கட்டுரை, அரசியல், கலாச்சாரம், வாழ்வியல், நிர்வாகம் 5 நிமிட வாசிப்பு

விஷச் சாராயப் பிரச்சினைக்கு என்னதான் தீர்வு?

மூர்க்குமா செ
07 Jul 2024, 5:00 am
0

து 2024 ஜூன் 18ஆம் நாள் மாலை வேளை, கலியமூர்த்தி - முனியம்மா தம்பதி கட்டிட வேலை முடித்து வீடு திரும்பினர். கணவர் கலியமூர்த்தி மறுநாள் சமையலுக்கான அரிசி வாங்கச் செல்வதாகக் கூறி வெளியே சென்றார். வழக்கம்போல், ஊரில் விற்பனை செய்யப்படும் கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடித்தார். அன்றைய தினம், அவர் தன்னுடைய உடலில் வழக்கத்தைவிட ஏதோ மாற்றங்கள் நிகழ்வதை உணர்ந்தார். வயிற்று வலி, வாந்தி என ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் கண் பார்வை மங்கியது. சுருண்டு விழுந்தார். தகவல் அறிந்த முனியம்மா, தன் கணவரைக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அவரால் தன் கணவரைக் காப்பாற்ற முடியவில்லை. 

கலியமூர்த்தி குடித்த சாராயத்தில் மெத்தனால் அதிகம் கலந்திருந்ததுதான் அவரது மரணத்துக்குக் காரணமாக அமைந்தது. கலியமூர்த்தி மட்டுமல்ல, அன்றைய தினம் அப்பகுதியில் கள்ளச்சாரயம் குடித்தவர்களில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

மயானத்தில் உடல்கள் வரிசையாக கிடத்தப்பட்டு எரிக்கப்பட்டன. கணவை இழந்த மனைவிகள், தந்தையை இழந்த பிள்ளைகள் என ஊரே ஒப்பாரியில் மூழ்கியது. பெரும் துயரம்!

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

கள்ளக்குறிச்சியும் விவாதங்களும்

கள்ளக்குறிச்சி நிகழ்வைத் தொடர்ந்து கள்ளச்சாராயம் குறித்த விவாதம் தீவிரமாக எழுந்துள்ளது. 

ஆளுங்கட்சிதான் இந்த அவல நிலைக்குக் காரணம், பூரண மதுவிலக்குக் கொண்டுவந்தால் கள்ளச்சாராய சாவைத் தடுக்கலாம் என ஒருபக்கம், பூரண மதுவிலக்குக் கொண்டுவந்தால் கள்ளச்சாராயம் பெருகுமே தவிர குறையாது என மறுபக்கம் என வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

தண்ணீரில் மூழ்கியவனை தீப்பந்தம்கொண்டு தேடுவதுபோல், தமிழ்நாட்டில் மது பிரச்சினையை அரசியல் கட்சிகள் இன்று விவாதித்துக்கொண்டுள்ளன. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மதுவை ஒழிப்பேன் என்பதும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது வருமானத்தைப் பெருக்குவதுவும் கடந்த 50 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.

மக்களின் பிரச்சினைகளை அணுகும்போது, நமது திடநம்பிக்கையை ஒதுக்கித் தள்ளிவிட்டு மக்களின் பிரச்சினை என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் அவர்கள் எவ்வாறு அந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்று எண்ணுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். 

பூரண மதுவிலக்கு சாத்தியமா?

1808ஆம் ஆண்டு, ஆஸ்திரிலேயாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸை நிர்வகிக்க பிரிட்டன் அரசு கவர்னர் வில்லியம் பிலை அனுப்பியது. அங்கு சென்ற பிலைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மக்களும் படை வீரர்களும் குடியில் திளைத்துக்கொண்டிருந்தனர். எல்லாரும் எப்போதும் குடியிலேயே இருந்தனர்.

இதைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்று முடிவுசெய்த கவர்னர் பிலை, குடிப்பவர்களுக்கு 200 கசையடிகளும் 12 மாத சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. 

மக்கள் திருட்டுத்தனமாக குடிக்க ஆரம்பித்தனர். பலர் பிடிபட்டுக் கசையடி வாங்கியும் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனைகளால் மக்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அப்பிராந்தியத்துக்கு மெக்காத்தார் மூலம் மது திருட்டுத்தனமாக விநியோகிக்கப்பட்டது. இதை அறிந்த கவர்னர், மதுவைக் கடத்திவரும் மெக்கதாரின் கப்பலை முடக்கியதோடு, அவரை சிறையிலும் அடைத்தார்.

