பேட்டி, அரசியல், பொருளாதாரம், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

25 ஆண்டுகளில் ஒரு பிரச்சினையைக்கூட தீர்க்கவில்லை: மிஃப்தா இஸ்மாயில் பேட்டி

காசிம் ஆலம்
05 Sep 2023, 5:00 am
0

டாக்டர் மிஃப்தா இஸ்மாயில், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் வார்டன் உயர்கல்விக்கூடத்தில் ‘பொது நிதி’ பாடத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கியவர். இரண்டு முறை பாகிஸ்தானின் நிதியமைச்சராக குறுகிய காலம் பதவி வகித்தவர். 2022 செப்டம்பரில், தான் இருந்த பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) அரசிலிருந்து கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார். ‘த டான்’ பத்திரிகையின் காசிம் ஆலமுக்கு அவர் அளித்த பேட்டியை ‘அருஞ்சொல்’ தன் வாசகர்களுக்காக இங்கே தருகிறது.

கடந்த ஐந்தாண்டுகளைவிட வரும் ஐந்தாண்டில் பாகிஸ்தான் பொருளாதாரம் மேம்படும் என்று நினைக்கிறீர்களா?

அப்படித்தான் கருதுகிறேன். கடந்த ஐந்தாண்டுகள் பொருளாதாரம் மோசமாகவே இருந்தது. தனிநபர் சராசரி வருமானம் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் இருந்ததைவிட இப்போது குறைவு. கடந்த இருபதாண்டுகளில் பல தவறுகளைச் செய்துவிட்டோம், அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன். பன்னாட்டுச் செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தரும் கடனுக்காக அது சொல்வதைக் கேட்டு நடந்தால் நம்முடைய பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவிடாது. கடந்த ஐந்தாண்டுகள் மோசமாக இருந்ததால், அடுத்த ஐந்தாண்டுகளில் தவறுகளைச் சரிசெய்து மேம்படுவோம் என்று கருதுகிறேன்.

அடுத்த நிதியமைச்சர் முன்னுள்ள மூன்று பெரிய சவால்கள் என்ன?

வெளிவர்த்தக பற்று வரவில் நடப்புக் கணக்கு பற்றாக்குறையைச் சமாளிப்பது முதலாவது பெரிய சவால். இதனால்தான் ஆண்டுதோறும் கடன் வாங்குகிறோம், அதாவது வாங்கும் கடனைவிட அதிகம் திருப்பியும் செலுத்துகிறோம். இப்போது நாம் அடைக்க வேண்டிய வெளிநாட்டுக் கடன் அளவு பெரிதாகிவிட்டது.

இரண்டாவது சவால், நம்முடைய மொத்த உற்பத்தி மதிப்புக்கும் (ஜிடிபி), வரி வருவாய்களுக்குமான விகிதம் மிக மிகக் குறைவாக இருக்கிறது. எனவேதான், நமக்கு ‘இரட்டை பற்றாக்குறை’ தொடர்கிறது. தேசிய நிதி ஆணையத்தின் (என்எஃப்சி) பரிந்துரைகளும் இந்தப் பற்றாக்குறைகளுக்குக் காரணம்.

மூன்றாவது சவால், உற்பத்தித் திறன். பாகிஸ்தானியர்கள் அதிக உற்பத்தித் திறன் கிடைக்கும் வகையில் உழைப்பதில்லை. அவர்களுடைய படிப்பறிவு அதிகமில்லை, பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாம் கல்வியில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். கல்வியறிவை அதிகப்படுத்த அரசு அதிகம் நிதி ஒதுக்குவது அவசியம்.

அடுத்துவரும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் உண்டா?

பாகிஸ்தானின் நிதியமைச்சராக இரண்டு முறை பதவி வகிக்கும் வாய்ப்பு கிடைத்த வகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். பாகிஸ்தானுக்குத் தொண்டாற்ற வேறு வழிகளும் இருக்கின்றன. இன்னொருமுறை தேர்தலில் நிற்கும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை.

‘இடைக்கால அரசு’ என்பது அன்றாட நிர்வாகத்தை மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு, நடுத்தரக் காலத்துக்கும் திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டுமா?

