கட்டுரை, அரசியல், பொருளாதாரம், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

உற்சாகம் தராத பொருளாதார வளர்ச்சி வேகம்

ப.சிதம்பரம்
26 Feb 2024, 5:00 am
0

பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது ‘நான் செய்தேன்’ – ‘என்னால் செய்யப்பட்டது’ என்று கூறாமல், ‘இவன் செய்தான்’ என்று படர்க்கையில் கூறுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். ஆங்கிலத்தில் இதற்கு ‘இல்லியிஸம்’ என்று பெயர்.

இது ஏதோ தன்னடக்கம்போலத் தோன்றலாம், ஆனால் மறைமுகமாக ஓர் உண்மையை இது நிலைநாட்டியிருக்கிறது: ‘இந்திய அரசு’ என்றாலே அது மோடி மட்டுமே; அரசின் நல்லது கெட்டது அனைத்துக்குமே மோடிதான் பொறுப்பு. அனைத்து பிற அமைச்சர்கள் – அமித் ஷா விதிவிலக்கு – கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் – ஏன் பாஜக மாநில முதல்வர்கள்கூட – முக்கியத்துவம் இல்லாதவர்களாகிவிட்டார்கள்.

இதில் வேதனை என்னவென்றால், இப்படி ‘முக்கியத்துவம் இல்லாதவர்களாக’ இருப்பதைக்கூட அனைவரும் பெருமையாக – மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டுவிட்டதுதான்! எனவே, நம்முடைய கோரிக்கைகள் – விமர்சனங்கள் யாவுமே இனி ‘மாண்புமிகு பிரதம’ரை நோக்கி மட்டுமே இருக்க வேண்டும்.

பிரதமர் இப்போது புதிய முழக்கத்தை நாட்டுக்குத் தந்திருக்கிறார்: ‘விக்சித் பாரத்’ அதாவது ‘வளர்ச்சியடைந்த இந்தியா’. ‘அச்சே தின் ஆனே வாலே ஹை’ தொடங்கி எத்தனையோ முழக்கங்களை இப்படிக் கடந்த பத்தாண்டுகளில் தொடர்ச்சியாக வழங்கிவிட்டார் – அவற்றில் பல நிறைவேறாமலேயே நினைவிலிருந்து மறைந்துவிட்டன. அந்த வரிசையில் ‘இது கடைசியாக இருக்கும்’ என்று நம்புகிறேன். ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்பது 2047க்குள் நாம் அடைய வேண்டிய இலக்கு என்று கூறியிருக்கிறார்.

இப்போதிலிருந்து 2047 வரையில் யார் அரசுக்குத் தலைமை வகித்தாலும், 2024இல் இருந்ததைவிட நிச்சயம் வளர்ச்சி பெற்ற நாடாகத்தான் இந்தியா இருக்கப்போகிறது; 1947ஐவிட இப்போது வளர்ச்சி பெற்றிருப்பதைப் போல. இதில் கவனிக்க வேண்டியது எதையென்றால் ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்பதற்கான விளக்கம்தான் என்ன?

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மாறிக்கொண்டே இருக்கிறது இலக்கு!

இந்தியா அடைய வேண்டிய இலக்கு எது என்பதை நாம் திட்டவட்டமாக முதலில் வரையறுக்க வேண்டும். அது தொடர்ந்து மாறுதல் அடையும் ஒன்றாக இருக்க முடியாது.

ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதார வளர்ச்சியை 2023 - 2024ஆம் ஆண்டுக்குள் எட்டிவிட வேண்டும் என்பதுதான் அவர் நிர்ணயித்த முதல் இலக்கு. அதை இப்போது படிப்படியாக மாற்றி 2027 - 2028க்குள் ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள வளர்ச்சியை எட்ட வேண்டும் என்று கூறுகிறார். 2023 - 2024ஆம் ஆண்டு இறுதியில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி மதிப்பு (ஜிடிபி) இந்திய ரூபாயில் 172 லட்சம் கோடியாக இருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

அனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!

ப.சிதம்பரம் 19 Feb 2024

இதை இன்றைய அமெரிக்க டாலர் நாணய மாற்று விகித மதிப்பில் கணக்கிட்டால் 3.57 லட்சம் கோடி டாலர்கள். டாலரின் மதிப்பு இப்படியே மாறாமல் இருந்தால், ஐந்து லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள பொருளாதார வளர்ச்சியை இந்தியா எட்டுவதற்கு, இந்தியாவின் ஆண்டு ஜிடிபி மாறுவதற்கேற்ப - வெவ்வேறு ஆண்டுகள் தேவைப்படும். பட்டியல் இதோ:

வளர்ச்சி வீதம் ஜிடிபி %

தேவைப்படும் ஆண்டுகள் அடைவது எப்போது
6 6 2029 - 2030
7 5 2028 - 2029
8 4.5 செப்டம்பர் 2028

இடைப்பட்ட காலத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்தால், இந்த இலக்கு ஆண்டை மேலும் தள்ளிப்போட வேண்டியிருக்கும்.

