கட்டுரை, புதையல், வரலாறு, ஆளுமைகள், புத்தகங்கள் 7 நிமிட வாசிப்பு

தென்னாப்பிரிக்காவில் காந்தி

பி.ஏ.கிருஷ்ணன்
21 Sep 2021, 5:00 am
0

ருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகளில் உலகில் இயங்கிய மிகப் பெரிய தலைவர்களில் முக்கியமானவர்கள் இவர்கள்: லெனின், ஸ்டாலின், சர்ச்சில், ரூஸ்வெல்ட், மாவோ, ஹிட்லர், முஸோலினி, காந்தி. இவர்களில் தேசீய விடுதலைக்காக போராடி வெற்றிபெற்றவர்கள் மாவோவும் காந்தியும். இன்று உலகம் முழுவதும் சீனாவைப் பற்றித் தெரியும். மாவோவைப் பற்றித் தெரியும் என்று சொல்ல முடியாது. ஆனால், இந்தியாவைப் பற்றித் தெரியாதவர்கள்கூட காந்தியைப் பற்றி அறிந்திருப்பார்கள். எங்கெல்லாம் அடக்குமுறையை எதிர்த்துப் போராட்டம் நடக்கிறதோ, அங்கெல்லாம் காந்தியின் போராட்ட முறை பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. அவரது முறையைப் பரிசீலித்து நிராகரித்தவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியிலும்கூட ‘இந்தியக் கிழவரின் முறை சரிதானோ?’ என்ற கேள்வி எழுப்பப்பட்டுக்கொண்டே இருக்கும். 

காந்தியின் போராட்ட முறைகளின் சோதனைக் களமாகத் திகழ்ந்தது தென்னாப்பிரிக்கா. 1893ஆம் ஆண்டிலிருந்து 1914ஆம் ஆண்டு வரை சிறிய அளவில் சில நூறு பேர்களின் துணை கொண்டு அங்கு காந்தியின் தலைமையில் நடந்த போராட்டங்கள்தான் பல லட்சம் பேர்கள் பங்கெடுத்த நமது சுதந்திரப் போரின் வித்துக்கள். காந்தியின் மனதில் தென்னாப்பிரிக்க நினைவுகள் கடைசி வரை பசுமையாக இருந்தன. அதைத் தனது நாடாகவே அவர் நினைத்தார். உதாரணமாக, 28 ஜனவரி 1948ஆம் ஆண்டு அவர் கூறுகிறார்: “நான் தென்னாப்பிரிக்காவில் இருபது ஆண்டுகள் இருந்திருக்கிறேன். அது எனது நாடு என்று ஒரு பயமும் இல்லாமல் என்னால் சொல்ல முடியும்.” 

குஹாவின் சாதனை

ஆனால், காந்தியின் தென்னாப்பிரிக்க அனுபவங்களைப் பற்றி முழுமையான புத்தகம் ஒன்று ராமச்சந்திர குஹாவின் ‘இந்தியாவிற்கு முந்தைய காந்தி’ வெளிவரும் வரை வந்ததில்லை என்பது வியப்பைத் தருகிறது. இதனாலேயே குஹாவின் புத்தகம் ஒரு சாதனை என்பதில் சந்தேகமேயில்லை. மிகத் தெளிவான சொற்களில் காந்தியின் முதல் 45 வயது வாழ்க்கையை அவர் இந்தப் புத்தகத்தில் விவரிக்கிறார். 