கடத்தல்காரர் மெக்காத்தார் விசாரணைக்காக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். தகவலறிந்த அப்பிராந்திய மக்களும், படைவீரர்களும் நீதிமன்றத்தில் வளாகத்தில் கூடினர். பெரும் சலசலப்பு ஏற்பட்டதால், நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார். 

மெக்காத்தார் கைதுசெய்யப்பட்டதால், மக்களுக்கு மது கிடைக்காமல் போனது. மெக்காத்தாரைக் கைதுசெய்த கவர்னர் மீது கடும் கோபம் கொண்ட, பொதுமக்களும் படைவீரர்களும் அவர் வீட்டை நோக்கிப் படையெடுத்தனர். தகவலறிந்த கவர்னர் தன் வீட்டு கட்டிலின் கீழ் ஒளிந்துகொண்டார். படைவீரர்களை அவரை வீட்டிலிருந்து இழுத்துவந்து சிறையில் அடைத்தனர். பிற்பாடு, பிரிட்டனிலிருந்து அதிகாரிகள் வந்தே கவர்னரை மீட்டனர். 

விஷயம் என்னவென்றால், மது அருந்துதல் ஒரு நடைமுறை சிக்கலான பிரச்சினையாகும் (Adaptive Challenge). அதைச் சட்டங்களால் மட்டுமே கட்டுப்படுத்திவிட முடியாது. அது மக்களின் பழக்க வழக்கம் சார்ந்த சமூகப் பிரச்சினையாகும். அது மக்களின் பழக்க வழக்கம் சார்ந்த ஒன்றாகும். மக்களின் மனநிலையில் மாற்றத்தை உண்டாக்க வேண்டியது அவசியம்.  

இதையும் வாசியுங்கள்... 15 நிமிட வாசிப்பு

இளையபெருமாளும் மதுவிலக்கும்

ரவிக்குமார் 23 Jun 2023

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

சர்வதேச மது மற்றும் சாராயம் லண்டன் அறிக்கையின்படி, இந்தியாவில் அமெரிக்காவைவிட மூன்று மடங்கு அதிக மது நுகர்வு இருப்பதாகத் கூறுகின்றது. இந்தியாவில், 2005 முதல் 2016 வரையிலாக காலகட்டத்தில் தனிமனிதனின் மது அருந்தும் அளவு இரட்டிப்பாகி உள்ளதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது. ஏறத்தாழ, இந்தியாவில் 16 கோடி மக்கள், 10 வயதிலிருந்து 75 வயதுவரை தினம் மது அருந்துகின்றனர். 

மது நுகர்வும் தங்கத்தின் நுகர்வும் இந்தியாவில் நெகிழ்வுத்தன்மை அற்றது (Inelasticity of demand). அதாவது, விலை ஏற்றத்தாலும் இறக்கத்தாலும் தங்கத்தின் நுகர்வோ மதுவின் நுகர்வோ பெரிதளவில் குறைவதில்லை. மாறாக, மக்கள் அவற்றைச் சட்ட விரோதமாகப் பெறத் தொடங்குகின்றனர். 

மது கொள்கை மாநில அட்டவணையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு மாநிலமும் மது மீதான வரியை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் மதுவின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. அது கள்ளச்சாராயத்திற்கு வழிகோல்வதுடன் குறைந்த விலையில் கிடைக்கும் மெத்தனாலைக் குடித்து உயிரிழப்பதற்கும் வழிவகை செய்கிறது.

மெத்தனால் என்பது போதை உணர்வைத் தரக்கூடியதைத் தவிர, அது பயன்படுத்துவதற்கான போதைப் பொருள் கிடையாது. அது உயிரைக் கொல்லும் விஷம். 30 மில்லி குடித்தால் போதும் மூளை செயல் இழந்து கண் பார்வை இழந்து இறப்பு ஏற்படும். எனினும், மிகக் குறைந்த விலையில் அது கிடைப்பதால், மக்கள் அதை நோக்கி நகர்கின்றனர். 

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு காலங்களில் கள்ளச்சாராயத்தின் உற்பத்தியும் மெத்தனால் உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. 1976லிருந்து இன்றுவரை அது நடைபெற்றுக்கொண்டுவருகின்றது. 1937இல் ராஜாஜி மதுவிலக்கை அமல்படுத்தினார். பிறகு 2001 வரை, 1971 -1974,1983 - 1987, 1990 - 1991தவிர மது விற்பனை தடைசெய்யப்பட்டிருந்தது. 