பொருளாதார வளர்ச்சியில் கடந்த பத்தாண்டுக் கால பாஜக / தேஜகூ ஆட்சியின் செயல்பாடு உற்சாகம் தருவதாக இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பத்தாண்டு ஆட்சிக்காலத்தில் சராசரியாக 6.7% வளர்ச்சி தந்தது. (அதையே அடிப்படை ஆண்டு மாற்றாமல் கணக்கிட்டால் 7.5%). தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பத்தாண்டுக்கால சராசரி ஜிடிபி வளர்ச்சி 5.9% மட்டுமே.

மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளாதார வளர்ச்சி வீதத்தை பாஜகவால் மேலும் வேகப்படுத்த முடியுமா?  பாஜகவில் யாராலும் இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்க முடியாது, காரணம், பொருளாதார வளர்ச்சி வீதம் என்பது உலக அரங்கில் நடைபெறும் பல்வேறு புற விஷயங்களையும், உள்நாட்டில் கையாளப்படும் பொருளாதார நிர்வாகத்தையும் பொறுத்தது.

இந்த நிச்சயமற்ற காரணிகள் ஒருபுறம் இருக்க, மோடியே மீண்டும் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றிபெற்று ஆட்சியமைக்கிறார், ஆண்டுக்கு 8% ஜிடிபி வளர்ச்சி ஏற்படுகிறது என்று வைத்துக்கொண்டாலும்கூட, அந்த ஆட்சிக் காலத்தின் ஐந்தாவது ஆண்டு முடிவில்கூட அமெரிக்க டாலரில் 5 லட்சம் கோடி மதிப்புக்குத்தான் பொருளாதாரம் வளர்ந்திருக்கும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

சுய தம்பட்டப் பொருளாதாரம்!

ப.சிதம்பரம் 12 Feb 2024

‘வளர்ச்சியடைந்த’ என்றால் என்ன?

இந்தியா அப்படியே 2028 – 2029இல் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு வளர்ச்சியை எட்டினாலும் இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடு என்று அழைத்துக்கொள்ள முடியுமா? 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருளாதாரமும் 150 கோடி மக்கள்தொகையும் 2028 – 2029இல் இருக்கும்போது தனிநபர் வருமானம் (நபர்வாரி) 3,333 அமெரிக்க டாலர்களாக மட்டுமே இருக்கும்.

உலக தரவரிசையில், ‘குறைந்த நடுத்தர வருவாய் உள்ள’ நாடுகள் பட்டியலில்தான் அது இந்தியாவைக் கொண்டுபோய்ச் சேர்க்கும். நபர்வாரி வருமான அடிப்படையில் இந்தியா இப்போது உலகில் 140வது இடத்தில் இருக்கிறது. 2028 – 2029இல் இது மேலும் 5 முதல் 10 படிகள் வரை உயர்வை எட்டலாம்.

இவ்வளவையும் நான் சொல்வதற்குக் காரணம், நம்மை நாமே புகழ்ந்துகொள்ளும் விதமாக – ‘வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடு’, ‘உலகிலேயே ஐந்தாவது பெரிய பொருளாதார வளர்ச்சிகொண்ட நாடு’, ‘அமெரிக்காவின் டாலர் மதிப்பில் 5 லட்சம் கோடி மதிப்புள்ள நாடு’ என்றெல்லாம் பீற்றிக்கொள்ளும் பெருமையைத் தூக்கி எறிய வேண்டும் என்பதற்காகத்தான்.

இந்தப் பெருமை எதுவுமே எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லை - மாண்புமிகு பிரதமருக்கும் அப்படித்தான் தோன்ற வேண்டும்.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!

ப.சிதம்பரம் 22 Jan 2024

பதில் தேடும் கேள்விகள்

அடுத்து நடைபெறவுள்ள மக்களவை பொதுத் தேர்தலின்போது விடை காணப்பட வேண்டிய – களத்தில் விவாதிக்கப்பட வேண்டிய - கேள்விகள் வருமாறு:

  1. மாத வருவாய் – கல்வி – குடிநீர் - சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஆகியவற்றைப் பெறமுடியாமல், பன்முகத்தன்மை உள்ள வறுமை நிலையில் 22 கோடிக்கும் மக்கள் உள்ள நாடு என்ற களங்கம் நமக்கிருக்கிறது; இந்தக் களங்கம் எப்போது துடைக்கப்படும்? ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட அறிக்கைப்படி 2005 - 2015 பத்தாண்டுக் காலத்தில் இந்தியாவில் 27 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழிருந்த நிலையிலிருந்து மீண்டனர். இந்த 22 கோடி மக்கள் அப்படி எப்போது மீட்கப்படுவார்கள்?
  2. நாட்டில் இப்போது நிலவும் 8.7% என்ற வேலையின்மை விகிதம் கோடிக்கணக்கான மக்களுடைய வாழ்க்கையைப் பாழாக்கிக்கொண்டிருக்கிறது; நன்கு படித்து பட்டம் பெற்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்புக்கேற்ற வேலை – ஊதியம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர்; ஓரளவு படிப்பும் அடிப்படைத் தொழில் பயிற்சியும் பெற்ற இளம் தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் சொந்த ஊரையும் நாட்டையும் விட்டு அகதிகளாக வெளியேறுகின்றனர். அவர்கள் எல்லோருக்கும் பயன்தரும் வேலை கிடைப்பது எப்போது? ‘வாட்ச்மேன்’ வேலைக்கும் ரயில்வேயில் ‘கேங்-மேன்’ வேலைக்கும் முதுகலைப் பட்டதாரிகளும் டாக்டர் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பித்துவிட்டு அலைமோதும் அவலத்தையும் அவமானத்தையும் என்றைக்கு நாம் துடைக்கப்போகிறோம்?
  3. தொழிலாளர்கள் வேலை செய்யும் – வேலைவாய்ப்பு விகிதம் என்றைக்கு 50% முதல் 60%க்கும் மேல் உயரப்போகிறது? வேலைக்குச் செல்லும் மகளிர் விகிதம் என்றைக்கு 25% என்பதைத் தாண்டப்போகிறது?
  4. தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊதியத்திலேயே தங்களுக்கு வேண்டிய அவசியப் பொருள்களையும் நுகர் பொருள்களையும் வாங்கிக்கொள்ளக்கூடிய நிலை எப்போது ஏற்படப்போகிறது?
  5. மக்களுடைய ஊதியம் ‘ரூபாய் கணக்கில்’ மட்டுமல்லாது, ‘உண்மை மதிப்பிலும்’ உயர்ந்தாக வேண்டும்; ஊதியம் உயராத இப்போதைய தேக்கநிலை எப்போது அகலப்போகிறது?

வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் நாட்டு மக்களை இப்போது மிகவும் வாட்டி வதைக்கும் இரு பெரும் பிரச்சினைகளாகும். பற்றி எரியும் இந்தப் பிரச்சினைகள் குறித்து நம்முடைய பிரதமர் கடைசியாக எப்போது பேசினார் என்று எனக்கு நினைவில் இல்லை.

பிரதமர் கடைசியாக சீனா பற்றி, மணிப்பூர் கலவரம் பற்றி, பதவிக்காக – பணத்துக்காக எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சிக்குத் தாவுவது பற்றி, எதிர்க்கட்சிகளை ஆளுங்கட்சி உடைப்பது பற்றி, மக்களுடைய அந்தரங்க உரிமைகள் பறிபோவது பற்றி, எழுதப்பட்ட சட்டங்களை மதிக்காமல் பிறருடைய வாழ்க்கையில் தாங்களாகவே தலையிடும் ‘தடியெடுத்த தண்டல்காரர்கள்’ பற்றி, குற்றவாளி என்று தீர்மானித்த உடனேயே குடியிருக்கும் வீடுகளை புல்டோர்களால் இடித்துத்தள்ளும் சட்ட மீறல்கள் பற்றியெல்லாமும் பிரதமர் கடைசியாக எப்போது பேசினார் என்பதும் நினைவில் இல்லை.

அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் பேசி, இவை பற்றியெல்லாம் வேண்டுமென்றே அமைதி காக்கும் பிரதமரின் மௌனத்தைக் கலைக்க வேண்டும், மக்களுடைய பிரச்சினைகள் குறித்து அவரைப் பேசவைக்க வேண்டும். பாஜகவிலேயே அவர் ஒருவர் மட்டும்தான் முக்கியமானவர் என்பதால் - அவர் பேசியாக வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

அனைத்துமே கறுப்பு அல்லது வெள்ளை!
சுய தம்பட்டப் பொருளாதாரம்!
திகைப்பூட்டும் பணக்கார இந்தியா!
சிலருக்கு மட்டுமே இது மகிழ்ச்சியான புத்தாண்டு

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம், அரசியலர். காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவர். மாநிலங்களவை உறுப்பினர். முன்னாள் நிதி அமைச்சர். ‘சேவிங் தி ஐடியா ஆஃப் இந்தியா’, ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.

தமிழில்: வ.ரங்காசாரி

1






நெடுந்தாடி முனியாறுசிகை அலங்காரம்இந்து – முஸ்லிம்கொள்முதல்நவீன உலகம்சி.வி.ராமன்லவ் டுடே: செல்பேசி அந்தரங்கம் - ஆபாசம் - அநாகரீகம்மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்அடையாளத் தலைவர்அருஞ்சொல் வாசகர்கள்சின்னக்காஎதிலும் சமரசம்கி.ரா. பேட்டிலும்பனிஸம்நீட் மசோதாசொற்பிறப்புதொழிலாளர் பற்றாக்குறைகதிர்வீச்சு சிகிச்சைவரி வருவாய்விமான நிலையம்வ.உ.சி. வாழ்க்கை வரலாறுசிதம்பரம்ஹமாஸ் இயக்கம்வ.சேதுராமன் கட்டுரைவீழ்ச்சிகல்கியின் புத்தகங்கள்கலக மரபுஹண்டே அருஞ்சொல்நபர்வாரி வருமானம்அமைச்சர் ஷாஜி செரியன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!