அரசியல் 7 நிமிட வாசிப்பு

கேட்க வேண்டியது அரசின் கடமை

ப.சிதம்பரம்
20 Dec 2021, 5:00 am
0

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் இந்த ஆண்டு நவம்பர் 29-ல் தொடங்கியது. மக்களவையில் அன்றாடம் மசோதாக்கள், தீர்மானங்கள் என்று பல விஷயங்கள் மீதும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால், மாநிலங்களவை கொந்தளித்துக் கிடக்கிறது. மாநிலங்களவை மீது கருமேகமாகக் கவிந்து கிடக்கும் விவகாரம், வெவ்வேறு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்கள் தொடரின் முதல் நாளிலேயே இடைநீக்கப்பட்டு, அவை நிகழ்ச்சிகளில் எஞ்சிய நாள்களுக்கு அவர்கள் பங்கேற்கக் கூடாது என்று அனுமதி மறுக்கப்பட்டதுதான்! 

அனைத்து எதிர்க்கட்சிகளுமே இந்த முடிவால் கோபமுற்றுள்ளன. சிலவற்றுக்குக் கோபம் அதிகம், சிலவற்றுக்குக் கோபம் குறைவு. அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து இந்த முடிவை எதிர்த்தன, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை வரை ஊர்வலமாகச் சென்றன, ஊடகங்களைச் சந்தித்துத் தங்களுடைய தரப்பை விளக்கின. மாநிலங்களவைக்குள் எந்த விவாதங்களிலும் பங்கேற்பதில்லை என்று தீர்மானித்த நிலையில், சிலர் மட்டும் கேள்வி நேரத்தில் பங்கேற்று கேள்விகள் கேட்டனர். சிலர் சில பிரச்சினைகளைக் குறிப்பிட்டு அவையில் பேசினர்.

அவைக்கு வெளியே, தற்காலிக இடைநீக்கப்பட்ட 12 உறுப்பினர்கள் காந்தியின் சிலைக்கு அடியில், சீற்றமடைந்த நிலையில் தர்ணா போராட்டம் நடத்திவருகின்றனர். இப்படியொரு நிலை இதுவரை ஏற்பட்டதே இல்லை.

இதன் தொடக்கம் வியப்புக்குரியது

இந்த இடைநீக்கத்துக்கு மூல காரணமாக அமைந்த நிகழ்வு, கடந்த தொடரின் இறுதி நாளான ஆகஸ்ட் 11, 2021-ல் நடந்தது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றிய நிகழ்ச்சித் தொகுப்பு அறிக்கையின் முதல் பகுதியின்படி அன்றைய நாளில், சில உறுப்பினர் அவையின் மையப் பகுதியில் நுழைந்தனர், கோரிக்கை அட்டைகளை அனைவரும் படிக்கும் வகையில் காட்டினர், முழக்கங்கள் எழுப்பினர், தொடர்ச்சியாகவும் – வேண்டுமென்றும் - அவை நடவடிக்கைகள் நடைபெறவிடாமல் தடுத்தனர். அந்த அறிக்கையில் 33 உறுப்பினர்களின் பெயர்கள் பட்டியல் இடப்பட்டிருந்தன. அவர்கள் மீது எடுக்கப்படவிருக்கும் நடவடிக்கை குறித்து அதில் ஏதும் கோடிட்டுக் காட்டப்படவுமில்லை, அப்படி நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவும் இல்லை.

