கட்டுரை, அரசியல், சர்வதேசம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

ஜனநாயகமே பற்றாக்குறை!

ப.சிதம்பரம்
11 Aug 2024, 5:00 am
0

மெரிக்காவின் பதிமூன்று மாகாணங்கள் 1776 ஜூலை 4இல் சுதந்திரப் பிரகடனத்தை வெளியிட்டன. பிரெஞ்சுப் புரட்சி (1789 - 1799) நடந்து இருநூறுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்டன. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திலிருந்து 1901இல் முதலில் விடுதலை பெற்ற காலனி ஆஸ்திரேலியா. இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு 1947. அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இன்றும் சுதந்திரமாகவும் ஜனநாயக நாடுகளாகவும் தொடர்கின்றன.

காலனி ஆதிக்க நாடுகளிடமிருந்து (பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம், போர்ச்சுகல் ஆகியவை) ‘விடுதலை’ பெற்ற நாடுகள் பல, இப்போது ‘சுதந்திர’ நாடுகளாக இல்லை; மக்களுக்கு மனித உரிமைகள் கிடையாது, தாங்கள் விரும்பிய அரசை நேர்மையான – சுதந்திரமான தேர்தல் மூலம் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடிவதில்லை. ஒரு கணக்குப்படி, உலகின் 20% மக்கள் மட்டுமே சுதந்திரமாக வாழ்கின்றனர். இந்தியாவும் அதில் ஒன்று என்பது மகிழ்ச்சிக்குரியது.

வழங்கப்படுவதல்ல ஜனநாயகம்

ஜனநாயகம் என்பது (எவராலும்) வழங்கப்படுவதல்ல. பாகிஸ்தான் 1947 ஆகஸ்ட் 14இல் விடுதலை பெற்றது, ஆனால் பல முறை ராணுவ சர்வாதிகார ஆட்சியின் கீழ் வந்திருக்கிறது.

நம்முடைய இன்னொரு பக்கத்து நாடான வங்கதேசம், ஒரு காலத்தில் பாகிஸ்தானின் ஒரு மாநிலமாக இருந்தது, பாகிஸ்தானை ஆண்ட ராணுவ சர்வாதிகாரத்தால் காலில் போட்டு நசுக்கப்பட்டது; ஒரு கொரில்லா இயக்கம் (முக்தி வாஹினி) தோன்றி வலுவடைந்து, அதுவே சுதந்திரப் போராட்டமாக மாறியது; இந்தியா தலையிட்டது, வங்கதேசம் சுதந்திர நாடாக 1971இல் உருவானது. ஆனால் 1975 முதல் 1991 வரையில் பல முறை ராணுவ சர்வாதிகளின் கீழ் ஆட்சியில் இருந்தது. இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளான அவாமி லீக் - வங்கதேச தேசியக் கட்சி (பிஎன்பி) ஆகியவை கரம்கோத்து ராணுவ ஆட்சியாளரைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு மக்கள் அரசை 1991இல் அமைத்தன.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பேகம் ஷேக் ஹசீனா 1996இல், முதல் முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 2008, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடைசியாக (2024) நடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. 2024இல் நடந்த தேர்தலின் நடுநிலைத்தன்மை குறித்து விஷயம் தெரிந்தவர்களும் அரசுகளும் சந்தேகப்பட்டனர். அரசியல் நோக்கில், சரியென்று ஏற்பதே சிறந்த கொள்கை என்று இந்திய அரசு முடிவுசெய்துவிட்டது.

இதையும் வாசியுங்கள்... 2 நிமிட வாசிப்பு

வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சி ஏன்?

டி.வி.பரத்வாஜ் 21 Jul 2024

வளர்ச்சி என்பது கேடயமல்ல

ஷேக் ஹசீனா தலைமையில் வங்கதேசம் பொருளாதார வளர்ச்சியில் பல சாதனைகளைப் புரிந்தது. அதன் தனிநபர் வருமானம் (நபர்வாரி) இந்தியாவைவிட அதிகம், தெற்காசிய நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளத்தையும்விட அதிகம். மனித வளர்ச்சி குறியீட்டில் இலங்கைக்கு அடுத்துவருவது வங்கதேசம்; இந்தியா, நேபாளம், பாகிஸ்தானைவிட அதிகம். சிசு இறப்பு விகித்தை வங்கதேசம் ஆயிரம் பிறப்புக்கு 21-22 என்று குறைத்துவிட்டது, இந்தியாவில் அது 27-28; இதில் இலங்கைதான் மிகவும் குறைவு 7-8 (ஆதாரம்: ‘தி இந்து’ நாளிதழ்).

