சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் பஞ்சாப், உத்தராகண்ட், உத்தர பிரதேச மாநிலங்களுக்கு வட வானில் ஒளிரும் நட்சத்திரமாகவும், தொலைதூரத்தில் உள்ள கோவா, மணிப்பூரில் பார்த்து ரசிக்கும்படியாகவும் இருக்கும் என்று தேசிய வருவாய் தொடர்பான முன்கூட்டிய மதிப்பறிக்கையை ஒன்றிய அரசு மிகவும் ஆவலாக எதிர்பார்த்தது; ஆனால் அது விரைவிலேயே எரிந்து தீரும் எரிகல்லாக, ஜனவரி 7-8 ஆகிய நாள்களுக்கிடையே சில மணி நேரங்களுக்கெல்லாம் விண்ணிலிருந்தே மறைந்துவிட்டது!
‘தேசிய தரவுகள் ஆணையம் (என்எஸ்ஓ)’ 2021-22 ஆம் ஆண்டுக்கான முன்கூட்டிய முதல் மதிப்பீட்டுப் புள்ளிவிவரங்களை ஜனவரி 7-ல் வெளியிட்டது. அந்த அறிக்கையின் மையமான அம்சமே, 9.2% பொருளாதார வளர்ச்சி என்பதுதான். 2020-21-ல் (-7.3%) சுருங்கிய பொருளாதாரம், 2021-22-ல் (9.2%) அதிகரிக்கும் என்று அந்த அறிக்கை தெரிவித்தது. அரசு அதிகாரிகளின் கூற்றுப்படி 2020-21-ல் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவை முழுதாகத் துடைத்தெறிந்துவிட்டு 2019-20-ல் இருந்ததைவிட மேலும் 1.9% வளர்ச்சியைப் பெற்றுவிடுவோம் என்பது. அப்படி உண்மையிலேயே நடந்தால், எல்லோரையும்விட அதிக மகிழ்ச்சி அடைபவன் நானாகத்தான் இருப்பேன். (உலக வங்கியின் மதிப்பீடு 8.3 %).
அந்த அறிக்கையின் அடிப்படையில் இதைக் கொண்டாடுவது முதிர்ச்சியற்ற செயலாகவே இருக்கும். நிலையான விலைவாசி அடிப்படையில் 2019-20-ல் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு (ஜிடிபி) ரூ.145,69,268 கோடி. பெருந்தொற்றுக் காரணமாக அது ரூ.135,12,740 கோடியாக குறைந்தது.
2019-20-ம் ஆண்டில் எட்டப்பட்ட அளவுக்கு ஜிடிபி இருந்தால்தான், ‘சரிவைத் துடைத்தெறிந்துவிட்டோம், 2019-20 இறுதியில் நாம் எங்கிருந்தோமோ அந்த இடத்தை அடைந்துவிட்டோம்’ என்று கூற முடியும். என்எஸ்ஓ மதிப்பீட்டின்படி நாம் அந்த வருவாயையே 2021-22-ல் தான் எட்டுவோம்; பொருளாதாரத்தை ஊன்றிக் கவனித்து வரும் பலருடைய கணிப்புப்படி, நாம் அப்போதும் அந்த வருவாயை எட்டிவிட மாட்டோம்.
கோவிட்-19 பெருந்தொற்று மீண்டும் தலைதூக்கி, அந்த வைரஸ் புதிய வடிவமெடுத்திருப்பதால் இப்படி அவநம்பிக்கையும் தீவிரமாகியிருக்கிறது.
அதே இடத்தில் ஓட்டம்
முதல் மதிப்பீட்டு அறிக்கையை மேலும் கவனமாக ஆராய்வோம். என்எஸ்ஓ மதிப்பீட்டின்படி ஜிடிபி ரூ.145,69,268 கோடியிலிருந்து மேலும் சிறிதளவு ரூ.1,84,267 கோடி அதிகரிக்கும் – அதாவது 1.26% அளவுக்கு. புள்ளிவிவரங்களின்படி இது மிக மிக அற்பமான தொகை. எங்காவது, ஏதாவது ஒரு அனுமானம் தவறாகப்போனால் எதிர்பார்க்கும் இந்த உபரி வருவாய் காணாமலேயே போய்விடும். உதாரணத்துக்கு, தனி நபர்கள் நுகர்வு சிறிதளவு குறைந்தாலும், சில சந்தைகளுக்கான ஏற்றுமதி ஏதேனும் சில காரணங்களால் தடைப்பட்டாலும், முதலீடுகள் எதிர்பார்த்த அளவைவிடச் சிறிது குறைந்தாலும், எதிர்பார்க்கும் இந்த உபரி காணாமல்போய்விடும்.
