நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற பாஜக கூட்டணி அரசு குறித்து சுருக்கமாகப் பின்வரும் வார்த்தைகளில் கூறிவிடலாம்: மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தனர் மக்கள், மாற்ற வேண்டாம் – இப்படியே தொடரட்டும் என்று முடிவெடுத்துவிட்டார் மோடி!
வாக்காளர்கள்
அனுபவ அறிவுமிக்க வாக்காளர்கள் இந்தப் பொதுத் தேர்தலில் சரியான முடிவையே எடுத்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக நடக்கும் பாஜக அரசின் நிர்வாக முறையை நிராகரித்துவிட்டார்கள். அதேசமயம், தன்னுடைய தவறுகளைத் திருத்திக்கொள்வதாக இருந்தால் ஆளட்டும் என்று மோடிக்கு மேலும் ஒரு வாய்ப்பை அளித்திருக்கிறார்கள்.
மக்களவையில் 303 உறுப்பினர்கள் வலிமையுடன் தேர்தலை சந்தித்த பாஜக, ‘தன்னுடைய இலக்கு 370 - கூட்டணிக்கு இலக்கு 400+…’ என்று அறிவித்து தேர்தலைச் சந்தித்தது. இரண்டு இலக்கிலுமே பற்றாக்குறையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. தன்னுடைய கட்சிக்கு மட்டும் 240 தொகுதிகளையும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (என்டிஏ) 292க்கும் குறைவான தொகுதிகளையும் பெற்றிருக்கிறது.
பாஜகவுக்கு மக்கள் விடுத்திருக்கும் கட்டளை தெளிவானது: கூட்டணி அரசு அமையுங்கள், கூட்டணிக் கட்சிகளுக்கு முக்கியமான பங்கு அளியுங்கள், மக்களைப் பிளக்கும் கொள்கைகளைக் கைவிடுங்கள், நாட்டின் பொருளாதார நிலைமை உண்மையில் எப்படி இருக்கிறது என்பதை உணருங்கள், சமூகங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் மனப்புண்களை ஆற்றப் பாருங்கள், சாதாரண விஷயங்களைக்கூட பெரிய சாதனையாக பீற்றிக்கொள்வதை நிறுத்துங்கள், நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் கிடைக்கும் வகையில் நிர்வகியுங்கள்.
நாட்டின் முதன்மையான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதிகாரத்தைக் கைப்பற்ற உறுதியான முயற்சிகளை எடுத்தபோதிலும், அதிகாரத்தைக் கைப்பற்ற அது இன்னமும் தயாராகவில்லை என்றே வாக்காளர்கள் இந்த முறை தீர்மானித்துள்ளனர். 170 மக்களவைத் தொகுதிகளைத் தன்னிடம் கொண்டுள்ள 9 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மறுவளர்ச்சி காண வேண்டியது அவசியமாகிறது.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
பாரதிய ஜனதா கட்சி
நரேந்திர மோடி இந்த முறை நிபந்தனையுடன் கூடிய வாய்ப்பையே, ஆட்சியமைக்கப் பெற்றிருக்கிறார், ஆனால் அவரோ அவருடைய சுபாவத்துக்கேற்ப உண்மை நிலை என்னவென்பதைக் காணத் தவறி அகம்பாவத்துடன் தொடர்கிறார். தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கியதும் முதலில் அதிர்ச்சி அடைந்த மோடி, கட்சிக்குள் தன்னை எதிர்க்க யாருமில்லை என்பதையும் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெரும் வகையில் வேறு எந்தக் கட்சியும் அதிக எண்ணிக்கையில் வெற்றிபெறவில்லை என்பதையும் பார்த்து, தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டார்.
சந்திரபாபு நாயுடு (தெதே), நிதீஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்) ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் ஆந்திரத்திலும் பிஹாரிலும் தங்களுடைய ஆட்சி தொடர்ந்தால் போதும் என்று நினைக்கும் ‘கொடுக்கல் – வாங்க’லில் குறியாக உள்ள தோழமைக் கட்சியினரே தவிர, புதிய அரசை ஆட்டிவைக்கும் அளவுக்குச் ‘சூத்திரதாரிக’ளாக இருக்கப்போவதில்லை என்ற யதார்த்த நிலையையும் புரிந்துகொண்டுவிட்டார்.
இவ்விரு தலைவர்களுக்கும் தேவைப்படும் நிதி, மாநில வளர்ச்சி திட்டங்கள், தனி அந்தஸ்தைப் போன்ற அங்கீகாரம் ஆகியவற்றைக் கொடுத்தால் போதும் என்பதும் அவருக்குத் தெளிவாகிவிட்டது.
