கட்டுரை, அரசியல், சர்வதேசம், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

வங்கதேசம்: இது சக்கரவர்த்திகளுக்கான காலம் இல்லை

மூர்க்குமா செ
11 Aug 2024, 5:00 am
0

டஒதுக்கீடு கேட்டோம். தோட்டாக்கள் ரத்தம் குடித்தன. 400க்கும் மேற்பட்ட இளைஞர்களும் காவலர்களும் உயிரிழந்தனர். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ‘சர்வாதிகாரியிடம் இருந்து வங்கதேசம் இரண்டாம் விடுதலை பெற்றுள்ளது. நாடு முழுதும் கொண்டாட்டத்தில் உள்ளது. புதிய காற்றை சுவாசிக்கிறது. புதிய தலைமை உருவாகும். இல்லையெனில் நாடு சிதறியிருக்கும்’ வங்கதேசத்தின் தற்காலிக அரசின் தலைவர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸின் கூற்று இது.

ஷேக் ஹசீனாவின் அரசியல் 

அழுகிய அரசியல் முறை. பேராசை பிடித்த அரசியல் குடும்பங்கள். அதற்கு முன் நிற்க இயலாத அரசு இயந்திரம். சீர்கெட்ட நிர்வாகம். ஜனவரி 2024இல் நடந்த தேர்தல் முறைகேடுகள் மக்களைக் கொதிப்படைய வைத்தது. உள்நாட்டு நிர்வாகம் சர்வாதிகாரமாக உருவெடுத்திருந்தது. தேர்தலுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் சிறையில் தள்ளப்பட்டனர். 1000க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறைச்சாலைகளில். நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சி, வங்கதேச தேசிய கட்சி தேர்தலில் பங்கேற்கவில்லை. இதனால் மூன்றாவது முறையாக சர்வாதிகார ஆட்சி அமைந்தது.

இன்றைய வங்கதேசத்தின் நிலவரத்துக்கு ஷேக் ஹசீனாவின் கடந்த 15 ஆண்டுகளின் ஆட்சியே காரணமாகும். சமூக - பொருளாதார ஊழல், நிர்வாக, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பொய்யான தேர்தல்கள் முக்கிய காரணங்களாகும். 

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

ஜனநாயகத்தின் குரல்வளையை நெரித்துவிட்டால் நாடு சிறப்பாக வளர்ச்சி அடையும் என்பது ஒவ்வொரு சர்வாதிகாரியின் எண்ணமாகும். அங்கு எதிர்க் கருத்துக்கும் உரையாடலுக்கும் இடமில்லை. எதிர்க்கட்சிகளின் குரல்கள் எந்த தேசிய ஊடகங்களிலும் எதிரொலிக்க வில்லை. எதிர்க் கருத்துக்களை ஆளுங்கட்சி கேட்கும் அளவிற்கு இல்லை. வங்கதேசம், ஒரு தசாப்தமாக அவ்வாறே இருந்துள்ளது.

தற்போதைய பிரச்சினைகளைப் பேசாமல், சிறந்த எதிர்காலத்தைக் கட்டமைப்பதாக காற்றில் கோட்டை கட்டினார் பிரதமர். தன்னையே முன்னிலைப்படுத்தினார். நான் இல்லாவிட்டால் நாட்டின் எதிர்காலம் இல்லை என்றார் ஷேக் ஹசீனா. தனக்கு ஈடான தலைவர்கள் இல்லை என்றும் கூறினார்.

தனிமனித துதிபாடலும் போற்றுதலும் அதிகரித்தது. பொதுமக்களின் பிரச்சினைகள் பிரதமரின் காதுகளைச் சென்றடையவில்லை. அவர் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவராக மாறினார். ஊடகங்களைச் சந்திப்பதும் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் தனது தகுதிக்குக் குறைவாக கருதினார்.

இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு

வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சி ஏன்?

டி.வி.பரத்வாஜ் 21 Jul 2024

இன்றைய பிரச்சினை என்ன?

