கட்டுரை, அரசியல், இலக்கியம், சர்வதேசம் 10 நிமிட வாசிப்பு
கோர்பசெவ், மார்க்கேஸ் மற்றும் ஜெயகாந்தன்
தமிழில் ஓர் எழுத்தாளராக கோர்பசெவ் தொடர்பில் ஆழ்ந்த கவனம் கொண்டிருந்தவர் ஜெயகாந்தன். கோர்பசெவை மிகுந்த நம்பிக்கையுடன், நேர்மைறையான கண்ணோட்டத்திலும் அணுகியவர் அவர். கோர்பசெவ் தொடர்பாக ஜெயகாந்தன் எழுதிய இரு கட்டுரைகள் முக்கியமானவை. முதலாவது அவர் 1988இல் எழுதியது. அந்தக் கட்டுரையானது, அடிப்படையில் உலகின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தொடர்பானது. ஆனால், அந்தக் கட்டுரையிலேயே கோர்பசெவ் தொடர்பாகவும் நமக்கு ஒரு பார்வையை வழங்குகிறார் ஜெயகாந்தன். இரண்டாவது அவர் 1991இல் எழுதியது. அந்தக் கட்டுரையில் தவறுகளைத் திருத்த வந்த தலைமையாக கோர்பசெவை அவர் காண்கிறார்.
முதல் கட்டுரையிலிருந்து…
‘ஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமை’ [ONE HUNDRED YEARS OF SOLITIUDE] என்பது அந்த நாவலின் பெயர். 1982ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு வென்ற இந்நாவலின் ஆசிரியர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், ஓர் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்.
ஒரு சிறுகதை எழுதி, அந்தச் சிறுகதையையே தொடர்ந்து ஒரு நாவலாக எழுதிய அனுபவம் எனக்கும் நேர்ந்திருக்கிறது. உதாரணம்; ‘அக்னிப் பிரவேசம்’. அதைத் தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’.
‘ஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமை’ என்கிற அவரது நாவலையும், பிறகு இவரது ஒரு கால் நூற்றாண்டுக் காலச் சிறுகதைத் தொகுப்பு ஒன்றையும் படித்தபோது, இவருக்கும், அதே அனுபவம் நேர்ந்திருப்பதைக் கண்டு எனக்கு வியப்பும், ஒரு பக்கம் இவரோடு ஒரு மானசீக ஒற்றுமை உணர்வும் ஏற்பட்டது. ‘பேதை இரேந்திரா’ (INNOCENT ERENDIRA) என்ற அந்தச் சிறுகதைதான் ‘ஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமை’ என்கிற நாவலின் ஓர் அத்தியாயம் ஆகும்.
நம் தமிழ்நாட்டு வாசகப் பெருமக்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், விமரிசகர்களுக்கும் இவரது பெயரும் படைப்புகளும் எந்த அளவுக்குப் பரிச்சயமோ நான் அறியேன். ஆனால், காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் என்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரின் பெயரும், படைப்புகளும் சோவியத் யூனியனில் மிகவும் பிரசித்தம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும், சோவியத் யூனியனின் தலைவர் மிகையில் கோர்பச்சேவும்கூட நான் படித்த மார்க்கேஸின் ‘ஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமை’ நாவலைத் தாமும் படித்திருப்பதாக அண்மையில் அந்த எழுத்தாளரோடு ஏற்பட்ட சந்திப்பில் அவரிடம் கூறியிருப்பதைக் கண்ணுற்று, மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைந்தேன்.