மோடி எங்கே தவறுசெய்தார் என்றால், அரசை நிர்வகிப்பதற்கான தனது அணியைத் தேர்வுசெய்வதில்தான் - அதை மேற்கொண்டு விவாதிப்போம்.
காங்கிரஸ்
காங்கிரஸ் பெற்றுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை, ஆட்சியமைக்க முடியாமல் அதைத் தடுக்கிறது. காங்கிரஸ் வென்றுள்ள 99 தொகுதிகளில் 79 தொகுதிகள், ஒன்பதே மாநிலங்களிலிருந்து பெறப்பட்டவை.
எஞ்சிய 9 மாநிலங்களில் 170 தொகுதிகள் உள்ளன, அவற்றில் நான்கு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது, ஐந்து மாநிலங்களில் ஓரிடம்கூட கிடைக்கவில்லை, நான்கு மாநிலங்களில் தலா ஒன்று என்று வென்றிருக்கிறது. 79 தொகுதிகளை வென்ற 9 மாநிலங்களில் காங்கிரஸ் எதையெல்லாம் சரியாகச் செய்தது, 4 தொகுதிகள் மட்டுமே வென்ற 9 மாநிலங்களில் எவற்றையெல்லாம் தவறாகச் செய்தது என்று ஆராய்ந்தாக வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்கான முன்தயாரிப்புகளை உதய்பூரிலும் ராய்பூரிலும் நடந்த காங்கிரஸ் மாநாடுகள் செய்திருந்தன, விரும்பிய முடிவுகளைக் கொடுக்கும் வகையில் களத்தில் அவை அமல்செய்யப்படவில்லை. அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள ஹரியாணா, மஹாராஷ்டிரம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அடைந்திருக்கும் வெற்றிகள் உற்சாகம் அளிப்பவை, ஆட்சியைக்கூட பிடிக்கும் அளவுக்கு வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த மூன்று மாநிலங்களிலும் தோற்றால் அதன் விளைவுகள் பிற மாநிலங்களுக்கும் பரவும் என்பதால் இந்த மாநிலங்களைக் கைப்பற்ற பாஜக அனைத்து விதங்களிலும் முயற்சிகளை மேற்கொள்ளும். ‘இந்தியா’ கூட்டணி கடுமையாகப் போராடித்தான் வெற்றிபெற வேண்டியிருக்கும்.
அரசு நிர்வாகம்
மாற்றத்துக்குப் பதிலாக முந்தைய முறையையே பின்தொடருவது என்ற முடிவால் தனக்குத்தானே வினையைத் தேடிக்கொண்டிருக்கிறார் மோடி. மூன்றாவது முறையாக மோடி தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையின் தன்மை, அமைப்பு ஆகியவற்றைப் பார்த்தால் பல முடிவுகளுக்கு வர வேண்டியிருக்கிறது.
முதலாவது, ஆட்சிசெய்யும் முறை சரியில்லை மாற்றிக்கொள்ளுங்கள் என்று வாக்காளர்கள் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்திருக்கிறார் மோடி.
இரண்டாவதாக, பொருளாதாரம் உள்நாட்டுப் பாதுகாப்பு வெளிநாட்டு உறவு தொடர்பாக தன்னுடைய அரசு கடைப்பிடித்த அடிப்படைக் கொள்கைகளில் தவறு ஏதுமில்லை என்ற முடிவோடு அவற்றைத் தொடர முற்பட்டிருக்கிறார்.
மூன்றாவதாக, தகுதியுள்ளவர்களை அமைச்சரவையில் சேர்க்க முடியாமல் கட்சிக்குள் திறமையாளர்களின் பற்றாக்குறை நிலவுகிறது என்ற உண்மையை மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார். நான்காவதாக, பிரதமர் அலுவலக கட்டளைப்படிதான் நடக்க வேண்டும் என்ற நிலையை ஏற்றுக்கொண்டவர்களை மட்டுமே அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டிருக்கிறார்.
இறுதியாக, அரசை ஆதரிக்கும் தோழமைக் கட்சிகளைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லாமல் - அதேசமயம் அவர்களைச் சமாளிக்கும் வகையில் ‘போதிய வளங்கள்’ தன்னிடமும் அமித் ஷாவிடமும் இருக்கின்றன என்று உறுதியாக நம்புகிறார்.
