கட்டுரை, அரசியல், சட்டம், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல்: வாய்ப்பே இல்லை!
நாடாளுமன்ற மக்களவைக்கும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் பொதுத் தேர்தலை நடத்த பரிந்துரைகள் கூறுமாறு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்தபோதே, ஒன்றிய அரசின் உண்மையான நோக்கம் அம்பலமாகிவிட்டது.
‘ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாகப் பரிசீலித்து பரிந்துரைகள் வழங்குமாறு…’ அந்த உயர்நிலைக் குழு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதாவது, மக்களவைக்கும் 28 மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை எப்படி நடத்துவது என்று மட்டும்தான் அது பரிசீலிக்க வேண்டும், அப்படி நடத்தலாமா - கூடாதா என்றெல்லாம் அது பரிசீலிக்கக் கூடாது; உயர்நிலைக் குழு தனக்கிட்ட கட்டளைப்படி விசுவாசத்துடன் வேலையை முடித்து பரிந்துரைகளை அரசிடம் வழங்கியிருக்கிறது.
அறிஞர்கள் குழு அல்ல
‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற நோக்கில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவும் அரசின் நோக்கத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது. தலைவர், 8 உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே அரசமைப்புச் சட்ட நிபுணர். இன்னொருவர் நாடாளுமன்ற கூட்ட நடைமுறைகள் குறித்து நன்கு அறிந்தவர் என்றாலும் வழக்கறிஞராகத் தொழில் செய்தவரோ, சட்ட மாணவர்களுக்குப் பாடம் நடத்தியவரோ அல்ல. இரண்டு பேர் அரசியலர்கள், ஒருவர் அதிகாரியாக இருந்து பிறகு அரசியலுக்கு வந்தவர். மூன்று பேர் தங்களுடைய வாழ்நாள் முழுக்க அரசு அதிகாரிகளாகவே இருந்தவர்கள்.
இந்த உயர்நிலைக் குழுவுக்குச் சற்றேனும் கௌரவம் இருக்க வேண்டும் என்பதற்காக, குடியரசின் முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அலங்காரமாக தலைமைப் பீடத்தில் அமர்த்தப்பட்டார். இந்த உயர்நிலைக் குழுவின் அமைப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும், இது அரசமைப்புச் சட்ட நிபுணர்களால் ஆனதல்ல.
பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடியே – ‘ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே சமயத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று உயர்நிலைக் குழு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது. எனக்குத் தெரிந்தவரையில், கூட்டாட்சியும் ஜனநாயகமும் நிலவும் எந்த நாட்டிலும் இப்படி நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறுவதே இல்லை.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகளை இதற்கு ஒப்பிட்டுப்பார்க்கலாம். அமெரிக்காவில் நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடக்கிறது. அந்நாட்டில் மாநில ஆளுநர்கள், அதிபர் பதவிக்கான தேர்தல், நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது, அவையும் ஒரே நேரத்தில் நடத்தப்படுவதில்லை. செனட் சபையின் ஆறு ஆண்டுகள் பதவிக்காலத்துக்கு (இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை) தேர்தல் நடக்கிறது.
சமீபத்தில்கூட ஜெர்மனி நாட்டின் இரண்டு மாநிலங்களான துரிங்கியா, சாக்ஸனி ஆகியவற்றில், அவற்றின் தேர்தல் கால அட்டவணைப்படிதான் பொதுத் தேர்தல் நடந்தது - ஜெர்மனியின் தேசிய நாடாளுமன்றத்துக்கு (பூண்டஸ்டாக்) பொதுத் தேர்தல் நடந்தபோது அல்ல. கூட்டாட்சித் தத்துவத்துக்கும் நாடாளுமன்ற ஜனநாயக முறைகளுக்கும் பொருந்தாத ஒரு கருத்தைப் பரிந்துரைக்கத்தான் கோவிந்த் குழு நியமிக்கப்பட்டது.
நாடாளுமன்ற ஜனநாயக முறைமையில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள், மக்களுடைய அன்றாடப் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று விவாதித்து, அவற்றைத் தீர்ப்பதற்கு கடமைப்பட்டவர்கள். தலைமைப் பதவியில் அமர்பவருக்கு ‘நிரந்தர பதவிக் காலம்’ என்று ஏதுமில்லை. (மக்களவை அல்லது சட்டமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு உள்ளவரை அவர்கள் பதவி வகிக்கலாம்).
