கட்டுரை, மொழி, சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

ரஷ்ய மொழி ஆதிக்கத்தின் ஒரு கதை

மரியா மன்சோஸ்
08 Aug 2023, 5:00 am
1

ரு மொழி (ரஷ்யன் + உக்ரைன்) பேசும் கீவ் நகரில் 1990களில் வளர்ந்த நான் உக்ரைனிய மொழியை, பழமையானதாகக் கருதி மனதுக்கு நெருக்கமாகக் கொள்ளாமல், நுட்பங்களை உணராமல், முழு ஆர்வம் இல்லாமல் படித்தேன். மிகவும் முக்கியமான நாள்கள், நிகழ்ச்சிகளிலும் பள்ளிக்கூடங்கள், வங்கிகள் போன்ற இடங்களிலும்தான் இனப் பெருமையோடு உக்ரைனியைப் பயன்படுத்துவோம்.

ஆயினும், அன்றாடப் பயன்பாட்டிலும் நெருக்கமான நண்பர்கள் உறவினர்களுடனான உரையாடலிலும் ரஷ்ய மொழியே ஆதிக்கம் செலுத்தும். பள்ளி, கல்லூரி நாள்களில் இடைவேளையின்போதும், பத்திரிகைகளுக்கு எழுதும்போதும், பெற்றோருடன் சண்டை போடும்போதுகூட ரஷ்ய மொழியைத்தான் நாடுவோம். என்னுடைய பாட்டி இவ்விரண்டும் கலந்த கொச்சையான மணிப்பிரவாள நடையில் (சுர்சிக் – Surzhyk) பேசும்போது, தட்டுத்தடுமாறித்தான் ஈடுகொடுப்பேன்.

புதிய ரஷ்யா

ரஷ்ய மொழியோடு எனக்கு எந்தத் தனிப்பட்டத் தொடர்பும் கிடையாது, ஆனாலும் அதுதான் எங்கும் பரவியிருந்தது. சுமார் 400 ஆண்டுகளாக ரஷ்ய மொழி உக்ரைனியர்களுடைய வாழ்க்கையிலும் பிரதேசத்திலும் ஊடுருவிவிட்டது. உக்ரைனின் தெற்குப் பகுதியை தங்களுடைய காலனியாகக் கைப்பற்றிய ரஷ்யப் பேரரசு அதை ‘புதிய ரஷ்யா’ என்று அழைத்தது. உக்ரைனிய மக்கள் மீது ரஷ்ய மொழித் திணிக்கப்பட்டது.

பத்தொன்பதாவது நூற்றாண்டில் ரஷ்யர்களும் வேறு பல சிறுபான்மைச் சமூகத்தவர்களும் டோன்பாஸ் பிரதேசத்தின் தொழிற்சாலை நகரங்களில் குடியேறி ஆலைகளிலும் சுரங்கங்களிலும் வேலை செய்தனர். கிராமப்புறங்களில் உக்ரைன் பேசுவோர்தான் வாழ்ந்தனர். அந்த விவசாயிகளில் பலரும் வேலைக்காக நகர்ப்புறங்களுக்கு வந்தபோது ரஷ்ய மொழியைப் பேசுவது அந்தஸ்தாகவும், சமூகத்தில் முன்னேறுவதற்கான வழியாகவும் கருதப்பட்டது. 

உக்ரைனின் நிலப் பகுதியை மட்டுமல்ல அதன் சுயேச்சையான அடையாளத்தையும் கலாச்சாரத்தையும்கூட கைப்பற்ற ரஷ்யா ஒட்டுமொத்தமாக தாக்குதலைத் தொடங்கிய பிறகுதான், தாய்மொழியான உக்ரைனியைக் கைவிட்டு, ஆட்சிமொழியாக ரஷ்யாவை ஏற்றது எவ்வளவு பெரிய தவறு என்ற தார்மிகத் தோல்வி உணரப்பட்டது. தகவல் தொடர்புக்கு எளிதாக இருக்கட்டும் என்று கருதி ஏற்ற ஒரு மொழி, இப்போது அடக்கியாளும் ஆபத்தாக வளர்ந்துவிட்டது.

