இந்த ஆண்டு நீட் (NEET - National Eligibility cum Entrance Test) தேர்வில் தமிழ்நாடு மாணவர் ஒருவர் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். முதல் 10 இடங்களில் நான்கு இடங்களைத் தமிழ்நாட்டு மாணவர்கள் கையகப்படுத்தி இருக்கிறார்கள். “இந்த மாணவர்கள் நீட் எதிர்ப்பாளர்களின் வாதங்களை இடித்துத் தகர்த்துவிட்டார்கள்” என்று சொல்லியிருக்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். அது அப்படித்தானா?
அமைச்சர் குறிப்பிடும் ‘நீட் எதிர்ப்பாளர்’களின் வாதங்கள் யாவை? நீட் தேர்வு, வசதி படைத்த, நகர்ப்புற மாணவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது; ஆகவே, இது சமூக நீதிக்கு எதிரானது. அடுத்ததாக, இந்தத் தேர்வு மாநில அரசு தனக்கான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்கிக்கொள்வதற்குத் தடையாக இருக்கிறது; ஆகவே இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.
இந்த ஆண்டு நீட் முடிவுகள் இந்த வாதங்களைத் தகர்த்திருக்கிறதா? முதலிடம் பிடித்த மாணவர், சென்னையின் பெரிய தனியார் பள்ளி ஒன்றில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர். பள்ளி விடுதியில் தங்கிக்கொண்டு நீட் தனிப் பயிற்சி வகுப்புகளுக்குப் போனவர். சுமார் 80 நீட் மாதிரித் தேர்வுகள் (mock exam) எழுதிப் பார்த்துப் பயிற்சி பெற்றதாக ஒரு நேர்காணலில் சொல்லியிருக்கிறார். மற்ற வெற்றியாளர்களின் கதையும் இதை ஒட்டித்தான் இருக்கிறது. முதல் 50 இடங்களில் தேறியவர்களில் 38 பேரை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் நேர்கண்டது. இவர்கள் அனைவரும் பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்றுமொழி வாயிலாகப் படித்தவர்கள். ஒருவர் நீங்கலாக 38 பேர் தனிப் பயிற்சி பெற்றவர்கள். 28 பேர் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்கள். 29 பேர் முற்பட்ட சாதியினர்.
அதாவது, பெருநகரங்களில், தனியார் பள்ளிகளில், ஆங்கில வழியில் படிக்கும் வசதி படைத்த பிள்ளைகள்தான் நீட்டில் கொடி நாட்டுகிறார்கள். மேலும், புகழ் மிக்க பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படிப்பதால் மட்டும் ஒருவரால் நீட்டில் வெற்றிபெற முடிவதில்லை. அதற்குத் தனிப் பயிற்சி அவசியமாகிறது. இந்தத் தனிப் பயிற்சி வகுப்புகளின் கட்டணம் ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சம் வரை இருக்கிறது. தனிப் பயிற்சிகளின் வணிக மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்கிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நாளிதழ்களில் பக்கம் பக்கமாக வருகிற தனிப் பயிற்சி விளம்பரங்கள் இந்த வணிகத்தில் புரளும் பணத்தின் அளவைக் கோடிட்டுக் காட்டுகிறது.
நுழைவுத் தேர்வின் கதை
தமிழ்நாட்டின் எல்லாப் பிரதானக் கட்சிகளும் நீட் எனும் நுழைவுத் தேர்வை எதிர்க்கின்றன. தமிழ்நாட்டுக்கு நுழைவுத் தேர்வுகள் புதியதன்று. 1984 முதல் பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் நடந்தன (Tamil Nadu Professional Course Entrance Exams, TNPCE). இந்த நுழைவுத் தேர்வு முடிவுகள் 100 மதிப்பெண்களுக்கும், +2 முடிவுகள் 200 மதிப்பெண்களுக்கும் கணக்கிடப்பட்டன. இதில் நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கிறது என்று கல்வியாளர்கள் எதிர்த்துவந்தனர். ஆகவே, 2006இல் நுழைவுத் தேர்வுகள் நிறுத்திக்கொள்ளப்பட்டன.
இந்திய அளவில் கல்வியில் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. இங்கே உயர்நிலைப் பள்ளியில் தேறியவர்களில் சரி பாதிப் பேர் கல்லூரிக்குப் போகிறார்கள். இந்தியாவின் பல மாநிலங்கள் இந்த நிலையை எட்ட இன்னும் பல தசாப்தங்கள் ஆகக்கூடும். தனக்கான கல்லூரி அனுமதி நடைமுறைகளைப் பல்லாண்டு காலப் பயன்பாட்டின் வழியாகக் கண்டடைந்தது தமிழ்நாடு.
ஓர் அதிகாலைப் பொழுதில் ஒன்றிய அரசு ஆட்டத்தைக் கலைத்துவிட்டு நாடு முழுமைக்கும் ஒரே நுழைவுத் தேர்வைக் கொண்டுவருகிறது. இது எல்லா மாணவர்களையும் ஒரே தேர்வை எழுத நிர்ப்பந்திக்கிறது. ஆனால், எல்லா மாணவர்களுக்கும் இங்கே சமமான வாய்ப்புகள் இல்லை. மேலும் நமது பள்ளிக் கல்வியின் முக்கியத்துவத்தை நீட் தேர்வு இல்லாமல் ஆக்குகிறது. இந்த இடத்தில் பல வளர்ந்த நாடுகள் தங்கள் மாணவர்களை எவ்விதம் கல்லூரிக்குள் அனுமதிக்கின்றன என்று அணுகிப் பார்ப்பது பயன் தரும்.