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மதுவிலக்குக் கொள்கையில் ஒரு நிரந்தர முடிவை எட்டவில்லை. திமுக 1971இல் மது விற்பனையை ஆரம்பித்து 1974இல் நிறுத்தியது. அதன் பிறகு 1975 - 1976 இரண்டு நிகழ்வுகளில் கள்ளச்சாராயத்தால் மக்கள் இறந்தனர். 1981 - 1987இல் அதிமுக மீண்டும் மது விற்பனையைத் தொடங்கி நிறுத்தியது. 1988 - 1990 போலி மதுவால் உயிரிழப்பு ஏற்பட்டது. எனவே, தமிழ்நாடு அரசு மலிவு விலை மது கொள்கையை நடைமுறைப்படுத்தியது. 

1983ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகம் சில்லறை விற்பனைக்காக மதுபான கடைகளை திறந்தது. 2003இல் இந்நிறுவனத்திற்கு மாநிலம் முழுவதும் மது விற்பனைச் செய்ய தனி உரிமை அளிக்கப்பட்டது. எப்போதெல்லாம் தமிழ்நாட்டில் மலிவு விலையில் மது கிடைக்கவில்லையோ அப்போதெல்லாம் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அத்துடன் மெத்தனால் குடித்து இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டுள்ளது. 

மெத்தனால் குடித்து 1981இல் கர்நாடகத்தில் 324 பேர், 1992இல் ஒடிசாவில் 200 பேர் இறந்தனர். 1994இல் பிஹாரில் 50 பேர், ஆந்திரத்தில் 50 பேரும், 2000 ஆண்டில் 34 பேர் கேரளத்திலும் இறந்தனர்.

இதையும் வாசியுங்கள்... 8 நிமிட வாசிப்பு

மது என்ன செய்யும்?

கு.கணேசன் 27 Mar 2022

செய்ய வேண்டியது என்ன?

1. தமிழ்நாட்டின் மது கொள்கை சரியாக வரையறுக்கப்பட வேண்டும். பெரும் வருமானம் ஈட்டும் இத்துறைக்கு நிரந்தர அலுவலர்கள் கிடையாது. இத்துறையில் பணிபுரிவோர் அனைவரும் மற்ற துறையிலிருந்து டெபுடேஷன் அடிப்படையில் மட்டுமே வேலை செய்கின்றனர். இதனால் இத்துறையின் மீது பெரும்பான்மையோருக்கு அக்கறையோ பொறுப்பே இருப்பதில்லை. வேலை செய்யாமல் சும்மா இருந்தபடி, அதிக பணம் ஈட்டுவதற்கான வாய்ப்பாக இத்துறை பார்க்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களில் இதற்கென்று அதிகாரிகள் தேர்வுசெய்யப்பட்டு இத்துறை நிரந்தர துறையாக செயல்படுகிறது. நிரந்தரத் துறையாக செயல்படும்போதுதான் இதன் உற்பத்தி, விநியோகம், விற்பனை மேலும், இதனால் ஏற்படும் விளைவுகள், சமூகத்தில் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றிய தெளிவான புரிதல் அதிகாரிகளுக்குக் கிடைக்கும். அந்தப் புரிதலின் வழியே இத்துறையை நிர்வகிக்க முடியும்.

2. சாராயம் என்பது பாவப்பொருளாக (Sin Goods) கருதப்படுகிறது. அதன் அடிப்படையில் அரசு வேண்டும்போதெல்லாம் கலால் வரியை உயர்த்துவதும் மதுவின் விலையை உயர்த்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. கூலித் தொழிலாளிகளின் வாங்கும் திறனுக்கு அதிகமாக மதுவின் விலை செல்லும்போது அவர்கள் கள்ளச்சாராயத்தையோ அல்லது விஷப் பொருளான மெத்தனாலையோ நாடுகின்றனர். 

மதுவின் விலையேற்றமானது வாங்கும் திறனுக்கு அதிகமாக செல்லும்போது மது அருந்துவோரின் எண்ணிக்கையும் குறைவதில்லை அதன் நுகர்வு அளவும் குறைவதில்லை. மதுவிற்கான தேவை நெகிழ்வுத்தன்மையற்றது (Inelasticity of demand). இதை அரசு மேலும் ஆய்வுசெய்து அதற்கு ஏற்றவாறு மது கொள்கையை வரையறை செய்வதே சரியாக இருக்கும். மேலும் மதுக்கடைகளின் எண்ணிக்கையையும் அதற்கு ஏற்றார்போல் சரியாக பராமரிப்பதும் முக்கியமான ஒன்றாகும்.

