கட்டுரை, அரசியல், வாழ்வியல், நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு

மக்கள்தொகை: எந்த இடத்தில் நிற்கிறது இந்தியா?

மு.இராமநாதன்
04 Oct 2023, 5:00 am
1

க்கள்தொகையில் இந்தியா முதலிடத்தை எட்டிவிட்டது.  கடந்த ஏப்ரல் மாதம் இப்படி அறிவித்தது ஐக்கிய நாடுகள் மன்றம்.  இல்லை, நாங்கள் இரண்டாம் இடத்தில்தான் இருக்கிறோம். கடந்த ஜூலை மாதம் இப்படி பதிலளித்தது இந்திய அரசு. 

இந்தியாவின் மக்கள்தொகை எந்த இடத்தில் இருக்கிறது? பெருகிவரும் மக்கள்தொகை இந்தியாவிற்கு வரமா, சாபமா?  மக்கள்தொகையை எதிர்கொள்வதில் என்ன திட்டத்தில் இருக்கிறது இந்தியா?  மக்கள்தொகையில் முதலிடத்தில் இருந்து, இப்போது பின்னோக்கிப் போய்க்கொண்டிருக்கும் சீனா நமக்கு வழங்கும் பாடங்கள் யாவை? 

இந்தியா 2023 ஏப்ரல் மாத இறுதியில் முதலிடத்தை அடைந்துவிடும் என்று ஐ.நா அறிவித்தது. இந்த அறிவிப்பு ஏப்ரல் மத்தியில் வெளியானது. இது 2030 வாக்கில் நடக்கும் என்றுதான் மக்கள்தொகை வல்லுநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சொல்லிவந்தார்கள். பின்னர் கோட்டைச் சற்று முன்னால் தள்ளிவைத்து இது 2027இல் நடக்கும் என்றார்கள். பிற்பாடு அது 2025 ஆனது.

கடந்த ஆண்டு உலக மக்கள்தொகை தினம் அனுசரிக்கப்படும் ஜூலை 11ஆம் நாளில் ஐ.நா வெளியிட்ட அறிக்கை, இந்தியா முடிசூடும் நாள் 2023, ஜூலை 15ஆக இருக்கும் என்று கணித்தது.  ஆனால், அதற்கும் முன்பாகவே இந்திய மக்கள்தொகை முதலிடத்தை எட்டிவிட்டதாக இப்போது ஐ.நா அறிவித்திருக்கிறது. ஏப்ரல் மாதத்தின் கடைசி நாளில் ஐ.நா.வின் மக்கள்தொகை மதிப்பீட்டுப் பலகை, இந்தியாவின் மக்கள்தொகை 142.8 கோடி என்று காட்டியது. அதே நாளில் சீனாவின் மக்கள்தொகை 142.5 கோடி. அதாவது ஐ.நா.வின் மதிப்பீட்டின்படி, பல்லாண்டு காலமாக சீனா வகித்துவந்த முதலிடத்தை இந்தியா கைப்பற்றிவிட்டது.

இந்த அறிவிப்புகள் வெளியானபோது ஒன்றிய அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எந்த உரையாடலையும் முன்னெடுக்கவில்லை. எந்தச் சிறப்புத் திட்டத்தையும் முன்மொழியவில்லை. சுமார் மூன்று மாத காலம் இதைக் குறித்து பொதுவெளியில் எதுவும் பேசியதாகவும் தெரியவில்லை. இந்த மவுனம் ஜூலை 25ஆம் நாள் மெலிதாகக் கலைந்தது.  அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்னதாக எழுப்பப்பட்ட வினா ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக விடையளித்த ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், ஐ.நா.வின் மதிப்பீட்டை இந்திய அரசு ஏற்கவில்லை என்றார்.

ஒன்றிய அரசின் மதிப்பீட்டின்படி 2023, ஜூலை 1ஆம் நாள் இந்தியாவின் மக்கள்தொகை 139.2 கோடி மட்டுமே என்றார் அமைச்சர். அன்றைய தினம் சீனாவின் மக்கள்தொகை 142.56 கோடி என்றும் அவர் சேர்த்துக்கொண்டார். சீனாவின் மக்கள்தொகைக் கணக்கிற்கு அமைச்சர் பயன்கொண்டது ஐ.நா.வின் மதிப்பீட்டைத்தான்!

