கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

பாஜக: அரசியல் கட்சியா, தனிமனித வழிபாட்டு மன்றமா?

ப.சிதம்பரம்
22 Apr 2024, 5:00 am
0

காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லையே என்று கடந்த வார கட்டுரையில் கவலைப்பட்டிருந்தேன். ‘மோடியின் உத்தரவாதம்’ என்ற தலைப்பிட்டு பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. ஒரு காலத்தில் அரசியல் கட்சியாக இருந்த பாஜக இப்போது தனிநபர் வழிபாட்டு மன்றமாகிவிட்டது என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது. 

இந்தத் தேர்தல் அறிக்கை ஆவணம், கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் பாஜக செய்த செயல்களின் தொகுப்பு. இப்போது அது அமல்படுத்திவரும் அனைத்து திட்டங்களையும் அவற்றின் குறைகள், அசமத்துவம் ஆகியவற்றைப் பற்றிக் கவலைப்படாமலும் அதனால் நாட்டின் சமூக – பொருளாதார சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை நீக்க வேண்டும் என்ற அக்கறையில்லாமலும், நகாசு வேலைகள் செய்து ஆவணமாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது.

அபாயகரமான ஆபத்து

மோடியின் உத்தரவாதம் முழுக்க முழுக்க அபாயகரமான வெடி மருந்துகளால் நிரம்பிய ஆபத்தாகும். அவற்றில் முன்னணியில் இருப்பவை ‘அனைவருக்கும் பொது சிவில் சட்டம்’ (யுசிசி), ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ (ஓஎன்ஓஇ) என்பவை. இவ்விரண்டுக்கும் அல்லது கட்டாயம் ஒன்றுக்காவது, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தில் பெரும் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கும், ஆனால் பாஜக தலைமை அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதுபோலத் தெரியவில்லை.

இந்த உத்தரவாதத்தின் முதல் நோக்கமே, அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடமும் பிரதமரிடமும் குவிக்கும் அரசியல் – நிர்வாக அதிகாரக் கட்டமைப்பை உருவாக்குவதுதான். இரண்டாவது நோக்கம், முடிந்தவரை மக்களை ஒரேவித எண்ணப்போக்கு உள்ளவர்களாக – சமூக, அரசியல் தளங்களில் கட்சி விரும்பும் இயல்பை ஏற்கிற மனப்போக்கு கொண்டவர்களாக மாற்றுவது. மூன்றாவது, ஊழலை ஒழிக்க தனிப்பட்ட முறையில் பிரதமர் மேற்கொண்டுள்ள முயற்சிகளை அப்படியே நிறைவேற்றுவது – அதாவது எதிர்க்கட்சிகளையும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களையும் அரசியல்ரீதியாக ஒழித்துக் கட்டுவது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மோடி உத்தரவாதத்தில் எஞ்சியுள்ளவை எல்லாம் கடந்த பத்தாண்டுகளில் நாம் கேட்டுக் கேட்டு களைத்துப்போன வெற்றுச் சாதனைகள், அந்தச் சாதனைகளைப் பற்றிய போலிப் பெருமைகள். பழைய முழக்கங்கள் (ஸ்லோகன்கள்) நீக்கப்பட்டு புதிய முழக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

‘அச்சே தின் ஆனேவாலி’ (நல்ல நாள் வந்துவிட்டது) என்ற முழுக்கத்துக்குப் பதிலாக ‘விக்சித் பாரத்’ (புதுமை பாரதம்) நுழைக்கப்பட்டிருக்கிறது, கடந்த பத்தாண்டுகளில் நாடு ‘வளரும்’ நிலையிலிருந்து, ‘வளர்ந்த’ நிலைக்கு மாறிவிட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க வாக்கியத்தை மாற்றியிருக்கிறது. இது மிகவும் நகைப்புக்குரிய, அற்பமான பெருமையாகும். மோடியின் உத்தரவாதம், 2024இல் உள்ள முக்கிய அம்சங்களுக்கு இனி திரும்புவோம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை

ப.சிதம்பரம் 15 Apr 2024

பொது சிவில் சட்டம்

இந்தியாவில் எண்ணற்ற சிவில் சட்ட நடைமுறைகள் உள்ளன, அவை அனைத்தும் மக்களுடைய பண்பாடு என்ற வகையில் சட்ட அங்கீகாரம் பெற்றவை. இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள், யூதர்களுடைய சிவில் சட்டங்கள் எந்த அளவுக்கு வேறுபாடுகள் நிரம்பியவை என்பது அனைவருமே நன்கு அறிந்ததுதான்.