3. தமிழ்நாட்டில் மது அருந்துவார்களை அரசு மிகவும் கீழ்த்தரமாக நடத்தத் தேவையில்லை. மது அருந்துவதற்கான சரியான சூழலை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மதுக்கடைகள் தரமாக பராமரிக்கப்படுவதில்லை. மது அருந்துவோர்களுக்கான இட வசதியும் இருப்பதில்லை. தெருவோரங்களிலும் சந்துகளிலும் அமர்ந்து மது அருந்துகின்றனர்.  

மலேசியா போன்ற நாடுகளில் வாங்கும் முழு மதுவையும் அருந்து வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக ஒரு பாட்டில் வாங்கினால் சிறிது மதுவை அருந்திவிட்டு மீதி மதுவை அந்த விற்பனை இடங்களிலேயே பத்திரப்படுத்தி வைத்துச் செல்வதற்கான பூட்டு சாவியுடன் சேர்ந்த வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அவ்வாறு இல்லை. குடிப்பவர்கள் முழு பாட்டிலையும் அருந்துவதற்குக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கென்று அங்கு பூட்டு சாவி உடன் சேர்ந்த இருப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் வாங்கிய முழு மதுவையும் ஒரே நாளில் குடிப்பதற்கான தேவையில்லை. அதனால் அவர்களின் மது அருந்தும் அளவு குறைந்து அவர்கள் நாளடைவில் மாற்றத்தைக் காணவும் வழிவகை செய்யும்.

4. கடந்த 50 வருடங்களில் விஷ / கள்ளச்சாராய இறப்பு தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் மட்டுமே நடைபெற்றுள்ளது. இம்மாவட்டங்களில் மனித வளக் குறியீட்டு எண்ணும் குறைவாகவே உள்ளது. கல்வி அறிவின்மையும் பொருளாதார வசதியின்மையும் இதுபோன்ற இறப்புக்கு வழிவகை செய்கிறது. 

கள்ளச்சாராய உற்பத்தி என்பது பொருளாதாரம் சார்ந்த பிரச்சினையாகும். இதன் உற்பத்தி தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதியில் மட்டுமே நடைபெறுகின்றது. எங்கெல்லாம் சிறு - குறு தொழில்கள் இல்லையோ அங்கு இதன் உற்பத்தி உள்ளது அல்லது வேளாண்மையும் பொய்த்துப்போன இடங்களில் மக்கள் கள்ளச்சாராய உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.

ஆகவே தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் சிறு தொழில்களின் ஊக்குவித்து அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட வழிவகை செய்ய வேண்டும். இங்கு வேளாண் சாரா குறு - சிறு தொழில் மண்டலங்களை உருவாக்கி அரசு அவர்களுக்குக் குறைந்த வருமானத்திற்கான வழிவகை செய்ய வேண்டும். 

மேலும் இம்மாவட்டங்களில் பொருளாதார வசதியை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கித் தர வேண்டும். குறிப்பாக வட தமிழ்நாட்டிலும், கடலோர மாவட்டங்களிலும், தர்மபுரி, தேனி மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும். வேளாண்மையை மட்டுமே சார்ந்திருக்கும் வாழ்வியல் முறைகளை மாற்ற வேண்டும். இம்மாவட்டங்களில் வேளாண்மை பொய்க்கும்பொழுது மக்களுக்கு வாழ்வியலுக்கான வழிமுறைகள் இல்லை. அவர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கும் விற்பனை செய்வதற்கும் குடிப்பதற்கும் அதிக அளவில் தள்ளப்படுகின்றன. 

பெரும்பாலும் மாவட்டங்கள் மானாவாரி மாவட்டங்களாக உள்ளன. வாழ்க்கைக்கும் வறுமைக்காமான போராட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது மட்டுமே அவர்களை மீட்டெடுப்பதாக உள்ளது. கள்ளச்சாராய உற்பத்தி ஒரு மாற்றுப் பொருளாதார வருமானம் ஈட்டும் முறையாக அங்கு உள்ளது. 

5. மெத்தனால் அனைவருக்கும் கிடைப்பதைத் தடைசெய்ய வேண்டும். மெத்தனால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மெத்தனால் ஒன்றிய விஷச் சட்டம் 1919 கீழும் ஒன்றிய அரசின் பெட்ரோலியம் விதிகள் கீழும் நடைமுறையில் உள்ளது. இது எளிதில் பற்றி எரியக்கூடிய பொருள். மெத்தனாலை தவறாகப் பயன்படுத்தினால் மூன்று மாத சிறை தண்டனை மட்டுமே. அதில் யாரையும் கைதுசெய்யவும் முடியாது. ஆனால், மெத்தனால் விற்பனைக்கு எதிராக பெரும் தண்டனையை பெற்றுத் தருவதும் தற்போதைய சட்டத் திட்டத்தின் கீழ் சாத்தியம் இல்லை.