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்

ப.சிதம்பரம் 25 Sep 2023

சுருங்கும் சீனா

இப்போது இல்லையென்றால், இந்தியா இந்தக் கிரீடத்தை எப்போது அணிந்துகொள்ளும்? அமைச்சர் அதைக் குறித்து எதுவும் சொன்னாரில்லை. உறுப்பினர் எவரேனும் இந்தக் கேள்வியைக் கேட்டால், அடுத்துவரும் கூட்டத்தொடர் ஒன்றில் அமைச்சர் பதிலளிக்கக்கூடும். இந்தியா முடிசூடும் நாளையும் பொழுதையும் தள்ளி வைக்கலாமே தவிர, தவிர்க்க முடியாது. ஏன்? இந்தியாவின் மக்கள்தொகை கூடிவருகிறது. மாறாகச் சீனாவின் மக்கள்தொகை சுருங்கிவருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் நாள் சீனாவின் தேசியப் புள்ளியியல் கழகத்தின் ஆண்டறிக்கை வெளியானது. 2022ஆம் ஆண்டின் இறுதியில் சீனா எட்டியிருக்கும் மக்கள்தொகை 141.18 கோடி என்றது அந்த அறிக்கை. இது அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 8-1/2 லட்சம் குறைவு. அதாவது, சீனாவின் மக்கள்தொகை குறையத் தொடங்கிவிட்டது. இனி மென்மேலும் குறையும்.

இதற்கு முக்கியக் காரணம் சீனாவின் பிறப்பு விகிதம் குறைந்துவருவதுதான். கடந்த தசாப்தத்தில் சீனாவின் மக்கள்தொகை வெறும் 7.2 கோடி மட்டுமே அதிகரித்திருக்கிறது. 1970இல் ஆயிரம் பேருக்கு 34 குழந்தைப் பிறப்புகள் என்றிருந்த விகிதம், 1995இல் ஆயிரம் பேருக்கு 17 குழந்தைகள் என்கிற விகிதத்தில் சரிபாதியாகக் குறைந்தது. இப்போது 11.3 என்று மேலும் சரிந்து, உலகின் குறைந்த பிறப்பு விகிதமுள்ள நாடுகளின் பட்டியலில் சீனா சேர்ந்துவிட்டது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

எடுக்காத கணக்கு

இந்தியாவின் மக்கள்தொகைக் கணக்கு, 2021ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கரோனாவால் நடக்கவில்லை. கரோனாவிலிருந்து மீண்டெழுந்ததும் தொடங்கியிருக்க வேண்டும். அப்போதும் எடுக்கவில்லை. சமீபத்தில் மகளிர் இடஒதுக்கீட்டு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் மக்கள்தொகை கணக்கெடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

அதுவும் எப்போது தொடங்கும், எவ்விதம் முன்னெடுக்கப்படும் என்று தெரியவில்லை. அடுத்த ஆண்டு கணக்கெடுப்பு நடந்தாலும் விவரங்கள் வெளியாக மேலும் ஓராண்டு ஆகலாம். ஆனால், எந்தக் கணக்கெடுப்பிற்காகவும் புதிய குழந்தைகள் காத்திருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 67,000க்கும் மேற்பட்ட பிள்ளைகள் பிறப்பதாகக் கூறுகிறது ஒரு புள்ளி விவரம்.

இந்தியா உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடாகிவிடும் என்பது தெரிந்ததுதான். எதிர்பார்த்ததைவிட இது முன்னால் நடந்துவிட்டது, அல்லது விரைவில் நடக்கப்போகிறது. அவ்வளவுதான்!

இது இந்தியாவிற்குச் சாதகமா, பாதகமா? இரண்டு கட்சிக்கும் ஆதரவாளர்கள் இருக்கின்றனர்.

மக்கள்தொகை சாதகமா, பாதகமா?

பாதகம் என்போரின் வாதங்கள் பிரபலமானவை. பல ஆண்டு காலமாகச் சொல்லப்பட்டுவருபவை. நமது எல்லாப் பிரச்சினைகளுக்கும் மக்கள்தொகைப் பெருக்கமே காரணம். நமது வளங்கள் குறைவானவை. அவற்றை அதிகமான மக்கள் பங்கு போட முனைந்தால் பற்றாக்குறை வரும். பஞ்சமும் பசியும் பட்டினியும் நாட்டைப் பீடிக்கும். ஆகவே, பாதகமானது.