நாம் அதிகபட்சம் நம்பிக்கையோடு எதிர்பார்க்கக் கூடியது எதையென்றால், நிலையான விலைகள் அடிப்படையில் 2021-22-க்கான ஜிடிபி ரூ.145,69,268 என்ற அளவைவிடக் குறையாது என்பது மட்டுமே. அதை எட்டினால், 2019-20-ல் நாம் எட்டிய அதே அளவு உற்பத்தி மதிப்பை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு எட்டிவிட்டோம் என்று திருப்திப்பட்டுக்கொள்ளலாம். இந்த நிலைமைக்குக் காரணம் ஒன்று பெருந்தொற்று நோய், இரண்டாவது அரசின் திறமையற்றப் பொருளாதார நிர்வாகம்.
உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்று பெருமைப்படுவதில் அர்த்தமே இல்லை. ஜிடிபி வெகு வேகமாக சரிந்தது. எனவே, மீண்டும் அது பழைய நிலையை எட்டும் முயற்சிகளே அற்புதமான வளர்ச்சியைப் போலத்தான் தோற்றமளிக்கும். முதலாவது ஆண்டில் (மைனஸ் 7.3 சதவீதம்) இரண்டாவது ஆண்டில் (பிளஸ் 9.2 சதவீதம்). இதனால் ஜிடிபியைக் காட்டும் கோடு உயராது மாறாக அப்படியே நேர்க்கோட்டிலேயே செல்லும். சீனம் இந்த இரண்டு ஆண்டுகளில் ஜிடிபி வளர்ச்சியை பிளஸ் 2.3% ஆகவும், பிளஸ் 8.5% ஆகவும் பதிவுசெய்திருக்கிறது. இதிலிருந்து எந்த நாடு உண்மையிலேயே வளர்ச்சி அடைந்திருக்கிறது, எந்த நாடு வெறும் தம்பட்டம் அடித்துக் கொள்கிறது என்பது புரியும்.
சராசரி இந்தியர் மேலும் ஏழையாகிறார்
என்எஸ்ஐ புள்ளிவிவரங்கள் காட்டும் உண்மை என்னவென்றால், சராசரி இந்தியர் 2020-21-ல் ஏழையாக இருந்தார், 2019-20 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது. 2021-22-ல் மேலும் ஏழையாகிவிடுவார். 2019-20-ல் செய்த செலவைவிட மேலும் குறைவாகவே அடுத்த இரண்டு ஆண்டுகளில் செலவு செய்திருப்பார். நிலையான விலைவாசி அடிப்படையில் தொடர்ந்து மூன்று நிதியாண்டுகளில் நபர்வாரி வருமானம், நபர்வாரி நுகர்வைப் பட்டியலிடலாம்:
ஆண்டு | நபர்வாரி வருவாய் | நபர்வாரி நுகர்வு |
2019-20 | ரூ. 1,08,645 | ரூ. 62,056 |
2020-21 | ரூ. 99,694 | ரூ. 55,783 |
2021-22 | ரூ. 1,07,801 | ரூ. 59,043 |
இவற்றைத் தவிர கவலையளிக்கும் வேறு அடையாளங்களும் உள்ளன. அரசு தன்னுடைய செலவை நெருக்கடியான இந்த நேரத்தில் அதிகப்படுத்த வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும்கூட அரசின் இறுதி மூலதனச் செலவானது முந்தைய ஆண்டைவிட 2020-21-ல் வெறும் ரூ.45,003 கோடி மட்டுமே அதிகமானது. அதே போல 2021-22-ல் ரூ. 1,20,562 கோடியாக மட்டுமே இருக்கும். முதலீடுகளும் நிலைமைக்கேற்ப பெருகவில்லை. 2021-22-ல் ஒட்டுமொத்த மூலதனச் சேர்க்கை, 2019-20-ல் இருந்ததைவிட ரூ. 1,21,266 கோடியாக சிறிதளவு மட்டுமே அதிகமாக இருக்கும். பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்துக்கு இது போதவே போதாது.
உண்மைநிலை என்ன
மக்களிடையே ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியைவிட சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் தாறுமாறான விலை உயர்வு குறித்துத்தான் அதிகம் கவலையுடன் பேசப்படுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவது குறித்து கவலை அதிகரித்து வருகிறது. சிஎம்ஐஇ தரவுகளின்படி நகர்ப்புறங்களில் வேலை கிடைக்காதவர்கள் எண்ணிக்கை 8.51% ஆகவும் கிராமப்புறங்களில் 6.74% ஆகவும் இருக்கிறது. இது தரவுகளின் அடிப்படையிலானது, ஆனால் உண்மையில் இது இன்னமும் அதிகம். பெயரளவுக்கு வேலைக்குப் போகிறவர்கள், வேலையில்லாத் திண்டாட்டத்தில் சிக்காதவர்களைப் போல கணக்கிலிருந்து விடுபடுகின்றனர். பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், பால் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் தீவிரமாகவும் உயருவது குறித்து எல்லா குடும்பங்களும் கவலைப்படுகின்றன. குழந்தைகளின் கல்வியைத் தொடர முடியாமல் நிலவும் சூழல் மிகப் பெரிய கவலையாக இருக்கிறது. இந்தியாவின் கிராமப்புறங்களிலும், நகரங்களில் ஏழைகள் வசிக்கும் பகுதிகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளுக்கு படிப்பதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.