பன்னாட்டுத் தேர்வு முறைகள்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி இது. “ஹாங்காங்கிலும் பிரிட்டனிலும் பொறியாளராகப் பதிவுபெறுவதற்குக் கடுமையான தேர்வுகளை எழுதிய நீங்கள் நீட் தேர்வை எதிர்க்கிறீர்களே, ஏன்?”
நான் ஹாங்காங்கில் கட்டமைப்புத் துறையில் பதிவுபெற்ற பொறியாளராகப் பணியாற்றினேன். பட்டப் படிப்பையும் பட்ட மேற்படிப்பையும் தமிழ்நாட்டில் மேற்கொண்டேன். 1995இல் ஹாங்காங்கிற்குப் புலம்பெயர்ந்தேன். ஹாங்காங்கிலும், பல வளர்ந்த நாடுகளிலும், தொழில் துறையில் பட்டம் பெற்ற ஒருவர், ஏற்கெனவே அதே துறையில் அங்கீகாரம் பெற்ற ஒருவரின் மேற்பார்வையில் சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு தொழில் கழகங்கள் நடத்துகிற எழுத்துத் தேர்வுகளையும் நேர்முகத் தேர்வுகளையும் எதிர்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் பட்டயக் கணக்காளர்கள் (Chartered Accountant) மட்டுமே இந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். வளர்ந்த நாடுகளில் பொறியியல், மருத்துவம், சட்டம் உள்ளிட்ட தொழில் துறைகள் அனைத்திலும் இந்த முறை இருக்கிறது. இந்தத் தேர்வுகள் சிரமமானவை. கடுமையான பயிற்சியைக் கோருபவை. இந்தத் தேர்வுகளில் வெற்றிபெற்றவர்கள் அவரவரது துறைகளில் பதிவுபெற்றவர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். ஒருவர் தொழில்ரீதியாகப் பணியாற்றுவதற்குக் கடுமையான தேர்வுகளை நடத்தும் இந்த நாடுகளில் கல்லூரிகளுக்கான அனுமதி எப்படி நடக்கிறது?
ஹாங்காங்
ஹாங்காங்கில் ஒன்பது பல்கலைக்கழகங்கள் உள்ளன. உலகத் தரமானவை. உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் முதல் 50 இடங்களில் எப்படியும் மூன்று ஹாங்காங் பல்கலைக்கழங்கள் இடம்பிடித்துவிடும் (இந்தியப் பல்கலைக்கழகங்களால் முதல் 150 இடங்களில் ஓர் இடத்தைக்கூடப் பிடிக்க முடிவதில்லை). இந்த ஒன்பது ஹாங்காங் பல்கலைக்கழகங்களுக்குமாக ஒரே விண்ணப்பப் படிவம்தான். இதற்கு ஜூபாஸ் என்று பெயர் (Joint University Programmes Admissions System, JUPAS).
மருத்துவம், பொறியியல், சட்டம், கலை, அறிவியல், வணிகம் முதலான எல்லாத் துறைகளிலும் இருந்து 25 விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடலாம். சில பல்கலைக்கழகங்கள், மேலாண்மை, நிதி போன்ற சில பாடப் பிரிவுகளுக்குக் கூடுதலாக நேர்முகங்களும் நடத்துவது உண்டு. எனினும் பள்ளி இறுதித் தேர்வு முடிவுகள்தான் கல்லூரிக்குக் கதவு திறப்பதில் அதிகமான பங்கு வகிக்கும்.
ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் அடார் (Australian Tertiary Admission Rank, ATAR) என்றொரு தரப்படுத்தும் முறை இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த ஆண்டில் மாணவர்கள் பெறுகிற சராசரி மதிப்பெண்ணை வைத்து தனிப்பட்ட ஒவ்வொரு மாணவனின் மதிப்பெண்ணும் தரப்படுத்தப்படும். இவற்றின் அடிப்படையில்தான் கல்லூரிகளுக்கான அனுமதி வழங்கப்படும். ஆஸ்திரேலியாவிலும் எந்த நுழைவுத் தேர்வும் இல்லை.
இதையும் வாசியுங்கள்... 10 நிமிட வாசிப்பு
கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?
09 Apr 2022
அமெரிக்கா
அமெரிக்காவில் சாட், ஆக்ட் (Scholastic Assessment Test - SAT, American College Testing - ACT) போன்ற தேர்வுகளைச் சில கல்வி அமைப்புகள் நடத்திவருகின்றன. இந்தத் தேர்வு முடிவுகளைப் பல அமெரிக்கக் கல்லூரிகள் அவர்களது மாணவர் தேர்வுக்குப் பயன்படுத்திவருகின்றன.