சாதகம் என்பாரின் வாதங்கள் காலத்தால் பிந்தியவை. ஒரு நாட்டின் மக்களை அந்த நாட்டின் மனித வளங்களாகக் கருத வேண்டும். அவர்களால் நாடு வளம் பெறும். அதனால் நாட்டு மக்களும் வளம் பெறுவார்கள்.

உலக மக்கள்தொகை, 2022 நவம்பர் மாதத்தில் 800 கோடியை எட்டியது. முன்னைக் காலமாக இருந்தால் எச்சரிக்கைகளும் அச்சுறுத்தல்களும் அவநம்பிக்கைகளும் காற்றை நிறைத்திருக்கும். ஆனால், ஐ.நா இது தொடர்பாக வெளியிட்ட கொள்கை அறிக்கையின் தலைப்பு ‘800 கோடி உயிர்கள், எண்ணிலடங்கா வாய்ப்புகள்’ என்பதாகும்.  மனித வளத்தைச் சுமையாகப் பார்க்கும் போக்கு இப்போது மாறிவிட்டது. ஆகவே, மக்கள்தொகைப் பெருக்கம் என்பது சாதகமானது.

மேற்படி வாதங்கள் இரண்டுக்கும் சீனாவே எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது.

சீன மாடல்

எழுபதுகளின் பிற்பகுதியில் சீனாவின் நிலை சிலாக்கியமாக இல்லை. அதற்கு மக்கள்தொகைப் பெருக்கம் முக்கியமான காரணம் என்று சீனத் தலைவர்கள் நம்பினார்கள்.  அதைச் சட்டம் போட்டுத் தடுக்க முடிவெடுத்தார்கள். ஆகவே, ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை அமல்படுத்தினார்கள். அதை மிகக் கடுமையாகச் செயல்படுத்தினார்கள். அனுமதியின்றி உருவான கருக்கள் கட்டாயமாகக் கலைக்கப்பட்டன. விதிகளை மீறிய பெற்றோர் கடும் அபராதங்களை எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்று அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

ஒற்றைக் குழந்தைத் திட்டம் அமலாக்கப்பட்ட அதே காலகட்டத்தில் சீனாவின் கதவுகள் அந்நிய முதலீடுகளுக்காகத் திறக்கப்பட்டது. சீனாவின் அபரிமிதமான மனித வளத்தால் அது உலகின் தொழிற்சாலையானது. வறுமை குறைந்தது. செல்வம் பெருகியது. இது ஒருபுறம்.

மறுபுறம், ஒற்றைக் குழந்தைத் திட்டத்தால் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் படிப்படியாகக் குறைந்துவந்தது. 1990இல் மக்கள்தொகை அதிகரிக்கும் விகிதம் 1.7%ஆக இருந்தது. 2000இல் இது 0.69%ஆகவும், 2021இல் 0.07%ஆகவும் குறைந்தது.  2022இல் வளர்ச்சி விகிதம் எதிர்த் திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்பதைத்தான் புதிய புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 

சீன இளைஞர்களில் சிலர் திருமணம் செய்துகொள்வதில்லை. திருமணம் செய்துகொள்ளும் பலர் மணநாளைத் தள்ளிப்போடுகிறார்கள். தாமதமாக மணம் செய்துகொள்வோரில் பலர் பிள்ளைப் பேற்றைத் தாமதிக்கிறார்கள். இன்னும் சிலர் பிள்ளையே வேண்டாம் என்றும் இருந்துவிடுகிறார்கள். 2013இல் 1.35 கோடித் திருமணங்கள் நடந்தன. 2020இல் இது 85 லட்சமாகிவிட்டது. 1990இல் முதல் பிள்ளையைப் பெற்ற தாயின் சராசரி வயது 24ஆக இருந்தது. 2020இல் இது 28ஆக உயர்ந்துவிட்டது, ஏன்?

ஒற்றைக் குழந்தைத் திட்டம் கடந்த நாற்பதாண்டுகளில் சீன மக்களின் மனநிலையில் மாற்றத்தை வருத்திவிட்டது. மேலும் சீனாவில் இப்போது பெரும்பான்மை மக்களுக்கு வேலையும் தொழிலும் இருக்கிறது. இதனால் மக்களின் வாழ்நிலை உயர்ந்திருக்கிறது. அவர்களது எதிர்ப்பார்ப்புகள் பெருகிவிட்டன. மறுபுறம், விலைவாசி உயர்ந்துவிட்டது. ஆகவே, சிறிய குடும்பம் போதும் என்கிற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். இது எல்லா வளர்ந்த சமூகங்களிலும் நடப்பதுதான். 

