"அண்ணே, நீங்க கார்த்திகையா, புரட்டாசியா?"
கேள்வியிலிருக்கும் அண்ணன் நான்தான். கேட்டது என் உறவுக்காரப் பெண். அப்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தேன். அவளுக்கு மணமாகிச் சில மாதங்கள் ஆகியிருந்தன. கல்யாணத்தில் என்னால் கலந்துகொள்ள முடியவில்லை. அதைச் சரிக்கட்டுவதற்காக அடுத்த நாள் அவள் வீட்டில் சாப்பிடுவதாக ஏற்பாடு. முதல் நாள் தொலைபேசியில் அவள் கேட்ட கேள்விதான் அது.
எங்கள் பகுதியில் சிலர் கார்த்திகை மாதம் அசைவம் சாப்பிட மாட்டார்கள். கார்த்திகை முருகனுக்கு உகந்த மாதம். அதனால் அந்த மாதத்தில் அசைவத்திற்கு விலக்கு.
எங்கள் சுற்றுப்பட்டில் சிவன், அய்யனார், அம்மன் கோயில்கள்தாம் மிகுதி. விதிவிலக்காக எங்கள் கிராமத்தில் ஒரு பெரிய பெருமாள் கோயில் இருந்தது. எங்கள் ஊர்க்காரர்களில் சிலர் பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் அசைவத்தை விலக்குவார்கள்; அப்படியானவர்கள் கார்த்திகை மாதத்தில் இறைச்சிக்குத் தடைசொல்ல மாட்டார்கள். முதல் வகையினருக்கு கார்த்திகை மாசக்காரர்கள் என்று பெயர்; இரண்டாம் வகையினர் புரட்டாசி மாசக்காரர்கள். இதில் நான் எந்த மாசக்காரன் என்று அறிவதுதான் மேற்கண்ட கேள்வியின் நோக்கம்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
இப்போது வேறு ஒரு கேள்வி எழலாம். ஏன் தெய்வங்களுக்கு உகந்த மாதங்களில் அல்லது நாட்களில் அசைவம் விலக்கப்பட வேண்டும்? ஆண்டவனுக்கு அசைவம் ஆகாதா? நாம் சாப்பிடுகிற உணவைத்தானே நாம் நமது தெய்வங்களுக்குப் படைக்க முடியும்? குகன் ராமனுக்குத் தேனையும் மீனையும்தானே காணிக்கையாக்கினான்? கண்ணப்பன் படைத்த பன்றி இறைச்சியைக் காளத்திநாதன் ஏற்றுக்கொண்டான் என்றுதானே சேக்கிழார் சொல்கிறார்? தினை மாவும் ஆட்டு ரத்தமும் படையலிட்டு முருகனை வழிபட்ட வரலாறு நம் இலக்கியத்தில் இருக்கத்தானே செய்கிறது? யாகங்களில் விலங்குகள் பலியிடப்பட்டதாகத்தானே வேதங்கள் சொல்கின்றன?
பின் எப்போது கடவுள் சைவர் ஆனார்? இதற்கு ஆய்வாளர்கள் பல விடைகள் சொல்கின்றனர். அதில் முக்கியமானது பவுத்த, ஜைன மதங்களின் செல்வாக்கினால் வேத மதமும் சைவ மதமும் கொல்லாமை, புலால் மறுத்தல் முதலான கொள்கைகளைத் தழுவிக்கொண்டன என்கின்றனர். இந்த வாக்கியத்தில் இடம்பெறும் சைவம் என்பது சமயத்தைக் குறிக்கிறது. சைவம் என்கிற சொல் சாதி, சமயம், சித்தாந்தம் ஆகிய மூன்று அடையாளங்களையும் ஒருங்கே தழுவி நின்றது என்கிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி. ஆனால், இப்போது சைவம் என்கிற சொல் மரக்கறி உணவு எனும் பொருளில்தான் அதிகமும் பயன்படுத்தப்படுகிறது.
