கட்டுரை, அரசியல், கலாச்சாரம் 10 நிமிட வாசிப்பு

கேரளாவுக்குள் ஒரு ஜார்கண்ட்

மு.இராமநாதன்
16 Jun 2022, 5:00 am
2

அது ஒரு நெடுந்தூர ரயில். இரண்டு நாள் பயணம். புறப்படும் இடம் தன்பாத். ஜார்கண்ட் மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம். சேருமிடம் கொச்சி. கேரள மாநிலத்தின் ஆகப் பெரிய நகரம். பொதுவாக இம்மாதிரி ரயில்கள் சேருமிடங்களின் பெயரால் அறியப்படும் அல்லது புறப்படுமிடம் சேருமிடம் ஆகிய இரண்டு நகரங்களின் பெயராலும் அறியப்படும். இந்த வழமைக்கு மாறாக இந்த ரயிலுக்குப் புறப்படும் இடத்தின் பெயர் மட்டுமே சூட்டப்பட்டிருக்கிறது. அதாவது தன்பாத் விரைவு வண்டி என்பது ரயிலின் பெயர். அதன் காரணம் எனக்குப் பின்னால் தெரியவரும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னால் இந்த ரயிலில் பயணம் செய்தேன். நாங்கள் புறப்பட்ட இடம் தன்பாத் அல்ல, கோவை. நானும் நண்பரும் காலையில் புறப்பட்டு, மதியம் கொச்சி போய்ச் சேர்ந்தோம். நண்பர்தான் பதிவு செய்திருந்தார். பகல் நேரப் பயணத்திற்கு உகந்தது என்பதுதான் நண்பரின் தேர்வுக்குக் காரணம். நாங்கள் பயணித்தது குளிரூட்டப்பட்ட மூன்றடுக்குப் படுக்கைப் பெட்டி. அதில் 72 இருக்கைகள்; ஆனால், நூறு பயணிகளுக்கு மேல் இருந்தார்கள். எல்லோரும் வட இந்தியர்கள். பலரும் இளைஞர்கள். அதிகமும் ஆண்கள்.

ஒரு முதுகுப்பை மட்டுமே அவர்தம் பயணப் பொதி. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலும் பயணிகள் அமர்ந்திருந்தனர். நாங்கள் இருக்கை எண்களைச் சொன்னோம். ஒதுங்கிக்கொண்டு அமர இடம் கொடுத்தார்கள். ரயில் புறப்பட்டதும் நண்பர் எங்களைச் சுற்றியிருந்த ஏழெட்டு பேரிடம் அவரவர் இருக்கை எண்களைக் கேட்டார். யாரும் பதில் சொல்லவில்லை. ஆனால், சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்களில் பாதிப் பேர் வேறு இடங்களுக்கு மாறிக்கொண்டார்கள்.

அந்த ரயிலின் சாளரத்திற்கு வெளியே தமிழக, கேரள நிலக்காட்சிகள் விரைந்து மாறிக்கொண்டே வந்தன. ஆனால், சாளரத்திற்கு உள்ளே அந்தப் பெட்டி, வட இந்தியாவிலிருந்து வெட்டி எடுத்துக்கொண்டுவந்த ஒரு துண்டாகவே இருந்தது.

பெட்டி எங்கும் காலித் தின்பண்டப் பைகளும் பழத் தொலிகளும் காகிதக் குப்பைகளும் சிதறிக் கிடந்தன. கழிப்பறையின் தரம் சொல்லும் தரமன்று. பயணம் முடிகிறவரை பரிசோதகர் வரவில்லை; அது தற்செயல் அல்ல. அப்படித்தான் நினைக்கிறேன்.