எனில், இதில் சீனா கவலை கொள்ளும் அம்சம் ஒன்றும் இருக்கிறது. அதன் உழைக்கும் வயதினர் (15-64) குறைந்துகொண்டேவருகிறார்கள். 2014இல் 99.7 கோடியாக இருந்த இவர்களின் எண்ணிக்கை, 2021இல் 98.6 கோடியாக குறைந்துவிட்டது.  இது இன்னும் வேகமாகக் குறையும்.  இந்த நூற்றாண்டின் இறுதியில் 37.8 கோடியாகும்.  உலகின் தொழிற்சாலையாக விளங்கும் சீனாவிற்கு இது நல்ல சேதி அல்ல.

இதன் மறுபுடையாக முதியோரின் (64 வயதிற்கு மேற்பட்டோர்) எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஒருபுறம் மருத்துவ வசதிகளின் பெருக்கத்தால் மக்களின் ஆயுள் அதிகரிக்கிறது. மறுபுறம் குடும்பக் கட்டுப்பாட்டால் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை குறைகிறது. இதைச் சீன அரசு இருபது ஆண்டுகளுக்கு முன்னரே உணர்ந்துகொண்டது. ஆனாலும் ஒற்றைக் குழந்தைத் திட்டத்தை 2016இல்தான் தளர்த்தியது. எல்லோரும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம் என்று சட்டம் இயற்றியது. இப்போது சட்டம் மூன்று குழந்தைகளை அனுமதிக்கிறது. ஆனால், சட்டத்தால் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. செலவினங்கள் கூடிவிட்டன. தேவைகள் பெருகிவிட்டன.

நகர்ப்புறப் பெற்றோர்கள் தங்கள் ஒற்றைப் பிள்ளைகளின் குட்டித் தலைகளின் மீது தங்களது சகல எதிர்ப்பார்ப்புகளையும் சுமத்துகிறார்கள். சீன மக்களுக்குத் தமது வேலை, தொழில், வாழ்க்கை, வசதி குறித்த அபிலாஷைகள் அதிகமாகிவிட்டன. மேலும் பல ஆண்டுகளாக அவர்கள் மனங்களில் ஒற்றைக் குழந்தை எனும் சித்தாந்தம் எழுதப்பட்டுவிட்டது. ஆகவே, பலரும் இரண்டாவது குழந்தையை நாடவில்லை. 2016இல் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 1.8 கோடியாக இருந்தது. 2020இல் இது கூடவில்லை, மாறாக 1.2 கோடியாகக் குறைந்தது. புதிய சட்டத்தால் பெரிய விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை. 

இந்திய மாடல்

இந்தியாவில் 1952ஆம் ஆண்டிலேயே குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆனால், நெருக்கடிநிலைக் காலத்தைத் தவிர மற்ற காலங்களில் அது பெருமளவில் கட்டாயமாக இருந்ததில்லை. மிகுதியும் பரப்புரைகள் வாயிலாகவும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாகவுமே திட்டம் அமலாக்கப்பட்டுவந்திருக்கிறது.

இந்தியாவில், 2020ஆம் ஆண்டில் 90 கோடி மக்கள், அதாவது மக்கள்தொகையில் மூன்றில் இருவர், உழைக்கும் வயதினராக (15-64) இருந்தனர். 2030இல் இந்த எண்ணிக்கை மேலும் 10 கோடி உயரும். இப்போதைய ஓர் இந்தியரின் சராசரி வயது 28.4 ஆண்டுகள். இவர் சராசரி சீனரைக் கால் பத்து வயது இளையவர், அதாவது இப்போது ஒரு சீனரின் சராசரி வயது 38.4. அமெரிக்கரின் சராசரி வயதும் சீனாவை ஒட்டியே இருக்கிறது- 38.3. ஒரு பிரிட்டிஷ்காரரின் சராசரி வயது 40.5.

இந்தச் சூழலில், இந்தியாவில் இளமை ஊஞ்சலாடுகிறது. ஆனால், இது இன்னும் 20 ஆண்டுகள்தான் நீடிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள். அதன் பிறகு முதுமை கூடும். அதற்குள் இந்த வாய்பை நாம் பயன்கொள்ள வேண்டும். சீனாவிற்கு இப்படியான வாய்ப்பு வந்தபோது சீனாவால் அதன் பலனைத் துய்க்க முடிந்தது. நம்மால் முடியவில்லை, ஏன்?

