கட்டுரை, அரசியல் 6 நிமிட வாசிப்பு

எனக்கு எதற்கு இந்துத்துவம்?

ப.சிதம்பரம்
23 Nov 2021, 5:00 am
8

மிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் – இப்போது சிவகங்கை மாவட்டம் என்று அழைக்கப்படும் பகுதியில் - ஒரு சிறிய கிராமத்தில் – கானாடுகாத்தானில்- நான் பிறந்தேன். அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவிலிருந்த பூங்குன்றம் (இப்போது மகிபாலன்பட்டி) என்ற கிராமத்தில் பிறந்தவர்தான் கணியன் பூங்குன்றனார் என்பதில் எனக்குப் பெரிய பெருமிதம் உண்டு.

கி.மு. ஆறாவது நூற்றாண்டுக்கும் கி.மு. முதலாவது நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சங்க காலத்தில் வாழ்ந்தவர் கணியன் பூங்குன்றனார். ‘யாதும் ஊரே – யாவரும் கேளிர்!’ என்று தொடங்கும் பதிமூன்று வரிப் பாடலால் இன்றளவும் உலகப் புகழ் பெற்றுவிட்ட கவிஞர் அவர். அதை எளிமையாக மொழிபெயர்த்தால், ‘எல்லா ஊரும் என்னுடைய ஊரே - எல்லோரும் என்னுடைய உறவினரே!’ என்பது பொருள் ஆகும்.

இந்தக் கவிதையில் மேலும் சில அற்புதக் கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. இந்த சங்கப்பாடலின் முதல் வரி, ஐக்கிய நாடுகள் சபையின் சுவரில் பொறிக்கப்பட்டிருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் – இன்னும் அதற்கும் முன்னால் - தமிழர்கள் வாழ்ந்த விதத்தை இந்தப் பாடல் உணர்த்துகிறது.

தமிழ் உணர்த்தும் சமய வரலாறு

சங்க காலத்தில் இருந்த மதங்களை சைவம் என்றும் வைணவம் என்றும் தமிழ் இலக்கியம் பதிவுசெய்திருக்கிறது. சமணம், பௌத்தம் ஆகியவை பிற்காலத்தில் தோன்றிய மதங்கள். இந்து, இந்துவியம் என்ற வார்த்தைகள் சங்க காலத் தமிழ் இலக்கியத்தில் எந்த இடத்திலும் கிடையாது. “அயல் நாட்டவர்கள், நம்மை அடையாளப்படுத்த இந்த வார்த்தையைக் கூறும்வரை எந்த இந்திய மொழிகளிலும் இந்து என்ற சொல்லே கிடையாது” என்கிறார் சசி தரூர்.

பெரும்பாலான தமிழர்கள் இந்து மதப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பங்களில் பிறந்தவர்கள்தான். கிராம தேவதைகள் உள்பட பல தெய்வங்களை அவர்கள் வழிபடுகின்றனர். பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். தெய்வங்களுக்குப் பொங்கலிட்டு படைப்பது, பால் குடம் எடுத்துச் சென்று நேர்த்திக் கடன்களைச் செலுத்துவது, காவடி எடுத்துச் சென்று காணிக்கைகளை அளிப்பது போன்ற சடங்குகளைச் செய்கின்றனர்.

தமிழ் இந்துக்கள் பிற மதத்தாருடன் பல நூற்றாண்டுகளாக இணைந்தே வாழ்ந்துவருகின்றனர். கிறிஸ்தவர்களுடன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தும், இஸ்லாமியர்களுடன் எண்ணூறு ஆண்டுகளாகவும் வாழ்கின்றனர். தமிழ் இலக்கியத்துக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவ அறிஞர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்திருக்கின்றனர். எனக்குத் தெரிந்தவரை எந்தத் தமிழ் மன்னரும் பிற மதங்கள் மீது, இந்து மதத்தின் மேலாதிக்கத்தை நிறுவ படையெடுத்துச் சென்றதில்லை.

இந்துவியம் என்றால் என்ன?