சர்வதேச ஒப்பந்தங்களை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை இடைக்கால அரசு எடுக்கலாம் என்ற அளவுக்கு சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த அதிகாரத்தை இடைக்கால அரசில் உள்ளவர்களுக்கு நாம் அளிக்க வேண்டும். மிகப் பெரிய சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக இருந்தால் மக்களிடம் விளக்கி அவர்களுடைய ஆதரவையும் பெறுவது நல்லது.

அதில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கு இடையிலும் கருத்தொற்றுமையும் அவசியம். இடைக்கால அரசுக்கு மக்களுடைய ஆதரவு பெருவாரியாக இருக்காது என்பதால் இது பெரிய பிரச்சினைதான்.

பன்னாட்டுச் செலாவணி நிதியத்துடன் 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்கு ‘இடைக்கால ஏற்பாடு’ (எஸ்பிஏ) செய்துகொள்ளப்பட்டிருக்கிறது, இதுவே ‘நீட்டிக்கப்பட்ட நிதி வசதி’ (இஎஃப்எஃப்) என்று விரிவுபடப் போவதால் பொருளாதாரத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் சீர்திருத்தங்கள் வருமா?

இடைக்கால ஏற்பாட்டுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்ட நிதி வசதி இல்லாவிட்டால் செலவுசெய்ய பாகிஸ்தானிடம் ரூபாயே இருக்காது. இந்த முறை ஐஎம்எஃப் நிர்ணயிக்கும் இலக்குகளை எய்துவதோடு நிறுத்திவிட மாட்டார்கள் (சீர்திருத்தங்களும் நடைபெறும்) என்று நம்புகிறேன். அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விற்றல், மின் கட்டணம், சமையல் எரிவாயுக் கட்டணம் ஆகியவற்றை அரசு நிர்ணயிப்பதிலிருந்து விலக்குதல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட வேண்டும். வரிக் கட்டமைப்பிலும் சீர்திருத்தங்கள் அவசியம். நம் நாட்டில் சொத்து வரியே கிடையாது.

அனைத்து வகையான வேளாண் வருவாய் மீதும் நாம் முழுமையாக வரி விதிப்பதில்லை. சில்லறை வியாபாரமும் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. இவைபோக பல துறைகளுக்கும் உற்பத்திப் பிரிவுகளுக்கும் வரி விலக்கு தந்தோம், அவற்றை மீண்டும் வரி விதிப்புக்குக் கொண்டுவரவே இல்லை. தேசிய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு நிதியை அதிகம் தந்துவிட்டு, கூட்டரசு (மத்திய அரசு) திவாலாகிவிடக் கூடாது. மாநிலங்களும் தங்களுடைய வளர்ச்சிக்கு சுயமாக வரி வருவாய் இனங்களை அடையாளம் காண வேண்டும். இவ்வாறு பல சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டியிருக்கின்றன.

அரசு விதித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வு மக்களால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. மின்சார வாரியங்களின் கடன் சுமையும் தாளமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த அரசுகளின் திறமையற்ற நிர்வாகத்தால் இது ஏற்பட்டது என்று கருதுகிறீர்களா, நீங்கள் இதைக் கட்டுப்படுத்த முழு பதவிக்காலமும் ஆட்சியில் இருந்தால் எப்படி அணுகுவீர்கள்?

மின்சாரத் துறையைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் இரண்டு விஷயங்களை நாம் புரிந்துகொள்வது நல்லது. இதுவரை ஆட்சியில் இருந்த எல்லா அரசுகளுமே இதில் நிர்வாகத் திறமை இல்லாமல் செயல்பட்டவைதான். இந்தக் கட்சி அரசு, அந்தக் கட்சி அரசு என்று நான் பேச விரும்பவில்லை. நம்முடைய ஆட்சி முறையைப் பற்றியே பேசுகிறேன். அரசு நிர்வாகத்துக்கு என்று பல அமைப்புகளை உருவாக்குகிறோம், அவை எப்படிச் செயல்பட வேண்டும் என்று விதிகளையும் ஏற்படுத்துகிறோம். அவ்வப்போது அவற்றையெல்லாம் தேவையின்றியோ, அரசியல் லாபம் கருதியோ மாற்றிக்கொண்டே இருப்பதால் நிர்வாகம் சீர்கெட்டுவிடுகிறது. கடந்த இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகளில் பாகிஸ்தானின் எந்த ஒரு பெரிய பிரச்சினையையும் நாம் தீர்த்துவிடவில்லை.