இந்தப் பெருமையும் மகிழ்ச்சியும் அர்த்தமுடையவை. எங்கோ லத்தீன் அமெரிக்காவில் பிறந்து ஸ்பானிய மொழியில் எழுதுகிற ஓர் எழுத்தாளர், சமகாலத்தில் வாழ்கிற மாபெரும் மனிதர்களையும், சாதாரண மனிதர்களையும் ஒன்றாக இணைத்து, ‘நீங்கள் இருவருமே என் வாசகர்கள்’ என்று நிரூபித்து விடுகிற மாபெரும் சாதனை எனக்கு வியப்பையும் பெருமிதத்தையும் மட்டுமல்ல; மொழி கடந்த இலக்கியத்தின், எழுத்துகளின், கருத்துகளின்பால் பெருமித உணர்ச்சியைப் பெருக வைக்கிறது.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் அந்த மாபெரும் எழுத்தாளர் அந்த மாபெரும் தேசத்துக்கு விஜயம் செய்து அந்த மாபெரும் தலைவரைச் சந்தித்திருக்கிறார். அவர்களின் சந்திப்பில் தற்கால உலகில் ஏற்பட்டுவரும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்கள் குறித்து நம்பிக்கையோடும், பொறுப்புகளோடும் உலகுக்குப் பல நல்ல செய்திகள் விவாதிக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன. “தங்களுடைய ‘நூறு ஆண்டுக்காலத் தனிமை’ என்கிற நாவலையும் பிற படைப்புகளையும் நான் படித்தபோது, அவற்றில் நான் வெறும் ‘இலக்கியப் பணி’களைப் பார்க்கவில்லை. மானுடகுல நலத்துக்காக மக்களின் மீது கொண்டுள்ள அன்பையே தரிசித்தேன்” என்கிறார் கோர்பச்சேவ்.
ஆம்; ‘ஒரு நூறு ஆண்டுக்காலத் தனிமை’ என்கிற அந்தப் படைப்பில் காலம் காலமாக, மானுட வர்க்கத்தினர் தலைமுறை தலைமுறையாக வாழ்வின் அவலங்களுக்கு ஆட்பட்டும், இரையாகியும், பாழ்பட்டு அழிந்தும்கூட அன்பையும் காதலையும் பெருந்தன்மையையும், எல்லாவற்றுக்கும் மேலாக ‘வாழ்வில் நம்பிக்கை’ என்ற பதாகையையும் பற்றிக்கொண்டு முன்னேறி முன்னேறிப் போராடிப் போராடிப் புதுவாழ்வு சமைக்கிறார்கள். இவரது நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் எல்லாம் காவியத் தன்மை கொண்டவை ஆகும். இது ஒரு நாவல் அல்ல; காவியம்!
அந்தச் சந்திப்பில் ஓரிடத்தில் சொல்கிறார் மார்க்கேஸ்: “கடந்த கால நினைவுகளின் வசப்படுதல் என்கிற காரியம் ஓர் ஆபத்தான பொறியில் மாட்டிக்கொள்வது போன்றதே… எனினும் அந்த நினைவுகளின் மூலம்தான், ‘வாழ்க்கையின் முக்கியமான அம்சம் உயிர் சுமந்து நாள் கழிப்பது அல்ல; மானுட வர்க்கத்துக்கு ஒரு மேலான வாழ்க்கையைச் சமைத்துத் தருவதே!’ என்பதை நீங்கள் உணர முடிகிறது.”
இந்தக் காவியகர்த்தாவின் உலகப் பெருநோக்கும், போராடுகின்ற மக்களின்பால் அவருக்குள்ள கொள்கைரீதியான பிணைப்பும்தான் அவரது படைப்புகளின் ஆதார சுருதி.
இக்கட்டான சர்வதேசப் பிரச்சினைகளைத் தீர்ப்பதிலும், சோவியத் வாழ்க்கை அமைப்பைப் புனரமைப்பதிலும் தமது பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிற சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி செயலாளரும் – நாட்டின் தலைவருமான கோர்பசெவ், நான் படித்துக்கொண்டிருக்கிற ஓர் மாபெரும் இலக்கியத்தை தாமும் படித்துக்கொண்டு இருக்கிறார்; நான் மதித்துப் போற்றுகிற ஓர் உலக எழுத்தாளரை நேர்முகமாய்ச் சந்தித்து நேச உரையாற்றுகிறார் என்றெல்லாம் அறிய நேர்கிறபொழுது எங்கோ ஓர் இடத்தில் எல்லா மனிதர்களையும் நெருக்கமாய்ப் பிணைத்து விடுகிற கட்சித் திருக்கூட்டத்தில் நானும் ஒன்றாய் இரண்டறக் கலந்துவிடுவதை உணர்கிறேன். “நெருக்கடி மிக்க நாற்சந்தியில் தத்தளித்துக்கொண்டிருக்கிற இன்றைய உலகில் உலகக் கலாசாரப் பிரமுகர்களின் சொற்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை. அவை ஆயுதங்களைவிட வலிமை வாய்ந்தவை” என்று கூறும் கோர்பசெவ் எத்தகைய மானுடநேய இலக்கிய அபிமானி!