மிகவும் போற்றப்படும் இந்த மதத்தின் பெயருக்குப் பின்னால், இந்துவியம் என்பது என்ன? தத்துவ மேதை டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன், சுவாமி விவேகானந்தர் ஆகியோருடைய நூல்களைப் படித்திருந்தாலும், ‘இந்துவியம் என்றால் என்ன?’ என்று ஆராய வேண்டிய அவசியம் இருந்ததாக நான் நினைத்ததே இல்லை.

நான் படித்தவை, கேட்டவை, தகவல்களைத் தேடி அறிந்தவை, திரட்டியவை ஆகியவற்றிலிருந்து இந்துவியம் என்றால் என்ன என்ற கேள்விக்கு மிக எளிமையான வார்த்தைகளில் விளக்கிவிட முடியும் என்று கருதுகிறேன்.

சில எளிய உண்மைகள்

இறைவனை அடைவதற்கு தன்னுடைய வழி மட்டுமே இருக்கிறது என்று இந்துவியம் ஒரு நாளும் கூறியதில்லை. சுவாமி விவேகானந்தர் கூறினார், “உலகம் முழுவதற்கும் சகிப்புத்தன்மையையும், அனைத்தையும் ஏற்கும் பக்குவத்தையும் கற்றுக்கொடுத்த உலகளாவிய மதத்தைச் சேர்ந்தவன் என்பதில் பெருமை அடைகிறேன். நாங்கள் அனைத்துக் கருத்துகளையும் சகித்துக்கொள்வதுடன் மட்டுமல்ல, அனைத்து மதங்களுமே உண்மையானவைதான் என்றும் ஏற்றுக்கொள்கிறோம்!”

இந்து மதத்துக்கு ஒரே தேவாலயம், ஒரே போப்பாண்டவர், ஒரே இறைத்தூதர், ஒரே புனித நூல், ஒரே சடங்கு இப்படியெல்லாம் கிடையாது. ஒவ்வொன்றிலும் பல வகைகள் உள்ளன. இதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் அனைத்தையும் நிராகரிக்கவும் இந்துக்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. ஒருவர் ஒரே சமயத்தில் இந்துவாகவும், கடவுளை அறியவே முடியாது என்று கருதுபவராகவும், கடவுளே இல்லை என்று கூறுபவராகவும் இருக்க முடியும் என்று அறிஞர்கள் வாதிட்டுள்ளனர். 

மதச்சார்பற்ற கோணத்தில் பார்க்கும்போது, ஒரே முறையான திருமணம் அல்லது ஒரே வகையிலான வாரிசுரிமையை இந்து மதம் வரையறுக்கவில்லை. இந்து மதச் சட்ட சீர்திருத்தங்கள் (1955-1956) ஒரே மாதிரியான சீர்மையைக் கொண்டுவர முயற்சித்தன, இருப்பினும் எண்ணற்ற வேறுபாடுகள் இன்னமும் நிலவுகின்றன.

இந்து மதம் பிற கடவுளர்களையும் புனிதர்களையும் வணங்க அனுமதிக்கிறது. ஆயிரக்கணக்கான இந்துக்கள் வேளாங்கண்ணி சென்று அன்னை மேரியை வணங்குகின்றனர், ஆஜ்மீரில் உள்ள தர்காவுக்குச் செல்கின்றனர். ஷீரடியில் உள்ள சாய்பாபா இந்துவா, முஸ்லிமா என்பதில் வரலாற்று அறிஞர்களிடத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. இரண்டிலும் எந்த வேற்றுமையையும் பார்க்காத சாய்பாபா இரு மதக்காரர். அவருடைய சீடர்களுக்கு மிகவும் பழக்கமான அவருடைய வாசகம் ‘அல்லா தான் மாலிக்’ – அதாவது ‘கடவுள்தான் எஜமானர்’.

சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மதங்களின் வரலாறு பற்றி ஆராய்ந்த பேராசிரியர் டாக்டர் வெண்டி டோனிகர் சம்ஸ்கிருதத்தையும் பழமையான இந்து மதத்தையும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் ஆழ்ந்து பயின்றவர். “பழங்கால இந்தியர்கள் மாட்டுக்கறியைப் பல்லாண்டுகளாக உண்டார்கள் என்பது அறிஞர்களுக்குத் தெரியும்” என்கிறார் அவர். இதற்கு ஆதாரங்களை ரிக் வேதத்திலிருந்தும் பிராமணங்களிலிருந்தும் யாக்ஞவல்கியரின் கூற்றிலிருந்தும், எம்.என்.ஸ்ரீனிவாஸ் என்ற அறிஞரின் ஆராய்ச்சி நூலிலிருந்தும் அவர் காட்டுகிறார். இப்போதும்கூட பெரும்பாலான இந்துக்கள் இறைச்சி, மீன், முட்டை ஆகியவற்றை உண்கிறார்கள். மாட்டுக் கறியைச் சாப்பிடுவதில்லை. இந்துக்களில் பலர் மரக்கறி உண்பவர்கள்.

பசுவைக் கொல்வதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காந்தி எப்போதுமே அழைப்பு விடுத்ததில்லை என்றும் டோனிகர் சுட்டிக்காட்டுகிறார். “பசுவைக் கொல்லாதீர்கள் என்று எப்படி நான் இன்னொருவரை பலவந்தப்படுத்த முடியும், அவருக்கே அது தோன்றாதவரை? இந்தியாவில் இந்துக்கள் மட்டுமா வாழ்கிறார்கள்? முஸ்லிம்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் மற்றும் இதர மதங்களைச் சேர்ந்தவர்களும் வாழ்கிறார்களே!” என்று கூறியுள்ளார் காந்தி. 

முஸ்லிம்களிலும் கிறிஸ்தவர்களிலும் கூட பலர் மாட்டுக்கறி சாப்பிடுவதில்லை. சைவம் அல்லாத உணவை உண்ணும் பிறர்கூட செவ்விறைச்சியைத் தொடுவதே இல்லை.

இந்துத்துவம் எனக்குத் தேவையில்லை

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தன்னுடைய ‘சாதியை அழித்தொழிக்கும் வழி’ உரையில் (1936), இந்திய தேசிய காங்கிரஸ் (1885-ல் தோற்றுவிக்கப்பட்டது), இந்திய தேசிய அறிவியல் மாநாடு (1887-ல் தோற்றுவிக்கப்பட்டது) ஆகியவற்றுக்கிடையிலான மோதலை விளக்கியுள்ளார். அரசியல் சீர்திருத்தவாதிகள், சமூக சீர்திருத்தவாதிகளைக் காணாமலடித்துவிட்டார்கள் என்று வருந்துகிறார். இந்துக்களின அரசியல் சிந்தனை குறித்து பிறகு அடுக்கடுக்காகப் பல கேள்விகளை எழுப்புகிறார்: “அவர்கள் எந்த ஆடையை உடுத்த விரும்புகிறார்களோ, எந்த அணிகலன்களை அணிய விரும்புகிறார்களோ அதை அனுமதிக்காத நீங்கள், அரசியல் அதிகாரத்துக்குத் தகுதியானவர்கள்தானா? அவர்கள் விரும்பும் உணவை உண்ண அனுமதிக்காவிட்டாலும் அரசியல் அதிகாரம் பெற நீங்கள் தகுதியானவர்கள் தானா?”

இந்தக் கேள்விகள் இன்றைக்கும் ஒலிக்கின்றன - ஆனால் வேறொரு பின்னணியில்.

சசி தரூரைப் போல, நானும் இந்துவாகத்தான் பிறந்தேன், இந்துவாகத்தான் வளர்ந்தேன், என்னுடைய வாழ்நாள் முழுவதும் என்னை இந்துவாகவே கருதிவருகிறேன். பியூ சர்வேயில் கூறியபடி 81.6% இந்துக்களில் நானும் ஒருவன், இந்துவாக வளர்க்கப்பட்டேன், இந்துவாக என்னை அடையாளம் காட்டிக்கொள்கிறேன். என்னுடைய இந்துவியம் குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறேன், கணியன் பூங்குன்றனார் கூறியபடி அனைவரையும் என் கேளிராக ஏற்கிறேன். ஆகையால், கேட்கிறேன், எனக்கெதற்கு இந்துத்துவம்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






பின்னூட்டம் (8)

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

The whole Hindu Religion is converted as the POLITICAL INSTITUTION for BJP political party - Said by VCK Leader Thol.Tiruma Valavan. That's the main issue now a days

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

Unable to share the article to watsapp sir..?