நமக்குக் காந்தியை இளைஞராக நினைத்துப் பார்ப்பதே கடினம். ஆனால் குஹாவின் புத்தகத்தில் நாம் காணும் காந்தி துடிப்பான இளைஞர். தென்னாப்பிரிக்காவில் 1909ஆம் ஆண்டு எடுத்தப் படம் அட்டையை அலங்கரிக்கிறது. அது தமிழரான தம்பி நாயுடுவிற்கு காலன்பாக் என்ற காந்தியின் நண்பரும் சீடருமான யூதர் கொடுத்தது. படத்தில் இருப்பவர் திறந்த மார்பு காந்தி அல்ல. கோட்டு அணிந்தவர். ஆனால் இவரும் நமக்குத் தெரிந்த காந்தியும் ஒன்று தான் என்பதை படத்தின் அடிப்புறத்தில் காலன்பாக் எழுதியிருக்கும் வார்த்தைகள் அறிவிக்கின்றன: ‘நாம் அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தால், நமக்கு நாமே உண்மையுள்ளவர்களாக இருப்போம்.’ புத்தகத்தைப் படித்து முடித்ததும் காந்தியின் தென்னாப்பிரிக்க வாழ்க்கை முழுவதும் தனக்குத் தானே எவ்வாறு உண்மையுள்ளவராக இருக்க முடியும் என்ற கேள்விக்கு பதில் தேடுவதில் செலவிடப்பட்டது என்று நமக்குத் தோன்றுகிறது. 

பயணங்களின் துவக்கம்

காந்தியின் முதல் பயணம் தாதா அப்துல்லா என்ற குஜராத்தி வணிகர் ஒருவரின் வழக்குத் தொடர்பாக நிகழ்ந்த்து. அவர் செல்வதற்கு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து மக்கள் அங்கு குடியேற்றம் செய்யப்பட்டிருந்தனர். பலர் தமிழர்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை பார்த்த அவர்களின் உழைப்பால் சீனி உற்பத்தி பத்து வருடங்களில் ஐம்பது மடங்கு அதிகரித்தாக ஆசிரியர் கூறுகிறார்.

அன்று தென்னாப்பிரிக்காவின் நேடால் மாநிலத்தில் இருந்த இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை சுமார் 35,000. இவர்களுக்காக ஆரம்பித்த சிறியபோராட்டங்கள்தான் காந்தியின் அரசியல், சமூக, கலாச்சார, ஆன்மீகப் பயணங்களின் முதல் மைல்கற்கள் என்று கூறலாம். காந்தியின் செயல்பாடுகள் எல்லாம், அவரது சொந்த வாழ்வின் நடந்தவை கூட - அவரது போராட்டங்களைச் சார்ந்தவையாக இருந்தன. எனவே, காந்தி என்ற தனிமனிதரை நாம் அவரது பொதுவாழ்வு தந்த வெளிச்சத்திலேயே காண முடிகிறது.

இந்தப் பயணங்களில் அவருக்குத் துணையாக நின்றவர்களும், தடையாக நின்றவர்களும் அவரைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். எழுதியிருக்கிறார்கள்.  குஹாவின் புத்தகம் இவர்கள் கூறிவற்றை அடிப்படையாகக் கொண்டிருப்பதால் அதன் வாசிப்புத்தன்மையும் நம்பகத்தன்மையும் மிகவும் உயர்ந்த தரத்தில் இருக்கின்றன. 

போராட்டங்களின் ஆன்மிக அடித்தளம்

ஆரம்பத்திலிருந்தே தனது போராட்டங்களுக்கு - அவை மக்களின் வாழ்வாதாரங்களைச் சார்ந்ததாக இருந்தாலும்கூட - ஆன்மிக அடித்தளம் ஒன்றை நிறுவ காந்தி தொடர்ந்து முயன்றுகொண்டிருந்தார். 