மெத்தனால் பெயின்ட், வார்னிஷ், மருந்து பொருட்கள் உற்பத்தி போன்ற தொழிற்சாலைகளுக்கு அதிகம் பயன்படுகிறது. இந்தத் தொழிற்சாலைகள் மஹாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகம் உள்ளன. தமிழ்நாட்டிற்கு மஹாராஷ்டிர மாநிலத்தில் இருந்து மெத்தனால் வருகிறது. மேலும் மெத்தனால் ஒரு லிட்டர் ரூபாய் பத்து மட்டுமே. 200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மெத்தனால் பயன்படுத்துகின்றன. மெத்தனால் திருட்டு என்பது எளிதாக நடைபெறுகிறது. இது போக்குவரத்தின்போதும் லாரிகளில் எடுத்துச் செல்லும்போதும் கிடங்குகளில் சேமிக்கப்படும்போதும்  எளிதில் திருடப்படுகிறது. 

6. மது ஆலைகளை அரசியலர்கள் நடத்துகின்றனர். பெரும்பாலான மது உற்பத்தியாளர்கள், சட்டம் இயற்றுபவர்களாகவும் சட்டமன்ற / நாடாளுமன்ற உறுப்பினராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதைச் சமூகம் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மது உற்பத்தி, விநியோகத்தில் ஈடுபடுபவர்களை அரசியல் கட்சிகள் தவிர்க்கலாம். தார்மீக அடிப்படையில் இவர்கள் சட்டம் இயற்றுபவர்களாக இருப்பது அந்தத் துறைக்கு சரியானதல்ல.

7. மதுவால் இறந்த குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் சமூக வலைதளங்களில் கேலிக்கூத்தாக சித்தரிக்கப்படுகிறது. இது இறந்தவர்களுக்கு வழங்கப்படும் வெகுமானம் அல்ல. அந்தக் குடும்பத்தைச் சரியான வழியில் கொண்டுவருவதற்காகவும் அவர்களின் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் வழங்கப்படுகின்றது. சிறந்த கல்வி, சுகாதாரம் வழங்குவதற்கான முதலீடாகும். இதற்கு நிதியாக வழங்காமல் அரசு அவர்களின் குழந்தைகளின் கல்வியையும் சுகாதாரத்தையும் அதற்கான முழு கட்டணமும் செய்யலாம். இதற்கென்று நலன் சார்ந்த நிதியத்தை உருவாக்கலாம்.

8. சினிமாக்களில் மது அருந்துபவர்கள் கதாநாயகர்களாக காண்பிக்கப்பட்டுப் போற்றப்படுகின்றனர். உண்மை நிலைமை அவ்வாறு இல்லை. எனவே, ஊடகங்களில் மதுவினால் ஏற்படும் நன்மை தீமைகளைத் தெளிவாக விளக்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். அதுபோன்ற காட்சிகள் வரும் படங்களில் அதிக கேளிக்கை வரி வசூல் செய்யலாம். சமூகப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சமூகத்தில் உள்ள அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

இளையபெருமாளும் மதுவிலக்கும்
மது என்ன செய்யும்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






சோராஒரே நாடுவேலைக்குத் தடைபணமதிப்புநீக்கம்75இல் சுதந்திர நாடு இந்தியாஉள்ளுணர்வுஅடையாள அரசியல்புகார்ஜந்தர்மந்தர்தவ்லின் – அம்ரிதாதிணைகள்ஆரிஃப் முஹம்மது கான்அபிராம் தாஸ்ஆர்எஸ்எஸ்: ஆழம் மற்றும் அகலம்சிரமப்படுத்தும் சிறுநீர்க் கசிவு!மறைக்கப்பட்ட மிருதங்கச் சிற்பிகள் செபாஸ்டியன் சகோததஞ்சை பெரிய கோயில்நுரையீரல் அடைப்பது ஏன்?பொதுவுடைமைக் கட்சிஒல்லிஆரென்டெட் மைக்கேல் கட்டுரைதாழ்வுணர்வு கொண்டதா தமிழ்ச் சமூகம்?எஸ். அப்துல் மஜீத்கோட்டயம்மரியா மன்சோஸ் கட்டுரைசோழக் கதையாடல்பிஹாரில் புதிய கட்சிகள்ஹாங்காங் மாடல்கேட்புமாற்றம் வேண்டும்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!