பாகிஸ்தானிடமிருந்து வரக்கூடிய ஆபத்துகள், பெயர் குறிப்பிட விரும்பாத பக்கத்து நாட்டின் பகைமை, இந்துத்துவம், நாடாளுமன்ற நடவடிக்கைகள் சீர்குலைவு, போராட்டஜீவிகள், வாரிசு அரசியல், ஏழு தசாப்தங்களாக வளர்ச்சியே இல்லை, உலக குரு இந்தியா... இப்படி சில விஷயங்களைக் கேட்போருக்குக் காது புளிக்கும் அளவுக்கு ஒன்றிய அரசும், அமைச்சர்களும் திரும்பத்திரும்பப் பேசுகின்றனர். நம் நாட்டின் அரிய வளமான குழந்தைகளின் நிலைகளைப் பற்றி, குறிப்பாக அவர்களுடைய சுகாதார நிலை, கல்வித் தரம் குறித்து இவர்கள் பேசி நான் கேட்டதே இல்லை.
குழந்தைகளுடைய கல்வி நிலை குறித்து ஆண்டுதோறும் வெளியாகும் ‘அசர் அறிக்கை’ (ASER - Annual Status of Education Report 2021) சமீபத்தில் வெளியானது. மிகுந்த கவனமுடன் அதைப் படித்துப் பார்த்தேன். அதே நேரத்தில்தான், தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையும் (NFHS - National Family Health Survey 2019-21) வெளியானது. முந்தைய ஆண்டுகளின் ஆய்வறிக்கைகளோடு இவற்றை ஒப்பிட்டும் பார்த்தேன்.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் (பிஎஸ்இ), தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் (நிஃப்டி) போன்றவை, பரிவர்த்தனைப் பட்டியலில் இடம்பெறும் நூறு நிறுவனங்களைத் தவிர நாட்டின் ஏனைய நிலையை எடுத்துக்காட்டுவதில்லை. மாறாக, மேற்சொன்ன இரண்டு அறிக்கைகளும் இப்போதைய இந்தியாவின் உண்மையான நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. இரு அறிக்கைகளும் பொதுவெளியில் வெளியிடப்பட்டு இரண்டு வாரங்களுக்கும் மேலாகிறது, இதைப் பற்றி பிரதமரோ, கல்வி அமைச்சரோ, சுகாதார அமைச்சரோ பேசியதாக எதையும் என்னால் நினைவுகூர முடியவில்லை.
இரண்டு அறிக்கைகள், பெறப்படும் முடிவுகள்
கோவிட்-19 பெருந்தொற்றின் பாதிப்பு ஏற்படுத்திய விளைவுகளை இவ்விரு அறிக்கைகளும் ஆராய்ந்துள்ளன. ஏதோ வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே நடைபெறும் நிகழ்வாக கருதி, இந்த பாதிப்புகளை அலட்சியம் செய்துவிட முடியாது. அறிக்கைகளின் முடிவுகள் மனங்களைச் சோர்வடையச் செய்வதாகவே இருக்கின்றன. முக்கியமான அம்சங்களை மட்டும் பட்டியலிடுகிறேன்:
அசர் 2021 (ஊரகம்):
1. தனியார் பள்ளிக்கூடங்களிலிருந்து விலகி அரசுப் பள்ளிக்கூடங்களுக்கு மாணவர்கள் மாறும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2. மாணவர்கள் தனியார் பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
3. ஸ்மார்ட்போன் வாங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டேவருகிறது. ஆனால், குழந்தைகளுக்கு அவை கிடைப்பது குறைவாகவே இருக்கிறது.
4. பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட பிறகு வீடுகளில் படிப்பு சொல்லிக்கொடுப்பது குறைந்துவிட்டது.
5. கற்றலுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட சாதனங்கள் குழந்தைகளுக்குக் கிடைப்பது சற்றே அதிகரித்துள்ளது.
குடும்ப நல ஆய்வறிக்கை 2019-21:
1. மொத்த கருவளர் விகிதம் எட்டிய அளவு 2.0. அதாவது, இப்போதைய தேசிய சராசரி விகிதமான 2.1-ஐவிட சற்றே குறைவு). ஏழை மாநிலங்களில், மூன்று மாநிலங்களின் மக்கள்தொகை தொடர்ந்து உயர் விகிதத்திலேயே இருக்கிறது.