சாட், ஆக்ட் முதலான தேர்வுகளைக் கல்விப்புலத்தில் தரப்படுத்தும் தேர்வுகள் (Standardised Tests) என்று அழைப்பார்கள். பல்வேறு பாடத் திட்டங்களில், பல்வேறு பின்னணிகளில் பயின்று வருபவர்களை ஒரே அளவுகோலின் கீழ் கொண்டுவருவதுதான் இந்தத் தேர்வுகளின் பிரதான நோக்கம். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். உள்நாட்டிலேகூட மாநிலத்துக்கு மாநிலம் கல்விமுறை மாறுபடும். இவர்களை ஒரே நிறையில் நிறுத்துவதற்கான முயற்சிதான் சாட், ஆக்ட் முதலான தேர்வுகள். எனில், அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் இந்தத் தேர்வு முடிவுகளை மட்டும் வைத்துக்கொண்டு அனுமதி வழங்குவதில்லை. பள்ளியிறுதி முடிவுகள், கலை, விளையாட்டு முதலான துறைகளில் ஈடுபாடு, விண்ணப்பத்துடன் மாணவர்கள் சமர்ப்பிக்கும் கட்டுரை போன்ற பல கூறுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள். கூடவே, சாட் அல்லது ஆக்ட் முடிவுகளும் ஒரு கூறாக இருக்கும்.
கரோனா காலத்தில் சாட், ஆக்ட் தேர்வுகள் நடக்கவில்லை. ஆகவே ஹார்வர்டு, ஸ்டான்போர்டு, கார்னெல், எம்.ஐ.டி முதலான புகழ்பெற்ற அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் சாட், ஆக்ட் முடிவுகளைக் கணக்கில் கொள்ளவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே இந்தத் தேர்வுகள் பாரபட்சமானவை என்று பல அமெரிக்கக் கல்வியாளர்கள் விமர்சித்துவருவதும் ஒரு காரணம்.
ஆக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஹாங்காங் முதலான கல்வியில் முன்னேறிய நாடுகளில்கூட நுழைவுத் தேர்வு தவிர்க்கப்படுகிறது, அல்லது அதைச் சார்ந்திருப்பது குறைவாக இருக்கிறது. அங்கெல்லாம் ஒருவர் படித்து முடித்துத் தொழிலில் பயிற்சிபெற்ற பின்னர்தான் அவரது திறன் சோதிக்கப்படுகிறது.
இந்தியாவில் நீட்
இந்த சர்வதேசத் தேர்வு முறைகளுக்கு எல்லாம் எதிராக இருக்கிறது நீட். இது கல்லூரிக்குள் நுழையும் முன்பே மாணவர்களை வடிகட்டுகிறது. அதிலும் பள்ளித் தேர்வுகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு நாடு முழுதும் ஒற்றைத் தேர்வை நடத்தும் இந்த முறை, உலகில் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை.
நீட் எனும் தரப்படுத்தும் தேர்வு இந்தியாவில் ஏன் அவசியம்? இதற்கு நீட் ஆதரவாளர்களிடம் பதில் இருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் பிற மாநில மாணவர்களுக்கு 15% இடம் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் கல்வித் திட்டம் மாறுபட்டிருக்கும். ஆகவே, தரப்படுத்தல் அவசியம். நீட் பயக்கும் இன்னொரு நன்மையாக அவர்கள் சொல்வது சுயநிதிக் கல்லூரிகள் முன்பெல்லாம் அவர்களே நுழைவுத் தேர்வு நடத்திக்கொண்டார்கள்; இதில் பாரபட்சமும் ஊழலும் இருந்தன; நீட் அதைத் துடைத்துவிட்டது.
இரண்டு வாதங்களும் சரியாக இருக்கலாம். அப்படியானால் பிற மாநில மாணவர்களுக்கான இடங்களுக்கும், சுயநிதிக் கல்லூரியின் நிர்வாக இடங்களுக்கும் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தினால் போதாதா? ஏன் அரசுக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் உள்ளூர் மாணவர்களும் நீட் எழுத வேண்டும்? அவர்கள் அனைவரும் ஒரே பாடத் திட்டத்தில் பயின்றவர்கள். ஒரே பொதுத் தேர்வை ஏற்கெனவே எழுதியவர்கள். அவர்களுக்கு மறுபடியும் ஏன் ஒரு தரப்படுத்தும் தேர்வு? இதற்கு நீட் ஆதரவாளர்களிடம் பதில் இருப்பதாகத் தெரியவில்லை.
இதையும் வாசியுங்கள்... 3 நிமிட வாசிப்பு
முதல்வர்களுக்கான தமிழக முதல்வரின் கடிதம் சரியான ஆரம்பம்!
06 Oct 2021
தகுதி - தரம்
நீட் தேர்வுக்கு ஆதரவாக அதன் ஆதரவாளர்கள் மேலும் இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். நீட் தேர்வுகள் மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கிறது. அது தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இவை சரிதானா?
மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களில் இருக்கும் படிநிலைகளில் இதற்கான விடை இருக்கிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ரூ.13,610. சுயநிதிக் கல்லூரிகளில் அரசு இடங்களும் (governemnet quota) நிர்வாக இடங்களும் (management quota) ஏகதேசம் சம அளவில் இருக்கும். இதில் அரசு இடங்களுக்கான ஆண்டுக் கட்டணம் சுமார் ரூ.4 லட்சம். நிர்வாக இடங்களுக்கான கட்டணம் இதைப் போல் மூன்று முதல் ஐந்து மடங்கு இருக்கும். இதைத் தவிர பல சுயநிதிக் கல்லூரிகளில் வெளிநாட்டு இந்தியர்களுக்கான இடங்கள் 15% வரை இருக்கும். ஓர் உள்நாட்டு மாணவர் இரவோடு இரவாக ஓர் அயல்நாட்டு இந்தியரின் ஆதரவுக் கடிதத்தை வழங்கினால், அடுத்த நாள் அவரும் வெளிநாட்டு இந்தியராக மாறிவிடலாம். இந்த இடங்களுக்கான ஆண்டுக் கட்டணம் ரூ.45 முதல் ரூ.60 இலட்சம் வரை இருக்கும் என்கிறார்கள்.
சுயநிதிக் கல்லூரிகளின் நிர்வாக இடங்களைப் பெறுவதற்குரிய மதிப்பெண்கள் இருந்தும் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தும் வசதி இல்லாத மாணவர்கள் பலர் தங்கள் மருத்துவக் கனவை ஓரங்கட்டிவிடுகிறார்கள். கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த இடங்கள் அவர்களைவிடக் குறைவான மதிப்பெண்கள் நேடிய வசதி படைத்த மாணவர்களைச் சென்றடைகிறது. இதையும் கேட்டிருக்கிறோம். எனில், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் கேட்ட செய்தி அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. கடந்த ஆண்டு நீட் தேர்வில் 720க்கு வெறும் 92 மதிப்பெண் பெற்றிருந்த ஒரு மாணவருக்கு சுயநிதிக் கல்லூரி ஒன்றில் இடம் கிடைத்தது என்றார் விவாதத்தில் பங்கேற்றவர்.
நீட் தேர்வு காலத்திற்கு முன்பு ஒரு மாணவர் உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களில் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். மாறாக நீட்டில் மொத்த மதிப்பெண்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுகிறது. எடுத்துக்காட்டாக, உயிரியலில் மிகக் குறைவான மதிப்பெண் பெற்றிருந்தாலும் மற்ற இரண்டு பாடங்களில் மதிப்பெண் பெற்ற ஒருவர் தகுதிக் கோட்டைத் தாண்டிவிடலாம். அதாவது, தகுதியையும் தரத்தையும் நிலை நிறுத்துவதாகச் சொல்லப்படும் நீட் தேர்வுகள் உண்மையில் அதைச் செய்வதில்லை.
இன்னபிற நுழைவுத் தேர்வுகள்
நீட் முடிவுகள் வெளியானபோது நான் அங்கம் வகிக்கும் ஒரு வாட்ஸப் குழுமத்தில் ஓர் உரையாடல் நடந்தது. ஒரு நண்பர், நீட் ஆதரவாளர், கேட்டார்: “ஏன் எல்லோரும் நீட்டைப் பற்றியே பேசுகிறார்கள்? நாட்டில் எத்தனையோ நுழைவுத் தேர்வுகள் நடக்கின்றன. ஜேஇஇ, நெஸ்ட், கிளாட் போன்ற தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடந்துகொண்டுதானே இருக்கின்றன?” உண்மைதான். இதில் இன்னும் சில இழைகள் உள்ளன. இந்தியாவில் ஆண்டுதோறும் 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்கிறார்கள். இதில் ஜேஇஇ (Joint Entrance Examination - JEE) வாயிலாக ஐஐடியில் சேருபவர்கள் 16,053 பேர். பின்னவர்களுக்கு மட்டும்தான் நுழைவுத் தேர்வு. கிளாட் (Common Law Admission Test- CLAT) என்பது தேசியச் சட்டக் கல்லூரிகளுக்கான தேர்வு. நாட்டில் 500க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரிகள் உள்ளன. இதில் தேசியக் கல்லூரிகள் 24; இடங்கள் 1200. அவற்றுக்கு மட்டும்தான் நுழைவுத் தேர்வு. முதுகலை அறிவியல் படிப்பிற்கு ஒன்றிய அரசின் அணுசக்தித் துறை நடத்தும் நெஸ்ட் (National Entrance Screening Test - NEST) தேர்வுக்கு 200 இடங்கள்.
அதாவது, மையநீரோட்டத்தில் பொறியியல், சட்டம், முதுகலைப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை. சீரிய உள்கட்டமைப்பு உள்ள சிறந்த கல்லூரிகளுக்கு மட்டுமே நுழைவுத் தேர்வுகள். ஒரு நாட்டில் உள்ள எல்லா மருத்துவக் கல்லூரி இளங்கலைப் படிப்பிற்கும் ஒரே தேர்வு என்பது செல்வமும் செல்வாக்கும் பராம்பரியமாகக் கல்வி கற்கும் வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைகிறது என்று விளக்கினேன். நண்பர் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். முதல் தலைமுறைப் பட்டதாரி. தமிழ்நாட்டு கல்விமுறையால் பயன் பெற்றவர். அவருக்குப் புரிந்திருக்கும். ஆனால், ஏனோ அதை அவர் வெளிக் காட்டிக்கொள்ளவில்லை.