ரயில் பாலக்காடு, திருச்சூர், இரிஞ்சாலக்குடா, அங்கமாலி முதலான இடங்களில் நின்றது. இந்த நிலையங்களில் கணிசமான பயணிகள் இறங்கிக்கொண்டனர். இந்த நிலையங்களைக் கண்டறிவதில் அவர்களுக்குச் சிக்கல் இருந்திராது. பின்னாளில் இந்தி மட்டும் படிக்கத் தெரிந்தவர்கள் இந்த நிலையங்களைப் பயன்படுத்துவார்கள் என்கிற தீர்க்கதரிசனம் ரயில்வே நிர்வாகத்திற்கு இருந்திருக்கலாம். அதன் பொருட்டே கடந்த 75 ஆண்டுகளாக நிர்வாகம் இந்த நிலையங்களின் பெயர்களை இந்தியில் எழுதி வைத்திருக்கிறது.

எங்கள் பயண அனுபவத்தைக் கொச்சி நண்பரிடம் பகிர்ந்துகொண்டேன். அவர் கேட்ட கேள்வி இது- “ஏன் இந்த பெங்காலி ரயிலில் வந்தீர்கள்?.” மலையாளிகளில் சிலர் எல்லா வட இந்தியர்களையும் 'பெங்காலி' என்றுதான் அழைப்பார்கள். இந்த ரயில் வட இந்தியப் பயணிகளுக்கு நேர்ந்துவிடப்பட்டிருக்கிறது என்பதுதான் நண்பர் சொன்னதன் பொருள். இதில் நாம், தென்னிந்தியர்கள் ஏறாமல் தவிர்க்க வேண்டும் என்று அவர் சொன்னதகாவும் கொண்டுகூட்டிப் பொருள் கொள்ளலாம். இந்த ரயில் புறப்படும் இடத்தின் பெயரால் மட்டும் அறியப்படுவதற்கும் அதுவே காரணமாகலாம்.

பெங்காலி ஏன்?

நண்பர் ஏன் இதைப் 'பெங்காலி ரயில்' என்றழைக்கிறார்? இது என்ன நவீனத் தீண்டாமை? இது ஒரே நாடு இல்லையா? இங்கே ஓடுவது ஒரே ரயில் இல்லையா?

நாங்கள் பயணம் செய்த பெட்டியில் பாதிப் பேராவது முன்பதிவு செய்திருக்கக்கூடும். மற்றவர்கள் பயணச் சீட்டு வாங்கியிருப்பார்கள், ஆனால் முன்பதிவு செய்திருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இது ரயில்வே நிர்வாகத்திற்குத் தெரிந்துதான் இருக்கிறது. இதற்கு அவர்களின் மௌன சம்மதமும் இருக்கக்கூடும். அதனாலேயே பரிசோதகரின் இடையீடு நிகழவில்லை என்று கருத இடமிருக்கிறது.

அதாவது சிலர் முன்பதிவு செய்தும், இன்னும் சிலர் பதிவுசெய்யாமலும், ஆனால், எல்லோரும் குளிரூட்டப்பட்ட முன்பதிவுப் பெட்டியில் பயணம் செய்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த நிலைமை இல்லை.

2010இல் நிகழ்ந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. இதேபோல கொச்சிக்குப் போயிருந்தேன். நண்பர்களைச் சந்தித்த பிற்பாடு அங்கிருந்து ஊர் திரும்ப ரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்தேன். அது தீபாவளி நேரம். நான் போக வேண்டிய ஆலப்புழை - சென்னை ரயிலுக்கு முன்பாக, விசாகப்பட்டினம், புவனேஸ்வரம், கொல்கத்தா வழியாக கௌகாத்தி செல்லும் விரைவு ரயில் வந்தது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகள் முண்டியடித்து  ஏறினார்கள். இருக்கைகளுக்கு இடையிலும், நடைபாதைகளிலும்கூட நெருக்கியடித்து அமர்ந்துகொண்டார்கள்.

படிகளிலும் ஜன்னல்களிலும் தொற்றிக்கொண்டார்கள். அவர்கள் ஒடிசா, வங்கம், பிஹார், அசாம் முதலான மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் ஊர் போய்ச் சேர இரண்டு நாட்கள் வேண்டிவரும். இப்படியொரு சிரமமான பயணத்தை  மேற்கொள்கிறார்களே எனப் பச்சாதபம் மிகுந்தது. அதை வழியனுப்ப வந்த நண்பரிடம் சொன்னேன். அவர் பதிலளித்தார். அந்தப் பதில் ஒரு கேள்வியாக இருந்தது. “இவ்வளவு தொழிலாளர்கள் இந்தத் தடத்தில் பயணிப்பார்கள் என்பது ரயில்வே நிர்வாகத்துக்குத் தெரியாதா?”

புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குறித்து அரசாங்கங்களிடம் முறையான கணக்கெடுப்பு அப்போது இல்லை. இப்போதும் இருப்பதாகத் தெரியவில்லை.  எனினும் இந்தப் பத்தாண்டுகளில் வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவிற்கு வரும் ரயில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அப்படியான ஒன்றுதான் தன்பாத் விரைவு வண்டி. என்னதான் 'பெங்காலி ரயில்' என்கிற அழைப்பில் ஒரு விலகலும் பகடியும் இருந்தாலும், ஒப்பீட்டளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் கண்ணியமாக நடத்தப்படும் மாநிலங்களில் ஒன்று கேரளா.

இதற்கு இரண்டு காரணங்கள். முதலாவது, கணிசமான கேரளியர் புலம்பெயர்ந்து வாழ்பவர்கள்.  ‘வளைகுடா மலையாளி’களைப் பற்றிய செய்தி இல்லாமல் அங்கு எந்த நாளிதழும் அச்சாகாது. கேரளாவில் ஒவ்வொரு மூன்றாம் வீட்டிலும் ஒருவர் அயல் நாட்டில் பொருள் ஈட்டுபவராக இருப்பார். 2021 பெருந்தொற்றுக் காலத்தில் கேரளியர் இந்தியாவிற்கு அனுப்பிய பணத்தின் மதிப்பு ரூ1.30 லட்சம் கோடி ரூபாய். இது நாடெங்கிலுமிருந்து இந்தியப் பணியாளர்கள் தாய்நாட்டிற்கு அனுப்பிய அந்நியச் செலாவணியில் ஐந்தில் ஒரு பகுதி.

இரண்டாவதாக, கேரளாவுக்குப்  புலம்பெயர்ந்த தொழிலாளர் என்போர் புதியவர்கள் அல்லர்.  நான் 1980களில் கொச்சியில் வேலை பார்த்தேன். அப்போது கட்டுமானத் துறையில் திறனும் பயிற்சியும் தேவைப்படும் கொத்துப் பணி, தச்சுப் பணி, கொல்லுப் பணி, கம்பிப் பணி, கற்பணி முதலான வேலைகளை மலையாளிகளே செய்தனர். இன்னும் மின் பணி, குழாய்ப் பணி, வர்ணப் பணி முதலானற்றையும் தங்கள் கைவசமே வைத்துக்கொண்டனர். திறன் குறைந்த பணிகளைத் தமிழர்களுக்கு விட்டுக் கொடுத்தனர். முக்கியமாக மண் வெட்டுகிற பணியைத் தமிழர்கள் செய்தனர். இவர்களுக்குத் 'தூம்பாப் (மண்வெட்டி) பணியாளர்' என்று பெயர்.

திறன் மிகுந்த பணியாளர்களுக்கு உதவியாளர்களாகவும் தமிழர்கள் வேலை பார்த்தனர்.  சிற்றாள் என்றழைக்கப்படும் பெண் தொழிலாளிகளிலும் கணிசமானவர்கள் தமிழர்களாக இருந்தனர். இவர்களில் பலரும் கம்பம், தேனி, உசிலம்பட்டி, திண்டுக்கல், மதுரை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு முறையான ஊதியம் கிடைத்தது. அங்குள்ள தொழிற்சங்கங்கள் அதை உறுதி செய்தன. ஆனால், அவர்களது வாழ்நிலையைப் பற்றி அப்படிச் சொல்லிவிட முடியாது. அவர்கள் வாத்துருத்தி என்கிற பகுதியில் செறிவாக வசித்தனர்.