நோன்பும் உணவும்
பாவை நோன்பிருக்கும் ஆண்டாள்,
"நெய்யுண்ணோம் , பாலுண்ணோம்,
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்" என்று அடுக்கிக்கொண்டே போகிறாள்.
அதாவது, ஆண்டாளும் தோழிகளும் அவர்களுக்குப் பிரியமான உணவையும் அலங்காரத்தையும் நோன்புக் காலத்தில் தவிர்க்கிறார்கள். இதைத்தான் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு உகந்த கிழமையில் அல்லது நாளில் அல்லது மாதத்தில் விரதமிருப்பவர்களும் செய்கிறார்கள். சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் மட்டுமல்ல; அவர்தம் குடும்பத்தினரும் ஒரு மண்டலம் விரதம் இருக்கிறார்கள். தைப்பூசத்திற்காக உடலை வருத்தி பழனிக்குப் பாத யாத்திரை செல்பவர்களும் காவடி எடுப்பவர்களும் இதேபோல விரதம் இருக்கிறார்கள்.
'உணவை விடுத்தோ, சுருக்கியோ கடவுளை மெய்யன்போடு வழிபடுவதை'த்தான் விரதம் என்று வரையறுக்கிறார் ஆறுமுக நாவலர். இப்படித்தான் விரத காலத்தில் தங்களுக்கு விருப்பமான மீனையும் இறைச்சியையும் தவிர்ப்பது தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இடையில் எப்போதோ மீனும் இறைச்சியும் கடவுளுக்கு ஒவ்வாத உணவு ஆகிவிட்டது அல்லது ஆக்கப்பட்டுவிட்டது. இதில் முட்டையும் விலக்கல்ல.
உணவும் அரசியலும்
சமீபத்தில் பள்ளிப் பிள்ளைகளுக்கான இலவச மதிய உணவுத் திட்டத்தில் முட்டையைச் சேர்த்தது கர்நாடக அரசு. ஆனால், மாநிலத்தின் செல்வாக்கு மிக்க லிங்காயத்துகள் இதை எதிர்க்கின்றனர். தென் மாநிலங்களுக்குள் கர்நாடகக் குழந்தைகளுக்குத்தான் ஊட்டச்சத்து குறைவாக இருக்கிறது. 80%க்கும் மேற்பட்ட பிள்ளைகள் முட்டையை விரும்புவது முன்னதாக அரசு நடத்திய கணக்கெடுப்பில் தெரிந்தது. எனினும் இப்போது ஆளும் அரசு முட்டை வழங்குவதிலிருந்து பின் வாங்குவதுபோல் தெரிகிறது. தென் மாநிலங்களில் பள்ளிப் பிள்ளைகளுக்கு முட்டை வழங்காத மாநிலம் கர்நாடகம் மட்டும்தான். கைக்கெட்டிய முட்டை அந்தப் பிள்ளைகளுக்கு வாய்க்கு எட்டுமா என்று தெரியவில்லை.
நாட்டிலேயே பள்ளிப் பிள்ளைகளுக்கு முதலில் முட்டை வழங்கிய மாநிலம் தமிழகம்தான். கர்நாடகம் நீங்கலாக மற்ற தென் மாநிலங்கள் தமிழகத்தைத் தொடர்ந்தன. வட மாநிலங்களில் வங்கமும், ஒடிஷாவும் ஜார்கண்டும் மாத்திரமே முட்டை வழங்குகின்றன. மற்ற வட மாநிலங்கள் முட்டை வழங்குவதில்லை. அங்குள்ள குழந்தைகளும் ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்கள்தான். அவர்கள் உயரமும் எடையும் குறைவுதான். அந்த ஏழைக் குழந்தைகள் முட்டை சாப்பிடுவது அவர்களது உடல்நலத்தை மேம்படுத்தும் என்பதும் சரிதான். அதனால் என்ன? மதமும் கோட்பாடுகளும் அதைவிட முக்கியமில்லையா?
இந்தியாவில் சைவர்களே பெரும்பான்மையா?