எந்தவிதமான அரசியல் நிர்வாக முறை நம்முடைய நாட்டுக்கு ஏற்றதாக இருக்கும் என்று அரசமைப்புச் சட்ட வகுப்பின்போது, தேசியப் பேரவையில் மிகவும் விரிவாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் உள்ள, சுயமாகச் சட்டம் இயற்றிக்கொள்ளும் அளவுக்கு அதிக அதிகாரம் உள்ள அதிபர் முறை நமக்குத் தேவையில்லை என்று அவையில் முடிவுசெய்யப்பட்டது. இந்தியா பன்முகத்தன்மை உள்ள நாடு என்பதால் பிரிட்டனில் கடைப்பிடிக்கப்படும் நாடாளுமன்ற ஜனநாயக முறைதான் (வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரி) நமக்கு ஏற்றது என்று இறுதிசெய்யப்பட்டது.
சூத்திரங்களும் உருவாக்கங்களும்
கோவிந்த் குழுவின் பரிந்துரைகள் எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத அரசியல் சூத்திரங்கள், மிகவும் அற்பமான சட்ட உருவாக்கங்களைக் கொண்ட கூட்டுக் கலவையாகும்.
ஒரே சமயத்தில் மக்களவைக்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் பொதுத் தேர்தலை நடத்துவதென்றால் அரசமைப்புச் சட்டத்தின் பல பிரிவுகளுக்கு திருத்தம் கொண்டுவர வேண்டியது அவசியம் என்பதைக் குழு அங்கீகரித்திருக்கிறது: புதிய சட்டப் பிரிவுகளாக 82ஏ, 83(3), 83(4), 172(3), 172(4), 324ஏ, 325(2), 325(3) அறிமுகப்படுத்தப்படும்; அத்துடன் அரசமைப்புச் சட்டத்தின் 327வது கூறு உரிய வகையில் திருத்தப்பட வேண்டும். இந்தப் புதிய பிரிவுகளைச் சேர்ப்பதாலும், ஏற்கெனவே உள்ளதைத் திருத்துவதாலும் அனைத்து மாநில சட்டமன்றங்களுடைய பதவிக்காலமும் மக்களவையின் பதவிக் காலமும் ‘ஒரே நாளில்’ முடியுமாறு இணைக்கப்பட வேண்டும்.
அரசு கோடிட்டுக் காட்டியிருப்பதைப் போல இந்த ஆண்டு நவம்பர் – டிசம்பரில் நாடாளுமன்றத்தில் இந்தப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டு உரிய சட்டத் திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டால், 2029 மக்களவை பொதுத் தேர்தலின்போது எல்லா மாநில சட்டமன்றகளுக்கும் உடன் சேர்ந்தே பொதுத் தேர்தல் நடத்தப்படும். 2025, 2026, 2027, 2028 (மொத்தம் 24) ஆண்டுகளில் பொதுத் தேர்தல்களை எதிர்கொள்ளும் சட்டமன்றங்களின் அடுத்த பதவிக் காலத்தில், ஓராண்டு முதல் நான்காண்டுகள் வரையில் வெட்டப்படும்! இரண்டாண்டுக்கு மட்டுமே 2027இல் சில மாநிலங்களிலும், ஓராண்டுக்கு மட்டுமே 2028இல் சில மாநிலங்களிலும் பொதுத் தேர்தல் நடத்தப்படுவதைக் கற்பனைசெய்துகொள்ளுங்கள்!
இப்படி அற்ப ஆயுள் உள்ள சட்டமன்றத்தை வாக்காளப் பெருமக்களும் அரசியல் கட்சிகளும் ஏன் ஏற்க வேண்டும்?
பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் எந்தக் கட்சிக்குமோ கூட்டணிக்கோ பெரும்பான்மை வலு கிடைக்காவிட்டால் என்னாவது? தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் தோற்கடிக்கப்பட்டால் எப்படி அடுத்துச் செயல்படுவது? ஏதோ காரணத்துக்காக ஒரு முதல்வர் பதவி விலகிய பிறகு அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்க முடியாமல் முட்டுக்கட்டை நிலைமை ஏற்பட்டால் என்னாவது?