நூற்றாண்டுகளாக எமது தாய்மொழியையும் அரித்துவந்திருக்கிறது, அடக்கியாண்டிருக்கிறது. எதிரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் முகாம்களிலும், சந்தேகத்தின்பேரில் கைதுசெய்வோரையும் ரஷ்ய மொழியில்தான் விசாரிப்பார்கள். அப்போது அதைப் பேசுவது, எதிர்ப்புக்கிருந்த ஒரு சிறு வழியைக்கூட விட்டுக்கொடுத்துவிட்டதைப் போலத் தோன்றும்.

உக்ரைனிய மொழிச் சட்டம்

மொழி வாயிலாக தாங்கள் இன்னார் என்பதை உறுதிப்படுத்துவது உக்ரைனியர்களுக்குப் புதிய விஷயமல்ல. 1991இல் உக்ரைன் விடுதலை அடைந்தபோது அனைத்திலும் மீண்டும் உக்ரைனிய மொழிக்கே திரும்பிவிடுவோம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அந்த மாற்றம் 2014 வரையில் வேகம் பெறவில்லை. டோன்பாஸ் பிராந்தியத்தில் அந்த ஆண்டு வசந்த காலத்தில் ரஷ்யப் படைகள் ஊடுருவிய பிறகே, நம் ‘கண்ணியத்தைக் காக்க வேண்டும்’ என்ற புரட்சிகர மனோபாவம் உக்ரைனியர்களுக்கு ஏற்பட்டது.

தில் 2019இல் இயற்றப்பட்ட உக்ரைனிய மொழிச் சட்டம் பொது வாழ்க்கையில் முப்பதுக்கும் மேற்பட்ட பகுதிகளில் – செய்தி ஊடகங்கள், கல்வி நிலையங்கள் உள்பட - உக்ரைன்தான் கட்டாயமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. அதற்குப் பிறகு 2022இல் முழு அளவிலான போரை உக்ரைன் மீது ரஷ்யா நிகழ்த்தத் தொடங்கியதால் உக்ரைனிய மொழிக்குப் புத்துயிர் ஊட்டுவது தேசியக் கடமையாகிவிட்டது. உக்ரைனிய மொழியை சரளமாகப் பேசத் தெரியுமோ தெரியாதா, அது புரிகிறதோ இல்லையோ, உக்ரைனியில்தான் பேச வேண்டும் என்று மக்கள் அனைவரும் முடிவெடுத்துவிட்டனர்.

போர் தொடங்கி எட்டு மாதங்களுக்குப் பிறகு மக்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின்போது 71% உக்ரைனியர்கள், தங்களுடைய தாய்மொழியை அதிகம் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்; 2023 ஜனவரியில் கீவ் நகரில் நடத்திய கணிப்பின்போது அந்த நகரின் குடிமக்களில் 33% பேர் ரஷ்ய மொழிக்குப் பதிலாக உக்ரைன் மொழிக்கு மாறிவிட்டது தெரிந்தது.

உக்ரைன் நாட்டில் பதிவுசெய்துகொண்டுள்ள அனைத்து தொழில் – வணிக நிறுவனங்களும் தங்களுடைய விளம்பரம் உள்ளிட்ட நடவடிக்கைகளை உக்ரைனியில்தான் நிகழ்த்த வேண்டும் என்று சட்டமே இருக்கிறது. உக்ரைனியக் குடியுரிமை பெற இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒரு தேர்வை அனைவரும் எழுதி அதில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். தேர்வே உக்ரைனிய மொழியில்தான். ஏதோ ஒரு பொருள் குறித்து 10 நிமிஷம் தொடர்ச்சியாக அந்த மொழியில் பேசவும் வேண்டும், உக்ரைன் நாட்டு வரலாறு, அரசியல் சட்டம் குறித்து அந்தத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.

ஒரு மனப்போராட்டம்

இப்போது மொழியில் நாங்கள், ‘மீண்டும் பிறக்கும்’ அனுபவத்தைப் பெற்றுவருகிறோம். எது எங்களுடையதாக எப்போதும் இருந்ததோ, அதை இப்போதுதான் கண்டுபிடிக்க ஆரம்பித்திருக்கிறோம் என்று விளாதிமிர் திப்ரோவா என்னிடம் கூறினார். அவர் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உக்ரைன் மொழி ஆசிரியராகவும், எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறார்.