அரசு பொய் சொல்லும் இயந்திரமாக மாறியது. அவர்கள் சொல்லும் பொய்யை மெய் என்று நம்பவும் ஆரம்பித்தார்கள். இவ்வாறு தேர்தல் யதேச்சதிகாரம் உருவெடுத்தது. அரசுத் துறைகள் தவறான தகவல்களைப் பரப்பின. உலக பத்திரிகைகள், ஊடகங்களின் அறிக்கைகளையும் கருத்துகளையும் ஆளுங்கட்சி நிராகரித்தன. கேள்விக் கேட்டவர்கள் தேச விரோதிகள் என்றும் நாட்டுக்கு எதிரானவர்கள் என்றும் முத்திரை குத்தப்பட்டனர்.

1971 வங்கதேச விடுதலைப் போரில் ஈடுபட்டவர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்கியது. அதை மாணவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கு சமூக வலைதளங்கள், இணையதள வசதிகள் மூடப்பட்டன. அது மாணவர்களைக் கொந்தளிப்புக்கு உள்ளாகியது. அவர்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைப் பெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டது. 10,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். ஆளும் அவாமி லீக் அரசு வேலைகளைக் கட்டுப்படுத்தியது. இறுதியில் ராணுவமும் அரசினைக் கைவிட்டது. 

வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி அனைவருக்குமானது இல்லை. 2/5 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. கட்சி சார்ந்தவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பும் தொழில் வாய்ப்புகளும் கிடைத்தன. நெருங்கிய நண்பர்களின் பொருளாதாரம் வரலாறு காணாத வெற்றியடைந்தன. ஒட்டுண்ணி முதலாளித்துவம் பொருளாதாரத்தைச் சீரழித்தது. வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறின. பணவீக்கம் 10% உள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் 40% உயர்ந்துள்ளது. 

இன்று ஆடைகளின் ஏற்றுமதி பெரும் பின்னடைவை அடைந்துள்ளது. இதன் ஏற்றுமதி 38.4 பில்லியன் டாலர்களாக இருந்தது. ஷேக் ஹசீனாவினால் ஏழ்மை பாதியாக குறைக்கப்பட்டாலும் அடக்குமுறை அதிகமாக இருந்தது. லஞ்சம் அதிகரித்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து. பொதுமக்கள் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு அல்லல்பட்டனர். வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுடன் நெருங்கியும் வர்த்தகத்தில் சீனாவுடன் நெருங்கியும் நிர்வாகம் இருந்தது.

இளைஞர்களின் சக்தி உலகின் மாபெரும் சர்வாதிகாரியை மண்டியிடச் செய்துள்ளது. 17 கோடி மக்கள்தொகையில் ஏறத்தாழ 30% இளைஞர்கள். சமூக விழிப்புணர்வும் அதிகம். பிரதமரின் வீடு, கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டது. வங்கதேசத்தின் தேசத் தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையும் உடைக்கப்பட்டது.

புதிய அரசு செய்ய வேண்டியது என்ன?

தற்போது தற்காலிக அரசு யூனுஸ் தலைமையில் அமைந்துள்ளது. சமூக - பொருளாதார, ஜனநாயக மாற்றங்கள் சிறப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நிலையில் அரசு இஸ்லாமிய தீவிரவாதத்தில் விழுவதற்கும் வாய்ப்புள்ளது. நிதிநிலை சீரழிந்தால் வங்கதேச பொருளாதார வளர்ச்சிக்கு சீனாவை நாட வேண்டியிருக்கும். அது அங்கு ஜனநாயகத்தையும் இந்தியாவுடனான உறவையும் பாதிக்கும். 

தேர்தல் நடைபெற்றால், வங்கதேச தேசிய கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதுவும் பரம்பரை ஆட்சியே. தற்காலிக ஆட்சியும் நீண்ட நாள்கள் தொடர்ந்தால், ராணுவம் கைப்பற்றவும் கூடும். எனவே, தற்காலிக ஆட்சி உடனடியாக தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் ஷேக் ஹசீனாவின் ஆட்சியில் சீரழிந்த நிர்வாக அமைப்புகளையும் நிறுவனங்களையும் சரிசெய்ய வேண்டும். தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் நேர்மை அடைய வேண்டும்.