உலகிலேயே மக்கள் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ள நாடு பாகிஸ்தான்; தெற்காசியாவிலேயே நமக்குத்தான் முதலிடம், ஆனால் நம் நாட்டுப் பிள்ளைகளில் பாதிப்பேர் பள்ளிக்கூடத்துக்கே போகவில்லை. நம்மால் அவர்களைப் பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. பள்ளிக்கூடத்தில் படிக்கும் பிள்ளைகளும் கணிதம், அறிவியல் பாடங்களில் தோல்வி அடைகிறார்கள். அதைச் சரிசெய்யவும் நம்மால் முடியவில்லை. நம் நாட்டின் மிகப் பெரிய பிரச்சினை கல்வித் துறைதான். எழுத்தறிவில்லாத மக்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பது நாட்டின் முன்னேற்றத்தைத் தடுத்துவிடும். பாகிஸ்தானின் பத்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுடைய எழுத்தறிவின்மை 75% என்று உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, 75% குழந்தைகளுக்கு எந்த இரண்டு மொழியிலும் சேர்ந்தார் போல சில வாக்கியங்களைக் கூட்டிக்கூட படிக்க முடியாது.

மின்சாரத் துறை பிரச்சினை என்பது நாட்டின் பல முக்கியப் பிரச்சினைகளில் ஒன்று; சமையல் எரிவாயு விநியோகத்தில் உள்ள பிரச்சினை, பயங்கரவாதச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் உள்ள பிரச்சினை, தெருக்களில் நடைபெறும் குற்றச் செயல்களின் அதிகரிப்பு என்று நாம் கவனிக்க வேண்டிய அவசரப் பிரச்சினைகள் பல இருக்கின்றன. திறமையின்மை காரணமாக மட்டும் இவை வளர்ந்துவிடவில்லை. இவை அனைத்தும் தனிநபர்களையும் பொருத்தது. பாகிஸ்தானில் நிர்வாக அமைப்பு எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்டது. இது ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். இதற்கும் மேலாக அரசியலர்களிடமும் அதிகாரிகளிடமும்கூட திறமையின்மை பெருகிவருகிறது. மிகப் பெரிய பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்றுகூட புரியாமல் இருக்கிறார்கள்.

திறமையை வளர்ப்பது முக்கியமாகிறது. அதனால்தான் பாகிஸ்தானைப் பற்றிய சிந்தனையில் மாற்றம் வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரம் தர வேண்டுமா, மாநிலங்களுக்கிடையில் நிர்வாகத்தை நன்றாக நடத்த வேண்டும் என்பதில் போட்டியைப் புகுத்த வேண்டுமா, இதை மாவட்டங்கள், வட்டங்கள் வரை கொண்டுசெல்ல வேண்டுமா என்று யோசிக்க வேண்டும். மக்களிடமிருந்து எப்படியெல்லாம் வரி வசூலை அதிகப்படுத்த வேண்டும், வசூலிப்பதை எப்படி பயனுள்ள வகையில் செலவுசெய்ய வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

நாம் நிறையவற்றைப் பற்றி யோசித்தாக வேண்டும். பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் யோசனைப்படி மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது சீர்திருத்தம் அல்ல, அதை அரசுத் துறையிடமிருந்து தனியாருக்கு விற்பதுதான் சீர்திருத்தம். பாகிஸ்தானின் சர்வதேச விமான நிறுவனத்தையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட வேண்டும். அரசுத் துறை நிறுவனங்கள் குறித்து மக்களிடம் அனேகக் கனவுகள் எழுப்பப்பட்டன, அவை ஒன்றுகூட பலிக்கவில்லை. ஊழல், திறமையின்மை காரணமாக சீரழிந்துவிட்ட அரசுத் துறை நிறுவனங்களைத் தனியாரிடம் விட்டுவிட வேண்டும்.