“மதமோ, நிலமோ அல்ல – மொழிதான் இனரீதியாக மக்களை ஒன்று திரட்டும் சக்தியாக இருக்கிறது, எதிரியிடமிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதற்கு அடையாளமாக மொழிதான் இருக்கிறது; மக்கள் அனைவரும் நீண்ட உறக்கத்திலிருந்து திடீரென விழித்தவர்களைப் போலக் கேட்கிறார்கள், “நாம் யார்?” “நம்முடைய உண்மையான வரலாறு என்ன?” “நம்முடைய மொழி எது?” என்கிறார் திப்ரோவா.

இதுநாள் வரை ரஷ்ய மொழியையே அதிகம் பயன்படுத்திவந்த எனக்கும் என்போன்ற சக உக்ரைனியர்களுக்கும் புதிய மொழியில் (அதாவது தாய்மொழியில்) பேசுவதே, கலாச்சார சுருதிபேதம் கண்டுவிட்டதைப் போல ஒரு மனப்போராட்டத்தையும் ஏற்படுத்திவிட்டது. உக்ரைன்தான் நம்முடைய தாய்மொழி என்றால் இதுநாள் வரையில் அதை ஏன் எப்போதும் பேசவில்லை? எல்லா சந்தர்ப்பங்களிலும் நம்முடைய உறவுகளுக்கு உகந்த மொழியாக அது ஏன் இருக்கவில்லை? பொதுக்கூட்டங்களில் உரை நிகழ்த்தும்போது மட்டுமல்ல, மகிழ்ச்சியோடு வம்பு பேசும்போதும், குடும்பச் சண்டைகளிலும், துக்க வீடுகளிலும்கூட அது ஏன் இல்லாமல் போயிற்று? என்று கேள்விகள் எழுகின்றன.

அயர்ச்சியைத் தரும் உரையாடல்

முன்னர் ரஷ்ய மொழியிலேயே உரையாடிவந்த நண்பர்களோடு உக்ரைனிய மொழியில் பேசத் தொடங்கியதிலிருந்து இந்தக் கேள்விகள் என்னை ஆக்கிரமித்துவருகின்றன.

அமெரிக்காவில் 20 ஆண்டுகள் வாழ்ந்தேன், உக்ரைனிய நண்பர்களுடனான நட்புறவில்கூட ரஷ்ய மொழிதான் ஆதிக்கம் செலுத்தியது. சமீபத்தில் பென்சில்வேனியா சென்றபோது, 25 ஆண்டுகளாகத் தொடர்பிலேயே இல்லாத - டோனட்ஸ்கைச் சேர்ந்த பழைய சிநேகிதி வசிப்பதை அறிந்தேன். அவள் குடியிருப்புக்குச் செல்ல வழி கேட்டபோது, வாகனத்தை எப்படி எங்கே நிறுத்த வேண்டும் என்பதைக்கூட உக்ரைனிய மொழியிலேயே சொன்னாள்.

“நீ உக்ரைனுக்கு மாறிவிட்டாயா” என்று கேட்டுவிட்டு அவள் எந்த அளவுக்கு மொழி – இன உணர்வில் என்னோடு இணங்கியிருக்கிறாள் என்பதை அறிய, அவகாசம் ஏற்படுத்திக்கொண்டேன். அந்தப் பயணத்தின்போது நான் என்ன நினைக்கிறேன் என்பதையேகூட என்னுடைய தாய்மொழியில் சொல்ல சரியான இணைச் சொற்கள் கிடைக்காமல் தடுமாறினேன், அதனால் மேற்கொண்டு பேசக்கூட முடியாமல் சிந்தனைகளை இழந்தேன். வார்த்தைகள் கிடைக்காததால் உரையாடலே சுவாரஸ்யம் இன்றி தொய்ந்துவிட்டது.

எப்படியாவது மனதில் இருப்பதைச் சொல்லிவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டபோது போதிய வார்த்தைகள் கிடைக்காமல் ஆங்கிலத்தையும் ரஷ்யனையும் கலந்து பேசியாக வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. நாங்களிருவருமே புதிய மொழியுணர்வால் பெருமிதப்பட்டவர்களாக இருந்தோம், ஆனால் தாய்மொழியில் பேச முடியாததால், உரையாடல் பெரிய அயர்ச்சியையே தந்தது.

என்னுடைய பெற்றோர் இப்போதும் கீவ் நகரில்தான் வசிக்கிறார்கள், அவர்களுடன் உக்ரைனிய மொழியில் பேசுவது ஏதோ புதிய அனுபவமாகவும், இடையூறாகவும் இருக்கிறது. போரினாலும், வெவ்வேறு கண்டங்களில் வாழ்வதாலும் எங்களுக்கிருக்கும் துயரங்கள் போதாதென்று இதுவும் சேர்ந்துகொண்டது.