மறை தட்டிகளாலும் சாக்குப் படுதாக்களாலும் உருவாக்கப்பட்ட,  ஒற்றை அறைக் குடியிருப்புகளில் ஒதுங்கிக்கொள்வார்கள். சுகாதாரக் குறைவைப் பொருட்படுத்த மாட்டார்கள். பிள்ளைகளை ஊரிலேயே விட்டுவிடுவார்கள். புத்தாயிரமாண்டில் இந்த நிலை மாறியது. கேரளத்தில் 'மண்வெட்டிக் கூலி தின்பதை' தமிழர்கள் நிறுத்திக்கொண்டார்கள். தங்கள் மண்ணிலேயே தமிழர்களுக்கு வாழ்வாதாரம் வந்து சேர்ந்தது. தமிழர்கள் காலி செய்த திறன் குறைந்த பணியாளர்களுக்கான இடத்தை வட இந்தியத் தொழிலாளர்கள் நிரப்பினர். அதேவேளையில் திறனும் பயிற்சியும் தேவைப்படும் பணிகளைச் செய்துவந்த மலையாளிகளின் எண்ணிக்கையும் குறைந்தது. அந்த இடத்தையும் வடவர்களால் நிரப்ப முடிந்தது.

விருந்துத் தொழிலாளர்கள்

கட்டுமானப் பணிகள் கேரளத்தில் அதிகரித்துவருகின்றன. அதன் தேவைக்கேற்ப நாள்தோறும் தன்பாத் விரைவு வண்டிகள் மூலமாக வட இந்தியத் தொழிலாளர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். கட்டுமானப் பணிகளில் மட்டும் கேரளத்தில் சுமார் 20 லட்சம்  புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றக்கூடும் என்கிறது ஒரு மதிப்பீடு. இவர்களின் பங்களிப்பு கட்டுமானத்தில் மட்டுமல்ல. உணவகங்களில் பரிசாரகர்கள், குடியிருப்புகளில் காவல்காரர்கள், ஆலைகளில் தொழிலாளர்கள், அங்காடிகளில் விற்பனையாளர்கள், மராமத்துப் பணியாளர்கள், விவாசயக் கூலிகள் என்று இவர்கள் எடுக்கும் அவதாரங்கள் பல. கேரள அரசின் திட்டக் குழு, மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 35 லட்சமாக இருக்கும் என்று மதிப்பிட்டிருக்கிறது. இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ.750 கோடி தத்தமது சொந்த மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். இதன் அடிப்படையில் ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி சராசரியாக மாதம் ரூ.16,000 ஈட்டுவதாக மதிப்பிட்டிருக்கிறது இந்தக் குழு. இது கேரளத் தொழிலாளியின் சராசரி வருவாயைக் காட்டிலும் சுமார் ரூ.3,500 குறைவு.

இந்த இடைவெளி, புலம்பெயர் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் மற்ற தென்னினிந்திய மாநிலங்களில் இன்னும் அதிகமாக இருக்கக்கூடும். புலம்பெயர் தொழிலாளர்கள் கணிசமாகப் பணியாற்றும் குஜராத், மராட்டியம் ஆகிய மேற்கு மாநிலங்களில் இந்த வேறுபாடு இன்னும்கூட அதிகமாக இருக்கும் என்கிறார்கள்.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பெரும்பாலன கேரள மக்களுக்குக் காழ்ப்புணர்வு இல்லை. கரோனா காலத்தில் நாடெங்கிலும் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கால்நடையாகவே தங்கள் சொந்த மண்ணிற்குத் திரும்பியபோது, கேரள அரசு அவர்களுக்குப் போக்குவரத்து வசதி செய்தது. அதை லட்சக்கணக் கணக்கான தொழிலாளர்கள் பயன்படுத்திக்கொண்டனர். மற்றவர்கள் உள்ளூர் உறைவிடங்களிலேயே தங்கிக்கொண்டனர். இவர்களைக் கேரள அரசு 'விருந்துத் தொழிலாளர்கள்' என்றழைக்கிறது.

