கட்டுரை, கலாச்சாரம், மொழி 15 நிமிட வாசிப்பு
தமிழ் உரைநடையின் இரவல் கால்: ஆங்கிலம்
எனது நண்பர், கல்லூரி விரிவுரையாளர், உயிரியல் துறையில் முனைவர். என்னை அழைத்தார். அவரது கல்லூரியின் தமிழ் மன்றத்தினர் ஒரு மலர் வெளியிடப் போகிறார்கள். அதற்காக நண்பரிடம் உயிரியல் தொடர்பாகத் தமிழில் ஒரு கட்டுரை கேட்டிருக்கிறார்கள். நண்பர் ஏற்கனவே பதிப்பித்த ஆங்கிலக் கட்டுரை ஒன்றைத் தமிழாக்கியிருக்கிறார். நான் அதைப் படித்துக் கருத்துரைக்க வேண்டும். கல்விப்புலத்தில் என்ன நடக்கிறது என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் சம்மதித்தேன்.
கட்டுரையில் இரண்டு விதமான பிரச்சினைகள் இருந்தன. முதலாவது பல வாக்கியங்கள் நீளமாக இருந்தன. ஒரே வாக்கியத்தில் இரண்டும் மூன்றும் எழுவாய்கள் இருந்தன. எழுத்துப் பிழைகளும் இலக்கணப் பிழைகளும் இருந்தன. சில பத்திகள் அடுத்துவரும் பத்திகளோடு தொடர்பில்லாமல் தனியாக நின்றன. இரண்டாவது பிரச்சினை ஆங்கில மொழி சார்ந்தது. சில இடங்களில் நண்பர் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதியிருந்தார். சில இடங்களில் நிலவிலுள்ள தமிழ்ச் சொற்களைப் புறக்கணித்துவிட்டுப் புதிய சொற்களை உருவாக்கி இருந்தார். வேறு சில இடங்களில் நண்பர் உருவாக்கிய கலைச்சொற்கள் தமிழுக்கு இசைவாக இல்லை.
நண்பர் முதலாவது பிரச்சினையைக் காதுகொடுத்துக் கேட்டார். குறிப்பெடுத்துக்கொண்டார். திருத்திக்கொள்ளச் சித்தமாக இருந்தார். ஆனால், இரண்டாவது பிரச்சினையை அவர் பொருட்படுத்தவே இல்லை. இடது கரத்தால் புறந்தள்ளிவிட்டார். தமிழில் எழுதுகிறபோது அப்படித்தான் இருக்கும் என்று சொல்லிக் கடந்துவிட்டார்.
எனில், இரண்டாவது பிரச்சினைதான் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அறிவுப்புலங்கள் ஆங்கிலத்தில்தான் பெருகிவருகின்றன. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தமிழில் சொற்களை உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆங்கிலத்தில் சொல்லப்படும் கருத்தைத் தமிழுக்கு இசைவாக மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறது. ஆனால், அவற்றிலெல்லாம் போதாமை நிலவுகிறது. நண்பரின் கட்டுரையில் மட்டுமல்ல, ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும், புத்தகங்களிலும் நாள்தோறும் இந்தப் போதாமையைப் பார்க்க முடிகிறது. இதை நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
தமிழ் லிபியில் ஆங்கிலம்
ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதுகிற பழக்கம் பரவலாக இருக்கிறது. இதன் மறுதலையும் (கன்வெர்ஸ் - converse) உண்மைதான். அதாவது ஆங்கில எழுத்துருக்களில் தமிழை எழுதுவது. புத்தாயிரப் பிள்ளைகள் சமூக வலைதளங்களில் சரளமாகப் பயன்படுத்தும் அவ்வகை எழுத்துக்கு ‘தங்கிலீஷ்’ என்று பெயர். எனில், நாம் இங்கே மறுதலையைப் பற்றியல்ல, தேற்றத்தைப் பற்றியே பேசப் போகிறோம். எழுத்தாளர் சுஜாதாவின் கட்டுரை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட வாக்கியத்துடன் இந்த உரையாடலைத் தொடங்கலாம்.
"நல்ல கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தால் மாக்கின்டோஷ் கணிப்பொறி வாங்கலாம். அதை வாங்கி வைத்து, லெட்டர் அடிக்கவும் கேம்ஸ் விளையாடவும் பயன்படுத்துவது முட்டாள்தனம்."
இப்போது கணினி என்கிற சொல் நிலைபெற்றுவிட்டது. சுஜாதா இதை எழுதிய காலத்தில் கணிப்பொறியும் பயன்பாட்டில் இருந்தது. நல்லது. அடுத்து, மாக்கின்டோஷ் என்பது பெயர்ச்சொல், மொழிபெயர்க்க வேண்டியதில்லை. சரி. அடுத்து, கிராஃபிக் ஆர்ட்டிஸ்ட் எனும் தொடர். தமிழில் வரை கலைஞர், சரளமாகப் புழக்கத்தில் வரவில்லைதான், ஆனால் புழங்கினால்தானே பயன்பாட்டுக்கு வரும்? போகட்டும். ஆனால், லெட்டருக்கும் கேம்ஸுக்கும் கூடவா சுஜாதா ஆங்கிலத்தை நாடவேண்டும்?