1. வேலைவாய்ப்பு

முதலாவதாக, இந்தியாவில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லை. ‘சிஎம்ஐஇ’ (CMIE) என்கிற ஆய்வு நிறுவனம் 2023இன் முற்பகுதியில் வேலையின்மை 7.9%ஆக இருந்ததாகக் கணித்திருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளில் இதுதான் அதிகம்.  அப்படி வேலையில் இருப்பவர்களிலும் பெரும்பான்மையான தொழிலாளர்கள் அமைப்பு சாராதவர்கள்.  திறன் குறைந்த பணிகளைச் செய்பவர்கள்.

ஒப்பந்தக் கூலிகளாகவும் உதிரித் தொழிலாளிகளாகவும் பியூன்களாகவும் செக்யூரிட்டிக் காவலர்களாகவும் தங்களது உழைப்பை விழலுக்கு இறைத்துக்கொண்டிருப்பவர்கள். எந்தப் பணிப் பாதுகாப்பும் இல்லாதவர்கள். அதைக் கரோனாவின் இரண்டாவது அலை நமக்கு இரண்டாவது முறையாக உணர்த்தியது.

சமீபத்தில் வெளியான அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின்படி பெண்கள், பட்டதாரி இளைஞர்கள் ஆகியோரிடையே வேலையின்மை அதிகரித்துவிட்டது.

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

2. கல்வி

இரண்டாவதாக, கல்வி. இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 77% பேர். சீனாவில் இது 96.4%.  1997இல் சீனப் பட்டதாரிகளின் எண்ணிக்கை 35 லட்சம், இப்போது 21.8 கோடி.

‘உலகப் பொருளாதார மன்றம்’ என்கிற அமைப்பு இந்தியத் தொழிலாளர்களில் கனரகத் தொழிலுக்கு ஏற்ற திறன் மிக்கவர்கள் 5% பேர்தான் என்கிறது. ஏன்? கல்வி அறிவு உள்ளவர்களால்தான் திறன் மிக்க தொழிலாளர்களாக முடியும். ஆகவேதான், அதிகத் திறன் தேவைப்படும் பெருந்தொழில்கள் ஒப்பீட்டளவில் இந்தியாவில் குறைவாக இருக்கின்றன.

உலகின் தொழிற்சாலையாக விளங்கும் சீனாவால் கரோனாவிற்குப் பிறகு அதன் அளப்பரிய ஏற்றுமதியை முன்புபோல் தொடர முடியவில்லை. அதன் விநியோகச் சங்கிலி பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியதே காரணம். பன்னாட்டுப் பயனர்களுக்குப் பொருட்கள் உரிய காலத்தில் போய்ச் சேரவில்லை.

பல மேலை நாடுகள் தாங்கள் அதிகமும் சீனாவை நம்பியிருப்பதை உணர்ந்தன. இந்நிலையை மாற்ற தங்களது உற்பத்தித் தளங்களை சீனாவிலிருந்து இடம்பெயர்க்க முனைந்தன. அப்போது அந்த நாடுகளின் தெரிவு மனித வளம் மிக்க இந்தியாவாக இருந்திருக்க வேண்டும். ஆனால், அது அப்படி நடக்கவில்லை. இதற்கு இந்தியாவின் உள்கட்டமைப்பில் இருக்கும் (துறைமுகம், சாலை, ரயில், நீர், மின்சாரம்) போதாமை ஒரு காரணம்.

நமது தொழிலாளர்கள் சீனத் தொழிலாளர்களைப் போல் திறன் மிக்கவர்களாக இல்லை என்பதுதான் முக்கியக் காரணம். கனரகத் தொழில்களுக்கு அவசியமான கல்வியும் தொழிற்பயிற்சியும் நம்மவர்களிடம் குறைவாக இருக்கிறது.

