கட்டுரை, அரசியல், நிர்வாகம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
நெருக்கடியில் பாஜக முதல்வர்
ராஜஸ்தானில் பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா நிர்வாகத் திறமையின்மை, அனுபவக் குறைவு காரணங்களால் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார். அவருடைய நிர்வாகம் சரியில்லை என்று சொந்தக் கட்சிக்காரர்களே வெளிப்படையாகப் பேசுகின்றனர்.
சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு முன்னால் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தாமதப்படுத்துவது, நிர்வாகத்தில் அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பது, மருத்துவர்களாக போலிகள் தங்களைப் பதிவுசெய்துகொண்டது ஆகியவை அவருடைய நிர்வாகத் திறமையின்மைக்குச் சான்றுகளாக சுட்டிக்காட்டப்படுகின்றன.
முதல்வராக பஜன்லால் சர்மா பதவியேற்று ஒன்பது மாதங்களாகின்றன. முதல் முறையாக போட்டியிட்டுச் சட்டமன்றத்துக்கு வந்த அவரை, கட்சியின் டெல்லி தலைமை முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தது. வசுந்தரா ராஜ சிந்தியாவுக்கு மீண்டும் முதல்வர் பதவியைத் தரக் கூடாது என்ற பிடிவாதத்தில் கட்சித் தலைமை பஜன்லாலைத் தேர்ந்தெடுத்தது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
6 தொகுதிகளில் இடைத்தேர்தல்
ராஜஸ்தான் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் ஆறு பேர் அடுத்து நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வெற்றிபெற்றுவிட்டனர். இதனால் அவர்கள் தங்களுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டனர். மக்களவை பொதுத் தேர்தலில் நாடு முழுவதிலும் பாஜகவுக்கு இடங்கள் குறைந்தது, அதிலும் குறிப்பாக ராஜஸ்தானில் பெருத்த இழப்பு ஏற்பட்டுவிட்டது. மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 14இல் மட்டும்தான் பாஜக வென்றது.
கிரோடிலால் மீனா விலகல்
இந்தத் தோல்விக்குத் தார்மிக பொறுப்பேற்று மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் அரசியல் அனுபவம் மிக்கவரும் பழங்குடி சமூகத்தின் செல்வாக்குமிக்க தலைவருமான கிரோடிலால் மீனா, வேளாண்மை – பேரிடர் நிர்வாகத் துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார். அந்த ராஜிநாமா முதல்வரால் ஏற்கப்படாததால் அவர் பதவியில் நீடிக்கிறார். ஆனால், தனது துறை தொடர்பான கோப்புகளைப் பார்ப்பதில்லை என்று அவரே கூறுகிறார். ராஜிநாமாவைத் திரும்பப் பெறுங்கள் என்று கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா கூறியும் மீனா இணங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கிரோடிலால் மீனா பங்கேற்றார். அவர் சமாதானம் அடைந்துவிட்டார் என்றே எல்லோரும் நினைத்தனர். அவரோ கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், ராஜிநாமாவைத் திரும்பப் பெறவில்லை என்றும் முதல்வர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார். இந்த விவகாரம் கட்சிக்கும் மாநில முதல்வருக்கும் பெரிய தலைவலியாகத் தொடர்கிறது.
முந்தையா காங்கிரஸ் ஆட்சியில் மாநில தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் தொடர்பாகவும் பல்வேறு ஊழல்கள் பற்றியும் முதல்வரிடம் விளக்கம் பெறவே கூட்டத்தில் கலந்துகொண்டதாகப் பிறகு விளக்கியிருக்கிறார் மீனா.
அமைச்சரவைக் கூட்டத்தில் மீனா பங்கேற்றதிலிருந்தே அவர் நீடிப்பதைத் தெரிந்துகொள்ளலாம் என்று நிருபர்களிடம் கூறினார் கட்சியின் மாநிலத் தலைவர் மதன் ரத்தோட். இல்லையில்லை விலகலில் நான் மனப்பூர்வமாக இருக்கிறேன், என் முடிவில் மாற்றமில்லை என்று மீனா உடனே நிருபர்களிடம் கூறியது கட்சித் தலைவருக்குப் பெருத்த தருமசங்கடமாகிவிட்டது.
இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு
பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!
14 Dec 2023
“கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதை ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே தொடங்கிவிட்டோம். கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் அமல்செய்யப்படுகிறது. தேர்வாணையத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், வினாத்தாள்கள் கசிவு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு விசாரிக்கப்படுகிறது. சில குற்றவாளிகளைக் காவல் துறை கைதுசெய்திருக்கிறது. சமையல் எரிவாயுவுக்கு, தேர்தல் வாக்குறுதிப்படி மானியம் அளிக்கிறோம், மின்னுற்பத்தியை அதிகப்படுத்த பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசு மேற்கொண்டிருக்கிறது” என்று ராஜஸ்தான் மாநில பத்திரிகைத் தொடர்பாளர் லட்சுமிகாந்த் பரத்வாஜ் தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆட்சியில்
ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது 2021இல் சப்-இன்ஸ்பெக்டர் ஆளெடுப்புக்கான தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக, அமைச்சரவையில் உள்ள 6 பேர் தலைமையில் விசாரணைக் குழுவை ராஜஸ்தான் அரசு நியமித்திருக்கிறது. அந்தத் தேர்வையே ரத்துசெய்ய வேண்டும் என்பது கிரோடிலால் மீனாவின் கோரிக்கை. போலி ஆவணங்களைக் கொடுத்து ராஜஸ்தான் மருத்துவப் பேரவையில் தங்களை மருத்துவர்களாக பதிவுசெய்துகொண்ட போலிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மீனாவின் அடுத்த கோரிக்கை.
அதிகாரிகள் ஆதிக்கம்
ராஜஸ்தான் மாநிலத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் ஆதிக்கம்தான் நிலவுகிறது என்று ஆளும் பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில கட்சி நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். முதல்வருக்கு உள்ள அனுபவக் குறைவைப் பயன்படுத்திக்கொண்டு அதிகாரிகள் ஆட்டம் போடுவதாகவும், ஆளுங்கட்சிக்காரர்களின் கோரிக்கைகளையும் யோசனைகளையும் அலட்சியப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர். ‘ராஜஸ்தானில் முதல்வர் என்ற பதவியே கிடையாது, எல்லாமே அதிகாரிகள்தான்’ என்று மற்றவர்கள் கேலிசெய்கின்றனர் என்றார் ஒரு தலைவர்.
‘ராஜஸ்தானில் இப்போது அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில்தான் போட்டி’ என்று இன்னொரு ஆளுங்கட்சிக்காரர் தெரிவித்தார். ‘அதிகாரிகள் காட்டில் மழை, அதிலும் இரண்டு மூத்த அதிகாரிகள் தலைமையில் இரண்டு அணிகளாகப் பிரிந்து வேறு மோதிக்கொள்கிறார்கள்’ என்று இன்னொருவர் குறிப்பிட்டார்.
டெல்லி கணக்கு தப்பிவிட்டது
ராஜஸ்தானில் மூத்த தலைவர் வசுந்தரா ராஜ சிந்தியாவையோ அவருக்குப் போட்டியாக இருக்கும் மூத்த தலைவரையோ முதல்வராக நியமித்தால் தங்கள் விருப்பத்துக்கு அவர்களை வளைக்க முடியாது என்பதால், அனுபவமற்ற பஜன்லால் சர்மாவை ‘டெல்லி மேலிடம்’ முதல்வர் பதவியில் அமர்த்தியது என்றும், இப்போது டெல்லி மேலிடம் சொல்படிகூட நிர்வாகம் நடக்கவில்லை என்றும் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் வருத்தப்பட்டார்.
பொதுவாக ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்கள் கழித்து எதிர்க்கட்சிகள்தான் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் அதிருப்திகளை வெளிப்படுத்தும், இங்கோ ஆளுங்கட்சியே அவற்றைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்றார் இன்னொரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்.
செப்டம்பர் 8இல் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். அந்த மாற்றத்தில்கூட அதிகாரிகளின் பணிமூப்பு புறக்கணிக்கப்பட்டு இளையவர்கள் பொறுப்புள்ள பதவிகளுக்கும், மற்றவர்கள் சாதாரண பணிகளுக்கும் மாற்றப்பட்ட அவலமும் நிகழ்ந்தது. இதையெல்லாம் மேலதிகாரிகள் சிலர் சுட்டிக்காட்டியதும் சரிசெய்யப்பட்டது என்று இன்னொரு ஆளுங்கட்சிப் பிரமுகர் சுட்டிக்காட்டினார்.