அனைத்துத் துறைகளிலும் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால்தான் உற்பத்திச் செலவுகள் குறையும் விலையும் கட்டணங்களும் குறையும். இல்லாவிட்டால் ஊழல், மெத்தனம் காரணமாக உற்பத்திச் செலவும் கடன் சுமையும் தொடர்ந்து அதிகரித்து, மின்சாரத்துக்கு அதிக விலை கொடுத்து வாங்குவதால் அந்தச் சுமையை நுகர்வோருக்கு மாற்றுங்கள் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியம் கூறும், அதனால் மின்சாரக் கட்டணம் மேலும் மேலும் உயர்ந்துகொண்டே போகும். நம் நாட்டில் பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) அதிகமாக இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம்.

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

யாராக இருந்தார் பர்வேஸ் முஷாரஃப்?

முகம்மது தாகி 08 Feb 2023

தேசிய நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறீர்கள்; மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் வரி வருவாயைப் பகிர்ந்துகொள்ள சரியான சூத்திரம்தான் என்ன?

பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 18வது திருத்தத்தை நான் எதிர்க்கவில்லை, ஆதரிக்கிறேன் என்பதை முதலிலேயே தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டும், அந்த அதிகாரங்கள் அப்படியே உள்ளாட்சி மன்றங்களுக்கும் பகிரப்பட வேண்டும். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையில் வருவாயைப் பகிர்வதில் இப்போது மாநிலங்களுக்கு அதிக சாதகம் ஏற்படுமாறு பரிந்துரை இருக்கிறது.

மாநிலங்கள் பணக்காரர்களாகிவிட்டன, எப்படிச் செலவிடுவது என்பது புரியாதபடிக்கு அவற்றிடம் நிதி இருக்கிறது. எனவே, அவை தொடர்ந்து செலவுசெய்து மாநில அரசுகளின் துறைகளில் அதிகம் பேரை வேலைக்கு அமர்த்திக்கொண்டு ஊதியம், படிகளுக்குத் தொடர்ந்து அதிகம் செலவிட்டுவருகிறது. பலூசிஸ்தானிலும் வேறு சில மாநிலங்களிலும் மாநில அரசு ஊழியரின் ஊதியம் மத்திய அரசு ஊழியருடைய வருவாயைவிட அதிகமாக இருக்கிறது.

மாநிலங்களுக்கு இப்படி நிதி வருவாயை அதிகம் அளித்தால் அவர்கள் சுயமாக வருவாயை அதிகரிக்கும் வழிகளைத் தேட மாட்டார்கள். சொத்து வரியை மாநில அரசுகள் விதிக்க வேண்டும், விவசாய வருமானத்துக்கும் சில இனங்களில் வரிவிதிப்பது அவசியம். மத்திய அரசு மாநிலங்களுக்கு இப்போது தருவதைவிட குறைந்த அளவு நிதி தந்தால் போதும். அப்போதுதான் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை கட்டுப்படும். நிதிப் பற்றாக்குறை கட்டுப்பட்டால்தான் நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

 

தொடர்புடைய கட்டுரைகள்

பாகிஸ்தான் – சீன உறவு ஏன் வலுப்படவே இல்லை?
பாகிஸ்தானின் பொருளாதாரம் ஏன் வீழ்ந்தது?
யாராக இருந்தார் பர்வேஸ் முஷாரஃப்?
பாகிஸ்தான் அரசமைப்பு: ஓர் எளிய அறிமுகம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
தமிழில்: வ.ரங்காசாரி

1






எதிர்வினைகள்அதீத முதலீடுகள்பிரதாப் சிம்ஹா75 ஆண்டுகள்லால்தெங்காஆபாசம்பள்ளி மாணவர்கள்400 இடங்கள்உலகம் ஒரு நாடக மேடைசமஸ் - காந்திதேசியப் பூங்காக்களும்இரும்புஅதிகாரப்பரவலாக்கம்கேசவானந்த பாரதிகுஜராத் படுகொலைபோக்குவரத்து ஆணையம்கல்வியாளர்கள்இந்துக்கள் எப்படியும் யோசிக்கலாம்சிரைக்குழாய்கள்நெஞ்சு வலிடி.ஆர்.நாகராஜ்ஐஸ்லாந்துபிரதமர்பாஷைகள்ரஞ்சனா நாச்சியார்ஆக்கப்பூர்வமான மாற்றம்யானைநேரு கட்டுரைத் தொடர்ஆங்கிலம்ஆளுநர்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!