3. உடல் நலம்

மூன்றாவதாக, உடல் நலம். நம் மக்களின் உடல் நலம் குறித்த புள்ளி விவரங்களும் நம்பிக்கை தருவனவாக இல்லை. கரோனாவுக்கு முன்பு ‘லான்ஸட்’ எனும் மருத்துவ இதழ் பொதுச் சுகாதரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளைக் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்படி தயாரிக்கப்பட்ட 195 நாடுகளின் பட்டியலில் இந்தியாவால் 178வது இடத்தையே பிடிக்க முடிந்தது. கரோனா காலம் நமது பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனத்தைப் பறைசாற்றியது. இந்தியர்களின் தற்போதைய சராசரி ஆயுள்காலம் 69. ஒரு சராசரிச் சீனர், ஒரு சராசரி இந்தியரைக் காட்டிலும் 8 ஆண்டுகள் அதிகம் வாழ்கிறார்.

ஆக, நமது மனித வளத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் எனில் வேலைவாய்ப்பு, கல்வி, உடல் நலம் ஆகிய மூன்று துறைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது மக்கள்தொகைப் பெருக்கத்தால் இன்னொரு பிரச்சினையையும் நேரிடுகிறோம். அது மாநிலங்களுக்கு இடையில் நிலவும் சீரற்ற மக்கள்தொகைப் பெருக்கம்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

எப்படி இருக்கிறது தேசிய குடும்ப நலம்?

ப.சிதம்பரம் 16 May 2022

சமச்சீரின்மை

மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதத்தை நம்மால் கட்டுப்படுத்த முடிந்திருக்கிறது. ஆனால், இது மாநிலங்களுக்கிடையில் சீராக இல்லை.  இந்தியாவில் மக்கள்தொகையின் வளர்ச்சி விகிதம் 1990இல் 2.16%ஆக இருந்தது. இது 2000இல் 1.84%ஆகவும், 2021இல் 0.8%ஆகவும் குறைந்திருக்கிறது.  அதாவது, இந்தியாவின் மக்கள்தொகை கூடினாலும், அது கூடுகிற விகிதம் குறைந்துவருகிறது. இதற்குக் கருவள விகிதம் குறைந்துவருவதுதான் காரணம். ஒரு பெண் தன் வாழ்நாளில் ஈன்று புறந்தரும் பிள்ளைகளின் எண்ணிக்கைதான் கருவளம் எனப்படுகிறது.

இதில் 1971இல் இந்தியாவின் கருவள விகிதம் 5.5ஆக இருந்தது. அதாவது, அப்போது ஓர் இந்தியப் பெண்மணி சராசரியாக 5.5 குழந்தைகளைப் பெற்றார். இது 2020இல் 2.2ஆகவும், இப்போது இது 2ஆகவும் குறைந்துவிட்டது. இந்த விகிதம் 2.1ஆக இருந்தால், அது பதிலீட்டு விகிதம் எனப்படுகிறது. அந்த விகிதத்தில் பிள்ளைப் பேறு நிகழ்ந்தால் மக்கள்தொகை கூடாமலும் குறையாமலும் இருக்கும். தற்போது இந்தியாவின் சராசரிக் கருவள விகிதம் பதிலீட்டு விகிதத்தைவிடக் குறைந்துவிட்டது. இது நல்ல செய்தி. கூடவே ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது.

இந்த விகிதம் எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரி இல்லை. ஐந்து மாநிலங்களில் இது பதிலீட்டு விகிதத்தைவிட அதிகமாக இருக்கிறது. அவை:  பிஹார் (2.98), மேகாலயா (2.91), உத்தர பிரதேசம் (2.35), ஜார்கண்ட் (2.26), மணிப்பூர் (2.17). ஐந்து தென் மாநிலங்களின் கருவளவிகிதம் (1.7-1.8), பல வட இந்திய மாநிலங்களைவிடக் குறைவாக இருக்கிறது. இதனால் இந்தியாவின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு, கருவள விகிதத்தை வெற்றிகரமாகக் குறைத்துவிட்ட மாநிலங்களின் வருவாயில் கணிசமான பங்கு மடைமாறுகிறது. தமிழ்நாடு ஒன்றியத்திற்குச் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 பைசா மட்டுமே திரும்பப் பெறுகிறது. அதேவேளையில் உத்திரப் பிரதேசம் ஒரு ரூபாய் செலுத்தி ரூ 2.73 பெறுகிறது. பிஹாரோ, தான் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் ரூ.7.06 பெறுகிறது.

இது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட வளர்ந்த மாநிலங்களுக்கு ஒன்றியம் வழங்கும் தண்டனையாக அமைகிறது. இதைச் சீராக்க வேண்டும்.