வெவ்வேறான சமூகங்கள் வெவ்வேறு விதமான மதத் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றன; திருமணம், தத்தெடுப்பு (சுவீகாரம்), மணவிலக்கு ஆகியவை தொடர்பாக வெவ்வேறு மதங்கள் வெவ்வேறான விதிகளையும் சடங்குகளையும் பின்பற்றுகின்றன; குழந்தைகளின் பிறப்பு, குடும்பத்தில் ஒருவருடைய இறப்பு ஆகியவற்றின்போது வெவ்வேறு விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன; குடும்பச் சொத்துகளைப் பகிர்ந்துகொள்வதிலும், வாரிசுரிமை அடிப்படையில் அவரவர் பங்கைப் பெறுவதிலும் மதங்களுக்கிடையே வித்தியாசங்கள் இருக்கின்றன; குடும்பக் கட்டமைப்புகளும், உணவுப்பழக்கங்களும், உடையணியும் முறைகளும், சமூக நடத்தைகளும்கூட வேறுபடுகின்றன.

வெளியில் அதிகம் தெரியாதவை என்னவென்றால், ஒவ்வொரு மதங்களுக்குள்ளேயும் வெவ்வேறு பிரிவினர் - வெவ்வேறு விதமான சடங்குகளைப் பின்பற்றுகின்றனர் என்பதும், அந்தந்தப் பிரிவுகளுக்கு உள்ளேயும் பல உட்பிரிவுகள் இருக்கின்றன என்பதும்தான்.

அரசின் திணிப்பு நடவடிக்கை

ஒரே சிவில் சட்டம் என்பது வலுக்கட்டாயமாக ஒற்றைத்தன்மையை அனைவர் மீதும் திணிக்கும் வல்லாண்மைதான்; மக்கள் சமூகங்கள் அனைத்தையும் ஒரே மாதிரியாக மாற்ற அரசு ஏன் முயற்சி செய்ய வேண்டும்? பொது சிவில் சட்ட நடைமுறைகளைத் தயாரிக்கும் பொறுப்பு யாரிடம் விடப்படும்? நாட்டின் எண்ணற்ற மக்கள் சமூகங்களை அவர்கள் போதிய எண்ணிக்கையில் சரியாக பிரதிநிதித்துவப்படுத்துவார்களா?

அனைவருக்கும் பொதுவான என்ற பெயரில் மேற்கொள்ளப்படுபவை அனைத்தும் மக்களின் வாழ்க்கையை அரசு கட்டுப்படுத்தும் விஷமத்தனமான முயற்சிதான் – கம்யூனிஸ்டு சீனாவில் கலாச்சாரப் புரட்சி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பொது வாழ்க்கை முறை முயற்சி தோற்றுப்போனது. மனிதர்களுடைய சுதந்திரமான உணர்வுகள் மீதான தாக்குதல்தான் பொது சிவில் சட்டம் என்ற முயற்சி, அத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய வாழ்முறையை அது அழித்துவிடும்.