இது பழைய கட்டுரை. சமீபத்தியச் செய்தியொன்றைப் பார்க்கலாம். சென்னையில் சதுரங்கப் போட்டி நடந்துமுடிந்தது. கடைசி நாளன்று ஒரு முன்னணி நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி இது:
“சென்னை செஸ் ஒலிம்பியாட்டின் ஓபன் பிரிவில் டாப் 10இல் உள்ள அணிகள் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை.”
சதுரங்கம் யாவரும் அறிந்த பழந்தமிழ்ச் சொல். ஆனால் எந்த ஊடகமும் அதைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. போகட்டும். சென்னையில் நடந்த போட்டிகளில் இரண்டு பிரிவுகள் இருந்தன. இரண்டாவது பிரிவு மகளிருக்கானது. முதல் பிரிவு ஓபன் (Open) எனப்பட்டது. இதில் தொழில்முறை ஆட்டக்காரர்கள் மட்டுமல்ல, தொழில்சாரா (அமெச்சூர்) வீரர்களும் விளையாடலாம். தமிழில் பொதுப்பிரிவு என்றழைக்கலாம். ஆனால், பல தமிழ் ஊடகங்கள் ஓபன் என்றே அழைத்தன. அவை மொழிபெயர்ப்பதற்கு மெனக்கெடவில்லை. டாப்-10 என்பது நமது தொலைக்காட்சிகள் பிரபலப்படுத்திய தொடர். அதை ஏன் மொழிபெயர்க்க வேண்டும் என்று நாளிதழ் கருதியிருக்கலாம். அடுத்து, இதே போட்டியின் தொடக்க நாளன்று இன்னொரு முன்னணி நாளிதழ் வெளியிட்ட செய்தி இது:
“செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக இரண்டு மெகா அரங்குகள் உருவாக்கப்பட்டு அதில் 707 செஸ் போர்டுகள் வைக்கப்பட்டு இருந்தது. சென்சார் உதவியுடன் இயங்கும் இந்த செஸ் போர்டுகள் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டது.”
இந்தச் செய்தியில் ‘சென்சார்’ (censor) என்று ஒரு சொல் வருகிறது. எந்த தணிக்கைத் துறையும் போட்டி நடந்த அரங்கிற்குள் வரவில்லை. அது ‘சென்சர்’ (senser). உணரி என்பது தமிழ்ச்சொல். 'மெகா'விற்கும் 'போர்டு'க்கும் தமிழைத் தேடாத நாளிதழ், சென்சருக்குத் தேடும் என்று எதிர்பார்ப்பது கொஞ்சம் அதிகம்தான். ஆங்கிலக் கலப்பு அன்னியில் இந்த வாக்கியத்தில் இலக்கணப் பிழைகளும் உள்ளன. ஜெர்மனிக்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையில் ஒரு வேற்றுமை உருபு வந்திருக்க வேண்டும். இரண்டு வாக்கியங்களும் பன்மையில் முடிந்திருக்க வேண்டும். இலக்கணம் என்பது தமிழாசிரியருக்கும் மாணவனுக்கும் இடையிலானது, இதழாசிரியருக்கும் வாசகனுக்கும் இடையிலானது அல்ல என்று அந்த நாளிதழ் கருதியிருக்கலாம்.
உடல்மொழிக்கு ஒவ்வாத மொழிபெயர்ப்பு
இப்படி நேரடியாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்துவது ஒருபுறம். அடுத்து, ஆங்கிலத்தைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது தமிழுக்கு இசைவாக மொழிபெயர்க்காமல் இயந்திரத்தனமாகப் பெயர்ப்பது இன்னொரு புறம். இந்த வாக்கியத்தைப் பாருங்கள்.
“சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 2.2 கோடிப் பயணிகளைக் கையாண்டு வருகிறது.”
பரந்தூரில் அமையவிருக்கும் இரண்டாவது விமான நிலையத்தின் அவசியத்தை வலியுறுத்தி வெளியான செய்திக் குறிப்பில் இந்த வாக்கியம் இடம்பெற்றது. இதில் ஓர் அன்னியத்தன்மை தொனிக்கிறது. ‘ஹேண்ட்லிங் பாசஞ்சர்ஸ்’ (Handling passengers) என்கிற சொற்றொடர் வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டு இருக்கிறது. உயிரும் உடலும் உள்ள மனிதர்களைக் 'கையாள்வதாக' எழுதுவது தமிழ்க் கலாச்சாரத்திற்கு இசைவானதில்லை. இதைத் ‘தமிழ் மரபின் உடல்மொழி’ என்கிறார் ஆர்.பாலகிருஷ்ணன்.