மொழிச் சிக்கல் உள்ளவர்கள்

என்னைப் போலவே மொழி காரணமாக என்னைவிட பெரிய சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள பலரை அறிவேன். அலக்சாந்தரா புர்லகோவா எண்ம ஊடகங்களுக்கு கருத்துரை வழங்குபவர், காணொலி வாயிலாக கருத்துகளைத் தெரிவிப்பவர் இப்போது கீவ் நகரில் வாழ்கிறார். லிசென்ஸ்க் என்ற உக்ரைனிய கிழக்கு நகரில் ரஷ்ய மொழி பேசும் குடும்பத்தில் பிறந்தவர். தன்னுடைய தேசிய அடையாளத்தைக் காட்ட உக்ரைனிய மொழிக்கு 2021லேயே மாறிவிட்டார். அவருடைய கணவர் அதற்குத் தயாராக இல்லை, 2022 பிப்ரவரி 24இல் ரஷ்யா ஊடுருவியத் தொடங்கிய நாள் முதல் அவரும் மாறிவிட்டார். சுமார் ஓராண்டுக்காலம் இணையர் இருவரும் இரு மொழிகளிலும் மாறி மாறிப் பேசியுள்ளனர். 

“ஒருவர் மீது அன்பு கொள்ளும்போது அவருடைய மொழியையும் நேசிக்கத் தொடங்கினால் எல்லாமே மாறிவிடுகிறது, இது வழக்கத்துக்கு மாறானது; என்னுடைய மனதில் உள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்த சரியான உக்ரைனிய வார்த்தை எதுவென்று புரியாமல் தடுமாறினேன். உக்ரைனிய மொழியில் நடைபெறும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் சுடச்சுட பேசுவதைக் கேட்டுத் திகைப்பேன். நிஜ வாழ்க்கையில் அப்படி நான் பார்த்ததே இல்லை. உக்ரைனிய புத்தகங்களைப் படித்தும் திரைப்படங்களைப் பார்த்தும் இசையைக் கேட்டும் என் அனுபவங்களைச் சரியான உக்ரைனிய வார்த்தைகளால் சொல்லத் தொடங்கினேன், நானே இப்போது புதிய மனுஷியாகிவிட்டதாக உணர்கிறேன்” என்றார் புர்லகோவா.

உக்ரைனிய மொழிப் பற்றாளரும், டிக்டாக் நிகழ்ச்சியில் புகழ் பெற்றவருமான டானிலோ ஹைடமக்கா, வளரிளம் (டீன்-ஏஜ்) பருவத்தவராக இருந்ததால் உக்ரைனிய மொழியை மட்டும் பேசுகிறவராக எளிதில் மாறிவிட்டார். ஆனால், அந்த மாற்றம் மிகுந்த அச்சத்தைத் தந்ததாக அவர் கூறுகிறார். “ஒரு கரையிலிருந்து தாவித் தண்ணீரில் குதித்து நீந்துவதைப் போல இருந்தது, இன்னொரு கரை எதுவென்றே தெரியாத திகைப்பும் அச்சமும் நிலவியது” என்று கடந்த ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார். 

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தடை!

நான் யாரென்றே தெரியாத நிலையில், எளிதில் காயப்படக்கூடிய என்னை தாக்குதலுக்கு இரையாக்க களமிறங்கிவிட்டதைப் போலவே இருந்தது, இனி உக்ரைனிய மொழியிலேயே உரையாடுவது என்ற என் முடிவு. ரஷ்ய மொழி ஆதிக்கம் எந்த அளவுக்கு என்னுடைய ஆழ்மனதில் புதைந்துகிடைந்தது என்பதை ஒவ்வொரு கணத்திலும் உணரத் தலைப்பட்டேன். ‘ரஷ்ய மொழியைவிட உக்ரைனிய மொழி வளங்குன்றியது, செல்வாக்கற்றது’ என்று உணர்வை நூற்றாண்டுகளாக நம்ப வைத்துவிட்டார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசு உக்ரைனிய மொழியின் இலக்கியம், கலை ஆகியவற்றுக்குத் தடை விதித்தது. பொது வாழ்க்கையில் உக்ரைனிய மொழியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடுத்துவிட்டது. ஸ்டாலின் ஆட்சியில் (ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர்), உக்ரைனிய மொழியின் ஒலிப்பியல்கூட கூடாது என்று அதன் முன்னொட்டுகளும் பின்னொட்டுகளும் பெரிய ஆபத்தாகக் கருதப்பட்டு தடைசெய்யப்பட்டன. உக்ரைனிய வார்த்தைகளையெல்லாம் ரஷ்ய மொழியைப் போல ஒலிக்குமாறு எழுத்துகளை மாற்றி எழுதச் செய்தனர் அல்லது அகராதியிலிருந்தே நீக்கினர். ரஷ்ய மொழியும் உக்ரைனிய மொழியும் வேறு என்பது தெரிந்துவிடக் கூடாது என்று இந்த மாற்றங்களைக் கொண்டுவந்தார்கள்.