தனிச் சட்டங்களில் சீர்திருத்தம் கொண்டுவருவது அவசியம்தான், ஆனால் அது அந்தந்த சமூகங்களுக்கு உள்ளிருந்துதான் வர வேண்டும். சமூகங்கள் ஒப்புதல் வழங்கிய சீர்திருத்தங்களுக்கும், மறைமுகமாக அங்கீகரித்த நடைமுறைகளுக்கும் அரசின் சட்டங்கள் அங்கீகாரம்தான் வழங்க முடியும். பொது சிவில் சட்டம் என்பது சமூகங்களுக்கிடையே கசப்பான வாக்குவாதங்களையே உருவாக்கும், மக்கள் மற்றவர்களுடைய பண்பாடுகளையும் வாழ்க்கை முறைகளையும் குறைகூறிப் பேசி பகைமையை வளர்த்துக்கொள்வார்கள், அது கருத்து வேறுபாடுகளுக்கும் கோபத்துக்கும் தீராத பூசல்களுக்குமே வழிவகுத்து இறுதியில் பெரும் வன்செயல்களில் போய் முடியும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி

சமஸ் | Samas 16 Apr 2024

ஒரே நாடு – ஒரே (சமய) தேர்தல்

நாட்டின் வெவ்வேறு மாநிலங்களுக்கு இடையில் நிலவும் சமூக – பொருளாதார வேற்றுமைகள், மக்களுடைய விருப்பங்கள், பண்பாடுகளை ஒழிப்பதற்கான முயற்சிதான் நாடு முழுக்க நாடாளுமன்ற – சட்டமன்ற பொதுத் தேர்தல்களை ஒரே சமயத்தில் நடத்துவது; அமெரிக்க கூட்டாட்சி முறையைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆவலில் உருவாக்கப்பட்டதுதான் இந்திய ஜனநாயக கட்டமைப்பு.

அமெரிக்க கூட்டரசில் நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகளுக்கான அவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அதிபர் பதவிக்கு நான்காண்டுகளுக்கு ஒரு முறையும், செனட் சபைக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறையும் தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஆஸ்திரேலியா, கனடா போன்ற கூட்டரசு நாடுகளில்கூட நாடாளுமன்றத்துக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடைபெறுவதில்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டதுதான் அரசின் தலைமை நிர்வாகம் என்ற கொள்கைக்கு நேர் முரணானது ஒரே நாடு – ஒரே தேர்தல் என்ற நடைமுறை. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேர்தல் நடத்தும் உரிமைகளையும் பறிக்கும் முயற்சிதான் ஒரே நாடு – ஒரே தேர்தல் என்ற கொள்கை.

ஊழல் எதிர்ப்பு இயக்கம்

பிற அரசியல் கட்சிகள் அனைத்தையும் அழித்துவிடவும் அரசியல் தலைவர்களை சிறையில் தள்ளவும் மேற்கொள்ளப்படும் முயற்சிதான் ஊழல் ஒழிப்பு இயக்கம். பாஜகவுடன் கூட்டணியில் சேர்ந்த பல அரசியல் கட்சிகள் இன்று முக்கியத்துவம் இழந்து செல்லாக்காசாகிவிட்டன. ஊழலை ஒழிக்க இயற்றப்பட்டச் சட்டங்களை முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் பிற மாநிலக் கட்சிகளை முடக்க இப்போது தவறாகப் பயன்படுத்துகிறது ஒன்றிய அரசு.

வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (இ.டி.), தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ), தேசிய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (என்சிபி) ஆகியவை இப்போதைய அரசின் கட்டளைப்படி மேற்கொள்ளும் கைது, காவல் நடவடிக்கைகள் சட்டப்படி செல்லாது என்று ஒரு நாள் தீர்ப்பு வரும் என்று நிச்சயமாக நம்புகிறேன். இது ஊழலை ஒழிப்பதற்கானது அல்ல, ஒரே கட்சியின் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக.