தனது ‘ஜேர்னி ஆஃப் எ சிவிலைசேஸன்: இண்டஸ் டூ வைகை’ (Journey of a Civilization: Indus to Vaigai) (ரோஜா முத்தையா ஆய்வு நூலகம், 2019) புத்தகத்தின் மூலம் அறிவுலகத்தில் பெரும் அசைவை ஏற்படுத்தியிருப்பவர் பாலகிருஷ்ணன். தனது சமீபத்திய முகநூல் பதிவொன்றில், அவர் இப்படி எழுதியிருந்தார்: “தமிழ் மரபின் உடல்மொழியை உணராதவர்கள் தமிழ் மொழியைக் கற்பது கடினம்.” இததோடு, தமிழ் மரபின் உடல்மொழியை உணராதவர்கள் தமிழ் மொழியை மொழிபெயர்ப்பது கடினம் என்றும் சேர்த்துக்கொள்ளலாம். தமிழ் மரபு மனிதர்களைக் கையாள்வதில்லை. ஆகவேதான், அந்த மொழிபெயர்ப்பு தமிழுக்கு அன்னியமாக ஒலிக்கிறது. அந்த வாக்கியத்தை இப்படி எழுதியிருக்கலாம்: "சென்னை விமான நிலையத்தை ஆண்டுக்கு 2.2 கோடிப் பேர் பயன்படுத்தி வருகிறார்கள்." இப்போது இது தமிழ் வாக்கியமாக மாறிவிட்டது.
கை நிறையக் காசு, என்றாலும் கடன்
இன்னுமோர் அநீதியும் நடக்கிறது. ஆங்கிலத்தில் இருந்து தமிழில் எழுதும் சிலர், ஏற்கனவே அதற்கு இணையான சொல் தமிழில் இருப்பதை அறியாமல் புதிதாக ஒரு சொல்லை உருவாக்குகிறார்கள். கரோனாவின் தொடக்க காலத்தில் அதற்கான நதிமூலத்தை அறிவியாலளர்கள் ஆராய்ந்தனர். கள்ளச் சந்தையில் விற்கப்படும் விலங்குகளின் வழியாக இந்த நோய் உருவாகியிருக்க வேண்டும் என்கிற முடிவைப் பலரும் வந்தடைந்தனர். கோவிட், வௌவாலிருந்து மனிதனுக்குத் தொற்றியிருக்கலாம் என்பது பரவலான கருத்து. ஆன்டீடர் (Anteater) எனும் சிறு விலங்கிலிருந்தும் இது தொற்றியிருக்கலாம் என்றும் சில அறிவியலாளர்கள் கருதினார்கள். இந்தச் செய்தியை வெளியிட்ட தமிழ் ஊடகங்கள் எறும்புத்தின்னிகள் என்று எழுதின. இந்த விலங்கு தமிழுக்குப் புதியதில்லை என்பதும் அலங்கு என்று அவை அழைக்கப்படுகின்றன என்பதையும் மொழிபெயர்த்த ஊடகங்கள் அறிந்திருக்கவில்லை.
இதைப் போலவே மாங்குரோவ் காடுகள் என்கிற சொற்றொடர். இது மாங்குரோவ் காடின் (Mangrove Forest) மொழியாக்கம். இவை கடலின் கரையோரங்களில் உள்ள சதுப்பு நிலங்களில், உவர் நீரில் வளரும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், மனிதக் கரங்களின் பேராசைக்கு இரையானது போக, இவை இன்னும் மீதமிருக்கின்றன. இதற்குத் தமிழ்ப் பெயர் இருக்கிறது - அலையாத்தித் தாவரங்கள். அதை அறியாத செய்தியாளர்கள்தான் மாங்குரோவ் காடுகள் என்கிற சொற்றொடரை இறக்குகிறார்கள்.
இந்த இடத்தில், 'அருவியை நீர்வீழ்ச்சி என்று யாரேனும் சொன்னால் மனம் பதறுகிறது' என்கிற விக்கிரமாதித்யனின் கவிதை வரி நினைவுக்கு வருகிறது. உயிரினங்கள் பற்றியும் சூழலியல் பற்றியும் நமக்குப் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பராம்பரியமானச் சொற்களை இழந்துவருகிறோம். எல்லாத் துறைகளிலும் இந்த நிலைதான். அதனால்தான் “அருமையான தமிழ்ச்சொல் இருக்க, ஆங்கிலத்தை எடுத்தாளுதல் அறிவீனம் அல்லவா? கரும்பிருக்க இரும்பைக் கடிப்பார் உண்டோ?” என்று கேட்டார் சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப்பிள்ளை. ‘கனியிருக்கக் காய் கவர்ந்தற்று’ என்று சொன்ன பாட்டனின் தோள்களில் ஏறி நின்றுகொண்டுதான் அவர் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க வேண்டும்.