ஸ்டாலினின் ஆட்சிக்காலத்தில் செயற்கையாக உருவாக்கிய உணவுப் பஞ்சத்தால், லட்சக்கணக்கான உக்ரைனியர்கள் செத்து மடிந்தார்கள். அதில் தப்பிப் பிழைத்தவர்களும் சிந்திக்கவோ, பேசவோ திராணியற்றவர்களாகிவிட்டார்கள்.

“முடிவெடுப்பதற்கு மையமாக இருப்பதே மொழிதான்; மொழியைச் சுற்றித்தான் நாம் யார் என்று கலாச்சாரரீதியாகவும் சமூகரீதியாகவும் தெரிந்துகொள்கிறோம்” என்கிறார் கிறிஸ்டினா பிக்மனேட்ஸ். உக்ரைனிய மொழியியலாளரான இவர் கல்வி – கலாச்சாரத் துறை ஆலோசகராக ‘சீசேம்’ கருத்துப்பட்டறையில் பணியாற்றுகிறார். சீசேம் வீதி என்கிற கலைப் படைப்பை உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்க உதவுகிறார். ரஷ்ய, ஆங்கில மொழிகளிலிருந்து வார்த்தைகளை எடுக்காமல் தவிர்க்கிறார்.

“தாய்மொழியை ஒருவர் தீவிரமாகக் கற்கிறார் என்பது ஏதோ முரண்பாடு போலத் தோன்றும். ஆனால் தங்களுடைய மொழிவளம் எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உக்ரைனியர்கள் இருக்கிறார்கள்” என்கிறார் புர்லகோவா. உக்ரைனிய உரையாடல் சங்கங்களும் இணையதள வகுப்புகளும் அதிகரித்துவருகின்றன. தங்களுடைய மொழியின் சிறப்புகளை இளம் உக்ரைனியர்கள் அன்றாடம் புதிது புதிதாகக் கண்டறிந்து வெளியிடுகிறார்கள்.

பல்கலைக்கழக மாணவியான பினிக், தன்னுடைய உரைகளில் ரஷ்ய வார்த்தைகள் இடம்பெறாமல் கவனமாக நீக்கிவருகிறார். 2022 பிப்ரவரி படையெடுப்புக்குப் பிறகு இதில் மற்றவர்களுக்கும் உதவ அவர் தீவிரம் காட்டிவருகிறார். எந்தவித நெருக்கடியும் இல்லாமல் தாய்மொழியில் வழுவின்றிப் பேச வைப்பதுதான் என்னுடைய லட்சியம் என்கிறார்.

மொழி மீட்புப் பணிகள்

இந்தப் போரானது உக்ரைனிய மொழிக்கு நிறைய மரபுத்தொடர்களையும் உணர்ச்சிகரமான சொற்களையும் தந்துவருகிறது. ஒடேசா மெக்னிகோவ் தேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அல்லா கிஷென்கோ என்ற உக்ரைனிய மொழி வல்லுநர், போரின் ஒவ்வொரு கட்டத்துக்கும் பொருந்தும் வகையிலான மரபுத்தொடர்களை உக்ரைனிய மொழியில் எழுதி பிரபலப்படுத்துகிறார்.

நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட மொழியின் மீதான திரையை விலக்கி, புதிருக்கு விடை காண்பதைப் போன்ற முயற்சிகள்தான் இன்றைய உக்ரைனிய மொழி மீட்புப் பணிகள். ஆள்வோர் அடக்கியாள முற்பட்டாலும் உக்ரைனிய நாட்டுப்புறங்களிலும் மேற்குப் பிரதேசத்திலும் மொழி அப்படியே பேச்சு வழக்கிலும் எழுத்து வழக்கிலும் தொடர்ந்தது. அது பன்மைத்துவம் பெற்றதோடு தனித்திறனையும் வளர்த்துக்கொண்டது.

ஆனால், ரஷ்ய மொழியையே எங்கும் திணிப்பது என்ற அரசின் கொள்கையால் இலக்கியத் தரம் வாய்ந்ததாக மொழியைத் தரப்படுத்தும் முயற்சிகள் நசுக்கப்பட்டன, அது பரவுவதும் நவீனப்படுவதும் தடுக்கப்பட்டன. “மொழி என்பது உயிர்த்தன்மை வாய்ந்தது, அது காலப்போக்கில் மேலும் செழித்து வளரும், மாறுதல்களுக்கும் உள்ளாகும்” என்கிறார் பிக்மனேட்ஸ். இப்போதைக்கு குழப்பமாகவும் கொச்சையாகவும் இருக்கும் உக்ரைனிய மொழி விரைவிலேயே செம்மையுறும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.

“உக்ரைனிய மொழியை வலுப்படுத்துவது என்றால் அதன் இலக்கியம், இசை, கலை, அன்றாடப் பேச்சு வழக்கு என்று அனைத்தையுமே செம்மைப்படுத்துவது, அதற்கு மக்கள் அனைவரும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பது” என்கிறார் விளாதிமிர் திப்ரோவா.

உக்ரைன் மொழியையே எதற்கும் கையாள்வது என்ற உணர்வோடு செயல்படும் அனைவருக்கும், ‘நாம் அனைவரும் ஒன்றே’ என்ற உணர்வே முதலில் ஏற்பட்டிருக்கிறது. மொழியில் புலமை, திறமை என்பது ஒருநாள் எல்லோருக்கும் சாத்தியமாகிவிடும். அதுவரையில் பேசும்போது திணறலும் தயக்கமும் வார்த்தைகள் ஏதுமில்லாத மௌனமும் இருக்கும். இப்படிப்பட்ட சீரற்றத்தன்மைகூட சுதந்திர உணர்ச்சி, போராட்ட குணம், இரக்க சுபாவம் ஆகிய லட்சிய உணர்ச்சிகளின் அடையாளங்களாகவே தெரிகின்றன. 

© தி அட்லான்டிக்

 

தொடர்புடைய கட்டுரைகள்

இந்தியை வீசுங்கள்.. இருமொழிக் கொள்கை பரவட்டும்
இருமொழிக் கொள்கைக்கு வயது 2000: வெ.வேதாசலம் பேட்டி
உயர்த்திப் பிடிக்க வேண்டிய மொழிப் போர் தியாகங்கள்
இந்திய மொழிகளுக்கு எதிர்காலத் திராணி இருக்கிறதா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மரியா மன்சோஸ்

மரியா மன்சோஸ், சுயாதீன பத்திரிகையாளர். 'தி நியு யார்க் டைம்ஸ்', 'தி அட்லான்டிக்' உள்ளிட்ட பத்திரிகைகளில் எழுதுகிறார்.

தமிழில்: வ.ரங்காசாரி

3






மோடி அரசின் செயல்புக்கர் பரிசுஆட்டோகுறைந்த பட்ச விலைநான் அம்மா ஆகவில்லையேடெல்லி வழக்குதமிழக அரசின் நிதிநிலை அறிக்கைமாயக் குடமுருட்டி: அண்ணனின் தூண்டிலைத் திருடிய அப்நாடு தழுவிய ஊரடங்குவிவேக் கணநாதன் கட்டுரைதலைமறைவு வரலாற்றினர்சாவர்க்கர்நதி நீர் பிரச்சினைதலைமைத்துவம்பார்ப்பனர்பாக்டீரியா பீட்டருக்கே கொடு!உரத் தடையால் தோல்விதாளம்மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரதமிழ்ச் சமூகம்நேரு கட்டுரைத் தொடர்கென்னெத் கவுண்டாமாத்ருபூமிதிமுக தலைவர் ஸ்டாலின்நோட்டோஅரிய வகை அம்மைவங்கி ஊழியர்கள்வ.ரங்காச்சாரிஇளங்கலை மாணவர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!