புதிதாக பதவியேற்றுக்கொண்ட எந்த அமைச்சரும் துறையில் தன்னுடைய முன்னுரிமைகள் என்ன, கொள்கைகள் என்ன என்று வாயையே திறக்கவில்லை. “இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது, 24 கோடிப் பேர் வறுமையிலிருந்து மீண்டுவிட்டனர், பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) மிகவும் குறைவாகவே இருக்கிறது, வேலைவாய்ப்புகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன, எந்தத் தேதி என்று கூற முடியாவிட்டாலும் 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துவிடும்” என்றெல்லாம் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து வலியுறுத்தத் தொடங்குவார்.
“பயங்கரவாதம் ஒழிந்தே விட்டது, அரசமைப்புச் சட்டப்படிதான் மணிப்பூர் மாநிலம் நிர்வகிக்கப்படுகிறது, குடியுரிமை திருத்தச் சட்டமும் – பொது சிவில் சட்டமும் அமலுக்கு வந்துகொண்டே இருக்கிறது, ஐபிசி, சிஆர்பிசி, சாட்சிய சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாகத் தாங்கள் கொண்டுவந்த மாற்றங்கள்தான் தாமஸ் பாபிங்டன் மெக்காலேவுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய நன்மை” என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவார்.
உலக நாடுகளின் தலைநகரங்களில் பத்திரிகை புகைப்படக்காரர்கள் மத்தியில் பூரிப்புடன் முகம் காட்டி மகிழ்வார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்; இந்தியாவிடமிருந்து கைப்பற்றிய பெரும் பரப்பில் வலிமையான தற்காப்பு அரண்களைச் சீனம் கட்டிக்கொண்டிருக்கும்போதும், மாலத்தீவுகள், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, மியான்மர் ஆகிய நாடுகளுடன் புதிய பொருளாதார - ராணுவ உறவுகளை அது வளர்த்துக்கொண்டுவரும் நிலையிலும் உற்சாகம் குறையாமல் இருப்பார் ஜெய்சங்கர்.
ராணுவப் படைப் பிரிவுகள் இருக்கும் இடங்களுக்கு அடிக்கடி நேரில் செல்வதுதான் பாதுகாப்பு (ராணுவ) அமைச்சரின் முக்கியக் கடமை, அதைவிட ‘முக்கியத்துவம் குறைந்த பணிக’ளை நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் ராணுவத் தலைமை தளபதியும் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
வெளிவர்த்தக பற்று-வரவில் ஆண்டுக்கு 200 பில்லியன் டாலர்கள் பற்றாக்குறை இருந்தாலும் இந்தியாவின் தொழில் துறை நன்றாகச் செயல்படுகிறது, வெளிவர்த்தகம் செழித்து வளர்கிறது என்று வணிகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடர்ந்து பேசிவருவார், சீனத்துடனான வர்த்தகப் பற்று-வரவு பற்றாக்குறை மட்டுமே 85 பில்லியன் டாலர்களாக இருந்தபோதிலும்!
பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ராவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் தோவலும் மீண்டும் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், மாற்றமே இல்லாமல் அப்படியே தொடரும் மோடி அரசு என்பது உறுதிப்படுத்தப்பட்டு, கையெழுத்திடப்பட்டு, சீல் வைக்கப்பட்டு உணர்த்தப்பட்டுவிட்டது.
எனவே, இது மோடி3.0 அல்ல, மோடி 2.1தான்!
தங்களுடைய வாழ்க்கை மேலும் முன்னேற்றம் காண வேண்டும் என்று விரும்பி மக்கள் வாக்களித்துள்ளனர். வேலைவாய்ப்பு அதிகமாக வேண்டும், விலைவாசி கட்டுக்குள் வர வேண்டும், உள்நாட்டிலும் எல்லைப்புறங்களிலும் அமைதியும் பாதுகாப்பும் நிலவ வேண்டும் என்றே வாக்களித்தனர். அதே அமைச்சர்கள் அதே துறைகளில் அதே கொள்கைகளுடன் தொடர்வார்கள் என்பது - மக்களுடைய தீர்ப்பை குரூரமாக கேலிசெய்யும் செயலே அன்றி வேறு அல்ல.
புதிய அரசை ஏற்படுத்தும் முதல் அடியிலேயே மோடி தானும் தோல்வி அடைந்து நாட்டையும் தோல்விப் பாதையில் தள்ளியிருக்கிறார். அடுத்து இரண்டாவது, மூன்றாவது அடிகளுக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் அவை முறையே – குடியரசுத் தலைவர் உரை, ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்).
தொடர்புடைய கட்டுரைகள்
2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
நாட்டை எப்படி பாதுகாப்பது?
இதுதான் சட்ட சீர்திருத்தமா?
மெக்காலே: அழியா பூதம்
அஜித் தோவலின் ஆபத்தான கருத்து
தமிழில்: வ.ரங்காசாரி
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.