கலைச்சொல்லாக்கம்
சொல் வங்கியில் இருக்கும் சொற்களைப் பற்றிய போதமில்லாமல் புதிய சொற்களை இறக்குவது ஒரு பிரச்சினை என்றால், புதிய கலைச்சொற்களை உருவாக்கிக்கொள்ளாதது இன்னொரு பிரச்சினை. ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.
தொற்றுநோய்ப் பரவலில் மூன்று நிலைகள் உள்ளன. அவை ‘எண்டெமிக்’, ‘எபிடெமிக்’, ‘பேண்டமிக்’ (endemic, epidemic, pandemic) என்பன. பரந்துபட்ட பகுதியில் பரவும் நோய் ‘எண்டமிக்’ (endemic) எனப்படும். நிமோனியா, அம்மை முதலான நோய்கள் இந்தப் பிரிவின்கீழ் வரும். குறுகிய காலத்திற்குள் பெரும் நிலப்பரப்பில் பரவும் நோய் ‘எபிடெமிக்’ (epidemic). சார்ஸ் (2003), மெர்ஸ் (2012), நிப்பா (2018) முதலான நோய்கள் இந்தப் பிரிவில் வரும். ‘எபிடெமிக்’ (Epidemic) வேகமாகப் பரவும். உச்சத்தை எட்டும். பின் தேய்ந்து இல்லாமலாகும். மாறாக ‘எண்டமிக்’ (endemic) எந்தக் காலத்திலும் வரும். மீண்டும் மீண்டும் வரும். கவி வாக்கைப் போல, அது நிரந்தரமானது, அதற்கு அழிவில்லை.
மேலும், எபிடெமிக் பெரிய பிராந்தியத்தில் பரவும். சார்ஸ் சீனாவிலும் ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் கால் பரப்பியது. பின் மெல்லக் காணாதாயது. அதேபோல, மெர்ஸ்ஸின் வீச்சு மத்திய கிழக்கையும், நிப்பாவின் வீச்சு கேரளத்தையும் தாண்டவில்லை. மாறாக ‘பேண்டமிக்’ (pandemic) நாடுகளுக்கும் கண்டங்களுக்கும் கட்டுப்படாமல் எல்லைக் கோடுகளை முறித்துக்கொண்டு உலகம் முழுதும் பரவும் வலுவுடையது. ஸ்பானியக் காய்ச்சல் (1918-20), ஆசியக் காய்ச்சல் (1957-58), பன்றிக் காய்ச்சல் (2009), கோவிட்-19 (2019-2022) முதலான நோய்கள் உலகெலாம் தம் இருப்பை நிலை நிறுத்தின. பேண்டமிக்கும் எபிடெமிக் போல ஒரு கட்டத்தில் தேய்ந்து இல்லாதாகும்.
நோயின் தீவிரமல்ல, அது பரவும் வேகமும் நிலப்பரப்புமே அந்தத் தொற்று எபிடெமிக்கா அல்லது பேண்டமிக்கா என்பதைத் தீர்மானிக்கும். சார்ஸால் பாதிக்கப்பட்டவர்களில் பத்தில் ஒருவரால் பிழைக்க முடியவில்லை. மாறாக, கோவிட் தீண்டிய பலரும் மீண்டுவந்தார்கள். எனினும் முன்னது எபிடெமிக், அதன் வீச்சு கிழக்காசியாவைத் தாண்டவில்லை. பின்னது உலகம் முழுவதையும் ஆக்கிரமித்தது.
தமிழில் இந்த மூன்று சொற்களுக்கும் இணையான கலைச்சொற்கள் ஆக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் பெருந்தொற்றுதான். கொள்ளை நோய் என்கிற பதமும் புழக்கத்தில் இருக்கிறது. பிளேக், காலரா, அம்மை, சாரஸ், கோவிட் எல்லாம் நமக்கு கொள்ளை நோய்தான். மனிதர்கள் கொத்துக் கொத்தாக மடிந்த காலத்தில் உருவானது கொள்ளை நோய் என்கிற சொல். இன்று மருத்துவம் வளர்ந்து, குறுகிய காலத்தில் தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு நோயைச் சக்தியோடு எதிரிட முடிகிற காலம். ஆனாலும், நாம் கொள்ளைநோய்க்கு விசுவாசமாக இருக்கிறோம்.