ஆறு சட்டமன்றத் தொகுதிகளுக்கு எப்போது வேண்டுமானாலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம். மாநில நிர்வாகப் பணிகளும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளும் இதுவரை தொடங்கப்படவில்லை. இதை சரிசெய்யாவிட்டால் கட்சி மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
புதியவர்கள் சேரவில்லை
கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க இயக்கம் நடத்தும்படியும் தீவிரம் காட்டும்படியும் கட்சியின் டெல்லி மேலிடம் கட்டளையிட்டது. ஆனால், ராஜஸ்தானில் புதியவர்கள் கட்சியில் சேர ஆர்வம் காட்டவில்லை. இது ஏன் என்று தலைமை கேட்டது. ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளையே நிறைவேற்றவில்லை, எப்படிக் கட்சியில் சேர்ந்து மற்றவர்களுக்குப் பதில் சொல்வது என்றே பலரும் மறுக்கின்றனர் என்று ராஜஸ்தான் பாஜகவினர் பதில் தெரிவித்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் 100 யூனிட்டுகள் மின்சாரம் இலவசம் என்று வாக்குறுதி தந்தது பாஜக, ஆனால் 30 லட்சம் மின் நுகர்வோருக்கு இதுவரை அது வழங்கப்படவில்லை, புதிய இணைப்புகளுக்கான பதிவும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. தேர்வாணையத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுக்குக் காரணமானவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் நிறைவேறவில்லை என்று கட்சியின் தலைவர் ஒருவர் சுட்டிக்காட்டினார். 55 லட்சம் பேரை புதிதாக சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்தனர், ஆனால் 26 லட்சம் பேர்தான் புதிதாக சேர்ந்தனர்.
மூத்த தலைவர்கள் புறக்கணிப்பு
வசுந்தரா ராஜ சிந்தியா மட்டுமல்ல, வேறு மூத்த தலைவர்களும் டெல்லி தலைமையால் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களுடைய ஆதரவாளர்கள் இப்போது கட்சியில் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், ராஜபுத்திரர்கள் குறித்து தெரிவித்த கருத்தால் அவர்கள் மன வருத்தமடைந்துள்ளனர். அதற்குத் தீர்வுகாண கட்சித் தலைமை தீவிர முயற்சிகளை எடுக்கவில்லை.
புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ராஜபுத்திர சமூகத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர ரத்தோட் ஆர்வம் காட்டவில்லை என்று கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ராதா மோகன்தாஸ் அகர்வால் குற்றஞ்சாட்டினார். “அடுத்து நடைபெறவுள்ள ஆறு சட்டமன்ற இடைத்தேர்தலை ராஜபுத்திர சமூகத்தவர்கள் புறக்கணித்து பாஜகவுக்குப் பாடம் புகட்டுவோம்” என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கட்சியின் மத்திய தலைமை விழித்துக்கொள்ள வேண்டும், முதல்வரை மாற்றியாக வேண்டும், மூத்த தலைவர்களை அரவணைக்க வேண்டும் என்று கட்சியினர் விரும்புகின்றனர்.
வசுந்தரா கேலி
அனுபவமில்லாதவர்களுக்குப் பெரிய பதவிகள் தரப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டும் வகையில் பொது நிகழ்ச்சியில் கடந்த ஆகஸ்டில் பேசினார் வசுந்தரா ராஜ சிந்தியா. “சிலருக்கு பித்தளையில் மூக்குத்தி வாங்கிக்கொடுத்து போட்டுக்கொள்ளச் சொன்னால் அவர்கள் மனதுக்குள் தங்களைப் பெரிய தங்க வியாபாரியாகவே கற்பனைசெய்துகொண்டுவிடுவார்கள்” என்றார்.
தொடர்புடைய கட்டுரைகள்
பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!
ராஜஸ்தான்: நீ அல்லது நான் ஆட்டம்
மாநிலத் தலைகள்: வசுந்தரா ராஜே
மோடி அரசுக்கு கவலை தரும் மூன்று!
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.