காந்தி இந்துவாகப் பிறந்தார். கடைசிவரையில் தான் இந்து என்ற அடையாளத்தில் உறுதியாக இருந்தார். ஆனால் ஆப்ராகாமிய மதங்களோடு அவருக்கு இருந்த நெருக்கமான, செறிவு மிக்க தொடர்பு எந்த இந்துவுக்கும் இன்றுவரை இருந்ததில்லை. யூத மதத்தைப் பற்றி அவருக்கு நண்பர்களின் மூலம் ஓர் புரிதல் இருந்தது. ஆனால் கிறித்துவ மதத்தை அவர் கூர்மையாக கவனித்தார். ஏசுநாதரின் மலைப் பிரசங்கமும், டால்ஸ்டாயின் ‘கடவுளின் பேரரசு உனக்குள் இருக்கிறது’ புத்தகமும் அவரை வெகுவாகக் கவர்ந்தன. இஸ்லாமிய மதத்தவருடன்அவரது தொடர்பு நெருக்கமானதாக இருந்தது. புனித குரானையும் அவர் நிச்சயம் படித்திருந்தார். ஆனால், கீதையும், ஏசுவும் அவரைத் தொட்டதைப் போல, புனித குரான் தொடவில்லை என்று ஆசிரியர் கருதுகிறார். இருந்தாலும், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்த கடைசிவரை அவர் பாடுபட்டுக்கொண்டிருந்தார். 1909ஆம் ஆண்டு தனது மருமகன் மகன்லாலுக்குஎழுதிய கடிதம் ஒன்றில் ‘எனது மரணம் இந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைக்குமானால், அதை வரவேற்கிறேன்’ என்கிறார். 

அவரது டால்ஸ்டாய் மற்றும் ஃபீனிக்ஸ் பண்ணைகளில் எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும் இருந்தார்கள். எல்லாத் தொழில்களையும் செய்தார்கள். வெள்ளையர்களும், இந்தியர்களும், கறுப்பினத்தவர்களும் சேர்ந்து செயலாற்றினர். காந்தியே சொல்கிறார்: ‘பண்ணைகளில் மதம் சார்ந்த சண்டைகள் ஒன்று கூட நடந்ததாக எனக்கு நினைவில்லை. உழைப்பு பளுவாக இல்லை. மகிழ்ச்சி தருவதாக இருந்தது.’

அகிம்சை முறையில் போராடுவதுதான் மிகச் சிறந்த வழி என்ற உறுதி காந்திக்கு ஆரம்பகாலத்திலிருந்தே ஏற்பட்டுவிட்டது. அதன் மீது காந்தி கொண்டிருந்த தன்னம்பிக்கை வியக்கத்தக்கது. 1914ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிலிருந்து விடைபெறும் தருணத்தில் காந்தி சொல்கிறார்: “உலகத்திலேயே மிகப் பலம் வாய்ந்த ஆயுதம் சத்தியாக்கிரகம்.”

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

யாருக்காகப் போராடினார்?

காந்தியின் 1906ஆம் வருடப் போராட்டத்தில் அவருக்குத் துணை நின்றவர்கள் குஜராத்தி வணிகர்கள். ஆனால், 1914ஆம் ஆண்டு காந்தி தமிழ் உழைக்கும் வர்க்கத்தின் தலைவராகவே அறியப்பட்டார் என்கிறார் ஆசிரியர். அவர் கறுப்பினத்தவரைப் பற்றிக் கவனிக்கவேயில்லை, அவர்கள் பிரச்சினைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு அவர் மீது வைக்கப்படுகிறது. அவருக்கு கறுப்பினத்தவர்களிடையே தோழர்கள் இருந்தாலும், டால்ஸ்டாய் பண்ணையில் அவர்களோடு சேர்ந்து உழைத்தாலும் கறுப்பினத்தவரின் தலைவராக காந்தி தன்னை நினைக்கவில்லை.

தென்னாப்பிரிக்கா வந்த புதிதில் மேற்கத்தியரை இந்தியர்களுக்கு மேல் தட்டிலும் கறுப்பினத்தவரைக் கீழ்த்தட்டிலும் வைத்து பார்த்த காந்திக்கு கறுப்பினத்தவர் மீது செலுத்தப்படும் அடக்குமுறையின் தன்மையை உணர்வதற்கு அதிக நாட்கள் பிடிக்கவில்லை. 1908ஆம் ஆண்டு ஆற்றிய உரை ஒன்றில் எல்லா இனத்தவர்களும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்றார்.

