கட்டுரை, அரசியல், சர்வதேசம் 3 நிமிட வாசிப்பு

தாய்லாந்திலிருந்து ஒரு நம்பிக்கை ஒளி

மூர்க்குமா செ
16 Jun 2023, 5:00 am
0

லகின் முக்கியமான அரசியல் விமர்சகர்களின் பார்வை தாய்லாந்தை நோக்கித் திரும்பியிருக்கிறது. இந்தியப் பின்னணியிலும் நாம் கவனம் கொடுத்துப் பேச வேண்டிய விஷயம்தான் இது!

தாய்லாந்தில் சென்ற மாதம் நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்திருக்கும் பிட்டா லிம்ஜரோன்ரெட் எனும் இளம்தலைவர்தான் பேசுபொருளின் மையம். 

தாய்லாந்தின் நாடாளுமன்றம் 500 பிரதிநிதிகளைக் கொண்டதாகும். தேர்தலில் முன்னோக்கிச் செல்லும் கட்சி 36.23% வாக்குகளைப் பெற்று 152 இடங்களுடன் மக்களவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இது தாய்லாந்தைத் தாண்டியும் உலகின் அரசியல் விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தியதற்குக் காரணம் உண்டு. பாரம்பரியமான அரசியல் பாதைக்கு மாறுபட்ட வகையில் ஆட்சியதிகாரம் நோக்கி வந்த கட்சி இது.

தாய்லாந்தின் பின்னணி

தாய்லாந்து 7 கோடி மக்கள்தொகையைக் கொண்ட நாடாகும். 93% மக்கள் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்றனர். இந்தோ-சைனா தீபகற்பத்தில் அமைந்துள்ள தாய்லாந்தைச் சுற்றி மியான்மர், லாவோஸ், கம்போடியா, மலேசியா உள்ளன; கடல் சூழ்ந்துள்ளது. இன்றும் சக்ரி வம்சத்தின் மன்னராட்சியின் கீழ் உள்ள நாடு இது. மேலை நாடுகளின் கட்டுப்பாட்டிற்குள் தாய்லாந்து இதுவரை இருந்ததில்லை. 

அரசமைப்பின் அடிப்படையில் 1932இல் மன்னராட்சி ஒழுங்கமைக்கப்பட்டது. 1939 வரை சியாம் என்றழைக்கப்பட்ட அது பிறகு தாய்லாந்து என அழைக்கப்படலானது. ராணுவ ஆட்சியும் ஜனநாயக ஆட்சியும் மாறி மாறி செல்வாக்கு செலுத்தும் நாடு இது. முதலில் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டிலும், 1975 முதலாக சீன ஆதரவு நிலைப்பாட்டிலும் வெளியுறவுக் கொள்கையைத் தாய்லாந்து அமைத்துக்கொண்டுள்ளது. 

தேசிய நாடாளுமன்றத்தில் மேல்சபையில் 250 நியமன உறுப்பினர்களும், மக்கள் சபையில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 500 உறுப்பினர்களும் இருக்கின்றனர். பிரதமர் தேசிய சபையினால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேல்சபையில் அமர்த்தபட்டவர்களும் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளனர். அவருடன் 35 கேபினட் அமைச்சர்கள் உள்ளனர். பிரதமரின் தலைமையின் கீழ் அரசு இயங்குகிறது என்றாலும், ராணுவமும் மேல்தட்டு மக்களும் அரசியலைக் கணிசமாகக் கட்டுக்குள் வைத்திருக்கின்றனர்.

கடந்த கால அரசியல்

சென்ற பத்தாண்டுகளில் தாய்லாந்து அரசியல் பல சமயங்களில் சர்வதேச கவனம் ஈர்த்திருக்கிறது. பாப்புலிஸ்ட் பியு தாய் கட்சியின் பெண் பிரதமரான ஷினவத்ரா காலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பச் சூழல் இதற்கு முக்கியமான காரணமாகும். 2019இல் ராணுவ தளபதி பிராயூத் ஆட்சிப் பொறுப்பேற்றார். அவர் மக்களுக்கான அரசியல் குடியுரிமைகளை நிராகரித்தார். மன்னரைக் கேலிசெய்வதாகக் கூறி மக்கள் தண்டிக்கப்பட்டனர். அரசியல் எதிரிகளும் மாற்றுக்கருத்தாளர்களும் 'அணுகுமுறை சரிசெய்யும் முகா'மிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட பாசிஸ சூழல் அங்கே  உருவெடுத்தது. 