நீட்டின் புறநிலைக் கேள்விகள்
நீட் தேர்வில் என்ன சிக்கல்? எனக்குத் தெரிந்த ஒரு மாணவியின் கதையைச் சொல்கிறேன். சரஸ்வதி* எனது நண்பனின் மகள், நன்றாகப் படிப்பாள். நண்பனுக்கு எர்ணாகுளம் மாவட்டத்தில் ஒரு சிற்றூர். அவள் டாக்டராக வேண்டும் என்பது அவனது கனவு. மூன்றாண்டுகளுக்கு முன்பு அவளது +2 முடிவுகள் வந்தன. அவளது படம் மலையாள நாளிதழ்களில் வெளியாகியது. அவள் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள். அதைப் பார்ப்பதற்கு நண்பன் இல்லை. அவனைப் புற்றுநோய் கொண்டுபோயிருந்தது. 2012க்கு முன்பாக இருந்திருந்தால் அவள் சுலபமாக மருத்துவக் கல்லூரிக்குள் நுழைந்திருப்பாள். இப்போது நீட் எழுத வேண்டும். எழுதினாள். தேற முடியவில்லை. அப்பாவின் கனவை நிறைவேற்ற ஓராண்டு தனிப் பயிற்சி வகுப்புக்கும் போனாள். அப்படியும் முடியவில்லை. இப்போது சித்த மருத்துவம் படிக்கிறாள்.
நன்றாகப் படிக்கக்கூடியக் கிராமப்புறப் பிள்ளைகளுக்கு நீட் தேர்வில் வெற்றிபெறுவது சவாலாக இருக்கிறது. ஏன்? நீட் தேர்வில் புறநிலைக் கேள்விகள் (Objective Questions) மட்டுமே இருக்கும். குறிப்பிட்ட கால அளவிற்குள் அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க வேண்டும். தவறான விடைகள் மைனஸ் மதிப்பெண்களை வருத்திவிடும். பிள்ளைகள் ஒருவிதப் பதற்றத்துடனே இருப்பார்கள். இந்தக் கேள்விகளை நேரிடத் தனிப் பயிற்சி உதவுகிறது.
முக்கியமாக, இந்தத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்குக் கீழும் நான்கு பதில்கள் இருக்கும். பதில்கள் ஒன்றுக்கு ஒன்று நெருக்கமாகவும் இருக்கும். அவற்றிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்குக் கேள்வியில் பொதிந்திருக்கும் சூதும் தந்திரமும் புரிய வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள், நீண்ட பத்திகள் வாயிலாகவும் வரைபடங்களின் வாயிலாகவும், கணக்குகள் வாயிலாகவும் பதிலளிப்பதில் பயிற்சிபெற்ற பிள்ளைகளுக்கு இந்த புறநிலைக் கேள்விகளில் இருக்கும் கண்ணாமூச்சி புரிபடுவதில்லை. இந்தக் கலையைத்தான் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கிக்கொண்டு தனிப் பயிற்சிக் கல்லூரிகள் பயிற்றுவிக்கின்றன.
மேலும், இந்தத் தேர்வில் மாணவர்களின் எழுதும் திறன் மதிப்பிடப்படுவதில்லை. எல்லாத் துறையைச் சார்ந்தவர்களும் தங்கள் தொழிலில் நிறைய எழுத வேண்டும். ஒவ்வொரு துறையிலும் எழுத்தும் பேச்சும் முக்கியமானது. எழுதுவதற்கு முதலில் தகுதியான சொற்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அந்தச் சொல்லை வெல்ல பிறிதொரு சொல் இருக்கலாகாது என்கிறார் வள்ளுவர். இப்படியான சொற்களைக் கோர்த்துப் பொருள் பொதிந்த வாக்கியங்களும், வாக்கியங்களை இணைத்துத் தர்க்கரீதியிலான பத்திகளும் எழுத வேண்டும். ஆகவே, புறநிலைக் கேள்விகளின் அடிப்படையில் மட்டும் அனுமதி வழங்குவது ஆபத்தானது.
இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. பிள்ளைகள், காலை எழுந்தவுடன் படிக்க வேண்டும் என்று சொன்ன பாரதி, ‘மாலை முழுதும் விளையாட்டு’ என்று பழக்கப்படுத்திக்கொள்ளச் சொன்னார். ஆனால், நீட் எனும் ஒற்றைச் சாளரம் விளையாட்டுக்கு மட்டுமல்ல, எல்லாக் கலைகளின் கதவுகளையும் மாணவர்களுக்கு அடைத்துவிடுகிறது. இந்த ஆண்டு நீட்டில் முதலிடம் பெற்ற மாணவர் ஒவ்வொரு நாளும் 15 மணி நேரம் படித்ததாகச் சொல்கிறார். அலைபேசியையும் தொலைக்காட்சியையும் முழுமையாகத் தவிர்த்துவிட்டதாகச் சொல்கிறார். நாளிதழ்களைப் பற்றியும் பாடத் திட்டத்திற்கு அப்பாலுள்ள புத்தகங்களைப் பற்றியும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், அவரது அட்டவணையில் அவற்றுக்கும் இடம் இருந்திருக்க முடியாது. எப்படியான மாணவர்களை இந்த நீட் உருவாக்குகிறது?
சமூகத்தில் சிறந்து விளங்கும் மருத்துவரோ, பொறியாளாரோ, ஆசிரியரோ, அறிவியலாளரோ அதிக மதிப்பெண் நேடியவர்களாக இருப்பதில்லை. அதற்கு மாணவர்கள் சமூக அக்கறை மிக்கவர்களாக வளர வேண்டும். இந்த நுழைவுத் தேர்வுகள் அதற்கு உதவுவதில்லை. மாறாக அந்த நோக்கத்திற்கு எதிராகவும் இயங்குகிறது.