கறுப்பினத்தவர்களும் சத்தியாக்கிரக முறையைக் கைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “இந்த நிலத்தின் பூர்விகக் குடிகள் கறுப்பினத்தவர்கள். நாம் இங்கு இருப்பது அவர்களது நல்லெண்ணத்தினால். நாம் அவர்களது நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. மாறாக, வெள்ளையர்கள் வன்முறையினால் அவர்கள் நிலத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று காந்தி எழுதியிருப்பது குறிப்பிடத் தக்கது. கறுப்பினத் தலைவர்களான ஸெமே, ட்யூப் போன்றவர்கள் காந்தியுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். ‘இந்தியர்களின் போராட்டங்கள் தரும் பாடங்களை நாங்கள் மறக்க மாட்டோம்’ என்று ஸெமே கூறினார். 

போராட்டங்களின் வடிவங்கள்

1894ஆம் ஆண்டு நேடால் இந்தியக் காங்கிரஸ் நிறுவப்பட்டபோது, காந்தி, அரசிற்கு கடிதங்கள் எழுதி, மனுக்கள் போட்டு, நேரில் அதிகாரிகளைச் சந்தித்து நீதி பெறமுடியும் என்று நினைத்தார். 1906ஆம் ஆண்டுதான் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் சிறை செல்லத்தயார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. தலைவர்கள் மட்டும் அல்ல மக்களும் சேர்ந்து சிறை செல்வோம் என்ற அந்த முடிவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது தொடங்கிய சத்தியாக்கிரகம் பல வடிவங்களை எடுத்தது. லைசன்சு இல்லாமல் பொருட்களை விற்பனை செய்வது, கைநாட்டு இட மறுப்பது, பதிவுப்பத்திரங்களை எரிப்பது, எல்லையை அனுமதியின்றிக் கடப்பது போன்ற போராட்டங்கள் அறவழியில் வன்முறை ஏதும் இன்றி தனியாகவும் கூட்டாகவும் நடந்தன.

போராட்டத்தின் தீவிரத்தைப் படிப்படியாக உயர்த்துவது, அரசுடன் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து வைத்துக் கொள்வது, தேவையேற்பட்டால் அரசுடன் எடுத்திருந்த நிலையிலிருந்து சிறிது இறங்கிவந்து ஒப்பந்தம் செய்துகொள்வது, வெற்றி அடுத்த போராட்டத்திற்கு மக்களைக் கொண்டுசெல்லும் படிக்கட்டு என்பதில் தெளிவாக இருப்பது போன்றவை காந்தியின் தென்னாப்பிரிக்க போராட்டத்தின் அம்சமாக இருந்திருக்கின்றன. நமது தேசீய விடுதலைப் போராட்டத்தின் ஒத்திகை போல நமக்குத் தோன்றுகிறது.

அவரது தென்னாப்பிரிக்கப் போராட்டங்கள் அதிகம் ஏதும் சாதித்துவிடவில்லை என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. காந்தியப் போராட்டங்கள் உடனடித் தீர்வுக்காக நடத்தப்படவில்லை. அவை மனிதகுல விடுதலையை நோக்கி நடத்தப்பட்டவை. இன்று உலகெங்கும், குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் நிறவெறி, நேரடிக் காலனி ஆதிக்கம் போன்ற ஏகாதிபத்தியத்தின் போர்வாள்கள் முழுவதும் மழுங்கடிக்கப்பட்டுவிட்டன என்றால் அதற்கு காந்தியின் போராட்ட முறைகள் ஓர் முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது. மார்டின் லூதர் கிங் நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களிலிருந்து அரபிய வசந்தத்திற்காகப் போராடியவர்கள் வரை, காந்தியப் போராட்டத்தின் இந்த முக்கியத்துவத்தைத் தெரிந்திருந்தார்கள். 

