காட்சி ஒன்று: அதிகார வலிமை
நீதித் துறையின் சுதந்திரத்திலும் செயல்பாட்டிலும் தானோ தனது அரசோ எந்த நிலையிலும் தலையிடுவதே இல்லை என்று ஒவ்வொரு தருணத்திலும் வலியுறுத்திக்கொண்டே வருகிறார் ஒன்றிய அரசின் சட்டம் – நீதித் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு. குடிநபர் என்ற வகையிலும் இன்னமும் தொழில் செய்யும் வழக்கறிஞர் என்ற வகையிலும் அவர் சொல்வதை நம்பவே நான் விரும்புகிறேன். ‘இந்தியா டுடே’ பத்திரிகை சமீபத்தில் நடத்திய மாநாட்டில் இதே கருத்தை அவர் மீண்டும் வலியுறுத்தியபோது அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.
தன்னுடைய இந்த உரைக்கு நடுவிலேதான் பெரிய அச்சுறுத்தல் ஒன்றையும் சர்வ சாதாரணமாக ரிஜிஜு விடுவித்தார்; அவர் சொன்னதை அவருடைய வார்த்தைகளிலேயே குறிப்பிட விரும்புகிறேன்: “இந்தத் தலைப்பு எனக்கும், நாட்டுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதுகிறேன். இந்திய நீதித் துறையின் புகழை மங்கவைக்க திட்டமிட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதனால்தான் ஒவ்வொரு நாளும், நீதித் துறையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். ஒரு வகையில் அது தீய நோக்கமுள்ள திட்டம். இந்தியாவுக்கு எதிரான கருத்துகளைக் கொண்டுள்ள – இந்தியாவிலேயே வாழும் சக்திகளும் வெளிநாடுகளில் உள்ள சக்திகளும் ஒரே மாதிரியான சொல்லாடலையே பயன்படுத்துகின்றன. ஒரே மாதிரியான இந்திய விரோதச் சூழல் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நிலவுகிறது. இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் நாசப்படுத்த, இந்தியாவைத் துண்டு துண்டாகச் சிதைக்க விரும்பும் இந்த சக்திகள் வெற்றிபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.”
“சமீபத்தில் தில்லியில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சில நீதிபதிகளும் சில மூத்த வழக்கறிஞர்களும் வேறு சிலரும் அங்கிருந்தனர். ‘நீதித் துறை நியமனத்தில் பொறுப்பேற்பு’ என்பது கருத்தரங்கின் தலைப்பு. ஆனால், அன்று முழுவதும் அதில் பேசப்பட்ட விஷயம், அரசு எப்படி நீதித் துறையைக் கைப்பற்ற முயல்கிறது என்பது பற்றி; ஓய்வுபெற்ற நீதிபதிகளில் சிலர் – மூன்று அல்லது நான்கு பேர் – அரசுக்கு எதிராகச் செயல்படும் தன்னார்வலர்கள், இந்திய நலனுக்கு எதிராகச் செயல்படும் கும்பலைச் சேர்ந்த சிலர், இவர்களெல்லாம் கூடி இந்திய நீதித் துறையானது எதிர்க்கட்சிகளின் பணியைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.”
“இவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும், சட்டப்படியே நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன; நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் சொன்னால். அரசு விசாரணை முகமைகள் சட்டத்தில் உள்ள அம்சங்களின்படி நடவடிக்கைகளை எடுக்கும் என்று பொருள். (நடவடிக்கைகளிலிருந்து) யாருமே தப்ப முடியாது, கவலைப்பட வேண்டாம், யாருமே தப்ப முடியாது. நாட்டுக்கு எதிராகச் செயல்படுவோர் அதற்கான விலையைக் கொடுத்தே தீர வேண்டும்.”