இப்படியான புறநிலைத் தேர்வுகளும், முற்று முழுதாக அவற்றின் அடிப்படையில் இடங்கள் வழங்கப்படுவதும் மாணவர்களிடத்தில் இயந்திரத்தனமான சிந்தனைப் போக்கை வளர்த்துவிடும் என்று கல்வியாளர்கள் அஞ்சுகிறார்கள். கூட்டுச் சிந்தனையும் உரையாடலும் குறையும். மாணவர்களின் கற்பனை வளமும் படைப்பாற்றலும் தேயும். அருள், இரக்கம் முதலான அறம் சார்ந்த விழுமியங்களும் குறையும்.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
மருத்துவப் படிப்பின் பெயரால் ஏனைய துறைகளை ஒழிக்கிறோம்
27 Jun 2023
சமூக அக்கறை
இந்தப் பின்புலத்தில் உருவாகும் மருத்துவர்களின் சமூக அக்கறை குறித்தும் ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மருத்துவம் படிக்கிற மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவார்கள். பல தரப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதனால், அவர்கள் மீது கரிசனமும் உணர்ச்சிகளைச் சமநிலையில் பேணுகிற ஆற்றலும் உருவாகும். ஆனால், இனிமேல் மருத்துவமனைப் பயிற்சி முக்கியத்துவம் இழக்கும். மருத்துவப் படிப்பு முடிந்ததும் நெக்ஸ்ட் (National Exit Test - NEXT) எனப்படும் போட்டித் தேர்வு வரப்போகிறது. அதில் தேறினால்தான் பட்டம் கிடைக்கும். அடுத்து, முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட்- பிஜி (NEET PG) தேர்வுக்கான தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும். இப்படித் தேர்வுகளைத் துரத்திக்கொண்டிருக்கும் மாணவர்களில் எத்தனை பேரால் கரிசனமிக்க மருத்துவர்களாக முடியும்?
சுகாதாரக் கட்டமைப்பு
மேலதிகமாக, நீட் தேர்வு தமிழ்நாடு உருவாக்கி வைத்திருக்கும் சுகாதாரக் கட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் என்று சமூக ஆர்வலர்கள் அஞ்சுகிறார்கள். இந்தியாவிலேயே முதல்முறையாக மாநில அளவில் திட்டக் குழுவை 1972ஆம் ஆண்டு அமைத்தவர் கருணாநிதி. தொடக்கம் முதலே திட்டக் குழு சுகாதாரத்தில் கவனம் செலுத்தியது. மருத்துவக் கல்வி, குடும்பக் கட்டுப்பாடு, சத்துணவு, சுகாதாரம் முதலானவற்றுக்கு முக்கியத்தும் அளித்தது மாநிலத் திட்டக் குழு. அதற்குப் பலன் இருந்தது. ஒரு பெண் சராசரியாக தன் வாழ்நாளில் ஈன்றெடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கருவள விகிதம் (TFR) எனப்படுகிறது. இது தமிழ்நாட்டில் 1973இல் 3.7ஆக இருந்தது. 2013இல் 1.7ஆகக் குறைந்தது (இந்திய சராசரி 1973 - 4.9, 2013 - 2.3). இதைப் போலவே பிறந்த முதல் ஆண்டில் இறந்துபோகும் குழந்தைகளின் எண்ணிக்கை சிசு மரணம் விகிதம் (IMR) எனப்படுகிறது. இந்த விகிதம் தமிழ்நாட்டில் 1972இல் 1,000 குழந்தைகளுக்கு 121 என்பதாக இருந்தது. 2015இல் 19ஆகக் குறைந்துவிட்டது. (தேசிய சராசரி: 1972 - 139, 2015 - 41)
இதைச் சாத்தியமாக்கியது மாநிலத்தின் மருத்துவ சேவை. தமிழ்நாட்டில் 12 கிராமங்களுக்கு ஓர் ஆரம்ப சுகாதார நிலையம் இருக்கிறது (தேசிய சராசரி: 25). ஒரு மையத்திற்கு இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் 74% மையங்களில் இருக்கிறார்கள் (தேசிய அளவில் 27% மையங்களில்தான் மருத்துவர்கள் இருக்கிறார்கள்). இதற்குக் காரணம் சிற்றூர்களிலும் சிறுநகரங்களிலும் பணியாற்றும் அர்ப்பணிப்பு மிக்க தமிழ்நாடு மருத்துவர்கள், அவர்களின் பின்புலம். மேலும் அரசு அவர்களுக்கு அளிக்கும் ஊக்கமும் மேற்படிப்பில் வழங்கும் ஒதுக்கீடும். இந்தக் கட்டமைப்பில்தான் நீட் கை வைக்கிறது. பணத்தை வாரி இறைத்து மருத்துவம் படிக்கும் மாணவர்களில் எத்தனை பேர் சிற்றூர்களிலும் சிறுநகரங்களிலும் பணியாற்றுவார்கள்? 2015க்கும் 2017க்கும் இடைப்பட்ட காலத்தில் மருத்துவப் பட்டம் பெற்றவர்களில் 40% பேர் வெளிநாடுகளுக்குப் போய்விட்டார்கள் என்கிறது ஓர் ஆய்வு (‘த வீக்’ - 17.8.2019).