2. கடந்த ஐந்தாண்டுகளில், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது; அதாவது, 1,000 ஆண் குழந்தைகளுக்கு 929 பெண் குழந்தைகள் என்ற அளவுக்குக் குறைந்திருக்கிறது; இதை ஏன் என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை.
3. துப்புரவு, கரிப்புகை வெளியிடாத தூய்மையான எரிபொருள், உடல் நலக்குறைவு ஆகியவை கோடிக்கணக்கான குடும்பங்களுக்குத் தொடர்ந்து பெரிய பிரச்சினைகளாகவே தொடர்கின்றன.
4. இறப்பு விகிதம் குறைந்துவருகிறது; ஆனால், ஏற்க முடியாத வகையில் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கிறது.
5. வயதுக்கேற்ற உயரம் இல்லாமை, உயரத்துக்கேற்ற உடல் எடை இல்லாமை, ரத்த சோகை ஆகியவை குழந்தைகளை வாட்டும் பிரச்சினைகளாக இருக்கின்றன.
ஒப்பிட்டுப்பாருங்கள்
கல்வி தொடர்பாகக் கிடைத்த முதல் தொகுப்பு முடிவுகளையும், சுகாதாரம் தொடர்பாகக் கிடைத்த இரண்டாவது தொகுப்பு முடிவுகளையும் அருகருகே வைத்து ஒப்பிடுங்கள். ஒரு நாட்டின் மனித வளத்தில் மிகவும் அரியதும் விலைமதிப்பற்றதுமான குழந்தைகள், இந்தியாவில் புறக்கணிக்கப்படுவது புலனாகும். பொதுவெளியில் இதைப் பற்றி அதிகம் விவாதிக்கப்படுவதே இல்லை. மகளிர் – குழந்தைகள் நலனுக்கென்றே உருவாக்கப்பட்ட அமைச்சகம்கூட இதைப் பற்றிய அக்கறை இல்லாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைப் போலத் தெரிகிறது.
ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவிட்டன
எல்லா நாடுகளிலும், மக்களிடையே பொருளாதாரரீதியிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருவது கருத்தில் கொள்ளப்படுகிறது. வருமானமும் செல்வ வளமும் மக்களை வேறுபடுத்தும் இரண்டு முக்கியமான காரணிகள். இந்தியாவில் இந்த வேறுபாடுகள் மக்களுடைய மதம், சாதிகள் காரணமாக மேலும் கூர்மையடைகின்றன. வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவுற்ற சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் பொருளாதாரரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களும் மிகுந்த ஏழைகளாகவும் வேலைவாய்ப்பற்றவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக சமூகத்தில் பாரபட்சம் காட்டப்படுகிறது, அரசுகளால் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். மற்றவர்களுடைய குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் இவர்களுடைய குழந்தைகளின் கல்வி நிலையும் உடல் நலமும் எப்படி இருக்கும் என்று நீங்களே ஊகித்துவிடலாம்.
அசர் அறிக்கையும், குடும்ப நல ஆய்வறிக்கையும் மதம் அல்லது சாதி அடிப்படையில் கணக்கெடுக்கப்படவும் இல்லை; ஆய்வு செய்யப்படவும் இல்லை. இவ்விரு அறிக்கைகளும் எல்லாக் குழந்தைகளையும் பற்றியது. இப்போதைய இந்தியாவில் எப்படிப்பட்ட நிலையில் குழந்தைகள் வளர்ந்துவருகின்றனர், அதுவும் பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் என்பதை ஒருகணம் சிந்திப்போம்.
என்னுடைய முடிவுகள்
தம்பதியர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகளைப் பெறுகின்றனர். அதேசமயம், அனைவரும் சம எண்ணிக்கையில் ஆண் – பெண் குழந்தைகளைப் பெறுவதில்லை. நாட்டின் மொத்த மக்கள்தொகையில், 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் என்பது நல்ல அம்சமாக இருந்தாலும், ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளைக் கணக்கிட்டால் அது 1000-க்கு 929 ஆக சரிந்திருக்கிறது. இந்த எண்ணிக்கை சரியில்லை என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர். எப்படியாக இருந்தாலும் இதை மேலும் கவனமாக ஆராய வேண்டும். இதுதான் சமுதாயத்தின் இப்போதைய போக்கு என்றால், நாம் அதிகம் கவலைப்பட்டாக வேண்டும்.