பொதுவாக இந்தியாவில் கணிசமானவர்கள் சைவர்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால் புள்ளிவிவரங்கள் இந்தக் கருத்துக்கு ஆதரவாக இல்லை. இந்தியர்களில் 30% பேர்தான் சைவர்கள். இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. 2018இன் அரசுக் கணக்கெடுப்பின்படி சைவர்கள் அதிகம் வாழும் மாநிலம் ராஜஸ்தான்(75%). பட்டியலில் அடுத்து அரியானா (69%), பஞ்சாப் (67%), குஜராத் (60%) ஆகிய மாநிலங்கள் இடம்பெறுகின்றன. தொடர்ந்துவருபவை: மத்தியப் பிரதேசம் (51%), உத்தர பிரதேசம் (47%), மராட்டியம் (40%) முதலிய மாநிலங்கள். உத்தரகாண்ட் (27%), கர்நாடகம் (21%), அசாம் (20%), சட்டிஸ்கர்(18%), பீகார் (8%) முதலிய மாநிலங்களில் சைவர்கள் சிறுபான்மையினர்தான். சுத்த சைவர்கள் 3%க்குக் குறைவாக உள்ள மாநிலங்கள் ஜார்கண்ட், கேரளா, ஒடிஷா, தமிழ்நாடு, ஆந்திரம், மேற்கு வங்கம், தெலுங்கானா முதலியன.
கேரளம், ஆந்திரம், தமிழகம், ஒடிஷா, வங்கம் முதலான மாநிலங்கள் கடலோரத்தில் இருப்பதால் இங்கு அசைவர்கள் அதிகமென்றும், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்கள் நான்கு பக்கமும் நாடுகளால் சூழப்பட்டிருப்பதால் அங்கு அசைவர்கள் குறைவென்றும் ஓர் ஆய்வாளர் சொல்கிறார். இருக்கலாம். இன்னும் ஆழமான பண்பாட்டு, வரலாற்றுக் காரணங்களும் இருக்கலாம்.
அசைவ உணவுக்குத் தடை
சைவர்கள் எண்ணிக்கையில் குறைவானாலும் சமூகத்தில் சைவம் அசைவத்தைவிட உயர்வான இடத்தில் இருக்கிறது. இருக்கட்டும். ஆனால், அந்த இடத்தை அது மதத்தின் பெயரால் அடைந்திருக்கிறது. அந்த இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள சமயங்களில் அது அசைவத்தைச் சிறுமைப்படுத்தவும் செய்கிறது.
இதைச் சமீபத்தில் குஜராத் தெருக்களில் பார்க்க முடிந்தது. அகமதாபாத், ராஜ்கோட், வதோரா, ஜுனாகத்- இவையெல்லாம் குஜராத் நகரங்கள். இங்கெல்லாம் கடந்த நவம்பர் மாதம் பொதுவெளியில் அசைவ உணவு விற்பதை உள்ளூர் நகராட்சிகள் தடைசெய்தன. தூய்மையின்மை, உடல்நலக் கேடு, துர்நாற்றம் முதலானவை காரணங்களாக முன்வைக்கப்பட்டன. அந்த மாநிலத்தில் 40% மக்கள் அசைவர்கள். என்றாலும் இது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்கிற குரல்கள் மாநிலத்திற்கு வெளியே இருந்துதான் ஒலித்தன. குஜராத்தை ஒரு சைவ மாநிலமாக மாற்றப்போவதாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு சூளுரைத்திருந்தார் அப்போதைய முதல்வர்.