அப்படியொரு சூழல் ஏற்பட்டால், அந்தச் சட்டமன்றத்தின் எஞ்சிய பதவிக் காலம் ஐந்தாண்டுகளாகவே இருந்தாலும் - அடுத்த சில மாதங்களாகவே இருந்தாலும், குறிப்பிட்ட நாளில் பதவிக் காலம் முடியும் வகையில் தேர்தல் நடத்தப்பட்டாக வேண்டும்!
அவ்வாறு தேர்தலை நடத்துவது கேலிக்கூத்தாகத்தான் இருக்கும். மிதமிஞ்சிய ரொக்கம் (தேர்தல் நன்கொடை பத்திரங்களைப் பெற்ற பணக்கார கட்சி நினைவுக்கு வருகிறதா?) உள்ள அரசியல் கட்சியால்தான் அப்படிப்பட்ட தேர்தல்களைச் சந்திக்க முடியும்.
சட்டமன்றத்தின் கணிசமான உறுப்பினர்களுக்குத் தன்னுடைய நிர்வாகத்தின் மீது திருப்தி இல்லாவிட்டாலும் முதல்வரால், ‘நான் பரிந்துரைத்தால் அடுத்து பொதுத் தேர்தல்தான்’ என்று எச்சரித்து தொடர்ந்து தன்னைப் பதவியில் தக்கவைத்துக்கொள்ளவும் முடியும்.
எளிதில் நிறைவேற்றிவிட முடியாது
நம் நாட்டு ஜனநாயக வரலாற்றை ஆழ்ந்து படித்தால், கோவிந்த் குழுவின் பரிந்துரை எப்படிப் பொருத்தமற்றது என்பது புரியும். நாடு சுதந்திரம் அடைந்து 1951 முதல் 1971 வரையில் ஏழு தசாப்தங்களில் (பத்தாண்டுகள்) நடந்த பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு, இரண்டு தசாப்தங்களில் மட்டுமே 1981 - 1990, 1991 - 2000 நிலையற்ற அரசியல் சூழல் ஏற்பட்டது. 1999க்குப் பிறகு குறிப்பிடத்தக்க அளவில் நிலையான அரசே ஒன்றியத்தை ஆண்டுவருகிறது. பெரும்பாலான மாநில அரசுகள், சட்டமன்றங்கள் ஐந்து ஆண்டுகள் முழுமையாக பதவிக் காலத்தைக் கழித்துள்ளன.
தேர்தலை சேர்த்து நடத்துவதால் பொருளாதாரம் வளர்ச்சி அடையப்போவதில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் பத்தாண்டுகளுக்கும் சராசரியாக 7.5% ஜிடிபி வளர்ச்சி இருந்தது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் தன்னுடைய பத்தாண்டுக் காலத்தில் அதைவிட வளர்ச்சி அதிகமாகவே இருந்ததாகக் கூறிக்கொள்கிறது.
இப்போது மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசால், அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட முடியும் என்று கோவிந்த் குழு தவறாக அனுமானித்திருக்கிறது. எதிர்க்கட்சிகளால் மக்களவையில் 182 உறுப்பினர்களையும், மாநிலங்களவையில் 83 உறுப்பினர்களையும் புதிய சட்ட மசோதாக்களுக்கு எதிராக எளிதில் திரட்டி தோற்கடித்துவிட முடியும்.
பன்மைத்துவமும் பரந்துபட்ட பண்பாடுகளும் உள்ள நாட்டில் ஒற்றைத்தன்மையைத் திணிக்கும் மற்றொரு முயற்சிதான் ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்ற கொள்கை. இந்தக் கொள்கை ‘கருவிலேயே இறந்துவிட்டது’ என்றே கருதுகிறேன்!
தொடர்புடைய கட்டுரைகள்
ஒரே சமயத்தில் தேர்தல்: மோசமான முடிவு
ஒரே நாடு, ஒரே துருவம்!
ஏன் கூடாது ஒரே தேர்தல்?
ஏன் கூடாது ஒரே நாடு ஒரே தேர்தல்?
தமிழில்: வ.ரங்காசாரி
2
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.