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

Admirable thoughts. Welcome Mr.P.C. Sir.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   3 years ago

English எழுதப்பட்ட இந்த கட்டுரைக்கு ஒற்றை சொல்லில் விமர்சனம் எழுதுவதென்றால் **அயல் நாட்டவர்கள், நம்மை அடையாளப்படுத்த இந்த வார்த்தையைக் கூறும்வரை எந்த இந்திய மொழிகளிலும் இந்து என்ற சொல்லே கிடையாது** என்ற திரு.சசிதரூர் அவர்களின் கூற்றொன்று போதும்.இல்லாத இந்துவை அல்லது இந்துவத்தை அல்லது இந்துவியத்தை இந்தியாவில் பிரபல்யமாக்கியதில் காங்கிரஸின் காந்தியாரின் பங்கு அலாதியானது.இது ஏன்? திரு.சிதம்பரம் உட்பட யாரும் பதில் சொல்ல முன் வருவதில்லை. எல்லோரும் உண்மைதை மறைக்கிறார்கள். தனித்தனியாய் அவரவர்கள் அவரவர் விரும்பிய பாதையில் பயணித்த காலத்தில் முட்டி மோதிக் கொண்டாலும் அதன் பின்னணியையும் பின்புலத்தையும் புரிய முடிந்தது.இன்று எல்லாம் இந்து என்ற வார்த்தைக்குள் அரிதாரம் பூசிக் கொண்டலைகிறது.இதில் யாருக்கு லாபம் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பதில்லை.சிலை வணங்கும் எல்லோரும் ஓரினம் என்ற பார்வையில் உண்டாக்கப்பட்ட சொல் இன்றுவரை முஸ்லிம்களை கிறித்தவர்களை பாதிப்புக்குள்ளாகியதை விட இந்துக்களாய் இணைக்கப்பட்டோரை தான் அதிகம் பலியிட்டிருக்கிறது.இந்து என்ற சொல் பயன்பாட்டிலில்லாத காலத்திலும் மக்களை கழுவிலேற்றியதுண்டு.ஆயினும் அது யார் யாரை செய்தார்கள் என்ற குறிப்போடு அறியப்பட்டது.ஆதலால் ஹிந்து அல்லது இந்து எனும் தமிழிய சொல்லாடல் கடவுளை காட்டும் கண்ணாடியோ கடவு சீட்டோ பாதையோ பயணமோ அல்ல.அரசியல் வரலாற்றில் ஜோடிக்கப்பட்ட பெரும்பான்மைக்கான சூத்திரத்தை அல்லது வெற்றிடத்தை நிரப்பும் தந்திர சொல்.இந்துத்துவாவால் எதிரியாய் உருவகப்படுத்தப்படும் இஸ்லாம் சகிப்புத்தன்மை அற்றதாக கருதப்படுவதில் துளியும் உண்மையில்லை.இந்து எனும் உருவக சொல்லை இந்தியாவிற்கு தந்தது இஸ்லாம்.இந்து எனும் சொல்லிற்கு அந்த சொல்லால் உருவான பெரும்பான்மைக்கு நிரந்தர எதிரி அவசியம்.இல்லையேல் அரசியலில் இந்து எனும் சொல்லால் கிடைத்த பெரும்பான்மை விரயப்படுமோ என்ற அச்சமுள்ளது.அதன் விபரீதம் தான் 1400 ஆண்டுகளை இந்தியாவில் நிறைவு செய்த இஸ்லாமை அதன் கால அளவீடை குறைத்து சொல்வதில் யாருக்கும் வெட்கமில்லை. ராஜராஜ சோழனின் வாழ்வில் பெரும் தாக்கத்தை உருவாக்கியதும் ராஜராஜ சோழனை வைஷ்ணவ கோபத்திலிருந்து காப்பாற்றியதும் நத்தர் ஷா எனும் இஸ்லாமிய மருத்துவர்.இது நடந்து ஆயிரம் ஆண்டுகள் கடந்து விட்டது.ஆயினும் 800 ஆண்டுகள் தொடர்பென்கிறார் திரு.சிதம்பரம்.இது தான் ஆங்கிலய இந்தியாவில் இந்து எனும் சட்ட மையப்படுத்தப்பட்ட சொல்லால் கிடைத்த பலன். இன்றும் இந்து எனும் சொல்லால் ஜாதியம் ஒழியவில்லை.ஒழிக்க பாடுபட்டவர்கள் இந்துவியத்தின் எதிரிகளாக கட்டமைக்கப்படுகிறார்கள்.ஆயினும் திரு.சிதம்பரம் அவர்களோ இந்துவியத்தில் சகிப்புத்தன்மையை பற்றி பேசுகிறார்.இது தான் இந்துவியம்.