இரண்டாவது கட்டுரையிலிருந்து…
லெனினுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின், லெனின் மீது எத்தகைய விமர்சனமும் கொண்டிருக்கவில்லை. லெனின் மீது தனிமனித வழிபாட்டை ஸ்டாலின் உருவாக்கியபோதிலும் – லெனினது பெயராலும் லெனினது திட்டங்களை லெனினிச முறைகளிலேயே தாமும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியும் பின்பற்றி நடப்பதாக அவர் நம்பினார். உலகையே நம்ப வைத்தார். லெனின் எதிரிகளையே அவர் தனது எதிரிகளாகக் கருதினார். யார் யாரை அவர் லெனினின் எதிரிகளாகக் கருதினார் என்பதில் விமர்சனம் இருக்கக் கூடும்.
எதிரிகளை அவர் ஒழித்துக் கட்டிய விதம் கண்டனத்துக்கு உரியதாகக்கூட கருதப்படும். ஆனால் ஸ்டாலின் தனது முன்னவரான லெனினை எங்கேயும் விமர்சித்ததில்லை. அதை மாற்றித் தாம் ஒரு புதுவழிப் போடப்போவதாக பிரகடனம் செய்ததில்லை. சாராம்சத்தில் லெனினுக்கு எதிர் வழியில் அவர் சென்றிருந்தபோதிலும் அது சரியே என்று மெய்யாகவே அவர் நம்பினார். உலகத்தை நம்பச் செய்தார். அதேபோல் லெனினும்கூட, ஸ்டாலின் ஒரு முன்கோபக்காரர், எதிரிகள் விஷயத்தில் கடுமையாக நடந்து கொள்ளக் கூடியவர் என்பதால் அவரைக் கட்சியின் பொதுக்காரியதரிசியாக ஆக்குவது குறித்துச் சற்று அச்சம் கொண்டிருந்தார் என்பது தவிர வேறு எத்தகைய கடுமையான விமர்சனத்தையும் எச்சரிக்கையையும் விடுத்ததில்லை.
ஸ்டாலினுக்குப் பிறகு சோவியத் யூனியனின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தலைவர்கள் – முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியவர் நிகிதா குருஷ்சேவ் – ஸ்டாலின் மேல் கடுமையான, மோசமான, இழிந்த குற்றச்சாட்டுகளை மலைமலையாகக் குவித்து வைத்தனர். ஆயினும் அந்தத் தவறுகளில் தங்களுக்கும் பங்கு இருந்த காரணத்தினால், அதைப் பகிரங்கப்படுத்தவும் அதன் மீது தீர்ப்பளிக்கவும் அவற்றைத் திருத்தி புதுநெறி காட்டவும் திறனும் தைரியமும் அற்றிருந்தனர். மேலும் தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்வதற்கு அதே ஸ்டாலின் வழிமுறைகளையே அவர்கள் பல்லாண்டுக் காலம் தொடர்ந்து கைக்கொண்டிருந்தனர்.
ஸ்டாலின் காலத்தில் சோவியத் மக்களின் வாழ்க்கைத் தரமும் பொருளாதாரமும் பலப்படுத்தப்பட்டன என்பதற்குப் புள்ளிவிவரங்கள் ஏதும் தேவையில்லை. வேறு சமுதாயங்களில் காணப்படும் ஊழல்களுக்கும் குற்றங்களுக்கும் அங்கே இடமிருந்ததில்லை. அரசியல் காரணங்களுக்காக, அறிவாளிகளும் விஞ்ஞானிகளும் கொடுமைப்படுத்தப்பட்டது தவிர அவர் காலத்தில் குடிமக்களுக்குப் பிரச்சினைகள் ஏதும் உருவாகவில்லை.
