கட்டுரை, அரசியல், பொருளாதாரம் 5 நிமிட வாசிப்பு
நடுத்தர வகுப்புக்கு தவறான வழிகாட்டல்
பழைய வரி முறையைவிட புதிய வரி முறையே சிறந்தது, வருமான வரி செலுத்துவோர் மாறுவதற்கு உகந்தது என்று 2023-24 நிதிநிலை அறிக்கையில் (பட்ஜெட்) ஒன்றிய அரசு இனிப்பைத் தடவியிருக்கிறது. “கடுமையாக உழைக்கும் நம்முடைய நடுத்தர வகுப்புக்கு நான் செய்துள்ள ஐந்து அறிவிப்புகள் பிரதானமான பலன்களை அளிக்கும்” என்று நிதியமைச்சர் கூறியிருக்கிறார்.
‘நடுத்தர வகுப்பினர்’ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று நிதியமைச்சர் விளக்கவில்லை. ஆனால், அவருடைய (ஒன்றிய) அரசு, ‘பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்’ யார் (இடபிள்யுஎஸ்) என்று அறிவிக்கை மூலம் தெரிவித்துள்ளது; ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கும் குறைவாக ஊதியம் பெறுவோர் ‘பொருளாதாரரீதியாக நலிவுற்றோர்’ என்று அஜய் பூஷண் பாண்டே தலைமையிலான குழுவின் அறிக்கை அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. பொருளாதாரரீதியாக நலிவுற்றோர் அனைவரும், ‘ஏழைகள்’ என்று நாமும் கருதுவோம்.
நடுத்தர வகுப்பினர் யார்?
‘இந்தியாவின் நுகர்வுப் பொருளாதாரம் தொடர்பான மக்கள் ஆய்வு’ (பிரைஸ்) என்ற அமைப்பின் கணக்கெடுப்பின்படி ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் ஊதியம் பெறும் குடும்பங்களை ‘நடுத்தர வகுப்பு’ என்று கருதலாம், இந்தியக் குடும்பங்களில் 31% அத்தகைய நடுத்தர வகுப்பே என்கிறது அது. அந்தக் கணக்குப்படி 28 கோடி குடும்பங்கள் நடுத்தர வகுப்பினர்.
ஒரு குடும்பத்துக்கு விவசாயத்திலிருந்து மட்டுமே வருமானம் கிடைக்கக்கூடும் அல்லது குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடும், இருந்தும் அவர்களில் ஒருவர்கூட வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அல்லது வருமான வரி செலுத்த வேண்டிய அளவுக்கு வருவாய் பெறாதவர்களாகவும் இருக்கக்கூடும்.
2017-18 நிதியாண்டில் 1,47,54,245 பேர் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் வருமானம் பெற்றதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ததாகவும், 45,08,722 பேர் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையில் என்று கணக்கில் குறிப்பிட்டிருந்ததாகவும் வருமான வரித் துறை தகவல் அளித்திருக்கிறது. இவற்றையெல்லாம் கூட்டினால் சுமார் 2 கோடிப் பேராகிறது. அதற்குப் பிறகு இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்திருக்கக்கூடும்.
கணக்கு சொல்வது என்ன?
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட மறு நாளான பிப்ரவரி 2 வெவ்வேறு செய்தித்தாள்கள், நிதியமைச்சரின் அறிவிப்புக்குப் பிறகு எந்த வரி முறை நடுத்தர வகுப்புக்குச் சிறந்தது என்று அட்டவணையுடன் விளக்கியிருந்தன. பழைய வரி விகித முறை, ஆண்டு வருமானம் எவ்வளவு வரை இருப்பவர்களுக்கு உகந்தது என்ற ஆலோசனைகளும் வழங்கப்பட்டிருந்தன.
ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுகிறவர்களுக்கு பழைய வரிமுறையே சிறந்தது என்று ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் குறிப்பிட்டது. (அட்டவணையையும் அது அத்துடன் நிறுத்திவிட்டது). ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழ் ரூ.35 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுகிறவர்களுக்கு பழைய வரி விகித முறையே ஏற்றது என்று எழுதியது. ‘தி எகனாமிக் டைம்ஸ்’ நாளிதழ் ரூ.60 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் பெறுவோருக்கு, பழைய வரி விகித முறையே சிறந்தது என்றது.
‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆண்டு வருமானம் ரூ.2 கோடி வரை பெறுகிறவர்களுக்கு பழைய வரி விகித முறையே சிறந்தது என்று கூறியது. வேறு சில பத்திரிகைகளும் இதேபோன்ற அட்டவணைகளைப் பிரசுரித்தன. மூத்த குடிமக்களுக்கும், மிக மூத்த குடிமக்களுக்கும் பழைய வரி விகிதமே எல்லாவற்றிலும் உகந்தது. அரசாங்கம் இந்த அறிக்கைகளையும் அட்டவணைகளையும் ஆலோசனைகளையும் தவறு என்று முரண்பட்டு கருத்து சொல்லவில்லை.