நடந்த சம்பவம் – அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் – மிகவும் துரதிருஷ்டவசமானது, அதேசமயம், இதற்கு முன்னதாக அப்படி நடக்காமல் இருந்ததில்லை. மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த பாஜகவின் அருண் ஜேட்லி, “நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் தடுப்பதும் சட்டப்படியான நாடாளுமன்ற நடைமுறை உத்தி” என்றே அறிவித்திருந்தை நினைவுகூரலாம். எப்படியிருந்தாலும், இந்தச் சம்பவம் கடந்த தொடரின், கடைசி நாளில் மாலை 7.46 மணிக்கு நடந்தது. அதன் பிறகு அப்படி நடந்தவர்கள் மீது நடவடிக்கை எதையும் எடுக்காமலேயே அவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நவம்பர் 29-ல் தொடங்கியது புதிய தொடர். காலை 11 மணிக்கு அவை நடவடிக்கைகள் ஆரம்பித்தன. மறைந்த அவை உறுப்பினர்கள் தொடர்பான இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்பட்ட பிறகு, அவர்களுக்கு மரியாதை தெரிவிக்கும் விதமாக அவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் காலை 12.20 மணிக்கு அவை கூடியது. வழக்கமான பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. உணவு நேர இடைவேளைக்குப் பிறகு பிற்பகல் 2 மணிக்கு வேளாண் சட்டங்களை ரத்துசெய்வதற்கான மசோதா வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, விவாதிக்கப்படாமலேயே பிற்பகல் 2.06 மணிக்கு நிறைவேற்றப்பட்டது (அது தொடர்பான என்னுடைய கருத்தை இப்போது வெளியிடவில்லை). 

அவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 3.08 மணிக்கு மீண்டும் கூடியது. திடீரென்று அமைச்சர் எழுந்து, அவையின் 12 உறுப்பினர்களை அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து, இந்தத் தொடரின் எஞ்சிய நாள்களுக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்த்துக் குரல் கொடுத்தனர். அவை பிற்பகல் 3.21 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. (நவம்பர் 29-ம் தேதியிட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அறிக்கையின் முதல் பகுதி இதைத் தெரிவிக்கிறது).

சர்ச்சைக்குரிய விதி

அடுத்த நாள், இடைநீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில், காந்தி சிலை எதிரில் தர்ணா போராட்டம் தொடங்கினர். அது மூன்று வாரங்களாகத் தொடர்கிறது. அரசு தனது நிலையிலிருந்து இறங்கிவரத் தயாராக இல்லை. மாநிலங்களவைத் தலைவரோ, அரசு தனது நிலையை மாற்றிக்கொள்வதற்கேற்ப எதையும் செய்ய விரும்பவில்லை.

அவை உறுப்பினரை இடைநீக்குவதற்கான நடவடிக்கையை, அவை விதியின்படியே (எண் 256) மேற்கொள்ள வேண்டும். அந்த விதி மிகவும் தெளிவாக இருக்கிறது. ஆகஸ்ட் 11 அன்று அவை நடவடிக்கைகளைச் சீர்குலைத்ததற்காக எந்த உறுப்பினரின் பெயரும் அவையை நடத்தியவரால் குறிப்பிட்டுக் கூறப்படவில்லை. நவம்பர் 29 பிற்பகல் 3.08 மணிக்கு அவை கூடியபோதுதான் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான அமைச்சர், 12 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கக் கோரும் தீர்மானத்தை அவையில் கொண்டுவருகிறார். அந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டதாக நாடாளுமன்ற அறிக்கை தெரிவிக்கிறது. அந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு விடுவதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை, அதன் மீது வாக்கெடுப்பும் நடக்கவில்லை. குரல் வாக்கெடுப்பு நடக்கவே இல்லை என்று எல்லா எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஒரு மனதாகக் கூறுகின்றனர். ஆளும்கட்சி உறுப்பினர்கள் அதை மறுக்கவும் இல்லை.

இந்த நடவடிக்கை தொடர்பாக பல கேள்விகளுக்கு விடை தேவைப்படுகிறது. முந்தைய தொடரில் ஒழுங்கற்று நடந்துகொண்டதற்காக அடுத்த அவைத் தொடரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? ஆகஸ்ட் 11-ல் எவருடைய பெயருமே குறிப்பிடப்பட்டிருக்காத நிலையில் உறுப்பினர்களை இடைநீக்க முடியுமா? அவையில் வாக்கெடுப்பு நடக்காத நிலையில், வெறும் இடைநீக்கத் தீர்மானத்தை வாசித்த உடனேயே நீக்கிவிடலாமா? அவையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக 33 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்த நிலையில், அவர்களில் 12 பேர் மட்டும் ஏன் இடைநீக்கப்பட்டனர்? அந்த 33 பேர் பட்டியலில்கூட இடம்பெறாத இளமாறன் கரீம் ஏன் இடைநீக்கப்பட்டார்? இந்தக் கேள்விகளை அவையில் எழுப்ப அனுமதிக்கப்படவில்லை, எனவே வேறு வழியில்லாமல் மக்கள் மன்றத்தில் இந்தக் கேள்விகளை வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஜனநாயகத்தின் நலிவு