அடுத்து, 2026இல் நாடாளுமன்றத் தொகுதிகளின் மறுசீரமைப்பு நடக்க வேண்டும். இப்போதைய நாடாளுமன்றத் தொகுதிகள் 1971 மக்கள்தொகைக் கணக்கின்படி பிரிக்கப்பட்டவை. அடுத்து எடுக்கப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் பிரிக்கப்பட்டல் அது தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைக் கணிசமாகக் குறைத்துவிடும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதற்கு இது இன்னொரு தண்டனையாக அமைந்துவிடும். ஒன்றிய அரசு அப்படிச் செய்ய முனைந்தால், அதைத் தென் மாநிலங்கள் அனுமதிக்கலாகாது.

இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு

மோடி அரசின் மாபெரும் மறைப்பு

ஜி.என்.தேவி 23 Sep 2022

என்ன செய்யலாம்?

நமது நாட்டில் உழைக்கும் வயதினரின் எண்ணிக்கை கூடிவருகிறது. ஆனால் இந்த மனித வளத்தை பயன்கொள்ளப் போதிய திட்டங்கள் நம்மிடம் இல்லை. ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களிலும் கல்வியையும் பொதுச் சுகாதாரத்தையும் மேம்படுத்த போதிய நிதி ஒதுக்க வேண்டும். 

இவை இரண்டும் விலையின்றி வழங்கப்படவும் வேண்டும். புதிய தொழில்கள் தொடங்கப்பட வேண்டும். அதன் வாயிலாக புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். கல்வியில் சிறந்த, உடல் நலம் மிக்க சமூகம் பொறுப்புணர்வு மிக்கதாகவும் இருக்கும். அங்கே கருவள விகிதம் குறைவாக இருக்கும்.  அங்கே சாதி மதச் சண்டைகள் இருக்காது. 

அங்கே திறன் மிக்க தொழில் சமூகம் உருவாகும். 'தொழில் பெருகும், தொழிலாளி வாழ்வான்'. நம் மனித வளத்தின் மதிப்பும் உயரும். நாடு மேன்மையுறும். நாட்டு மக்களும் வளம் பெறுவார்கள். அப்போது வளர்ச்சி அடைந்த மாநிலங்களின் வளம், வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு மடைமாற்றப்படாது. அங்கே மக்கள்தொகை சாபமாக அல்ல, வரமாக இருக்கும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மக்களவையில் தமிழகத்தின் இடங்கள் குறைகிறதா?
சிக்கிம் விழித்துக்கொண்டது… தமிழ்நாடு ஏன் தூங்குகிறது?
மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்குத் தண்டனை கூடாது
தமிழ்நாட்டுக்கு வேண்டும் தனி மக்கள்தொகைக் கொள்கை
எப்படி இருக்கிறது தேசிய குடும்ப நலம்?
புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு தண்டிக்கப்படுமா?
தமிழ்நாட்டு முதியவர்களின் எதிர்காலம்?
மோடி அரசின் மாபெரும் மறைப்பு
கேம்பிரிட்ஜ் சமரச ஏற்பாடு இந்தியாவுக்குத் தீர்வாகுமா?
மகளிர் ஒதுக்கீடு: பாஜகவின் ஜும்லா அரசியல்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


3

1





மாநிலத் தலைநகரம்மனநலம்ஆளுநர்களின் செயல்களும்சமத்துவபுரங்கள்பாஜக அரசுதமிழ் சைவ மடாதிபதிசந்துரு பேட்டி அருஞ்சொல்வர்ண தர்ம சிந்தனைவிஜய் ரூபானிஉபி தேர்தல் 2022சரிதானா இந்தத் திட்டம்?திரைப்பட நடிகர்கள்தமிழ் நேர்முகத் தேர்வுதமிழ்நாடு நௌபணி நீட்டிப்புதனுஷ்கோடிநூலக ஆணைக் குழுச் சீர்திருத்தம்உடை அரசியல்மானுட செயல்கள்மத அடிப்படைகுற்றவாளிprerna singhவிற்கன்ஸ்ரைன்: மொழிகுழப்பவாதிகள்எல்.ஐ.சி. தனியார்மயம்வேளாண்மைக்கு வருபவர்களை ‘டிஸ்கரேஜ்’ செய்வேன்: பாமயபாகிஸ்தான் – சீன உறவு ஏன் வலுப்படவே இல்லை?writersamasஇயந்திரமயம்குஜராத்தியர்களின் பெருமிதம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!