அகமதாபாத் நகரைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் இது தொடர்பாகத் தயாரித்த விரிவான அட்டவணையைப் பார்த்த பிறகு இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். வெவ்வேறு அளவுகளிலான ஆண்டு வருமானம், அந்த வருவாய்க்கு தரப்படும் நிலையான கழிவு, தொழில் வரி, வருமான வரிச் சட்டத்தின் 80 சி, 80 டி பிரிவுகளின் கீழ் அனுமதிக்கப்படும் கழிவுத் தொகை, வீடு கட்டக் கடன் வாங்கியிருந்தால் அதன் மீதான அசல் – வட்டி ஆகியவற்றுக்கு விலக்கு அளவு என்று அனைத்தும் கணக்கிடப்பட்டிருக்கிறது. அதன்படி, வருமானம் வெவ்வேறு அளவுகளில் இருந்தாலும் ரூ.30 லட்சம் வரைக்கும் பழைய வரி விகித முறைதான் நடுத்தர வகுப்பினருக்கு உகந்தது.
வரி செலுத்துகிறவர் தொழில் அல்லது வியாபாரம் செய்பவராக இருந்து, அவருக்கு வேறு இனங்கள் மூலமும் வருமானம் கிடைத்தால் ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரைக்கும் பழைய வரி விகித முறையில் தொடர்வதே நல்லது; ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான வருமானமாக இருந்தால் வரிச்சுமை இரு விகிதங்களிலும் சமமாகத்தான் இருக்கிறது. இவற்றையெல்லாம் ஒப்பிடும்போது, நடுத்தர வகுப்புக்குப் புதிய வரி விகித முறையைவிட பழைய வரி விகித முறையே சிறந்ததாகத் தெரிகிறது. புதிய வரி விகித முறையில் வரிச்சுமை குறைவாக இருக்கிறது என்று அரசு முன்வைக்கும் வாதம், உதாரணங்களைக் கொண்டு பார்க்கும்போது தவறானதாகவே இருக்கிறது.
சேமிப்புகளுக்கு விடை தரவா?
வருமான வரி செலுத்துகிறவரின் கோணத்திலிருந்து நாம் பார்க்க வேண்டியது எதுவென்றால், தங்களுடைய வருமானத்தின் ஒரு பகுதியை எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்பதும், வருமானத்துக்கேற்ப ஓரளவுக்கு வரி செலுத்துவதும் நல்லதா அல்லது வரும் வருமானத்தை முழுதாகச் செலவிடுவது நல்லதா என்பதே; வளரும் நாடுகளில், ஒவ்வொரு குடும்பமும் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிப்பது மிகவும் அவசியமானது என்றே உலக அளவில் ஊக்குவிக்கப்படுகிறது. பெரும்பாலான இந்தியர்களுக்கு, அரசின் சார்பிலான சமூகப் பாதுகாப்பு என்பது அறவே கிடையாது அல்லது அப்படியே இருந்தாலும் அது சொற்ப அளவுக்குத்தான் என்பதே உண்மை; எனவே, கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக ஒன்றிய அரசுகள் சேமிப்பை வலியுறுத்தியதுடன் அதற்காக வருமான வரிச் சட்டத்தில் பல்வேறு விலக்குகளையும் அளித்து ஊக்குவித்து வந்திருக்கின்றன.
குடும்பங்கள் சேமிப்பதும், தொழில் நிறுவனங்கள் சேமிப்பதும் ‘சிறு துளியாக’ இருந்தாலும் இந்திய நிறுவனங்கள் தொழில் தொடங்க பங்குச் சந்தையை நாடும்போது முதலீட்டுக்கான பணம் ‘பெரு வெள்ளமாக’ பாய உதவிக்கொண்டிருக்கிறது. அரசு மட்டுமல்ல தனியார் நிறுவனங்களும் இந்தச் சேமிப்புகளிலிருந்துதான் முதலீட்டை எளிதாகப் பெற முடிகிறது. ஊதியம் பெறும் ஒருவருமே இயல்பாக பணத்தைச் சேமித்துவிட மாட்டார். விலைவாசி உயர்வு காரணமாகவும் குடும்பத் தேவைக்காக நுகர்வுச் செலவைச் சமாளிக்கவும் ஊதியம் முழுவதையுமே செலவு செய்தாக வேண்டிய நிலையில்தான் இருப்பார். பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்களின் தேவைக்கேற்ற ஊதியமும் வழங்கப்படுவதில்லை.