ஆக, நீட் தேர்வு தனிப் பயிற்சியை அத்தியாவசியம் ஆக்குகிறது. வசதியும் வாய்ப்பும் குறைவானவர்களுக்கு அது எட்டாக்கனியாக இருக்கிறது. நீட் தேர்வுகள் பன்னிரண்டு காலப் பள்ளிப் படிப்பையும் அதில் பெற்ற மதிப்பெண்களையும் புறந்தள்ளுகிறது. இதன் வழி முறைகள் சமூக அக்கறையை உருவாக்குவதில்லை. தமிழ்நாடு போன்ற வளர்ந்த மாநிலங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சுகாதாரக் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு இந்தத் தேர்வு முறை இடையூறாக இருக்கிறது. உலகத்தில் எங்குமில்லாத முறையாக இருக்கிறது இந்த நீட். தமிழ்நாடு அரசும், எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் மறுதலிக்கிற நீட்டை மாநிலத்தின் மீது திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. ஆகவே, ஒன்றிய அரசு நீட் தேர்வை விலக்கிக்கொள்ள வேண்டும். உயர்நிலைப் பள்ளி மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும். அந்தப் பொறுப்பு முன்பு இருந்ததுபோல தமிழ்நாடு அரசின் கைகளுக்கு வந்துசேர வேண்டும். அதுவே கூட்டாட்சி. அதுவே சமூக நீதி.
(*பெயர் மாற்றப்பட்டிருக்கிறது)
தொடர்புடைய கட்டுரைகள்
ஒடுக்குமுறைத் தேர்வுகள்
கியூட் - நீட் - கேட்: தகுதித் தேர்வுகளா? தடைக் கற்களா?
முதல்வர்களுக்கான தமிழக முதல்வரின் கடிதம் சரியான ஆரம்பம்!
தமிழக ஆளுநரின் அதிகார மீறல்
மருத்துவப் படிப்பின் பெயரால் ஏனைய துறைகளை ஒழிக்கிறோம்
நம்முடைய கல்விமுறையே அநீதியானது
2
2
பின்னூட்டம் (9)
Login / Create an account to add a comment / reply.
J. Jayakumar 1 year ago
“அச்சம் என்பது மடமையடா" என்று நம்மை தட்டி எழுப்பிய இயக்கம் இன்று நீட் ஐ பற்றி மாணவர்கள் மனதில் ஒரு பய உணர்வை ஏற்படுத்தியுள்ளது! அனைத்து மாநிலங்களும் நீட் ஐ உள்வாங்கிக்கொண்டு மாணவர்களை தயார் படுத்தி வருகின்றன! ஆனால் அகில இந்தியாவில் முதன் முதலாக வெற்றி பெற்ற பிரபஞ்சன் எனும் நம் மாநிலத்து மாணவனை அதிகாரத்தில் இருப்போர் அங்கீகரிக்கவில்லை! அரசியல் ரீதியாக எதிர்ப்பது வேறு; அதில் வெற்றி பெற்ற தமிழ் நாடு மாணவனை பாராட்டுவது என்பது வேறு!
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
S. Selvamagan 1 year ago
நுண்ணறிவு அதிகம் தேவைப்படும் மருத்துவம், பொறியியல் ஆகிய படிப்புகளில் மாணவர்களை சேர்க்க பிளஸ் 2 தேர்வு என்னும் தகுதி காண் தேர்வு மார்க்கை பயன்படுத்துவதில் உள்ள அபத்தத்தையும் சிக்கலையும் இந்த கட்டுரை ஆசிரியர் உணரவில்லை. விரிவாக விடை எழுத கோரக்கூடிய ஒரு கேள்விக்கு இரு மாணவிகள் ஒரே பதிலை மனப்பாடம் செய்து ஒரு வார்த்தை கூட மாறாமல் தங்கள் விடைத்தாளில் எழுதுகிறார்கள் என வைத்துக்கொள்வோம். (இங்கே எல்லாமே மனப்பாடம் தானே!). திருத்தக்கூடிய ஆசிரியர்களின் மன நிலையை பொறுத்து ஒரு மாணவியின் பதிலுக்கு பத்துக்கு ஒன்பது மார்க் கிடைக்கிறது. இன்னொரு மாணவி வார்த்தை பிசகாமல் எழுதி வைத்த அதே பதிலுக்கு பத்துக்கு எட்டு மார்க் அல்லது பத்து மார்க் கிடைக்கிறது. இரு மாணவிகளும் ஒரே பதிலைத் தான் வார்த்தை பிசகாமல் எழுதி உள்ளார்கள். ஆனால் கிடைத்த மார்க் ஒரே மாதிரியாக இல்லை. ஒரே ஒரு மார்க் வேறுபாடு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான சேர்க்கையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்ல தேவையில்லை. இது மாதிரி பல பிரச்சினைகள் பிளஸ் டூ தேர்வு மாதிரியான தகுதி காண் தேர்வு மார்க்கை பயன்படுத்துவதில் உள்ளன. படித்த பாடத்தில் சம்பந்தப்பட்ட மாணவி அல்லது மாணவருக்கு நுண்ணறிவு இருக்கிறதா மற்றும் யோசிக்கும் திறன் இருக்கிறதா என்பதை நான்கு பதில்கள் கொடுத்து ஒன்றை தேர்ந்தெடுக்க கோரும் அப்ஜெக்டிவ் வகை தேர்வு மூலமே மதிப்பீடு செய்ய முடியும். இந்த அப்ஜெக்டிவ் வகை