சைவப் புனிதம்
ஏன் எல்லோரும் சைவராக வேண்டும்? ஏனெனில் சைவம் உயர்ந்தது, அது ஆண்டவனுக்கு நெருக்கமானது என்று ஒரு கருதுகோள் இங்கு விதைக்கப்பட்டுவிட்டது. அது பூவாகிக் காயாகிக் கனியாகி மரமாகி நிற்கிறது. அதனால்தான் எங்கள் பகுதியில் ஆண்டு முழுதும் புழங்கும் அசைவு உணவுப் பாத்திரங்களை கார்த்திகை மாசக்காரர்கள், அந்த மாதத்தில் மச்சிலே கொண்டு போய் வைத்துவிடுவார்கள்; அதாவது கார்த்திகை மாதத்தில் அசைவ உணவை மட்டுமில்லை, அதுகாறும் அசைவம் சமைத்த பாத்திரங்களைப் போலும் தீண்ட மாட்டார்கள். புரட்டாசி மாசக்காரர்கள் இந்தப் பாத்திரப் புறக்கணிப்பை புரட்டாசியில் கடைப்பிடிப்பார்கள்.
நம் நாட்டில் சைவத்திற்கும் அசைவத்திற்கும் இடையிலான கோடு அழுத்தமானது. அசைவ உணவகங்களில் சைவ உணவும் கிடைக்கும். மெனுவில் சைவ உணவு வகைகளுக்கு எதிராகச் பச்சைப் பொட்டு வைத்திருக்கும். அசைவ உணவிற்கு எதிராக சிவப்புப் பொட்டு. வேண்டிய உணவைத் தேர்ந்தெடுப்பதில் சைவர்களுக்கு எந்தக் குழப்பமும் வராமல் இருப்பதற்கான ஏற்பாடு. நல்லதுதான். சரி, இந்த நிறங்கள் எதைக் குறிக்கின்றன? பச்சை நிறம் இயற்கையின், வளர்ச்சியின், பாதுகாப்பின் குறியீடு. சிவப்பு நிறம் நெருப்பின், சினத்தின், ஆபத்தின் குறியீடு. இந்தத் தெரிவு தற்செயலாக இருக்க முடியாது.
சைவமும் சர்வதேசியமும்
இந்திய விமானங்களில் வழங்கப்படும் உணவுப் பொதிகளிலும் இந்த இரண்டு பொட்டுகளில் ஏதேனும் ஒன்றைப் பார்க்கலாம். உணவை வழங்குமுன் பணிப்பெண்டிர் 'சைவமா அசைவமா?' என்று கேட்பார்கள். நமது தேர்வைச் சொல்லலாம். சர்வதேச விமானங்களிலும் இரண்டு தேர்வுகள் இருக்கும். ஆனால் கேள்வி மாறுபடும். அந்தப் பெண்டிர், 'கோழியா பீஃபா?' என்று கேட்பார்கள்; அல்லது 'மீனா போர்க்கா? என்றோ 'மட்டனா இறாலா?' என்றோ கேட்பார்கள். தேர்வு அசைவ உணவுக்குள்ளாகத்தான் இருக்கும். ஏனெனில் எல்லோரும் புலால் உண்பவர்கள். மரக்கறிக்காரர்கள் விமானச் சீட்டைப் பதிவுசெய்யும்போதே சைவ உணவு வேண்டும் என்று தனியாகக் குறிப்பிடவேண்டும். அதற்குச் சிறப்பு உணவு என்று பெயர். முன்னதாகச் சொல்லி வைக்காவிட்டால் புலால் உணவுதான் கிடைக்கும்.
இந்தியாவில் அன்றாடம் புழக்கத்திலிருக்கும் 'நான் வெஜிடேரியன்' எனும் சொல் பல அயல் நாடுகளில் பயன்பாட்டில் இல்லை. அதற்கு அங்கெல்லாம் அவசியமில்லை. எல்லா உணவும் அங்கு 'நான் வெஜிடேரியன்'தான். சைவர்கள் மட்டும்தான் எதிர்த்திசையில் பயணிப்பவர்கள். அவர்களும் அவர்களது உணவும்தான் 'வெஜிடேரியன்' என்று அடையாளப்படுத்தப்படும்.