அது கரோனா காலத்தில் வழங்கப்பட்ட உபசார வார்த்தையாகலாம். விருந்தும் மருந்தும் நெடுநாள் நீடிக்க முடியாது. புலம்பெயர் தொழிலாளர்கள் விருந்தினர்களாக அல்ல, சகாக்களாக நடத்தப்பட வேண்டும். இது மலையாளிகளால் முடியும்.  ஏனெனில், புலம்பெயர் வாழ்வோடு விதிக்கப்பட்ட இன்னல்களும் தியாகங்களும் இன்னதென்று மலையாளிகள் அறிவார்கள். மேலும், கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியும் வலுவான தொழிற்சங்கத்தைக் கட்டியிருக்கும் மாநிலம் கேரளம். தொழிலாளராய் இருப்பதன் சவால் மலையாளிகளுக்குத் தெரியும்.

வளைகுடாவில் பணியாற்றும் மலையாளிகளுக்கும் கேரளாவில் பணியாற்றும் வட  இந்தியர்களுக்கும் ஒற்றுமைகள் உண்டு. இரு சாராரும் வளம் தேடிப் புலம் பெயர்ந்தவர்கள். கடுமையான உழைப்பாளிகள். எனில், ஒற்றுமைகள் இந்த இடத்தில் முடிகின்றன.

இந்தியாவிலேயே கல்வி சிறந்த மாநிலம் கேரளா. மலையாளிகள், அந்நிய மண்ணிலும் தங்கள் அடையாளங்களைப் பேணுபவர்கள்; கணிசமாகப் பொருளீட்டுபவர்கள். மாறாக வட இந்தியத் தொழிலாளிகள் கல்வியில் பின் தங்கியவர்கள், கூலி மிகக் கேட்கத் தெரியாதவர்கள், விதிக்கப்பட்ட இடங்களில் ஒதுங்கி வாழ்பவர்கள்.

இந்த வேற்றுமைக்கு என்ன காரணம்? பெரும்பாலான வட  இந்திய அரசுகள், தென்னிந்திய அரசுகளோடு ஒப்பிடும்போது மக்கள் நலனில் அக்கறை செலுத்துவதில்லை என்பது ஒரு காரணம். அந்த அரசுகளை நிர்ப்பந்திக்காத அல்லது நிர்ப்பந்திக்கத் தெரியாத மக்களும் ஒரு காரணம். இதற்கு அவர்கள் கல்லாமையும் காரணமாகலாம். அதுவே தன்பாத் ரயில்களின்  தூய்மைக் குறைவிற்கும் காரணமாகலாம். முறையாக முன் பதிவு செய்தும், சக பயணிகளுக்கு தொந்தரவு இல்லாமலும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற பொறுப்பு வட இந்தியத் தொழிலாளர்களிடம் குறைவாக இருப்பதற்கும் இதுவேதான் காரணம்.

ஒரு பொதுப் போக்குவரத்தைப் பேணுவதற்குரிய பொறுப்புணர்வு அவர்களுக்கு வர வேண்டும். இதில் அவரவர் பிறந்து வளர்ந்த மாநில அரசுகளுக்குப் பொறுப்பு இருக்கிறது. அரசும் மக்களும் சாதி மதச் சண்டைகளைக் கைவிட வேண்டும். சிறுபான்மையினரின் வாழிடங்களை அழிப்பதற்கு அல்ல, மாறாக சகிப்பின்மையைத் தரைமட்டமாக்குவதற்கே புல்டோசர்களைப் பயன்படுத்தப்பட வேண்டும்.

இதுகாறும் கேரளா என்றும் மலையாளிகள் என்றும் சொல்லப்பட்ட பல வாக்கியங்களில் தமிழ்நாடு என்றும் தமிழர்கள் என்றும் பதிலீடு செய்ய முடியும். புலம்பெயர்ந்து நம் மாநிலத்திற்குகு வருகை தரும் தொழிலாளர்களை பண்போடு நடத்துவது நம் கடன். அவர்களுக்கு உரிய வாழிடங்களையும் ஊதியத்தையும் உறுதி செய்வது நம் அரசின் கடன். நமது மாநிலத்திற்கும் மக்களுக்கும் உரித்தான கலாச்சாரத்திற்கும் பாதுகாப்பிற்கும் இடையூறின்றி நடந்து கொள்வது புலம்பெயர் தொழிலாளரின் கடன். அவர்கள் தத்தமது ஊருக்குச் செல்லும்போது நெரிசலற்ற வசதியான பயணத்தைச் சாத்தியமாக்குவது அவரவர் அரசின் கடன்.