அதேசமயம், வாஷிங்டனிலிருந்து செயல்படும் ‘ஃப்ரீடம் ஹவுஸ்’ என்ற ஜனநாயக அளவுகோல் அமைப்பு, தேர்தல்கள், ஊடகங்களின் சுதந்திரம், நீதித் துறையின் சுதந்திரம், மக்களின் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவற்றில் வங்கேதச அரசின் செயல்பாடு சரியில்லை என்று கடுமையாகக் கண்டித்தது.

பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலேயே ஜனநாயக உரிமைகள் குறைந்தாலும் மக்கள் அதைப் பொருள்படுத்த மாட்டார்கள் என்று ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்; வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்படும் அதிருப்தி, மக்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடு ஆகியவை அதிகம் கவனம் பெறாது என்றே நினைக்கின்றனர், அப்படி எப்போதும் கிடையாது. அரசு வேலைகளில் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டவே இடஒதுக்கீட்டுக் கொள்கை என்று கருதியதால் மாணவர்களின் கோபம் என்ற பெருவெள்ளம், அணையை உடைத்துக்கொண்டு பொங்கியது.

இதற்கிடையில், பொருளாதார வளர்ச்சி வேகமும் குறைந்தது, விலைவாசி உயர்ந்தது, வேலை கிடைப்பதே அரிதாகிவிட்டது. இந்த உண்மைகளை ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு தொடர்ந்து மறுத்தே வந்தது – யதேச்சாதிகாரிகள் அனைவரும் செய்யும் பொதுவான தவறு இது. இடஒதுக்கீடு கொள்கைதான் திரியைப் பற்ற வைத்தது, ஆனால் அரசின் ஊழல், காவல் துறையின் அடக்குமுறை, நீதித் துறையின் பாராமுகம் என்று எல்லா பிரச்சினைகளுக்கும் சேர்ந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இது நமக்கு மிகவும் ‘பரிச்சய’மான கதைதான்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?

ஷிவ் சஹாய் சிங் 07 Jul 2024

பற்றாக்குறையை நிரப்புக

வீதிகளில் நடக்கும் மக்கள் போராட்டங்கள் பெரும்பாலும் வெற்றிபெறுவதில்லை. ஆனால், அத்தகைய போராட்டங்கள் அரசுகளைக் கலைத்தது உண்டு, உதாரணம் இலங்கை. அதற்கு மாறாக நடந்தவை ‘அரபு வசந்தம்’ என்று அழைக்கப்பட்ட போராட்டங்கள்; எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கை அதிபர் பதவியிலிருந்து அகற்ற ‘அரபு வசந்தம்’ என்ற மக்கள் எழுச்சிதான் காரணமாக அமைந்தது, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபரை நீக்கிவிட்டு ராணுவ அதிகாரியொருவர் அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டார்.

நேர்மையான தேர்தல் மூலம் ஆட்சியை மாற்றிவிட முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் இழக்கும்போதுதான் இப்படியான போராட்டங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் மக்களுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கான வழிகளும் அடைக்கப்படும்போதுதான் மக்களுடைய கோபமும் அதிருப்தியும் பொங்கி பெருக்கெடுத்து பெருவெள்ளமாக அணையை உடைத்துக்கொண்டு வெளிப்படுகின்றன. வீதிகளில் நடக்கும் போராட்டங்களில் சில ஆபத்தும் இருக்கிறது.

அத்தகைய போராட்டங்களில் எல்லோரும் கலந்துகொள்ளலாம் என்பதால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்கூட கலந்துவிடுவார்கள், அப்படித்தான் வங்கதேசத்திலும் நடந்தது என்று நம்புகிறார்கள். கிளர்ச்சி நடக்கும் நாடுகளில் வாழும் வெளிநாட்டவர்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதும் வழக்கம். சிறுபான்மைச் சமூக மக்கள் தாக்குதலுக்கு இலக்காவார்கள், அவர்களுடைய வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், வழிபாட்டிடங்கள் தாக்கி அழிக்கப்படும்.