வறிய நிலையில் உள்ள மூன்று மாநிலங்களும் தொடர்ந்து மோசமாகவே நிர்வகிக்கப்படுகின்றன. அவை தேசிய சராசரியைவிட, அதிக எண்ணிக்கையில் மக்கள்தொகையைப் பெருக்கிவருகின்றன. அப்படியென்றால் வறிய மாநிலங்களில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவருகிறது. வறுமை ஒழிப்பு திட்டங்கள் இந்த மாநிலங்களில் தோல்வியடைந்துவிட்டதைப் போலத் தெரிகிறது.
அரசு எவ்வளவுதான் தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கம் இன்னமும் மக்களைவிட்டுப் போகவில்லை. ‘உஜ்வலா’ என்ற பெயரில் அழைக்கப்படும் இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டமும் அவ்வளவு வெற்றிகரமாக மக்களிடம் எடுபட்டுவிடவில்லை.
பொது சுகாதாரத் துறையின் அடித்தளக் கட்டமைப்பும், சுகாதார சேவைகளும் மேம்பட்டிருந்தாலும் கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகளின் சுகாதாரம் இன்னமும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே தொடர்கின்றன. 1000 குழந்தைகளுக்கு 24.9 குழந்தைகள் பிரசவத்தின்போதும், பிறந்த பிறகு சிசுவாக இருக்கும்போது 1000 குழந்தைகளுக்கு 35.5 குழந்தைகளும், பிறந்தது முதல் ஐந்து வயதுக்குள் 1000 குழந்தைகளுக்கு 41.9 குழந்தைகளும் இறக்கும் சூழலை ஏற்கவே முடியாது.
தப்பிப் பிழைக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காதது பெரிய பிரச்சினை. வயதுக்கேற்ற உயரம் இல்லாத குழந்தைகள் 35.5 சதவீதமாகவும் உயரத்துக்கேற்ற உடல் எடை இல்லாத குழந்தைகள் 19.3% ஆகவும், ஊட்டச்சத்துக் குறைவுள்ளவர்கள் 32.1% ஆகவும் இருப்பது இதை வெளிப்படுத்துகிறது.
2020-21, 2021-22 கல்வி ஆண்டுகளில் குழந்தைகள் தொடர்ந்து படிக்க முடியாமல் ஏற்பட்ட கல்வியிழப்பு அளவிட முடியாதது. பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் 73 வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டன. உலக அளவில் இந்த சராசரி 35 வாரங்கள் மட்டுமே. நிதி நெருக்கடி காரணமாகவும் ஊர் விட்டு ஊர் போக வேண்டிய நிலைமையாலும் ஏராளமான குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிப்பதை நிறுத்திக்கொண்டு அரசாங்கப் பள்ளிகளுக்கு மாறினர். இப்படி அதிகரிக்கும் மாணவர்கள் அனைவரையும் சேர்த்துக்கொள்ளும் திறன் எல்லா மாநிலங்களிலும் எல்லா அரசுப் பள்ளிக்கூடங்களுக்கும் இருக்கின்றனவா என்பது கேள்விக்குறியே!
ஏராளமான ஊர்களில் ஒரே வகுப்பறையில் வெவ்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அமரும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்கள் மூடியிருந்தபோது படிப்பதற்கான புத்தகம், செல்போன் உள்ளிட்ட சாதனங்கள் 39.8% மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தன. எழுத்து கூட்டிப் படிப்பது-வாக்கியங்களைப் படிப்பது, அடிப்படையான கூட்டல் – கழித்தல் – பெருக்கல் - வகுத்தல் கணக்குகளைப் போடுவது ஆகியவற்றில் அவரவர் வகுப்புக்குரிய ஆற்றல் ஏராளமான மாணவர்களிடம் இல்லை என்ற அவல நிலையும் அறிக்கைகள் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
பிரதமரும் முதல்வர்களும் ஒன்றிய, மாநில அரசுகளில் அமைச்சர்களாக இருப்பவர்களும் இதைப் பற்றிச் சிந்திக்க நேரம் ஒதுக்குவார்களா? குழந்தைகளின் கவலைக்குரிய கல்வி, சுகாதார நிலையைப் பற்றி ஏதாவது ஒரு வார்த்தை பேசுவார்களா?
தமிழில்: வ.ரங்காசாரி
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
அப்துல் காதிர் 3 years ago
மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரை...
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.