கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

எண்ணும் – எழுத்துமாக எத்தனை வகை கஞ்சிகள்!

ப.சிதம்பரம்
25 Mar 2024, 5:00 am
1

கர வரிசைப்படியான எழுத்துகளைத்தான் பள்ளிக்கூடத்தில் படித்தோம். இப்போதோ ஆங்கிலத்தின் எழுத்துகளைக் கொண்ட ‘ஐடி’ (IT), ‘சிபிஐ’ (CBI), ‘இடி’ (ED), ‘எஸ்எஃப்ஐஓ’ (SFIO), ‘என்சிபி’ (NCB), ‘என்ஐஏ’ (NIA) என்ற குறுஞ்சொற்களை ஊடகங்களில் அதிகம் படிக்கிறோம், கேட்கிறோம்; இவர்களில் யார் ‘பெரியண்ணன்’? யார் ‘முந்திரிக்கொட்டை’? யார் ‘ஆமாம் சாமி’? யாருக்கு அதிக அதிகாரம்? அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு யார் மிகவும் பிடித்தமானவர்கள்? 

காபி – டீ சாப்பிடக் கூடும்போதோ அல்லது அரட்டை அடிக்கும்போதோ இந்தக் கேள்விகளைத்தான் மக்கள் இப்போது கேட்டுக்கொள்கிறார்கள்; மூன்று அல்லது அதற்கும் மேல் எண்ணிக்கையில் கூடினால், அனைவருமே மௌனத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். அதாவது, குற்றத்தையோ – குற்றவாளியையோ காட்டிக்கொடுக்கக் கூடாது என்று கூட்டாக சத்தியம் செய்துவிட்டதைப் போல, அமைதி காக்கின்றனர்.

இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லாமல் இருக்க நான் ஒரு யோசனை சொல்கிறேன்; எல்லா வாக்குச் சாவடிகளிலும் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) வைக்கட்டும், அதில் மேலே கூறிய அரசின் அனைத்து விசாரணை முகமைகளின் பெயர்களையும் வரிசையாகக் குறிப்பிடட்டும், மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைப் பொத்தானை அமுக்கித் தெரிவிக்கட்டும். 85 வயதைக் கடந்தவர்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்; ஆனால், இதில் நிச்சயம் நோட்டாவுக்கு வாக்களிக்க வாய்ப்பே இல்லை!

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

புதிய பதார்த்தம்

அரசு திறந்துள்ள இந்த எண்கள் – எழுத்துகளாலான கஞ்சித் தொட்டியில் சேர்ந்துள்ள புதிய பதார்த்தம், சிஏஏ-என்ஆர்சி (CAA-NRC). (என்ஆர்சி என்பது நாட்டின் குடிமக்கள் அனைவருடைய பெயர்களையும் கொண்ட தேசியப் பதிவேடு. மிகவும் நயவஞ்சகமான நடைமுறையை வகுத்திருக்கிறார்கள். இதை வகுத்த தேசபக்தர்கள், லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த இந்துக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்பட்டபோது, சிஏஏவைக் கண்டுபிடித்தார்கள். இது ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களில் முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கானது. எனவே, அவர்களுடைய பெயர் என்ஆர்சியிலும் இடம்பெறும். இந்த நடைமுறையில், இலங்கையின் தமிழர்களும், நேபாளம் – மியான்மர் நாடுகளிலிருந்து வந்த இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள்).

என்ஆர்சி இப்போது அசாமில் மட்டும்தான் இருக்கிறது. சிஏஏ என்பது 2024 மார்ச் 11இல் சேர்க்கப்பட்டது. என்ஆர்சி-சிஏஏ எப்படிப்பட்டது என்று உச்ச நீதிமன்றத்தில் இப்போது உரசிப் பார்க்கப்படுகிறது.

நீயா நானா போட்டி!

சமீப காலமாக, பல்வேறு எண்களும் நம்முடைய வாழ்வில் முக்கிய இடம்பிடித்து, சுற்றிச்சுற்றி வருகின்றன. ஒரு காலத்தில் பள்ளிக்கூடத்தில் பொதுத் தேர்வுகளின்போது மட்டும் ‘தேர்வு எண்’ என்பதை அறிந்தோம். இப்போது மேலும் மேலும் பல எண்கள் படையெடுத்து அலையலையாக வருகின்றன. ரேஷன் அட்டை எண், தரைவழித் தொலைபேசி எண், உலகை சுற்றிப் பார்க்க விரும்பும் சாகசக்காரர்களுக்கு பாஸ்போர்ட் எண், எங்கும் நிறை பரம்பொருளைப் போன்ற ஆதார் எண் என்று மேலும் பல.