நண்பர்கள்

காந்திக்குத் துணை நின்றவர்களில் பல வெள்ளைக்காரர்களும், குஜராத்தி பனியாக்களும், முஸ்லிம்களும், தமிழர்களும் இருந்தார்கள். வெள்ளைக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் போலக், காலன்பாக், டோக், ஸோன்யா ஸ்லெஸின் போன்றவர்கள். இவர்களின் ஸோன்யா ஓர் யூதப் பெண்மணிகாந்தியின் செயலாளராகப் பணியாற்றியவர். ’என்னைவிட மோசமான கையெழுத்துள்ளவரை நான் சந்தித்த்தேயில்லை’ என்று காந்தியே கூறியிருக்கிறார். அவரது என்ன எழுதியிருக்கிறார் என்பதைப் படித்து தட்டச்சு செய்த ஸோன்யா குடும்பத்தின் ஓர் அங்கத்தினர் போல இயங்கியவர். தன்னமில்லாதவர். 

போலக் ஒரு பேப்டிஸ்ட் போதகர். அவர் காந்தியை முதலில் சந்தித்ததைப் பற்றி ஆசிரியர் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“உங்களுடைய குறிக்கோளின் நன்மைக்காக நீங்கள் உயிரை விடத்தயாராக இருக்கிறீர்களா?”

“என்னைப் பொருத்தவரை நான் முழுவதுமாகச் சரணடைந்தவன். எப்போது வேண்டுமானாலும் உயிரைக் கொள்கைக்காக விடத்தயாராக இருக்கிறேன்.”

காந்திக்கும் காலன்பாக்கும் இடையே இருந்த உறவைப் பற்றி பலவிதங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணமாக அது பாலியல் அடிப்படையைக் கொண்டது என்று ஜோசப் லெலிலாண்ட் எழுதிய புத்தகம் கூறுகிறது. இந்த முடிவு அடிப்படை அற்றது என்று  குஹா ஆதாரத்துடன் மறுக்கிறார். பிரம்மச்சரியத்தின் மீது காலன்பாக்கிற்கு 1908-13 ஆண்டுகளில் உறுதியான பிடிப்பு இருந்தது என்பதை அவரைப் பற்றிய ஆவணங்கள் நிரூபிக்கின்றன என்கிறார் ஆசிரியர். தனது சகோதரருக்கு எழுதிய கடிதத்தில் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிப்பதால் மனமும் உடலும் வலுப்பெற்றுவிட்டன என்று காலன்பாக் குறிப்பிடுகிறார். காந்தி குடும்பத்தைப் பிரிந்து காலன்பாக்குடன் ஜோகனஸ்பர்க் நகரில் தங்கியிருந்தது சமூகப் பொறுப்புகளுக்காக, பாலியல் தூண்டுதல்களால் அல்ல என்று குஹா கூறுகிறார். 

காந்திக்கு பல எதிர்ப்புகளையும் மீறி பக்கபலமாக நின்றவர்கள் அவரது மேற்கத்திய நண்பர்கள். பல குடிபெயர்ந்த சீனர்களும் காந்தியின் பின்னால் நின்றார்கள் என்ற செய்தி அதிசயத்தக்கது. 

எதிர்த்தவர்கள்

தென்னாப்பிரிக்காவில் காந்தியை இந்தியர்களிலேயே பலர் எதிர்த்திருக்கிறார்கள். பி.எஸ்.அய்யர் போன்ற டர்பன் நகரத்து பத்திரிகையாளர்கள் சத்தியாக்கிரகத்தால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று தொடர்ந்து எழுதிக்கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால் அவரது பத்திரிகையே அச்சுக் கோர்ப்பவர்கள் போராட்டத்தில் ஈடுபடச் சென்றுவிட்டதால், பத்திரிகையின் பக்கங்களை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது என்று அறிவிக்கிறது!