ஒரு நிகழ்வைச் சொல்கிறேன். தொண்ணுறுகளின் பிற்பகுதி. நான் ஹாங்காங்கில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது சீனாவின் வணிகக் கதவுகள் முழுமையாகத் திறக்கவில்லை. ஆனால், அங்கு பொருட்களின் உற்பத்தி முழு வேகத்திலிருந்தது. சீனப் பொருட்களை வாங்குவதற்கான மையமாக ஹாங்காங் பயன்பட்டது. எனது நண்பர் ஒருவரும் அப்படி ஹாங்காங் வந்தார். அவரது பரபரப்பான பயணத் திட்டத்திற்கு இடையில் இரண்டு பேருக்கும் தோதான ஒரு மதிய நேரத்தில் ஓர் உணவகத்தில் சந்தித்தோம். நண்பர் சைவர். ஹாங்காங்கில் உணவகங்கள் ஏராளமாக உண்டு. ஆனால் சைவ உணவகங்கள் இராது. இந்தியர்களும் புத்த மடாலயங்களும் நடத்தும் விரல்விட்டு எண்ணத்தக்க சைவ உணவகங்கள்தாம் இருக்கின்றன. இவை நான் நண்பரைச் சந்தித்த இடத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தன.
நான் ஒரு சீன உணவகத்தையும், நண்பருக்காக ஒரு மெனுவையும் தேர்ந்தடுத்து வைத்திருந்தேன். முதலில் உருண்டை ரொட்டிகளும் வெண்ணெய்க் கட்டியும். கூடவே ஒரு சூப் (இதற்கு Russian Broscht என்று பெயர்). தக்காளி, முட்டைக்கோசு, பீட் ரூட் முதலான காய்கறிகளில் உருவானது. அடுத்து சோயா சாஸில் வேக வைத்த இளந்தண்டுடன் கூடிய தளதப்பான கீரை, இதற்கு 'சாய் சம்' என்று பெயர். கூடவே பச்சைக் காளான் பொறியல். ஒரு கிண்ணத்தில் சோறு. மிளகாய்ப் பழ சாஸ். பாலும் சர்க்கரையும் கலக்காத சீனத் தேநீர். எனக்கு சாப் ஸ்டிக். நண்பருக்கு முள் கரண்டி. நண்பர் உருண்டை ரொட்டியைப் பிய்த்து அதில் வெண்ணை தடவி அந்தச் சுவையையும், தன் சீன அனுபவங்களையும் ஒருசேர சிலாகித்தார். நண்பரின் நற்பேறாக நான் சூப்பில் தொடங்கினேன். அந்த சூப்பில் கருப்பு நிறத்தில் சிறிய காளான் துண்டுகள் மிதந்தன. நான் அப்படி நினைத்தேன். நாவில் பட்டதும் அது என்னவென்று எனக்கு மட்டுப்பட்டது. அது புகையூட்டிய பேக்கன். அதாவது பதனிடப்பட்ட பன்றி இறைச்சி. அந்த சூப் தக்காளியிலும், பீட்ரூட்டிலும், முட்டைக் கோசிலும்தான் தயாராகியிருந்தது. ஆனால் சுவைக்காக பேக்கன் சேர்க்கப்பட்டிருந்தது. அது அங்கே குற்றமில்லை. ஏனெனில் சுத்த சைவம் என்கிற பதமோ அப்படி ஒரு சித்தாந்தமோ அங்கு புழக்கத்தில் இல்லை. நான் நல்ல வார்த்தை சொல்லி, நண்பரை பேக்கன் தூவிய தக்காளி சூப்பிலிருந்தும் தெய்வக் குற்றத்திலிருந்தும் காப்பாற்றினேன்.
உயர்வு, தாழ்வு இல்லை...
அடுத்த நாள் விருந்திற்கான ஆயத்தத்தில் இருந்த எனது உறவுக்காரப் பெண், "அண்ணே, நீங்க கார்த்திகையா, புரட்டாசியா?" என்று கேட்டதும் தெய்வக் குற்றம் நேராதிருக்கத்தான். நான் கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி ஊருக்கு வந்திருந்தபோதுதான் இந்தக் கேள்வி என்னிடம் வந்து சேர்ந்தது. அது கார்த்திகை மாதம். ஆகவே, 'நான் புரட்டாசி மாசக்காரன்' என்று பதில் சொன்னேன்.