இந்தக் குழப்பங்கள் எல்லாம் அரங்கேறிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தாய் மன்னர் பூமிபோல் 2016இல் இறந்தார்.  அடுத்து அவரது மகன் வஜ்ரலொன்கார்ன் முடி சூட்டிக்கொண்டார். இதனூடாக தாய்லாந்தின் அரசமைப்புச் சட்டம் ராணுவ ஆட்சிக் குழுவினால் மாற்றியமைக்கப்பட்டது; ராணுவ வழிபாட்டு ஜனநாயகம் உருவாக்கப்பட்டது. ராணுவ தளபதி பிராயூத் தொடர்ந்து பதவியில் இருந்தார். மக்கள் சித்திரவதைக்கு உள்ளானார்கள். மீண்டும் ஜனநாயகத்திற்கு ஆதரவான தொடர் போராட்டங்கள் தோன்றின. 

போராட்டங்களினூடாகத் தோன்றிய கட்சி 

இத்தகு கொந்தளிப்பான சூழல் இடையே சாமானிய மக்களால் உருவாக்கப்பட்ட கட்சியே  ‘முன்னோக்கி செல்லும் கட்சி’தான்  (Move Forward Party / Fast Forward Party) ஆகும்; 2014 மே 1இல் இக்கட்சி உருவானது. இது சமூக ஜனநாயக முற்போக்குக் கட்சியாகும். உருவான வேகத்தில் மக்களுடைய கவனத்தையும் செல்வாக்கையும் ஈர்த்தது அன்றைய ஆட்சியாளர்களிடம் அச்சத்தை உருவாக்கியது. கட்சியை முடக்க நேரம் பார்த்தனர். மன்னராட்சியை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டி, 2020 பிப்ரவரியில் இக்கட்சிக்கு நீதிமன்றத்தால் முடிவு கட்டப்பட்டது.

ஆனால், இப்படி ஒரு சூழலை முன்கூட்டி உத்தேசித்து, ஒரு மாற்று அமைப்பை ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார்கள் அக்கட்சியினர் 2018இல் ‘எதிர்கால முற்போக்கு கட்சி’ (Future Forward Party) என்ற பெயரில் ஒரு கட்சி உருவாக்கப்பட்டது. தேர்தல் அரசியலுக்கான வாகனமாக இக்கட்சி திட்டமிடப்பட்டது. அதாவது, சமூக அரசியல் தளத்தில் பணியாற்ற ஒரு கட்சி; தேர்தல் அரசியல் தளத்தில் பணியாற்ற ஒரு கட்சி என்று சொன்னார்கள். ஆகையால், முந்தையது முடக்கப்பட்டபோதும் பிந்தையது துடிப்பாகச் செயலாற்றியது.

தேர்தல் அரசியலுக்காக உருவாக்கப்பட்ட கட்சிக்கு பிட்டா லிம்ஜரோன்ரெட் தலைமையேற்றார். ராணுவ அதிகாரத்தையும் தலையீட்டையும் அரசியலில் கட்டுப்படுத்துவதையும் நிர்வாகப் பரவலாக்கத்தைக் கொண்டுவருவதையும் நோக்கமாகக் கொண்டு இவர்கள் செயலாற்றினார்கள்.

எதிர்கால முற்போக்குக் கட்சி 2019 தேர்தலில் நாடாளுமன்றத்தில் 39 இடங்களில் வென்றது. அடுத்து, 2023இல், சமீபத்தில் நடந்த தேர்தலில் பெருவெற்றியை அடைந்திருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யவும் தன்பாலினத் திருமணங்களை அங்கீகரிக்கவும், ராணுவத்தின் கட்டாய நிபந்தனைகளுக்கு எதிராகவும் மேலும் அரசமைப்புச் சட்டத்தை மாற்றி எழுதவும் மன்னர் ஆட்சியை மாற்றவும் இக்கட்சி உறுதி பூண்டிருக்கிறது.

இக்கட்சி தேர்தலில், மூன்று கூறுகளை முன்னிலைப்படுத்தியது. நிர்வாகத்தில் ராணுவதின் தலையீட்டை அகற்றுதல் (Demilitarization), பொருளாதார ஏகாதிபத்தியத்தை ஒழித்தல் (Demonopolization), அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தல் (Decentralization). இதன் மூலம் ஜனநாயகமும் அமைதியான நிர்வாகமும் செழிக்கும் என்றார் தலைவர் பிட்டா.