1908ஆம் ஆண்டு காந்தி சில பதான்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இரும்புத்தடியால் அவரைத் தாக்க முயன்றவர்களத் தடுத்துக் காந்தியைக் காப்பாற்றியர் தம்பி நாயுடு என்ற தமிழர். தாக்கிய பதான்களின் தலைவரான மீர் ஆலம் கானுக்கு மூன்று மாதக் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. ஆனால் அவர் பின்னால் காந்தியின் முழு பக்தராக மாறி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

குடும்பம்

காந்தியைவிட அவரது குடும்பத்தினர்தான் தென்னாப்பிரிக்காவில் தனிப்பட்ட முறையில் அதிக துன்பங்களை அனுபவித்தனர் என்று சொல்லலாம். அன்னை கஸ்தூர்பா கணவரின் கவனிப்பு இல்லாமலும், பிடிவாதத்தாலும் பல முறை மரணத்தின் வாயில் வரை செல்ல வேண்டியதாயிற்று. இருபத்து ஒன்று வயது முடிவதற்குள் காந்தியின் புதல்வர் ஹரிலால் சத்தியாக்கிரகம் செய்து. நான்கு முறை சிறை சென்றார். இருந்தாலும் காந்தி அவரிடம் பரிவோடு நடந்துகொள்ளவில்லை. பலமுறைகள் அவருடைய மணவாழ்வில்கூட காந்தி தலையிட்டிருக்கிறார்.

மற்றொரு புதல்வரான மணிலால் பிரம்மச்சாரியத்தின் வெப்பத்திலிருந்து விடுபட திருமணமான பெண் ஒருவருடன் உறவுகொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். மனிதர்கள் எல்லோரும் மகாத்மாக்கள் ஆகலாம் என்ற நம்பிக்கையே காந்தியை தனது மனைவியையும் வாலிப வயது அடைந்த மகன்களையும் பல சோதனைகளுக்கு உள்ளாக்க வைத்தது.

அவர்கள் விருப்பப்பட்டு சோதனைகளுக்கு இணங்கவில்லை. காந்தி மிது கொண்டிருந்த மதிப்பாலும், முக்கியமாக அவர் மீதிருந்த பயத்தாலும் இணங்கினர். கஸ்தூர்பா சொக்கத்தங்கமாக வெளியே வந்தார் என்றால் ஹரிலாலும் மணிலாலும் சோதனைகளால் மிகுந்த காயப்பட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். 

பெண்கள்

போராட்டங்களில் பெண்கள் பங்கு பெற வேண்டிய அவசியத்தை காந்தி ஆரம்ப நாட்களிலிருந்தே உணர்ந்திருந்தார். பெண்களுக்காகப் போராடாமல் எனது வாழ்க்கையின் பயணம் நிறைவு பெறாது என்று அவரே கூறியிருக்கிறார். காந்தி பெண்கள் பங்கேற்பதைப் பற்றி தீவிரமாகச் சிந்திக்க அவருடன் துணை நின்ற ஐரோப்பியப் பெண்மணிகள் காரணம் என்றாலும், பெண்கள் அசாதாரணமானவர்கள் என்பதை அவருக்கு உணர்த்தியவர்கள் தமிழ்ப்பெண்கள் என்று ஹென்றி போலக் கூறுகிறார். “1913-14 போராட்டங்களில் தன்னலம் கருதாது தமிழ்ப் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டது அவர்களது கணவர்களையும் மகன்களையும் மட்டுமல்லாமல், குஜராத்தி வழக்கறிஞரான காந்தியையும் ஊக்குவித்தது’” என்கிறார் அவர். 

தமிழரும் காந்தியும்

குஹாவின் புத்தகம் முழுவதும் இழையாக வருவது காந்திக்கும் தமிழருக்கும் இடையே இருந்த, பிரிக்க முடியாத உறவு. போராட்டத்திற்காக அவருக்கு தங்களிடம் இருந்த அனைத்தையும் தந்தவர்கள் தமிழர்கள். ஜோஹனஸ்பர்க் நகரத்தில், தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பி வரும்போது நடத்தப்பட்ட கடைசிப் பாராட்டுக் கூட்டத்தில் காந்தி மூன்று இந்தியர்களைக் குறிப்பிட்டார். மூன்று பேரும் தமிழர்கள். காந்தி என்ன பேசினார் என்பது பற்றிநிருபர் ஒருவர் எழுதுகிறார்.