எதிர்க்கட்சிகள் இணைந்து டிசம்பர் 16-ல், அவை விதி எண் 256 (2) கீழ் ஒரு தீர்மானம் கொண்டுவர அவையின் அனுமதியைக் கோரினர். அந்த விதிப்படி, அவை உறுப்பினர்களின் இடைநீக்கத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்துசெய்துவிடலாம். ஆனால், அவைக்குத் தலைமை வகித்தவர், கேள்விக்குரிய வகையில், சில நுட்பமான காரணம் அடிப்படையில் அதை நிராகரித்தார்.

பேசுவதற்கு உரிமை பெற்ற (எதிர்க்கட்சியினர்) பேச அனுமதிக்கப்படாமல் போனாலும், அவை உறுப்பினர்கள் பேசுவதைக் கேட்க கடமைப்பட்டவர்கள் (அரசு) அதைக் கேட்க விரும்பாமல் காதுகளை மூடிக்கொண்டாலும் ஜனநாயகம் நலிவுற்றுவிடும்.

Ω

விதி 256 என்ன சொல்கிறது?

1.  அவைத் தலைவரின் உத்தரவுக்குக் கட்டுப்பட மறுத்து, அவை நடவடிக்கைகளைத் தொடர்ந்து, வேண்டும் என்றே ஓர் உறுப்பினர் சீர்குலைத்தால், அவசியம் என்று கருதினால், அவைக்குத் தலைமை தாங்குகிறவர் அவருடைய பெயரை அவையில் குறிப்பிடலாம்.

2.  அப்படி உறுப்பினரின் பெயரைக் குறிப்பிட்ட பிறகு அவையில் - தீர்மானம், திருத்தம், ஒத்திவைப்பு, அல்லது விவாதம் ஆகியவற்றை மேற்கொண்டு தொடராமல் - பெயர் குறிப்பிடப்பட்ட உறுப்பினரை அவை நடவடிக்கைகளிலிருந்து, அந்தத் தொடரின் எஞ்சிய நாள்களுக்கு மிகாமல் இடை நீக்கம் செய்யலாம். இதற்கிடையில் அந்த இடை நீக்கத்தை அவையின் குழு, ஒரு தீர்மானத்தின் பேரில் விலக்கிக் கொண்டும் நடவடிக்கை எடுக்கலாம்.  

3.  இந்த விதிப்படி, இடைநீக்கப்பட்ட உறுப்பினர் அவை வளாகத்தைவிட்டு உடனடியாக வெளியேறிவிட வேண்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.


1

1





சமஸ் - எஸ்.என்.நாகராஜன்காஞ்சா ஐலய்யா கட்டுரைசுதந்திரவாதம்நாராயண குருஇடதுசாரிகள்கோட்பாடுகள்உறுப்பு தான அட்டைசென்னைகுவிங்journalist samasபோர்த்துகல் எழுத்தாளர்சட்டம் ஒழுங்குகலைஞர் மு கருணாநிதிஅடிப்படையான முரண்பாடுகள்மூலக்கூறுஒரு ஆங்கில ஆசிரியரின் ஒப்புதல் வாக்குமூலம்ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனைமெட்ரோ டைரிமிகெய்ல் கோர்பசெவ்குருத்தோலைபீட்டருக்கே கொடு!நிரப்பப்படாத பணியிடங்கள்வெற்றிடத்தின் பாடல்கள்பேருந்துங்கொரொங்கொரோரசிகர் மன்றம்பாகிஸ்தான் அரசமைப்புச் சட்டம்இளையோருக்கு வாய்ப்புஉவேசாபொதுக் கணக்கு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!