இது கொஞ்சம்கூட ஒளிவுமறைவு இல்லாத வெளிப்படையான எச்சரிக்கை. இங்கே வெளிப்படுவது எதுவென்றால் சட்ட அமைச்சரின் எச்சரிக்கை மூலம் அரசின் முழு அதிகார வலிமை, அதற்குக் குறைவாக ஏதுமில்லை. அதிகார வலிமை மிக்க அரசு என்ன சொல்கிறது என்றால், நாட்டைத் துண்டு துண்டாக சிதைக்க வேண்டும் என்று ஒரு கும்பலோ அல்லது எந்தவொரு தனிநபரோ செயல்படுவதாக அரசு ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், அரசை எதிர்த்துச் செயல்பட வேண்டும் என்று தூண்டும் அல்லது முயற்சிக்கும் எந்த நபருக்கு எதிராகவும் - குழுவுக்கு எதிராகவும் - அரசு முழு பலத்துடன் களமிறங்கும் என்பது. அமைச்சர் குறிப்பிடும் ‘முகமைகள்’ எதுவென்று நமக்குத் தெரியும். எந்த மாதிரியான ‘நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்றும் தெரியும். அப்படி நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர் அதற்காக என்ன ‘விலை’யைத் தர வேண்டியிருக்கும் என்றும் தெரியும். இதில் ‘சட்ட நடைமுறை’தான் தண்டனை என்பதும் தெரியும்.
மாண்புமிகு சட்ட அமைச்சரின் இந்தப் பேச்சைப் பலர் கண்டித்துள்ளனர், அந்தப் பேச்சு ஏற்படுத்தும் அச்ச உணர்வு குறித்தும் அனைவரும் உணர்ந்துள்ளனர். என்னுடைய கருத்துப்படி, அரசு தனக்குள்ள மட்டற்ற அதிகார பலத்தை இங்கே காட்சிப்படுத்துகிறது, அதன் மூலம் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்பதற்கு இந்த எச்சரிக்கையே போதுமான ஆதாரம்.
காட்சி இரண்டு: அவலம்
அரசு நிர்வாகத்தின் இன்னர் உறுப்பு மீது கவனம் செலுத்துவோம்: அது ‘நீதித் துறை’. இந்திய நீதித் துறையின் உச்சபட்ச அமைப்பாக இந்திய உச்ச நீதிமன்றம் திகழ்கிறது, அதை உலகிலேயே மிகவும் வலிமை மிக்க அமைப்பு என்றும் சில வேளைகளில் குறிப்பிடுகிறார்கள். அந்த நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு 2023 மார்ச் 21இல், ‘சதேந்தர் குமார் அன்டில் எதிர் மத்தியப் புலனாய்வுக் கழகம்’ (சிபிஐ) வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது. ஜாமீன் தொடர்பாக அதே வழக்கில் 2022 ஜூலையில், தான் வழங்கிய முந்தைய தீர்ப்பைக் குறிப்பிட்டு இந்தத் தீர்ப்பை வழங்கியது, நான் அமர்வின் வார்த்தைகளிலேயே இதைக் குறிப்பிடுகிறேன்:
“சதேந்தர் குமார் அன்டில் எதிர் சிபிஐ மற்றும் ஏஎன்ஆர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தீர்ப்பு வழங்கிய பத்து மாதங்களுக்குப் பிறகும் அதற்கு மாறுபட்ட, பிறழ்வு ஏற்படுத்தும் வகையில் - பல ஆணைகள் எப்படி பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று வழக்கறிஞர்கள் நிறைய ஆதாரங்களை இங்கு அளித்துள்ளனர். இந்தப் போக்கை இப்படியே சகித்துக்கொண்டிருக்க முடியாது. சார்பு நீதிமன்றங்கள் இந்த நாட்டின் சட்டத்துக்கேற்ப தீர்ப்புகளை வழங்குவதை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்கள் உறுதிசெய்ய வேண்டும். சட்டத்துக்கு முரணாக அல்லது தவறான பொருள் கொண்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டால் சட்டப்படியான தீர்ப்புகளை அளிக்குமாறு செய்ய வேண்டியது உயர் நீதிமன்றங்களின் கடமை. அப்படியும் சட்டத்துக்கு முரணாக சார்பு நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தால், அவர்களை நீதி வழங்கும் பொறுப்புகளிலிருந்து விலக்கிவைத்து அவர்களுடைய சட்டத் திறன்களை மேலும் வளர்த்துக்கொள்ள நீதித் துறை கல்வியமைப்புகளில் பயிற்சி அளிக்க வேண்டும்.”
“இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால், சட்டப்படியான தீர்ப்பை வழங்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை மட்டுமல்ல, தவறில்லாத சட்ட நிலையை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டியது அரசுத்தரப்பு வழக்கறிஞரின் கடமையுமாகும்.”
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு 19 (1) (ஏ) பேச்சு சுதந்திரத்தை உறுதியளிப்பதைப் போல, அரசமைப்புச் சட்டத்தின் 19, 21 கூறுகள் தனியுரிமையாக சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துகின்றன. இந்த இரண்டுமே ஜனநாயகத்துக்கு அடிப்படையான, மாற்றவியலாத அங்கங்கள். உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்தியிருக்கும் ஆதங்கமானது, ஆள்வோரின் கட்டளைக்கேற்ப அதிவேகத்துடன் செயல்படும் விசாரணை முகமைகளுக்கும், தேவைக்கும் அதிகமாகவே விசுவாசத்துடன் விசாரித்து தீர்ப்பு வழங்கும் சார்பு நீதிமன்றங்களுக்கும் (பல குறிப்பிடத்தக்க விதிவிலக்குகளும் உண்டு) இடையில் சட்டம் படும் பாட்டைக் கண்டதனால் என்று புரிகிறது.
காட்சி 3: வலிமை – அவலம்
அரசியல் பிரச்சாரத்தின்போதும் நேர்காணலிலும்போது முன்னர் தெரிவித்த சில கருத்துகளுக்காக, சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கலான (பாஜக நிர்வாகியால்) வழக்கில் இந்தியத் தண்டனையியல் சட்டத்தின் 499, 500 பிரிவுகளின் கீழ், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு 2023 மார்ச் 23இல் தண்டனை விதித்து அது தீர்ப்பு கூறியது. அவர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி அதிகபட்சம் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சூரத் நீதிமன்ற விசாரணை வரம்பில் வராது, வழக்கு நடைமுறைகளில் தவறுகள் இருக்கின்றன, அநீதி அதிகமாக இழைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் ராகுலுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள் தீர்ப்பு குறித்துக் கூறியுள்ளனர். இந்தச் சட்டத்தின்படியான அதிகபட்ச தண்டனையை விதித்திருப்பது மிகவும் கடுமையானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள்தான் ஜனநாயகத்தின் அடிப்படை. எதிர்க்கட்சிகள் தரப்பில் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்த ஒரு குரலை முடக்க, சட்டரீதியில் இந்த நடவடிக்கை விரைவுபடுத்தப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்தால் தெளிவாகும்.
சட்டத்தின் வலிமையை ஆரவாரமாக ஆதரிப்போர், ஜனநாயகக் குரல்களின் அவலநிலையை ஆத்ம பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
தமிழில்: வ.ரங்காசாரி
3
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Krishnamoorthy Muniyappan 2 years ago
மொழிபெயர்ப்பு நன்றாக இருந்திரக்கலாம்...
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Duraiswamy.P 2 years ago
தமிழ் மொழிபெயர்ப்பு சிறிதும் திருப்தி இல்லை. கூகுள் மொழிபெயர்ப்பது போல உள்ளது. தயவுசெய்து கவனிக்கவும். கட்டுரையின் மையப்பொருள் நன்றாக விவரிக்கப்பட்டுள்ளது. அரசு பயங்கரவாதம் தெளிவாக எந்த தயக்கமும் வெட்கமும் கூச்சமும் இல்லாமல் வெளிப்படுகிறது.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
lathakuttima 2 years ago
அருமை ஐயா.நான் இன்று முதல் முதலாக உங்கள் கட்டுரை வாசித்துள்ளேன்
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.