Reply 10 1

Login / Create an account to add a comment / reply.

அறிவன்   3 years ago

இதென்ன சிதம்பரம் தமிழில் எழுதமாட்டாரா என்ன? எதற்கு வரதாச்சாரி மொழிபெயர்ப்பு?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Selvasamiyan   3 years ago

தமிழ்நாட்டு மக்களைப் பொருத்தவரை அவர்கள் “கடவுள்” என்று சொல்லப்படுவதையெல்லாம் வணங்கக் கூடியவர்கள். பிராமணர்கள் மட்டுமே இந்துவாக பிறந்து, இந்துவாக வளர்ந்து, தங்களை இந்துவாகவே கருதுகிறார்கள். அவர்கள் மற்ற மதத்தின் கடவுள்களை, கிராமத்து தெய்வங்களை வணங்க மறுப்பவர்கள்.

Reply 9 3

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

நீங்கள் ஒரு மதத்தில் இருந்து இன்னொரு மதத்திற்கு மாறமுடியும் என்றால், அவைகள் உண்மையான மதங்களே அல்ல. ஒரு அரசியல் கட்சி அல்லது ஒரு நிறுவனம் என்றே அடையாளப் படுத்தபடும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Sudanthirathasan   3 years ago

ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில் அப்போது வாழ்ந்த (முஸ்லிம், கிறிஸ்டியன், பார்சி என ) மதம் மாறாத பூர்வ குடிகளை குறிக்க ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ஒரு பொது பெயர். மத பெயர் அல்ல. அதற்கும் மதத்திற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ஏனெனில் இந்துவில் ஒரு கடவுள், ஒரு புனித நூல் என்பது இல்லை. இந்துத்துவம் என்பது ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் வருவதற்கு முற்பட்ட மக்களை பற்றி பேசுவது. அவர்களது வாழ்க்கை, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை பற்றியது. ஆனால் அதுவே குறைபாடு உடையது என்பது அம்பேத்கர் கருத்து.

Reply 5 3

Login / Create an account to add a comment / reply.

எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுமுதுகு வலிதிறமையின்மைநார்க்கட்டிகள்காவிரி பிராந்தியம்ராஜ துரோகம்காட்சிப் பதிவுகள்செயற்கைக்கோள்அறிவியல்எஸ்.சந்திரசேகர் கட்டுரைவணிகம்அமல்பிரிவு இயக்குநரகம்ராமஜன்ம பூமிஉன் எழுத்து கொண்டாடப்படலைன்னா நீ எழுத்தானே இல்லை: மாயாவதி எங்கே?சின்னம் வேண்டாம்சுர்ஜீத் பல்லா கட்டுரைபென்ஷன் பரிஷத்பசுமை கட்டிடங்கள்33% இடஒதுக்கீடுவர்ணாஸ்ரமம்ஏர்முனைIndian Farm Crisis - The Third Optionசெல்வாக்கு பெறாத லலாய்பல்லின் நிறம்அவட்டைகல்விக் கட்டணம்இரு உலகம் தொடர்குஜராத் மாநிலம்சட்டப் பரிமாணம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!