கோவிட்-19, வூகானில் தொடங்கி சீனாவில் பரவியபோது அது ‘எண்டமிக்’ (endemic) என்றும், பிற்பாடு கண்டங்களையும் சமுத்திரங்களையும் தாண்டியபோது, ‘பேண்டமிக்’ (pandemic) என்றும் அறிவித்தது உலக சுகாதார மையம். இப்போது நோயின் வீரியம் குறைந்துவிட்டது. இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 10,000க்குக் குறைவாகவும், மரிப்போரின் எண்ணிக்கை 30க்கும் குறைவாகவும் ஆகிவிட்டது. உலகெங்கும் இப்படியான நிலை வந்துவிட்டது. மற்ற பேண்டமிக் போல இது மறைந்துபோகாது என்கிறார்கள் அறிவியலாளர்கள்.
அதாவது, கோவிட்டுடன் நாம் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஆனால், ஊரும் உலகமும் ஸ்தம்பித்து நின்ற நிலையிலிருந்து நாம் மீண்டு, வெகுதூரம் வந்துவிட்டோம். இனியும் இதை ‘பேண்டமிக்’ (pandemic) என்று அழைக்க வேண்டாம். ஆனால், இது எண்டமிக்காக நீடிக்கும் என்று பல அறிவியாலாளர்கள் சொல்லிவருகிறார்கள். உலக சுகாதார அமைப்பு இதை ஏற்றுக்கொண்டால் இனிமேற்கொண்டு கோவிட் பேண்டமிக் அல்ல, எண்டமிக் என்று அறிவிக்கும்.
கோவிட் சீனாவில் எபிடெமிக்காக தொடங்கியது. பேண்டமிக்காக வளர்ந்து உலகையே உலுக்கியது. அதற்கு அழிவில்லை. இனி இது எண்டமிக்காக மாறும். இதைத் தமிழில் எப்படிச் சொல்வது? கோவிட், பெருந்தொற்றாகத் தொடங்கி, பெருந்தொற்றாக வளர்ந்து, பெருந்தொற்றாக மாறும் என்றா? ஆங்கில ஊடகங்களிலும் மருத்துவத் துறையிலும் கோவிட்டின் குண மாற்றம் குறித்து காத்திரமான உரையாடல் நடந்துவருகிறது. தமிழில் நடைபெறுவதாகத் தெரியவில்லை. அதற்கு ஆர்வக் குறைவு மட்டும் காரணமில்லை. இந்த மூன்று சொற்களுக்கும் முறையான கலைச்சொற்கள் ஆக்கப்படாததும் ஒரு காரணம். இது தமிழ் வாசகர்களுக்கு எத்தனை பெரிய இழப்பு?
"துறைச் சொற்கள் புழக்கத்தில் வராதது பெரும் குறை. துறைச் சொற்கள் இல்லாமல் அதைப் பற்றிப் பேசுவது ஆகாயத்தோடு சிலம்பமாடுவது போன்றது" என்கிறார் தியோடர் பாஸ்கரன். அவர் சூழலியலைக் குறித்துப் பகிர்ந்துகொண்ட இந்த ஆதங்கம் எல்லா அறிவுத் துறைகளுக்கும் பொருந்தும்.
சிக்கல்கள் மூன்று
கலைச்சொற்களை உருவாக்கும் பொறுப்பு அரசின் தமிழ் வளர்ச்சித் துறைகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும், ஆய்வு நிறுவனங்களுக்கும் உள்ளது. அவர்கள் அதைச் செய்கிறார்கள். ஆனால், அதில் பிரதானமாக மூன்று பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, போதிய வேகத்தில் கலைச்சொற்கள் உருவாக்கப்படுவதில்லை. இரண்டாவதாக வல்லுநர்கள் ஆக்கும் சொற்களில் பல புழங்கத்தக்கனவாக இருப்பதில்லை. மூன்றாவதாக, தமிழில் கலைச்சொற்களைப் பயன்படுத்துவதில் சீர்மை இருப்பதில்லை.
வேகம்: முதல் பிரச்சினை வேகம். தமிழில் துறை சார்ந்த கட்டுரைகளை எழுதுபவர்கள் தாங்களே சொற்களை உருவாக்குகிறார்கள். அந்தச் சொற்கள் ஏற்புடையதாக இருந்தால் பல்கலைக்கழகங்களும் ஆய்வு நிறுவனங்களும் அதைப் பெருவழக்கிற்குக் கொண்டுவர வேண்டும். இதைக் குறித்துத் துறை சார்ந்த அறிஞர்களும் தமிழறிஞர்களும் உரையாடும் ஒரு வெளி உருவாக்கப்பட வேண்டும். கையேடுகளும் நூல்களும் பதிப்பிக்கப்பட வேண்டும்.