வங்கதேச நிலைமை தனித்துவமானது. பல நாடுகளில் மக்கள் இதே நிலையைத்தான் அனுபவிக்கின்றனர். ஜனநாயக நடைமுறைகளில் நிலவும் பற்றாக்குறைகளால்தான் மக்கள் கோபமடைந்து வீதிகளில் இப்படித் திரள்கின்றனர். இதற்குச் சரியான பதில் அந்தப் பற்றாக்குறையை, ஆள்வோர் இட்டு நிரப்ப வேண்டும். அந்தப் பற்றாக்குறையை இட்டு நிரப்பும் கலையில் அமெரிக்கா, பிரிட்டன் சிறந்தவை. பிரிட்டனில் பிரதமர்கள் மார்கரெட் தாட்சர், ஜான்சன், தெரசா மே ஆகியோர் பதவியைவிட்டு விலகி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அனுமதித்தனர்.

அமெரிக்காவில் லிண்டன் ஜான்சனும் ஜோ பைடனும் இரண்டாவது முறை அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் அடுத்தவருக்கு வழிவிட்டனர். தவறுகளுக்குத் தலைவர்கள் பொறுப்பாக்கப்படுகின்றனர், அவர்களுடைய பதவி விலகல்கள் வற்புறுத்திப் பெறப்படுகின்றன. ஒரு பதவியில் ஒருவர் இத்தனை முறைதான் இருக்கலாம் என்று வரையறுப்பது மிகவும் பலன் அளிப்பது. சுதந்திரமான ஊடகம் இருந்தால் அது எதிர்ப்புணர்ச்சிகளுக்கு வடிகாலாக இருந்திருக்கும்.

உச்ச நீதிமன்றம் மிகுந்த விழிப்புணர்வுடனும் ஆள்வோரிடம் அச்சமில்லாமலும் செயல்படுவது மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும். சுதந்திரமான தேர்தல் ஆணையத்தால், திட்டமிட்ட அட்டவணையில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடத்தப்படும் பொதுத் தேர்தல்கள் அரசால் ஒடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்படும் ஏழைகளுக்கு அருமருந்தாகவே செயல்படும்.

என்னுடைய கருத்து என்னவென்றால், ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றம் கூடி, அவைத்தலைவரின் தேவையற்ற குறுக்கீடு இன்றி - ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையில் வார்த்தைப் போரை அனுமதித்தால், ஜனநாயகப் பற்றாக்குறைக்கு இறுதியான பதிலாக அமையும்.

ஜனநாயகப் பற்றாக்குறைக்கு வங்கதேசம் அரிய விலையை கொடுத்திருக்கிறது. இறந்தவர்களை நினைத்து துயரப்படுகிறேன்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

வங்கதேசத்தின் ஐம்பதாண்டு சாதனை எப்படி, எதனால்?
இரு நாடுகள் கொள்கைக்குப் புத்துயிர்?
டீஸ்டா நதி உடன்பாட்டில் சிக்கல் என்ன?
வங்கதேசத்தில் மாணவர் கிளர்ச்சி ஏன்?

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பத்திரிகையாளர்களுக்கு யார் எஜமானர்?Amulsamas interviewஇத்தாலிபிடிஆர்களின் இடம் என்ன?தனிமை விரும்பிநான் செய்தேன்இந்தியாவிற்கு முந்தைய காந்திசேகர் பாபுதமிழ்கிளிநொச்சிநால்வரணிடிஜிட்டல் துறைபோட்டி சர்வாதிகாரம்ஆயிரம் நடன மங்கைகள்தி வயர்நாடகக் குழுஆளுந(ரி)யின் அநாகரீக செயல்பாடுகள் முற்றுப் பெறுமா?மனப் பதற்றம்ஷிஃப்ட் கணக்குதேஜகூஇந்துத்துவத்தின் இத்தாலியத் தொடர்புமயிர்வணிக் குழுபிரேசில்புதிய பொறுப்புகள்சொந்த நாட்டை விமர்சிப்பது அன்பின் வெளிப்பாடுஎஸ்தர் டஃப்ளோ கட்டுரைவாசிப்பை அதிகரிக்க 5 வழிகள்நுழைவுத் தேர்வுகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!