீங்கள் அதை கருப்பொருளாகவும் பயன்படுத்துகிறீர்கள், ஊடகமாகவும் பயன்படுத்துகிறீர்கள் அல்லவா?
எல்லா எழுத்துகளும் எழுத்துகளைப் பற்றியவைதான் அல்லது எல்லா ஓவியங்களும் ஓவியங்களைப் பற்றியவைதான் என்று சிலர் கூறுவார்கள். ஒரு ஓவியமானது கன்னி மேரியையும் குழந்தை ஏசுவையும் பற்றியதாக இருக்கலாம், அது ஓவியத்தைப் பற்றியதும்கூட.
தமிழில்: Somasundaram k
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
இ.பு.ஞானப்பிரகாசன் 11 months ago
இளம் எழுத்தாளர்களுக்கான முக்கிய வழிகாட்டல்கள்! நன்றி!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.