உலகில் 90%க்கும் அதிகமான மக்கள் அசைவர்கள். உலகெங்கிலும் அசைவ உணவே பொதுவான உணவாக இருக்கிறது. இந்தியாவிலும் அசைவர்கள்தான் அதிகம். ஆனால் இங்கே சைவ உணவிற்கு ஒரு புனிதத்துவம் ஏற்றப்பட்டிருக்கிறது. அதை நிலை நிறுத்துவதற்காக அசைவ உணவு சிறுமைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவர் உணவும் அவரவர் தெரிவு. ஒருவருக்கு அமைந்த சூழலும், அவருக்குப் பிடித்தமான சுவையும், அவருக்கு வாய்த்திருக்கிற வசதியும், அவர் கைக்கொண்டிருக்கும் நம்பிக்கைகளும் அன்னாரது உணவை நிர்ணயிக்கின்றன.
எந்த உணவும் உயர்ந்ததும் அல்ல, தாழ்ந்ததும் அல்ல. நோன்புக் காலத்தில் அசைவத்தைத் தவிர்க்கலாம். அதனால் அசைவம் ஆண்டவனுக்கு ஆகாத பண்டமாகிவிடாது. இந்த ஞானம் நமக்கு வர வேண்டும். அப்போது உணவின் பெயரைச் சொல்லி நடத்தப்படும் அரசியலும் முடிவுக்கு வரும்.
3
5
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
கிழவன் 3 years ago
//இங்கே சைவ உணவிற்கு ஒரு புனிதத்துவம் ஏற்றப்பட்டிருக்கிறது. அதை நிலை நிறுத்துவதற்காக அசைவ உணவு சிறுமைப்படுத்தப்படுகிறது // ஒட்டுமொத்த கட்டுரையும் இந்த இரண்டு வரிகளில் அடங்கிவிட்டது.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
SABARATHINAM NACHIAPPAN 3 years ago
மிக அழகான பதிவு. ஆண்டவன் முன் இரண்டு வகையான பதார்த்தங்கள் தான் நெயவேத்தியமாக வைக்கப்படுகி்றன. மடப்பள்ளியில் சமையலானது. இன்னோன்று சமைக்கப்படாத தேங்காய் , வாழைப்பழம் மற்ற பழவகைகள், வெற்றிலை, பாக்கு போன்றவை. சமைக்கப்பட்ட உணவுகளில் தான் பேதம் பார்க்கப்படுகிறது. உங்கள் பதிவில் உள்ளது போல பிற்காலங்களில் நாமாக ஏற்படுத்திக் கொண்டதே சைவ அசைவ வேறுபாடுகள்
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
RAMU SUNDAR RAJAN 3 years ago
தெளிவான கட்டுரை சார்
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Cdr k chinnaiya 3 years ago
தை மாதத்தில் கார்த்திகையும் மார்கழியும் பற்றி பேசுவது ஒரு அழகுதான். இன்னும் ஒரு பத்து மாதம் கவலையில்லை என்ற எண்ணம் ஆசிரியருக்கு வந்ததால் தானோ என்னவோ. மிகவும் அழகாக எழுதியுள்ளார். புள்ளிவிபரங்களை மிக சமர்த்தாக கையாண்டிருக்கிறார். கிருஷ்ணா பக்தி அல்லது வள்ளலார் இயக்கத்தை எங்காவது தொடுவார் என எண்ணினேன். இல்லை. மீன் உணவை சைவ உணவாகக் கருதுவர் வங்கத்தினர். உணவு ஒரு தனிமனிதனின் தேர்வு. அதில் அரசியலைப் புகுத்துவது தவறு. எங்கள் குலதெய்வம் சடையப்ப ருக்கு ஆட்டுக் கறியும் சாராயமும் ரொம்ப பிடிக்கும் அருமையான கட்டுரை மேலும் மேலும் எழுத வாழ்த்துக்கள்
Reply 4 1
Login / Create an account to add a comment / reply.