“ஜோஹனஸ்பர்க் வள்ளியம்மையைத் தந்தது. இளம் பெண்ணான வள்ளியம்மையை. அவளது உருவம் என் கண் முன்னால் இப்போது நான் பேசும்போதே நிற்கிறது. உண்மைக்காக உயிரை விட்டவர். ஜோஹனஸ்பர்க்தான் நாகப்பனையும் நாரயணசாமியையும் தந்தது. பதின்பருவத்திலிருந்து அப்போதுதான் வெளியே வந்தவர்கள். உயிரைக் கொடுத்தவர்கள். ஆனால் நானும், திருமதி காந்தியும் இங்கு உயிரோடு நிற்கிறோம். நானும் திருமதி காந்தியும் விளம்பரத்தின் வெளிச்சத்தில் வேலை செய்தோம். ஆனால் இவர்கள் திரை மறைவில் வேலை செய்தார்கள் – எங்கு போகிறோம் என்பது பற்றி அறியாமல், ஆனால் செய்வது சரியானது, செய்ய வேண்டியது, என்ற நம்பிக்கையுடன். புகழ் யாருக்காவது உரித்தானது என்றால் உயிரைத் தியாகம் செய்த இந்த மூவருக்கே அது உரித்தானது.” 

குஜாராத்திகள் மத்தியில் பேசும்போது காந்தி கூறுகிறார்:

“குஜராத்தி சகோதரர்கள் எனக்கும் திருமதி காந்திக்கும் உதவி செய்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்ச் சமுதாயம் போராட்டத்தை வலுப்பெறச் செய்த அளவிற்கு அவர்கள் செய்யவில்லை என்றுதான் நான் சொல்வேன். குஜாரத்திகள் தமிழர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்கு அவர்கள் மொழி தெரியாது. ஆனால் அவர்கள்தான் எனக்கு அதிக உதவி செய்தவர்கள்.” 

தமிழர்கள் மத்தியில் பேசும்போது காந்தி இவ்வாறு சொல்கிறார்:

“எனக்கு மதராஸ் பற்றிக் கொஞ்சம் தெரியும். அங்கு சாதி வேற்றுமைகள் எவ்வளவு கூர்மையாக இருக்கின்றன என்பது பற்றியும் தெரியும். அந்த வேற்றுமைகளை நீங்கள் இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் தென்னாப்பிரிக்கா வந்தது வீண் என்றுதான் கூறுவேன். நீங்கள் யாரும் உயர்ந்த சாதியையோ தாழ்ந்த சாதியையோ சேர்ந்தவர்கள் அல்லர், நீங்கள் எல்லோரும் இந்தியர்கள், தமிழர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.” 

குஹாவின் புத்தகம் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவர வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பி.ஏ.கிருஷ்ணன்

பி.ஏ.கிருஷ்ணன், எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








ராம ராஜ்ஜியம்விஷ்ணுபுரம் விருதுதமிழ்க் கல்விநீதிபதி!பிஹார்மைய நிலத்தில் ஒரு பயணம்மேலும்சுயப் பச்சாதாபம்பதின்பருவத்தினர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்னபாரத் ரத்னாஅதானிமோசமான தீர்ப்புகாங்கோபிரமோத் குமார் கட்டுரைகாங்கிரஸ் தேர்தல் அறிக்கைஏழைகள் பங்கேற்புஅறிவியல் தமிழ்கேம்ப்ரிட்ஜ் அனாலிட்டிக்காநுரையீரல் புற்றுநோயைத் தடுப்பது எப்படி?என்.கோபாலசுவாமி பேட்டிஅருஞ்சொல் ஆசிரியர் சமஸ் பேட்டிதாமஸ் ஃப்ரீட்மன்சென்னை வடிகால்வெயில் காலம்காவிரி வெறும் நீரல்லஇலக்கணம்புரட்டாசி - கார்த்திகைஅருஞ்சொல் நேருசூரியன்5ஜி நெட்வொர்க்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!