தேர்வு முறை உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. படித்ததை யோசனை செய்து apply செய்ய கோரும் இந்த தேர்வு முறையை ஏமாற்று வேலை என விவரம் இல்லாதவர்கள் தான் சொல்வார்கள். இந்த அப்ஜெக்டிவ் வகை தேர்வில் மாணவ மாணவியரின் படம் வரையும் திறமை மற்றும் விரிவாக விடை எழுதும் திறமை ஆகியவை மதிப்பீடு செய்யப்படுவதில்லை என கட்டுரையாளர் அங்கலாய்த்திருக்கிறார். மேற்படி திறமைகளை மதிப்பீடு செய்யும் பிளஸ் 2 தேர்வில் குறிப்பிட்ட சதவீதம் மார்க் எடுத்தவர்களே அப்ஜெக்டிவ் வகை நுழைவு அல்லது போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும் என்பதை ஏன் மறந்தார்? இதை எல்லாம் சொல்வதால் நான் நீட் தேர்வை ஆதரிக்கிறேன் என அர்த்தமில்லை. நீட் தேர்வை கட்டாயப்படுத்துவதன் பின்னணியில் அபாயகரமான அரசியல் உள்ளது. தமிழ் நாட்டின் பள்ளிக்கல்வி மற்றும் மருத்துவ துறையை குழப்பி காலப்போக்கில் மாநிலத்தின் தனித்தன்மை உள்ளிட்ட எல்லாவற்றையும் அழிக்கும் சூழ்ச்சி. இதை கொண்டு வந்தது காங்கிரஸ் என்னும் ஆர்செனிக். தீவிரமாக அமல்படுத்துவது பாஜக என்னும் சயனைடு. ஆரம்பத்தில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது திமுக என்னும் கங்காணி. முன்னர் இருந்தது மாதிரி மாநில அரசே நுழைவுத்தேர்வை நடத்துவது சரியாக இருக்கும். பாடப்புத்தகங்களும் தேர்வு முறையும் புரிந்து படிக்கும் இயல்பு கொண்டவர்களுக்கானவையாக மாற்றப்பட வேண்டும். கல்வித்துறையில் ஏழை மாணவர்களை கை தூக்கி விட குறுக்கு வழி எதுவும் கிடையாது.
Reply 2 0
Raja 1 year ago
Different Perspective.
Reply 0 0
Raja 1 year ago
Different Perspective.
Reply 0 0
Raja 1 year ago
Different Perspective.
Reply 0 0
Ganeshram Palanisamy 1 year ago
ஆனால் NEET நீங்கள் சொன்ன எந்த பிரச்சினைகளையும் தீர்க்கவில்லை. மாறாக ஏழை மாணவர்களை ஓரங்கட்டவே பயன்பட்டுள்ளது. தகுதிதான் முக்கியம் என்றால் coaching centerகள் எதற்கு? தகுதியான மாணவருக்கு எதற்கு மூன்று வருட பயிற்சி?
Reply 0 0
S. Selvamagan 1 year ago
பிளஸ் 2 தேர்வு மார்க் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நடத்தப்பட்ட போது ஏழை மாணவர்கள், குறிப்பாக அரசுப்பள்ளி மாணவர்கள், எத்தனை பேர் தேர்ந்தெடுக்க பட்டனர்? நாமக்கல் ராசிபுரம் ஆகிய ஊர்களில் தனியார் பள்ளிகள் என்னும் பெயரில் உண்டு உறைவிட கோச்சிங் சென்டர்கள் தான் இயங்கின. இந்த பிராய்லர் பள்ளிகளில் எத்தனை நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் தெரியுமா? நீட் தேர்வில் குறைந்த மார்க் எடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் அனிதா பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வை தனியார் பள்ளியில் தான் படித்தார் என்பது தெரியுமா? அவர் அரசு பள்ளியில் படித்த மாணவி என பிரச்சாரம் செய்யப்படுகிறது. மனப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் பாடப்புத்தகங்களும் வினாத்தாள்களும் எந்த வகையிலும் தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு உதவாது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 1 year ago
அருமையான கட்டுரை. யதார்த்தமான உண்மையும் கூட. . ஒரு திருத்தம் ஐயா, neet pg நுழைவு தேர்வு NEXT exam வந்தவுடன் இருக்காது. Next exam மதிப்பெண் pg படிக்க எடுத்து கொள்ள படும் என்று கூறபடுகிறது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 1 year ago
மிக முக்கியமான, ஆய்வுப்பூர்வமான கட்டுரை. இது ஆங்கிலத்திலும் வரவேண்டும். தயவுசெய்து மொழிபெயருங்கள், ஆங்கில நாளிதழுக்கு அனுப்புங்கள். வார இறுதி சிறப்பிதழில் வெளிவருமென்றால் இன்னும் சிறப்பு.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.