புதிய அரசியல் தலைமை

கட்சியின் தலைவரான பிட்டா லிம்ஜரோன்ரெட் 42 வயது நிரம்பியவர். ஹார்வர்டு, மாஸாசூசெட்ஸ் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை முடித்தவர். அரசியலுக்கு வந்த மிகக் குறுகிய காலகட்டத்தில் இக்கட்சியினர் ஆட்சியைக் கைப்பற்றியதே உலகின் கவன ஈர்ப்புக்கான முக்கியமான காரணம்.

பிட்டா லிம்ஜரோன்ரெட் 1980 செப்டம்பர் 5இல் பிறந்தவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். நவீன இளம் தலைமுறையின் அரசியல் அபிலாஷைகளை அவர் பிரதிபலிப்பதாக தாய்லாந்து மக்கள் கருதுகிறார்கள்.

முன்னதாக, முன்னோக்கிச் செல்லும் கட்சியில் பணியாற்றிவந்த பிட்டா, பிற்பாடு புதிய கட்சி உருவாக்கப்பட்ட பின் அதில் கவனம் செலுத்தினார். 2019 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக நாடாளுமன்றத்துக்குள் சென்றார். நாடாளுமன்றத்தில் ‘ஐந்து பொத்தான்கள்’ எனும் கோட்பாட்டை இவர் முன்மொழிந்தார். நிலவுடைமை, விவசாயிகளின் கடன் பிரச்சினை, கஞ்சா உற்பத்தி விவாதம், வேளாண் சுற்றுலா வளர்ச்சி மற்றும் நீர் வளப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பில் இவர் தொடர்ந்து குரல் எழுப்பினார். இது பலராலும் பாராட்டப்பட்டது. 

2023 பொதுத் தேர்தலை இவரது தலைமையின் கீழ் புதிய கட்சி சந்தித்தது. அவர் தற்போது கூட்டாட்சியின் தலைவராகவும் தாய்லாந்தின் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மக்கள் நலனுக்காகவும் ஜனநாயகத்திற்காகவும் எப்போதும் துணை நிற்பதாக உறுதி பூண்டுள்ளார். 

நாட்டின் வளர்ச்சிக்கு எந்தப் பிரச்சினை முன்னெடுக்கப்பட்டு தீர்வு காண வேண்டும் என்பதைக் கண்டறிந்து, நாடாமன்றத்தில் அவர் பேசிய உரை அனைவரையும் கவர்ந்தது. தற்போது பொதுச் சுகாதாரம், லஞ்ச ஒழிப்பு, டிஜிட்டல் வளர்ச்சி, ஏற்றத்தாழ்வைக் குறைத்தல், நிலச் சீர்திருத்தம் ஆகியவற்றில் அரசு கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. 

முக்கியமான செய்தி என்னவென்றால், மன்னராட்சி, ராணுவ ஆதிக்கம்,  பாசிஸம், அடக்குமுறை, ஊழல் நிர்வாகம் என்றிருந்த நாட்டில் பாரம்பரிய அரசியல் சக்திகள் அத்தனையையும் தூர வீசிவிட்டு, சாமானிய மக்கள் திடீரென்று ஒரு புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதே ஆகும். வெறும் பத்தாண்டுகளுக்குள் இந்தப் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. உலகில் அடக்குமுறை ஆட்சி கோலோச்சும் நாடுகளின் ஆட்சியாளர்களுக்கு இது எச்சரிக்கை என்பதோடு, மக்களுக்குப் புதிய நம்பிக்கையும் என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள். இந்தியாவுக்கும்தான்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

3

1





எஸ்.என். சாஹுஜாம்பியாபாஷைகள்செல்வி எதிர் கர்நாடக அரசுஹீரோமணி மண்டபம்தமிழ் நாட்டிய மரபுகாஷ்மீரம்உன் எழுத்து கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தானே இல்லை: பெருமாள் முருகன் அருஞ்சொல் கட்டுரைசிறுபான்மைச் சமூகத்தவர்முதியவர்கள்மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாஇந்திய ரயில்வே வேஷதாரியா?கருத்துரிமைதிரிக்குறள்வங்கிகள்கல்யாணச் சாப்பாடுசெக்கர்லட்சியவாதம்பன்மொழி அதிகாரம்ரஜினிகாந்த்நான்கு சிங்கங்கள்நார்சிஸ்டுகளின் இருண்ட பக்கம்பைஜூஸ்பீமாகோரேகாவோன்காஷ்மீர் இந்துக்கள் படுகொலைபோரிடும் கூட்டாட்சிசென்னையை நாசப்படுத்திவிட்டோம்: ஜனகராஜன் பேட்டி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!