இந்த எண்களையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் எழுத்தும் எண்ணும் சேர்ந்த தேர்தல் பத்திர (இபி) எண் வந்திருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த உச்ச நீதிமன்றத்தால்கூட, அச்சத்தில் உறைந்திருக்கும் பாரத ஸ்டேட் வங்கியிடமிருந்து இதை எளிதில் வாங்கிவிட முடியவில்லை. சில நாள்களுக்கு இபி - எஸ்பிஐ என்பது இடி - சிபிஐ என்பதைவிட சக்திவாய்ந்ததைப் போலத் தெரிந்தது.

நாட்டில் இப்போது புதிய விளையாட்டு வந்திருக்கிறது. எழுத்துகளை எல்லாம் சேர்த்துப் பாருங்கள் என்பது ஒருமுறை. இதில் முதலில் வருவது சிபிஐ - இடி. இதில் இடிக்குச் சற்று மனத்தாங்கல். நான்தான் முதன்மையானவன், இடி - சிபிஐக்குத்தான் முதலிடம் என்று அறிவிக்க வேண்டும் என்றது அது. இப்போது நீதி வழங்கலுக்கான நேரம். மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு வாக்குகள் எண்ணப்படும்போது தீர்ப்பும் தெரிந்துவிடும்.

இடி - சிபிஐதான் முதலிடம் பெறப்போகிறது என்றால் நாட்டுக்கே இதுதான் கடைசி (பொது) தேர்தல் என்று தில்லி வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அப்படி நடந்துவிட்டால், இனி எதிர்காலத்தில் நாட்டுக்குத் தேர்தல் செலவு என்று நயா பைசாகூட நஷ்டமிருக்காது! ‘ஒரே நாடு – ஒரே தேர்தல்’ என்பதைப் பரிந்துரைத்த கோவிந்த் கமிட்டி இதைக் கவனத்தில் கொள்ளவில்லை, கொண்டிருந்தால் ‘ஒரே நாடு – எதற்குத் தேர்தல்’ என்று பரிந்துரைத்திருக்கும்.

சிபிஐ - இடி அல்லது இடி - சிபிஐக்குப் பிறகு சிபிஐ - ஐடி. சிபிஐ ரொக்கத்தைப் பறிமுதல் செய்தால் அது ஐடிக்குச் சொந்தமாகிவிடும். ஐடி, ரொக்கப் பறிமுதல் செய்தால் என்னாகும்? பழைய வழக்கம் என்னவென்றால் ஐடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தால் அது அதற்குத்தான் சொந்தம். இப்போது மரபை மீறிய வழக்கம் - மரபான வழக்கத்தை ஒழித்துவிட்டது. 

ரொக்கத்தை ஐடி பறிமுதல் செய்தால் அது எனக்கே சொந்தம் என்று சிபிஐ – இடி இரண்டும் உரிமை கோருகின்றன. ‘அந்தப் பணம் அல்லது சொத்து, வருவாய்க்குப் பொருந்தாத வகையில் சேர்க்கப்பட்டது’ என்கிறது சிபிஐ. ‘குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணம், எனவே என்னிடம்தான் சேர வேண்டும்’ என்கிறது இடி. இதுவும் தீர்ப்புக்காகக் காத்திருக்கும் விவகாரம்தான்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா

ப.சிதம்பரம் 11 Mar 2024

எண் விளையாட்டு

இந்த ஆட்டத்தின் இன்னொரு முறை, ‘எண்களைச் சேருங்கள்’ என்கிறது. தேர்தல் நன்கொடையாக விற்கப்பட்ட 22,217 பத்திரங்களின் எண்களைத் தருமாறு பாரத ஸ்டேட் வங்கியை, நான்கு குதிரைகளைக் கொண்டு இழுக்க வேண்டியதாயிற்று. நான் இதை எழுதும் நேரத்தில் அந்த எண்கள் வெளியாகிவிடும். நன்கொடை கொடுத்த பலருக்கு அது கசப்புச் சுவையை அளித்திருக்க வேண்டும். ‘இந்தக் கஞ்சி’ தங்களுடைய சமையலறையில் தயாரானபோது தாங்கள் அங்கே இல்லை என்று, பெற்றவர்களில் சிலர் கூறக்கூடும். இதைக் கொண்டுவந்து எங்கள் வாயில் ஊற்றிவிட்டார்கள் – எனவே விழுங்க வேண்டியதாயிற்று என்று வேறு சிலர் காரணம் கூறக்கூடும். இறுதியாக, ‘இந்தக் கஞ்சி உடலுக்குத் தீமையானது’ என்று அறிவிக்கப்படும்.