இரண்டு பரம்பரை கட்சிகளும் புதிய தலைவர்களுக்கு வழிவிட வேண்டும். வங்கதேசத்தின் பரம்பரை ஆட்சியும் சர்வதிகாரமும் வீழ்ச்சி அடைந்ததுபோல் எங்கும் நடைபெறலாம். இளைஞர்கள் ஒன்றுதிரண்டால் வரலாறு மாற்றி எழுதப்படும். ஆட்சியில் இருப்பவர்கள் அறிந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் போராட்டமே, தொடர்ச்சியாக தேர்தலில் வெற்றிபெற்று, இரும்புப் பெண்மணி என அறியப்பட்ட ஷேக் ஹசீனாவை நாட்டைவிட்டு வெளியே ஓடுவதற்குக் காரணமாக அமைந்தது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?

ஷிவ் சஹாய் சிங் 07 Jul 2024

இந்தியாவுக்கும் பாடம்

ஜனநாயக அரசு என்பது பொதுமக்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டது. சிறந்த ஜனநாயகம் என்பது தனித்து இயங்கும் அரசு நிறுவனங்களின் செயல்பாடுகளில் உள்ளது. நீதித் துறை, தேர்தல் ஆணையம், அரசின் புலனாய்வு அமைப்புகள், ஊடகங்கள், பொறுப்பான எதிர்க்கட்சிகள் போன்றவற்றின் ஒளிவுமறைவற்ற, பாரபட்சமற்ற செயல்பாடுகளினால் ஜனநாயகத்தின் ஆன்மா காப்பாற்றப்படும். 

நாடாளுமன்றம் தலையாட்டி பொம்மைகளின் கூடாரம் அல்ல. இன்றைய ஜனநாயகம் 10ஆம் நூற்றாண்டின் சக்கரவர்த்திகளைத் தேர்ந்தெடுக்கவில்லை.

ஜனநாயகத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சர்வாதிகாரிகள் அரசு அமைப்புகளின் குரல்வளையை நெரிக்கும்போது ஜனநாயகம் செயலிழந்துவிடுகிறது. செயலிழந்த ஜனநாயகத்தைப் புதிய தலைமுறைகள் ஏற்றுக்கொள்வதில்லை. நீதிமன்றங்களும் அரசு நிறுவனங்களும் ஊடகங்களும் தனிமனிதனுக்குச் சாதகமாக நிற்க வேண்டும்.

உண்மையில் எந்த ஜனநாயகமும் அரசர்களையும் இளவரசர்களையும் தேர்ந்தெடுப்பதில்லை. ஜனநாயகத்தில் மந்திரிகளும் பிரதமர்களும் அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தனிமனிதனின் புகழினால் அவரது ஆட்சி நிர்வாகத்தின் இழிவுகளை மறைத்துவிட முடியாது. 

வங்கதேச அரசியல் சூழலிலிருந்து இந்தியா கற்றுக்கொள்ள ஏராளம் உண்டு.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

வங்கதேசத்தின் ஐம்பதாண்டு சாதனை எப்படி, எதனால்?
இரு நாடுகள் கொள்கைக்குப் புத்துயிர்?
டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?
வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சி ஏன்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






ரத்த அழுத்தம்பற்றாக்குறை ஏன்?அஜீத் தோவல்ஹெப்பாடிக் என்கெபலோபதிசாஹேப்taxationஉங்கள் ஆரோக்கிய பிளேட்டில் என்ன இருக்க வேண்டும்?எஸ்.எஸ்.ஆர். பேட்டிஅப்துல் மஜீத்சிறுநீரகம்பழங்குடிக் குழுக்கள்ட்வீட்வீர சிவாஜிதமிழ் ஆளுமைநேடால் இந்தியக் காங்கிரஸ்ஐ.சி. 814 விமானம்ரத்தச் சர்க்கரைஇந்தியர்பேராசிரியர் கல்யாணி பேட்டிரஜினி சம்பளம்பீட்டர் அல்ஃபோன்ஸ் உள்ளதைப் பேசுவோம் பேட்டிமுரசொலி மணி விழாக் கட்டுரைவட கிழக்கு மாநிலம் வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!கல்வியாளர்multiple taxation policiesஆல்பர்ட் ஐன்ஸ்டைன்பொன்முடி - அருஞ்சொல்விஸ்வ ஹிந்து பரிஷத்ரஞ்சனா நாச்சியார்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!