எனவே, வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிக்க அல்லது கட்டாயச் சேமிப்பாக்க ஏதாவது விலக்குகளையும் சலுகைகளையும் அரசு தந்தாக வேண்டியிருக்கிறது. எனவேதான், அரசு வருமான வரிக்கான ஊதியத்தைக் கணக்கிடும்போது சில வகை சேமிப்புகளையும், முதலீடுகளையும் கழிக்க சலுகை அளித்து ஊக்குவிக்கிறது. அது தபால் அலுவலக சேமிப்பு, தேசிய சேமிப்புப் பத்திரம், தேசிய சேமிப்பு திட்டம், ஆயுள் காப்பீட்டு முதலீடு அல்லது வீடு கட்டும் கடன் என்று பல்வேறு இனங்களாக இருக்கின்றன.
பாஜக அரசு இந்தக் கொள்கையையே தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. சேமிப்பதைவிட வருமானம் முழுவதையும் செலவிடுவதே நாட்டு நலனுக்கு நல்லது என்கிறது. மக்கள் தங்களுடைய வருவாயைச் செலவிடுவது கூடாது என்று நான் கூறவில்லை, சேமிப்பும் – செலவும் அவரவர் விரலுக்குத் தகுந்த வீக்கமாக இருக்க வேண்டும் என்கிறேன். சேமியுங்கள் – செலவும் செய்யுங்கள் என்பதே முறையான ஆலோசனையாக இருக்கும், எதையும் மிச்சம் வைக்காதீர்கள் – முழுதாக செலவிட்டுவிடுங்கள் என்பது சரியாக இருக்காது.
அகமதாபாத் பட்டயக் கணக்காளரின் மாதிரிக் கணக்கீட்டில் சேமிப்பு, செலுத்தப்படும் வரி, பிறகு கையில் மிஞ்சும் வருவாய் ஆகியவை மூன்று வெவ்வேறு நிலைகளில் பழைய வரி விகித முறை (ஓடிஆர்), புதிய வரி விகித முறை (என்டிஆர்) ஆகியவற்றில் எவ்வளவு என்று காட்டப்பட்டிருக்கிறது:
ஓடிஆர் | என்டிஆர் | ஓடிஆர் | என்டிஆர் | ஓடிஆர் | என்டிஆர் | |
வருமானம் | 10,00,000 | 20,00,000 | 30,00,000 | |||
சேமிப்பு | 3,75,000 | ------- | 3,75,000 | ------- | 3,75,000 | ------- |
வரி & செஸ் | 28,100 | 54,600 | 2,95,651 | 2,96,400 | 6,07,651 | 6,08,400 |
எஞ்சுவது | 5,44,500 | 8,95,400 | 12,76,949 | 16,53,600 | 19,64,949 | 23,41,600 |
பழைய வரி விகித முறையில் வருமான வரிதாரர் குறைவான வரியே செலுத்துவார் அவருடைய சேமிப்பும், கையில் எஞ்சும் வருவாயும் சமநிலை விகிதத்தில் இருக்கும். புதிய வரி விகித முறையில், கையில் எஞ்சும் வருவாய் அதிகமாக இருக்கும், ஆனால் சேமிப்புக்கு மிஞ்சாது.
அரசின் உள்நோக்கம் மறைவானதல்ல, இனி வருமான வரி செலுத்துவோருக்கு சேமிப்புக்காக எந்தச் சலுகையும் அளிக்கக் கூடாது என்பதுதான் அந்த நோக்கம். குறைவான வரி விகிதம் – மிகச் சில வருமான வரி விலக்குகள் என்பது சேமிப்பையும் ஊக்குவிக்கும், செலவுக்கும் ஊதியம் கிடைப்பதை உறுதிசெய்யும். எந்தவித சேமிப்புக்கும் முதலீடுக்கும் வருமான வரி விலக்கு கிடையாது என்று அரசு முடிவெடுத்தால், குறைந்தபட்சம் வருமான வரி விகிதங்களையாவது மேலும் குறைக்க வேண்டும். 2023-24 நிதிநிலை அறிக்கையின்படி பார்த்தால், ‘விளிம்புநிலை வரி விகிதம்’ பழைய வரி விகித முறையில் 42.7%ஆகவும் புதிய வரி விகித முறையில் 39%ஆகவும் இருக்கிறது. புதிய வரி விகித முறையில் வரிகள் குறைவு என்பது வெறும் மாயைதான் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
ஒரு விஷயத்துக்காக கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் – இரு வரி விகித முறைகளில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற சலுகையையாவது அரசு வழங்கியிருக்கிறதே- அதற்காக! ஆனால் அந்தச் சலுகையும் எவ்வளவு காலத்துக்கு?
தொடர்புடைய கட்டுரைகள்
உலகச் சூழலைப் பொருட்படுத்தாத பட்ஜெட்
பொருளாதாரம்: முதலாவது முன் எச்சரிக்கை
எங்கே அந்த அக்கறை மிக்க நடுத்தர வர்க்கம்?
தமிழில்: வ.ரங்காசாரி
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.