அதுமட்டுமின்றி வட இந்தியாவிலும் மத்திய இந்திய மாநிலங்களிலும் வசிக்கும் மக்கள், சமூகங்களுக்கு இடையே மிகப் பெரிய மத மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்கின்றனர். மத அடிப்படையில் ஒரு சாராரை முற்றாக அழித்துவிட வேண்டும் என்று மேடைகளில் பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்படுகிறது. தனி நபர்கள் குறித்தும் பிற மதங்கள் குறித்தும் (சமூக ஊடகங்கள்) டிஜிட்டல் சாதனங்கள் மூலமாகவே தடையின்றி வெறுப்புப் பிரச்சாரங்களும் மிரட்டல்களும் பரவுகின்றன. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான வன்செயல்கள் அதிகரித்து வருகின்றன, பெண்களை சமூக ஊடகங்களில் பின்தொடர்ந்து வசைபாடுவதும் இழிவுபடுத்துவதும் பெருகிவிட்டது. இதற்கிடையே, பெருந்தொற்று கட்டுக்கடங்காமல் இருப்பது குறித்தும் நோய்க் கிருமிகள் புதுப்புது வடிவம் எடுப்பது குறித்தும் மக்களிடையே அச்சம் நீடிக்கிறது.
ஆட்சியில் இருப்பவர்கள் இதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழிகளில் மட்டுமே தீவிர கவனம் செலுத்துகின்றனர். போகிற வழிகளில் பெருந்திட்டங்களுக்காக அடிக்கல்களை நாட்டிக்கொண்டே செல்கின்றனர், கட்டி முடிக்கப்படாத பாலங்களைத் திறக்கின்றனர், யாருமே இல்லாத மருத்துவமனைக் கட்டிடங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கின்றனர், ‘இருபது சதவீதத்தை எண்பது சதவீதம் எதிர்த்து வெற்றி பெறும்’ என்று மார்தட்டுகின்றனர், தேர்தல் வெற்றிக்காக அன்றாடம் ஒரு புது முழக்கத்தை வெளியிடுகின்றனர். இவை அனைத்துமே நம்ப முடியாத, ஆனால் எதார்த்தமான நிகழ்வுகள். உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரம் நம்முடையதுதான் என்ற தவறான தற்பெருமையைப் போல இதுவும் உண்மையல்ல - கனவுக் காட்சிதான்.
1
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
மத்திய அரசின் திட்டக்குழுவுக்கு (அரசியல் கட்சிகளை நான் கண்டுகொள்வதில்லை) திறமை உள்ளதா என்று சந்தேகம் உள்ளது. பொருளாதார சுணக்கம், உலக வெப்பமயமாதல், வேலை வாய்ப்பை அதிகரித்தல், விலைவாசியை குறைப்பது, BoP பிரச்சினை என்று ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒவ்வொரு திட்டம் போடுகிறார்கள். ஆனால் மதுரை முதல் டெல்லி வரை நான்குவழி இருப்புப்பாதையும் கிழக்கு மேற்காக நான்கைந்து நான்குவழி இருப்புப்பாதைகளும் போடப்பட்டால் மேற்கூறப்பட்ட அனைத்து பிரச்சினைகளும் குறியும். ஆனால் இவர்கள் பத்து இலட்சம் கோடி செலவில் பத்து புல்லட் இரயில் திட்டங்களை கொண்டுவருகிறார்கள். இது ஒட்டுமொத்த சாலைப்போக்குவரத்து செலவுகளையும் அதிகரிக்கும். சாலை நெரிசலையும் அதிகரிக்கும்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
Bjpக்கு பொருளாதாரத்தை விட வாக்குவங்கிகள் மீதுதான் கண். உதாரணம்: தமிழக கோயில்களில் நன்கொடையாக வந்த ஆனால் பழம் பெருமை இல்லாத இரண்டு டன் நகைகளை விற்க தமிழக அரசு முயற்சித்தது. அதை பிஜேபி தடுத்ததால் இரண்டு டன் தங்க இறக்குமதி அதிகரித்தது. அதனால் BoP அதிகரித்தது. நாட்டுக்கு நட்டம். பிஜேபிக்கு இலாபம்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.