எழுத்துகள், எண்கள், எழுத்தும் – எண்களும் சேர்ந்த கூட்டு என்ற அனைத்தும் சேர்ந்து தேச நலனுக்கு ஆபத்தை விளைவிக்கும் அளவுக்கு, ஏன், தேச பாதுகாப்புக்கே ஆபத்தை விளைவிக்கும் அளவுக்குப் போய்விட்டன. இதனால் ‘விக்சித் பாரத்’ என்ற லட்சியத்தின் இலக்குகள் எப்படியாக இருக்க வேண்டும் என்று ‘சாட்-ஜிபிடி’ உதவி கோரப்பட்டுள்ளது. புதிய இலக்கு, உலகிலேயே இந்தியாவின் ‘ஜிடிபி’ மட்டும் பெரிதாக இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்படலாம்; விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்காக பெருக்கப்படலாம்; ஆண்டுக்கு ஐந்து கோடி புதிய வேலைவாய்ப்புகள்கூட உருவாக்கப்படலாம்; ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 150 லட்ச ரூபாய்கூட போடப்படலாம்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

இந்தியாவின் குரல்கள்

சமஸ் | Samas 15 Mar 2024

‘சாட்-ஜிபிடி’ தவிர ‘செயற்கை நுண்ணறிவு’கூட (ஏஐ) பயன்படுத்தப்பட்டு, பிரச்சினைகளை ஏற்படுத்திவிட்ட எழுத்துகள், எண்கள், எழுத்து - எண் கூட்டு ஆகியவற்றுக்கு மாற்றாக புரட்சிகரமான புதிய அடையாளக் குறியீடு பெறப்படலாம் அது கண்ணுக்குத் தெரியாது, காதுக்கும் கேட்காது, சுவாசிக்கவும் முடியாது, விழுங்கவும் முடியாது. காலியாக கிடந்த வயிற்றை நிரப்ப அரசு தயாரித்த பலவிதமான கஞ்சிகள் உடல் உறுப்புகளை வெகுவாக பாதித்துவிட்டன. எனவே கண்கள், காதுகள், மூக்கு, வாயிலிருக்கும் நாக்கு ஆகிய அனைத்துக்குமே முழு ஓய்வு தேவை. செயற்கை நுண்ணறிவுடன் இந்த கோணத்தில் நெருங்கி ஒத்துழைக்கும்படி - இந்தியாவின் அனைத்து அறிவுக்கும் அதிகாரப்பூர்வமான ஒரே கருவூலமான – ‘நிதி ஆயோக்’ பணிக்கப்படலாம்.

‘எது சுபமாக முடியுமோ - அதுவே நல்லது’ என்றொரு பேச்சு வழக்கு உண்டு. இப்போதுள்ள புது மொழியோ, ‘எது நல்ல முடிவோ - அதுதான் ஆரம்பம்’ என்பது. இதுவரை ‘அனுபவித்த’ பலவித கஞ்சிகளுக்கு நன்றி, 2004இல் எது தொடக்கமாக இருந்ததோ, அந்த இடத்துக்கு இனி செல்வோம்!

‘நல்ல நாள்’ (அச்சே தின்) வந்துகொண்டிருக்கிறது!

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

மத்திய இந்தியா: அழுத்தும் நெருக்கடி
தென்னகம்: உறுதியான போராட்டம்
இந்தியாவின் குரல்கள்
தேர்தலில் கிடைக்குமா சுதந்திரமும் வளர்ச்சியும்?
தேர்தல் என்பது மக்களாட்சித் திருவிழா

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






அஜீரணம்வர்த்தகப் பற்றாக்குறைகோர்பசேவ்: கலைந்த கனவாஆர்.காயத்ரி கட்டுரைமூன்றே மூன்று சொற்கள்திருநாவுக்கரசர் சமஸ் பேட்டிஇந்தியாவின் குரல்முதல் பதிப்புகள்சமந்தா நாக சைதன்யாஇடதுசாரி முன்னணிதிமுகவிடம்தமிழ் உரைநடையின் இரவல் கால்: ஆங்கிலம்வேரிகோஸ் வெய்ன்காங்கோபோட்டி சர்வாதிகாரம்ஜி ஜின் பிங்தீர்ப்பின் பொன்விழாவும் தீர்க்கமான பாதையும்நீலகிரிdawnவேலைக்குத் தயாராவது எப்படி?பணவீக்கம்யூதர்கள்நாக்பூர்சுயமான தனியொதுங்கல்நோங்தோம்பம் பிரேன் சிங்பிரஷாந்த் கிஷோர்டிசம்பர் 6சுதந்திரா கட்சிஇது மோடி 3.0 அல்லmalcolm adiseshiah

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!