ஸ்டாலின் மீது விமர்சனம் கொண்டிருந்த புதிய தலைமையில் அந்த விமர்சனங்களை ஒளிவு மறைவாக வைத்துக்கொண்டதற்குக் காரணமே அவர்களுக்கும் அதில் பங்கு இருந்ததுதான். சோவியத் சமுதாயத்தின் மீது கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருந்த அதிகாரப் பிடி கழன்றுபோய்விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் ஒரு காரணம். ஆராய்ந்து பார்த்தால் அந்த உணர்வும் கட்சி உணர்வுதான். இதன் விளைவாக மக்களுக்கும் கட்சிக்கும் இடையே ஒரு மாபெரும் பள்ளம் உருவாயிற்று. அதிகாரத்தில் இருப்பவர்களிடையே ஊழல் மலிந்தது.
ஊழலுக்கே இடமற்றிருந்த ‘சமூகத்தின் புதிய வார்ப்புகள்’ என்று கருதப்பட்டிருந்த கம்யூனிஸ்ட்கள் வெறும் அதிகார வர்க்கத்தினர் ஆயினர். தங்கள் கட்சியின் பலவீனங்களை மூடி மறைத்துக்கொண்டதுபோலவே அந்த மாபெரும் தேசத்தின் பலவீனத்தையும் பிரச்சினைகளையும் மூடி மூடிப் பாதுகாக்கவே முனைந்தது ஸ்டாலினுக்குப் பின்வந்த சோவியத் தலைமை. இதில் பெரும் பங்கு வகிப்பது பிரஷ்னேவ் தலைமையில் ஆட்சி நடைபெற்ற காலகட்டமே ஆகும். அவர் காலத்தில் கட்சியின் மேல் மட்டத் தலைமையில் இருந்தவர்கள் அத்தனை பேரும் தொண்டு கிழவர்கள்.
முதலாளித்துவ உலகம், குறிப்பாக அமெரிக்கா எவ்வாறு கம்யூனிஸ பூச்சாண்டி காட்டித் தமது மக்களை வஞ்சித்து வாழ்கிறதோ அதே வண்ணம் சோஷலிஸ நாடான சோவியத் யூனியனிலும் கம்யூனிஸ்ட் கட்சி ‘ஏகாதிபத்தியப் பூச்சாண்டி’ காட்டிக்கொண்டு தனது அதிகாரத்தைப் பாதுகாத்துக்கொண்டது!
வஞ்சகமும் ஏமாற்றும் முதலாளித்துவ சமூகத்தில் நீடித்து நிலைக்க முடியும். மானுட வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்திய சோவியத் சமுதாயத்தில் அது நெடுநாள் நிலைக்க முடியாது.
என்னதான் மூடி மறைத்தபோதிலும் கம்யூனிஸ இயக்கத்தின் தவறுகள் வெறும் கட்சி சம்பந்தப்பட்ட மூடு மந்திரங்கள் ஆகிவிட முடியாது. என்னதான் பாதுகாத்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் ‘பழமைவாதத் தலைமை’ நிரந்தரமாகிவிட முடியாது என்பதற்கு அடையாளமாக முன்னர் நடந்த தவறுகளோடு முற்றிலும் சம்பந்தமற்ற ஒரு புதிய தலைமுறைச் சிந்தனை, சோவியத் யூனியனில் மலர்ந்து வருவதை அக்காலத்திலேயே நாம் காண முடிந்தது.
அந்தப் புதிய சிந்தனை, நிதானமும் பொறுமையும் நெடிது நோக்கும் திறனும் உடையது. அதன் மிகச் சிறந்த உதாரணம் மிகையில் கோர்பசெவ்!
பின்குறிப்பு:
இந்த இரு கட்டுரைகளும் ‘ஜெயகாந்தன் கட்டுரைகள் தொகுப்பு நூலான ‘சிந்தையில் ஆயிரம்’ தொகுதியில் இடம்பெற்றுள்ளன (வெளியீடு: செண்பகா பதிப்பகம், 328, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார், சென்னை - 600 017. போன்: 044-24336310).
1
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.