இந்தியா, இன்று மனித வளத்தால் கொழிக்கிறது. அந்த வளம் பரவலாக இல்லை. ஆகவே செல்வ வளம் மிக்க மாநிலங்களை நோக்கி மனித வளம் மிக்க மாநிலங்களின் தொழிலாளர்கள் புலம்பெயர்வது இயற்கையானது. அப்படியான புலம்பெயர்வுகள் கண்ணியத்துடன் நடக்க வேண்டும். அதற்கு இரு முனையில் இருக்கும் அரசுகளும் மக்களும் பொறுப்பானவர்கள். அதற்கு எல்லோருக்கும் பள்ளிக் கல்வி வழங்கப்பட வேண்டும். அது தொழிலாளர்கள் தம் தொழில்சார்ந்த நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ள உதவும். தமது உரிமைகளைக் கேட்டுப் பெறவும், கடமைகளைக் கேளாமல் செய்யவுமான பண்பையும் வளர்க்கும்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் முறையான ஊதியம் பெற வேண்டும். இது உள்ளூர் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும்; தேவையற்ற காழ்ப்புணர்வும் தவிர்க்கப்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளைத் தொழில் நிறுவனங்களும் அரசும் உறுதிசெய்ய வேண்டும். அப்போது வளைகுடாவில் பணியாற்றும் மலையாளிகளுக்கு இணையான வாழ்நிலையை கேரளாவில் பணியாற்றும் வட இந்தியர்களும் பெற முடியும். அது புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்வுக்கு வகை செய்யும். அவர்கள் உற்சாகமாகப் பணியாற்ற உதவும். தேசத்தின் உற்பத்தியும் பெருகும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
மு.இராமநாதன்

மு.இராமனாதன், பொறியாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com


3

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   2 years ago

அருமையான கட்டுரை... வட இந்தியரை பார்க்கும் போது ஒரு வித பரிதாபம் வருகிறது. குறிப்பாக covid முதல் அலையின்பொது 10-12 குழந்தைகளுடன் 4 குடும்பம் விளை நிலங்கள் அருகே வெட்ட வெளியில் தங்கியிருந்ததை கண்ட போது அழுகையாக இருந்ததது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   2 years ago

நல்ல கட்டுரை. இத்தனை ஆண்டுகளாக பல வட இந்திய மாநில அரசுகள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. Political conscientious உள்ள மக்கள் கேரளாவில் மிக அதிகம். தமிழர்கள் பரவாயில்லை. வட இந்தியர்களை அந்த மாநில அரசுகள் (சில மாநிலங்களவைத் தவிர்த்து) ஏமாற்றி விட்டதாக சொல்வது பொய்யில்லை. Rohintan Mistry எழுதிய A Fine Balance என்ற நாவலில் வரும் உத்திர பிரதேச கிராமம் நினைவுக்குள் எட்டிப் பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ஆ.சிவசுப்பிரமணியன் புத்தகம்மானியக் குழுபாசிதயாரிப்புதேசியத் தலைநகர்என்.சங்கரய்யாமருத்துவர் கணேசன்கிளிப்பிள்ளை ஆசிரியர்கள்chennai rainபாமணியாறுமகளிர் சுய உதவிக் குழுக்கள் சாதிப்பது என்ன?உக்ரைன் போர்சூனியம்அபூர்வானந்த் கட்டுரைபுனித மரியாள் ஆலயம்ஜாக்ரிதி சந்திரா கட்டுரைவரி கட்டமைப்புஇளைஞர்கள்ரீல்ஸ்தலைநகரம்ராஜீவ் மீதான வெறுப்புஅன்னி எர்னோநதிநீர் பங்கீடுமத்தியதர வர்க்கம்ஔரங்ஸேப்இந்திய சுதந்திரம்மாஸ்க்வாஸ்டாலினின் வெற்றி மதமும் மொழியும் ஒன்றா?ஒரே நேரத்தில் தேர்தல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!