புழக்கம்: இரண்டாவதாக, தமிழறிஞர்கள் உருவாக்கும் சொற்கள் எப்படி இருக்கின்றன? சாப்ட் டிரிங்கை (Soft drink) இன்குடிநீர்மம் என்கிறார்கள். சைக்கிளை ஈருருளி என்கிறார்கள். இந்தப் பண்டிதர்களுக்குத் தனித்தமிழில் அக்கறை இருக்கிறது. ஆனால், அந்தச் சொல்லின் புழங்கு மதிப்பைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. இப்படியான கலைச்சொற்களை உருவாக்குகிறவர்களைப் பற்றிப் பேராசிரியர் தங்க.ஜெயராமன் இப்படிச் சொல்கிறார்: "வாசிப்பவரையும் கேட்பவரையும் குறைந்தபட்சம் கற்பனை செய்துகொண்டாவது ஒருவர் கலைச்சொற்களை உருவாக்குகிறாரா என்பது சந்தேகமே. அவர் மனிதக்கூட்டத்தில் இல்லாமல் தனிமையில் செயல்படுகிறார்."
சீர்மை: மூன்றாவது பிரச்சினை துறை சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவதில் சீர்மை இல்லை. டாய்லட் என்கிற சொல்லுக்குக் கழிவறை என்கிற சொல் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பேச்சு வழக்கில் இன்னும் கக்கூஸ் இருக்கிறது. ஒப்பனை அறை என்கிற தொடரும் புழக்கத்தில் இருக்கிறது. எனில், இதுகாறும் யாரும் பயன்படுத்தாத ஒரு சொல்லை சென்னை விமான நிலையத்தில் பார்த்தேன்- ஒதுங்கிடம். இப்படி மொழிபெயர்த்தவரை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. கிராமத்தில் வெளிக்கிருக்க சில ஒதுக்குப்புறமான இடங்களை வைத்திருந்தார்கள். ஒதுங்கப் போகிறேன், கொல்லைக்குப் போகிறேன் என்றெல்லாம் சொல்வார்கள். விமான நிலையத் தமிழறிஞர் அந்த வழக்கத்திலிருந்து இந்தச் சொல்லை உருவாக்கி இருக்க வேண்டும். கொல்லிடம் என்கிற பதத்தையும் அவர் பரிசீலித்திருக்கக்கூடும். அந்தச் சொல் சுட்டும் வன்முறையைக் கருத்தில் கொண்டு, நல்வாய்ப்பாக, அதை அவர் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், திறந்தவெளியில் மலங்கழிப்பதன் சுகாதாரக் கேடுகளை பிரதமரே பரப்புரைத்துவரும் ஒரு நாட்டில், அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் ஒரு சொல்லை உருவாக்குவது அறிவியலுக்கும் அரசியலுக்கு முரணானது இல்லையா? இந்த இடத்தில் இன்னொரு கேள்வி. ஏன் விமான நிலையமே புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும்? கலைச்சொற்களை உருவாக்குவதற்குத் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறைகள் இல்லையா? இருக்கின்றன. அவை மாநில அரசு சார்ந்தவை என்பதாலும், ஒன்றிய அரசு உயர்ந்தது என்பதாலும், அறிஞர் சுயேச்சையாக இயங்கியிருக்கலாம்.
கூறுகள் நான்கு
ஆக, தமிழில் எழுதுவதற்கு ஆங்கிலத்துடனான ஊடாட்டம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. ஏனெனில், அறிவுத் துறைகள் அனைத்தும் நமக்கு ஆங்கிலம் வழியாகவே அறிமுகமாகின்றன. இதுகாறும் நாம் பேசியவற்றை நான்கு கூறுகளாகத் தொகுத்துக்கொள்ளலாம்.
- ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதும் வழக்கம் பரவலாக இருக்கிறது. இது நம் மொழி வளர்ச்சிக்கு உதவாது. தமிழைப் பின்னோக்கித் தள்ளிவிடும். இதை நாம் கவனமாக இயன்றவரை தவிர்க்க வேண்டும்.
- ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும்போது, அது தமிழுக்கு இசைவாக இருக்க வேண்டும்.
- தமிழ் செழுமையான மொழி. சூழலியல், காட்டுயிர் போன்ற துறைகளில் நமது சொல்வங்கி நிரம்பி வழிகிறது. கையிருப்பிலுள்ள சொற்களைப் பயன்படுத்த வேண்டும். புதிய சொற்களை ஆக்குவது அவசியமற்ற பணி.
- எல்லா அறிவியல் துறைகளிலும் புதிய கலைச்சொற்களை உருவாக்க வேண்டும். அவற்றை விரைவாகச் செய்ய வேண்டும். அந்தச் சொற்கள் மக்களின் புழங்கு மொழிக்கு நெருக்கமாக இருக்க வேண்டும். புதிய சொற்களைப் பயன்படுத்துவதில் சீர்மை இருந்தால் அவை விரைவில் புழக்கத்திற்கு வரும். இந்தச் சொற்களை உருவாக்குகிறவர்களுக்கு துறை சார்ந்த அறிவும், இரு மொழிப்புலமையும் இருக்க வேண்டும்.