பொது சிவில் சட்டம், ஒரே நாடு – ஒரே தேர்தல் என்ற இரண்டு அம்சங்களை பாஜக ஏன் இப்போது தீவிரமாகப் பேசுகிறது? அயோத்தியில் ராமருக்குக் கோயில் கட்டி முடிந்த பிறகு வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த இந்தி பேசும் பெரும்பான்மை மத மக்களைத் திருப்திப்படுத்தும் திட்டம் ஏதும் இப்போது அதனிடம் இல்லை. இந்தி பேசும், இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த மாநிலங்கள்தான் பாஜக – ஆர்எஸ்எஸ் செல்வாக்கு கடந்த முப்பதாண்டுகளில் வளர பெரிதும் துணை நிற்பவை.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கேஜ்ரிவால் கைது: நீதி முறைமைக்கே ஒரு சவால்

ப.சிதம்பரம் 08 Apr 2024

இந்தப் பகுதி மக்கள் சாதி உணர்வு மிக்கவர்கள், சமுதாயப் படிநிலையை வலியுறுத்துகிறவர்கள், பழங்கால மரபுகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். மத உணர்வு மிக்க இந்த வாக்கு வங்கியின் ஆதரவை இழக்க பாஜக விரும்பவில்லை. மாநிலக் கட்சிகளோ பிற மத, இன, மொழி, பண்பாட்டு குழுக்களோ தங்களுடைய தனி அடையாளங்களை நிலைநாட்ட முற்பட்டால் - வட இந்தியாவில் தங்களுக்குள்ள தேர்தல் வெற்றி பலம் மூலம் அவற்றைத் தகர்க்கவே இத்தகைய பிரச்சினைகளை பாஜக எழுப்புகிறது.

பொது சிவில் சட்டம், நாடு முழுக்க ஒரே சமயத்தில் தேர்தல் என்ற மோடியின் உத்தரவாதக் கொள்கைகள் இப்போது நாடு முழுக்க அனல் தெறிக்கும் விவாதங்களைக் கிளப்பிவிட்டிருக்கிறது. தமிழ்நாடு, கேரள மாநில மக்கள் இந்த விவகாரங்களுக்குத் தேர்தலில் என்ன பதிலைக் கொடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். இந்தி பேசும், பழங்கால நம்பிக்கைகளில் ஊறிய, சாதி உணர்வு மிக்க வட இந்திய மாநிலங்களில் மக்கள் என்ன முடிவெடுப்பார்கள் என்பதை ஊகிக்க முடியாமல் இருக்கிறேன்!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

காங்கிரஸின் தெளிவான தேர்தல் அறிக்கை
கேஜ்ரிவால் கைது: நீதி முறைமைக்கே ஒரு சவால்
முதல் என்ஜினைப் பின்னுக்கு இழுக்கும் இரண்டாவது என்ஜின்
உத்தரவாதம்… வலுவான எதிர்க்கட்சி
இந்தியாவின் குரல்கள்
தென்னகம்: உறுதியான போராட்டம்
மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
இந்தியாவின் பெரிய கட்சி எது?
காங்கிரஸ் விட்டேத்தித்தனம் எப்போது முடிவுக்கு வரும்?
அடித்துச் சொல்கிறேன், பாஜக 370 ஜெயிக்காது

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

4






அரசுசி / 2022 இ3 (இஸெட்டிஎஃப்)நாங்குநேரிஇந்துஸ்தானி கச்சேரிநாடகீய பாத்திரம்தொழில் நுட்பம்நடுத்தர வகுப்பினர்மன்னை நாராயணசாமிதேர்தல் களத்துக்கு எதிரணி தயார்திமுகவின் சரிவுகூட்டுப்பண்ணைசௌத் வெஸ் நார்த்மாதவிலக்குஎத்தியோப்பியா: பாப் மார்லிக்கு சிலை வைத்த நாடுகுறைந்தபட்ச தேர்வு அவசியம்கலாச்சாரப் புரட்சிநெகிழிபருவ இதழ்கள்நாகூர்சிறந்த நடிகர்செளந்தரம் ராமசாமிராணுவ ஆதிக்கம்ஜப்பான் பிரதமரின் புதிய பொருளாதாரத் திட்ட அறிவிப்பசாதி உளவியல்குஜராத் படுகொலைஇன்னொரு குரல்1232 கி.மீ.; ஏழு புலம்பெயர் தொழிலாளர்களின் ஏழு நாளபோதைப்பொருள்புதிய அரசமைப்புச் சட்டம்காது இரைச்சல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!