இந்த நான்கு கூறுகளையும் மனதில் கொண்டு முன்கை எடுத்துச் செயல்பட வேண்டிய அவசியம் அரசின் தமிழ் வளர்ச்சி தொடர்பான துறைகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் ஆய்வு நிறுவனங்களுக்கும் இருக்கிறது. அவை தொடர்ச்சியான உரையாடலைப் பல்வேறு தளங்களில் நிகழ்த்த வேண்டும். கையேடுகளும், அகராதிகளும், கலைக்களஞ்சியங்களும் பதிப்பிக்க வேண்டும். இதில் ஒன்றிய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. தொன்மையும் தொடர்ச்சியும் உள்ள தமிழ் மொழிக்குச் சுண்ணாம்பும், ஏட்டில் மட்டும் வாழும் சம்ஸ்கிருதத்திற்கு வெண்ணையும் வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. இந்தப் பாரபட்சத்தை ஒன்றியம் கைவிட வேண்டும். தமிழ் வளர்ச்சிக்குக் கணிசமாக நிதி ஒதுக்க வேண்டும்.
இவையெல்லாம் செய்யப்படும்போது தமிழ் உரைநடைக்கு ஆங்கிலம் எனும் இரவல் கால் தேவைப்படாது. தமிழ் சொந்தக் காலில் நிற்கும். தமிழ் அதற்கான தகுதியுடைத்து. வல்லுநர்களும் அரசும் அக்கறையோடு செயல்பட்டால் இது சாத்தியமே. எனது நண்பரிடம் இதைக் குறித்து விலாவாரியாகப் பேசுவதற்கு நான் தயாராக இருந்தேன். ஆனால், அப்போது அவர் கேட்கத் தயாராக இல்லை. இப்போது இந்தக் கட்டுரையை அவர் படிப்பார் என்று நம்புகிறேன். அறிவியல் கட்டுரைகளைத் தமிழில் எழுதுகிறபோது அதை இரவல் காலில் நிறுத்தக் கூடாது என்பதை அவர் உணர வேண்டும் என்று விரும்புகிறேன்.
7
3
பின்னூட்டம் (8)
Login / Create an account to add a comment / reply.
R. Selvam 2 years ago
நல்ல கட்டுரை. தமிழில் உரிய சொற்கள் உருவாக்கம் என்பது அந்தந்த துறை சார்ந்தவர்களும் தமிழ் அறிஞர்களுமாக செய்ய வேண்டிய ஒன்று. தமிழில் இல்லாத ஒரு சொல்லைக் கட்டதும், "இந்த சொல்லுக்குத் தமிழில் சொல் இல்லையா", என்ற கேள்வி பரவலான அளவில் நம்முள் எழ வேண்டும். சமூகத்தின் உள்ளிலிருந்து எழும் உந்துததால் தான் செழுமையான சொற்கள் முகிழ்க்கும். இல்லையெனில் வலிந்து திணிக்கப்பட்டதாகவே இருக்கும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Chitra J 2 years ago
அருமையான கட்டுரை, தமிழர்களாக நம் கடமையை உணர்த்துகிறது உண்மை ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் தெரியவில்லை என்றால் அதை ஆங்கில எழுத்துக்களிலேயே எழுதுவது நல்லது இல்லையேல் தமிழில் எழுதப்பட்ட ஆங்கில சொற்கள் காலப்போக்கில் தமிழாக மாறிவிடும். தூய தமிழ் இப்படி தான் மாசுபடுகிறது,
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Kannan 2 years ago
timely article ! this should be taken at a government level. Like the French we need to have a governing body for language preservation. (ex: there is a limitation in France for FM radio to broadcast foreign songs or how language is used in media) . But this issue did not crop up just like that. I think the issue is deeper and there are many factors to this. 1. colonialism. most countries that had colonial rule have this issue. you could see that with SL, Pakistan etc., i.e using english words with mother tongue (main reason - people from the bottom aped the elites/ones on top of the food chain (in india it is mainly brahmins, other upper castes who were employed the majority during british rule) you don’t see this in Europe. (missing other language words in their mother tongue) 2. post independence we continued the education that was created for clerical work along with a ‘syllabus’ that was created for India but not for respective states. This system was loved by the ‘elites’ as it suited their route learning background. But it is still alien to Tamil culture which is based on skills and hand on training/learning. (one reason why NEET is loved by elites and hated by us ). This system will not foster innovation or creativity. This was meant for obedient clerical workers.(which the elites took proud of in the old days and even now !!!) what have we created in the last 70 years? Has it produced any thought leaders? Has there been any original thinkers from the elite category? Even if something comes from the bottom it is culled immediately due to our social hierarchical structure. 3. Mother tongue education. continuing with the above, medium of instruction for all in a state should have been Tamil till at least 8th grade before learning any other language. United nations has reported that there is a link between cognitive development and mother tongue education. so we have created a mess of a society post independence. Due to dual language policy, and not learning one language well, we have created a society that cannot think nor talk or hold a decent conversation due to our limited vocabulary in either languages. 4. Tamil writers/artists. most writers in Tamil during the british rule and post independence were from this elite category. Most had no love for the language or the people or the land. like the author pointed out on Sujatha. The same elite category post Dravidian era in film industry, started mixing English with Tamil a lot. The so called ‘iyakunar sikaram !’ is a prime example of that. This trend continues till today. Even actors who express their ‘love’ for Tamil continue this. Ignorance and lack of reading and knowing their ethos of their own culture is the main reason. As the author points out quoting R. Balakrishnan. Ex: how can a movie like Vikram be part of our cultural ethos ? this is where a director like Pa. Ranjith or Kalignar in his movies from the 50’s or Bharathiraja scores.. they understood the cultural ethos and also thought they had a duty towards the land they live in. I am passionate about my language and continue to read till today though I live aborad and most of my conversations are in English. Funny part is when I was a young adult, I used to sign my name in Tamil and someone asked if I was very interested in Tamil. Only in TN this question would been asked as we have been made to feel that Tamil is inferior language. (would you ever ask a English man, ah , so you love English huh? ) People need to know that learning mother tongue well would actually make you succeed well in life. All our top personalities in TN are examples of that. What the author has touched is just tip of the problem. How can we expect a person with little knowledge of their mother tongue to excel in writing or expressing themselves/speaking when they cannot THINK fully in their mother tongue due to limited vocabulary ?
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Prabhu 2 years ago
தமிழ் மரபுக்கு மட்டுமல்ல; எல்லா மொழிகளின் மரபுகளுக்கும் தனித்த உடல்மொழி உண்டு. ஒருமுறை ஏ.கே. ராமானுஜன் சொன்னார்: "தமிழர்களால் ஆங்கிலம் பேசவே முடியாது. ஆங்கிலத்தில் வேண்டுமானால் பேசலாம்." இதுதான் உண்மை. மொழிபெயர்ப்பு என்பது சமரசத்திற்கு ஆயத்தமான கலை. எப்போதும் அது ஒரு அறிவியல் அல்ல. கலைச்சொற்கள் நிலைபெற வேண்டும் என்றால், அரசின் ஆதரவு வேண்டும். விலக்கான நேர்வுகளில், சில தனிமனிதர்களின் சொற்பிரயோகங்கள் செல்வாக்கு பெறுவதுண்டு. அறிவியல் மொழிபெயர்ப்புகளில் கூட, கலைச்சொற்களின் அருகில் அவற்றின் ஆங்கில இணைகள் ஆங்கிலத்திலேயே தருவது சிறப்பு. ஜப்பானில் இதுதான் பழக்கம் என்று அங்கு சில வருடங்கள் இருந்த நண்பரொருவர் கூறினார். பிறகு, handling passengers என்பதற்கு "பயன்படுத்துகின்றனர்" என்பது குத்துமதிப்பான பெயர்ப்பு கூட இல்லை. மொழிபெயர்ப்பு என்பதே கல்லில் நார் உரிப்பது போன்றது. பெயர்ப்பில் தரம் ஏறும் அல்லது தாழும். ஒரு துல்லியமான தராசு இருக்க முடியாது. போரும் சமாதானமும் - முதல் இரண்டு தொகுப்புகளில் சாத்தியப்படுத்திய தரத்தை டி.எஸ். சொக்கலிங்கம் மூன்றாவது தொகுப்பில் தொடர முடியவில்லை. இந்தக் கருத்துமே கூட துல்லியமாக இருக்க முடியாது. மொழிபெயர்ப்பு பற்றிய கட்டுரை என்ற அளவில் இது பொருட்படுத்தக்கூடிய கூடிய கட்டுரை. அவ்வளவுதான்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Raja.N 2 years ago
தமிழ் அறிஞர்கள் விருதுகளை பார்த்து பார்த்து dmk ஆதரவு நபர்களுக்கு வழங்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மாநில அளவிலான தமிழ் வார்த்தைகள் உருவாக்கும் போட்டி ஒவ்வொரு 3 மாதத்திற்கு நடத்த வேண்டும்.(Online) தமிழ் வளர்ச்சி பிரிவு /கழகம் அரசியலில் இருந்து விடுபட வேண்டும்.. செய்வார்களா??
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.
Krishnamoorthy Muniyappan 2 years ago
This should start from TN schoolbooks. most of the Tamil medium books contains English words in tamil writing.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
Thiruvasagam 2 years ago
Outstanding Article Sir!
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
அ.பி 2 years ago
Endemic - உள்ளூர்நிலைதொற்று Epidemic - உள்ளூர் பெருந்தொற்று Pandemic - உலகளாவிய பெருந்தொற்று. இது சரியானதாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Reply 6 0
Login / Create an account to add a comment / reply.